Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Activist’ Category

Burmese Human Rights Activist Daw Aung San Suu Kyi – Myanmar: Biosketch

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’!

முத்தையா வெள்ளையன்

சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:

ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.

1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.

தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.

தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.

போராட்டம்…

1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:

உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:

அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.

கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.

இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!

Posted in Activist, Activists, AngSan, Arrest, AungSan, Biosketch, Buddhism, Burma, Democracy, Faces, Fight, Freedom, Gandhi, Independence, Liberation, Mahatma, Mandela, Myanmar, names, Oppression, people, SuKyi, SuuKyi, Violence | Leave a Comment »

Raman Raja: Assisted Suicide, Jack Kevorkian & Euthanasia

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

நெட்டில் சுட்டதடா…: மருத்துவர் நடத்திய மரண விளையாட்டு!

ராமன் ராஜா

உலகில் எவ்வளவோ நாடுகளில் எவ்வளவோ மக்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பின கலர் சட்டை போட்டுக் கொள்ளும் உரிமை என்று சின்னதும் பெரியதுமாகப் பல விடுதலைப் போராட்டங்கள். இதில் கட்டக் கடைசி என்று சொல்லத் தக்கது, உயிரை விடும் உரிமை. தற்கொலை செய்து கொள்வது சில நாடுகளில் சட்டப்படி செல்லும்; சிலவற்றில் குற்றம். தற்கொலையாளியின் பக்கத்தில் இருந்து பிரார்த்தனை செய்த பாதிரியார் ஒருவர் கூட சமீபத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆனால் மருத்துவர் உதவியுடன், வலியில்லாமல் பிசிறில்லாமல் தற்கொலை செய்துகொள்கிற உரிமையைக் கேட்டுப் போராடும் பல குழுக்கள் இருக்கின்றன. ABCD என்பது அவற்றில் முக்கியமான அமெரிக்க இயக்கம்.

“”தீர்க்க முடியாத வியாதிகளால் வருடக் கணக்காக வலியும் வேதனையும் அனுபவித்து, சேர்த்து வைத்த சொத்தெல்லாம் பயனில்லாமல் ஆஸ்பத்திரிச் செலவுக்குக் கரைந்து, உறவினருக்கும் பாரமாய், உயிர் பிரியாமல் அவஸ்தைப்படுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். போகிற உயிரைச் செயற்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அவர்களுக்கு இறுதி விடுதலை கொடுங்கள்; அமைதியாகத் தூங்க விடுங்கள்” என்று இவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பதினைந்து வருடம் கோமாவில் கிடந்த டெர்ரி ஷியேயோ என்ற பெண்மணியின் ஆக்ஸிஜன் டியூபைப் பிடுங்க வேண்டும் என்று அவர் கணவர் போட்ட வழக்கில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதற்குள் அமெரிக்காவே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது.

சென்ற வாரம் முழுவதும் டாக்டர் ஒருவர் சிறையிலிருந்து விடுதலையான செய்தியை உலகத்து மீடியா முழுவதும் பேசியது: அவர்தான் மரண மருத்துவர் (டாக்டர் டெத்) என்று செல்லமாகப் பெயர் படைத்த டாக்டர் கெவார்க்கியன். “”மரணம் எங்கள் பிறப்புரிமை” என்று முழங்கியவர்; பற்பல உயிர்களை முழுங்கியவர். “”ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த உயிரின் மீது முழு அதிகாரம் உண்டு. அதைப் போற்றிப் பாதுகாப்பதோ, போக்கிக் கொள்வதோ, அவரவர் இஷ்டம். அரசாங்கமோ, சட்டமோ இதில் தலையிடக் கூடாது.” என்று வாதாடினார். பேச்சுடன் நிற்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகளைப் பக்கத்தில் இருந்து பக்குவமாக நடத்தியும் வைத்தார்.

டாக்டர் கெவார்க்கியனுக்கு இப்போது பழுத்த எழுபத்தேழு வயது. அமெரிக்காவின் மிஷிகன் நகரைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில், டாக்டர் தொழிலின் காரணமாக நூற்றுக்கணக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்து தள்ள வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு மரணத்தின் மேலேயே ஓர் அலாதியான ஈர்ப்பு வந்துவிட்டது. உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணத்தில் ஒரு நோயாளியின் கண்கள் எப்படி இருக்கும் என்று காத்திருந்து போட்டோ எடுத்திருக்கிறார். வாழ்ந்த சூடு இன்னும் மாறாமல் இருக்கும் பிணங்களிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி உயிருள்ள பேஷண்டுகளுக்குக் கொடுக்கமுடியுமா என்று ஒரு முயற்சி. கடைசியாக மரண தண்டனை பெற்ற கைதிகளை வைத்துக் கொண்டு உயிரோடு அறுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்ய முயன்றதில், பல்கலைக் கழகத்தினர் அதிர்ச்சி அடைந்து டாக்டரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்! ஆனால் கெவார்க்கியன் அசரவில்லை; நேராகப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் ஒரு விளம்பரம் கொடுத்தார்: “”ஏதாவது காரணத்துக்காக உயிர் வாழ்வதில் ஆர்வம் இழந்து விட்டவர்கள் என்னிடம் வரலாம். தொல்லை நிறைந்த இந்த உலகத்திலிருந்து வலியில்லாமல் விடுதலை வாங்கித் தருகிறேன்.” இதைப் பார்த்ததும் புதிய ரஜினி படத்துக்கு முன் பதிவு செய்யும் வேகத்தில் விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன!

