இதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி
சென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.
தொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.
மின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.
ரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.
இந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.
ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரியில் சீராகும்
தொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.
இருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————-
வணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி
சென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.
அதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.
இதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.
மின் பற்றாக்குறை:
தமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.
இருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.
சில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர் (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.