மூலிகை மூலை: சாராய வெறி நீங்க…
விஜயராஜன்
ஒழுங்கற்ற வடிவ அமைப்பைக் கொண்ட இலையைக் கொண்ட சிறு செடி இனமாகும். இதன் இலையும் விதையும் மருத்துவக் குணம் கொண்டவை. கார்ப்புச் சுவையைக் கொண்டது. சீத வெப்பத்தை அதிகரிக்கும். பசியைத் தூண்டி வெப்பமுண்டாக்கி சிறுநீரைப் பெருக்கும். இதனை உண்பதால் உடல் சூடு, காய்ச்சல், பைத்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, பெரு ஏப்பம், புண் போன்றவை நீங்கும்.
வேறு பெயர்கள்:
- தனியா,
- உருள் அரிசி.
ஆங்கிலத்தில்:
- coriandrum sativum,
- linn;
- Umbelliferae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
கொத்தமல்லி விதையை 5 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மில்லியளவாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து 2 வேளை குடித்துவர இதய பலவீனம், மிகுதாகம், நாவறட்சி, மயக்கம், இரத்தக் கழிச்சல், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு குணமாகும்.
கொத்தமல்லியைச் சிறிது காடியில்(வினிகரில்) அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும்.
கொத்தமல்லி விதை 100 கிராம், நெல்லிவற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் எடுத்துப் பொடியாக்கி அத்துடன் 200 கிராம் சர்க்கரை கலந்து 2 வேளை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரத் தலைசுற்றல், நெஞ்செரிச்சல், வாய் நீர் ஊறல் ஆகியவை குணமாகும்.
கொத்தமல்லி 300 கிராம், சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்ன இலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இள வறுவலாய் வறுத்துப் பொடியாக்கி அத்துடன் வெள்ளைக் கற்கண்டை 60 கிராம் பொடிசெய்து கலந்து 2 வேளை 1 தேக்கரண்டியளவு சாப்பிட்டுவர உடல் சூடு, குளிர்காய்ச்சல், பைத்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர பலவாறான தலைநோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனைத் தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்குளறல் குணமாகும்.
கொத்தமல்லி, சுக்கு, மிளகு, திப்பிலி, போராமுட்டி வகைக்கு 20 கிராம் எடுத்துச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மிலியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை கொடுக்கக் காய்ச்சல் குணமாகும்.
கொத்தமல்லி இலையை எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை சீக்கிரம் கரையும் அல்லது பழுத்து உடையும்.
கொத்தமல்லி விதையை வறுத்துச் சாப்பிட இரத்தக் கழிச்சலும் செரியாமைக் கழிச்சலும் நீங்கும்.
கொத்தமல்லி விதையைச் சோம்புடன் கலந்து சாப்பிட ஏப்பம் நீங்கி, இருதயம் வலிமை அடையும்.
கொத்தமல்லி விதையை அரைத்துப் பற்றிட தலைவலி, மண்டையிடி(கபால சூலை) குணமாகும்.
கொத்தமல்லி விதையை 10 கிராம் சந்தனத்துடன் அரைத்துப் பூச பித்த தலைவலி குணமாகும். கொத்தமல்லி விதையைச் சந்தனத்துடன் அரைத்துக் கட்ட நாள்பட்ட புண், பிளவைகள் குணமாகும்.
கொத்தமல்லி, சந்தனம், நெல்லி வற்றல் வகைக்கு சம அளவாக எடுத்து நீரில் ஊறவைத்து குடிக்க தலை சுற்றல் நீங்கும்.
கொத்தமல்லி விதையை வாயிலிட்டு மெல்ல வாய் நாற்றம் நீங்கும்.