.யாருக்கு பாதிப்பு?
தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.
- இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
- முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
- கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.
தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,
- ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
- மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
- பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்
பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து
- ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
- கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு
அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது
.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.
இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.
அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.