இந்தியாவைச் சுற்றிலும் சீன கடற்படை தளங்கள்: இந்திய கடற்படை தலைமை தளபதி தகவல்
புதுதில்லி, டிச. 3: இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் இந்திய கடற்பகுதியைச் சுற்றிலும் சீனா தனது கடற்படை தளங்களை அமைத்து வருவதாக இந்திய கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
சீனாவின் இத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் நலனுக்கு பாதகமாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
கடற்படை தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நிருபர்களிடம் பேசிய தலைமை தளபதி சுரேஷ் மேத்தா மேலும் கூறியதாவது:
மியான்மர் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் தனது கடற்படை தளத்தை சீனா அமைத்து வருகிறது. மியான்மர் போன்ற நாடுகள் இப்போது இந்தியாவுக்கு எதிரான நாடுகளாக இல்லை. இருப்பினும் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு எதிராக மாற வாய்ப்பு உண்டு.
பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடனும் கடற்படை தொடர்பாக சீனா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. நமது கடற்படை கட்டமைப்பு திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. இதனால் நம்மிடம் உள்ள நுட்ப தகவல்களை அவர்கள் (சீனா) தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
நமது கடற்கரை பகுதியில் சீன நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சீன பொருள்களை வாங்காத நாடுகள் அரிது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதி வாயிலாக சீனாவுக்கு பொருள்கள் ஏற்றுமதி ஆவதால் அந்நாட்டின் பொருளாதார வளம்தான் மேலும் மேலும் வலுவடையும்.
பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்கள் வங்கதேசத்துக்கு விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் வங்காள விரிகுடாவில் முக்கிய பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவ வேண்டும்.