கெவார்க்கியன், கருணை வள்ளல்; தன் கையால் கொலை பாதகம் செய்ய மாட்டார். அவர் தயாரித்த “தானட்ரான்’ என்ற இயந்திரம்தான் அந்த வேலையைச் செய்யும். தற்கொலை கேûஸ அமைதியாகப் படுக்க வைத்து “”சாமியைக் கும்பிட்டுக்கப்பா” என்று சொல்லிக் கையில் பச்சை நரம்பு தேடி, ஊசி குத்தி சலைன் பாட்டிலை இணைப்பார். இப்போது நோயாளியே இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்த வேண்டும். முதலில் ஒரு விஷ மருந்து சொட்டுச் சொட்டாகக் கையில் இறங்கும்; மெல்ல ஆசாமி கோமா நிலைக்குப் போவார். சில நிமிடம் கழித்து தானட்ரான், தானாகவே மற்றொரு ரசாயனத்தைத் திறந்துவிடும். அது இதயத்துடிப்பை கப்பென்று பிடித்து நிறுத்திவிடும்.

இப்படிச் சில பல கொலைகள் செய்த பிறகு “ஆபத்தான ஆசாமி’ என்று கெவார்க்கியனின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது; இப்போது அவர் சட்டப்படி யாருக்கும் ஊசி மருந்து எழுதித் தர முடியாது. எனவே மறுபடி முனைந்து மெர்ஸிட்ரான் என்று மற்றொரு மெஷின் கண்டுபிடித்தார்: கடையில் கிடைக்கும் கார்பன் மோனாக்ûஸடு வாயு சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டு சுவாசித்து மூச்சடைக்கும் இயந்திரம் இது. டெக்னிகலாகப் பார்த்தால் டாக்டர் யாரையும் கொல்லவில்லை; அவரவர்கள் தாங்களேதான் வீட்டு ஃபிரிஜ்ஜை டீஃப்ராஸ்ட் பண்ணுவது போல ஒரு பொத்தானை அமுக்கிக் கொண்டு செத்தார்கள். 1990-ல் ஆரம்பித்து ஏழெட்டு வருடத்திற்குள், இப்படி 130 பேருக்கு எமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து டாட்டா காட்டியிருக்கிறார் டாக்டர்.

தன்னிடம் வந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாமே நோயாளிகள், வாழ்க்கையின் இறுதித் கட்டத் துன்பம் தாங்காமல் வந்தவர்கள்தான் என்று சாதித்தார் கெவார்க்கியன். ஆனால் பிறகு அவர்களில் பலரை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது அப்படியொன்றும் கடும் வியாதி இருந்ததாகத் தெரியவில்லை. காதல், கடன், பிளஸ் டூ பரீட்சை போன்ற வழக்கமான காரணங்களுக்காகத்தான் பெரும்பாலோர் பட்டனை அமுக்கித் தொலைத்திருக்கிறார்கள்.

கடைசியில் 1998 செப்டம்பரில் கெவார்க்கியன் நடத்தி வைத்த ஒரு தற்கொலைதான் அவரை ஜெயிலுக்கு அனுப்பியது: தாமஸ் யூக் என்ற நோயாளி; ஐம்பது வயது தாண்டியவர். அவர் கையைக் காலை அசைக்க முடியாத பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால், கெவார்க்கியன் தானே தன் கையால் விஷ ஊசியைப் போட்டு வழியனுப்பி வைத்தார். அதை அப்படியே வீடியோ படமாக எடுத்து, இந்தியன் கமல்ஹாசன் பாணியில் டி.வி.யில் வேறு போட்டுக் காட்டினார்! இதைப் பார்த்துத் திகைத்துப் போன பொதுமக்கள் கொழு மோர் காய்ச்சிக் குடித்தார்கள்; குழந்தைகள் பல நாள் வரை திருடன்-போலீஸ் விளையாட்டை மறந்து டாக்டர்- விஷ ஊசி விளையாட்டில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ ஆதாரத்தின் பேரில் கெவார்க்கியன் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் கெவார்க்கியன் “”செத்தவனைப் போய்க் கேளுங்க” என்று சுலபமாகத் தப்பித்திருக்கலாம். தற்கொலைக்கு உதவி செய்வது தப்பா, சரியா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டே தெளிவாக இல்லை; மாநிலங்கள் ஒவ்வொன்றும் மனம் போனபடி சட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நல்ல வக்கீலாக வைத்துக் கொண்டிருந்தால் அவர் லாகவமாக லா பாயிண்டைப் போட்டுக் குழப்பி வாங்கித் தந்திருப்பார். ஆனால் கெவார்க்கியன் கொஞ்சம் விளம்பரப் பிரியர்; மீடியா மொத்தமும் ஆர்க் விளக்குகளைத் தன் மீது திருப்பியதில் நிலை மறந்து விட்டார். தன் கேûஸத் தானே வாதாடிக் கொள்வதாகச் சொல்லி, கோர்ட்டில் மனோகரா சிவாஜி கணேசன் மாதிரி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆனால் பழம் பெருச்சாளியான அரசாங்க வக்கீல் தூவிய நுணுக்கமான சட்டப் பொடிகளைச் சமாளிக்க முடியாமல் தும்மிவிட்டார். டாக்டருக்கு இரண்டாவது டிகிரி கொலை செய்ததற்காக இருபத்தைந்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைத்தது.

இப்போது எட்டு வருட தண்டனையை அனுபவித்த பிறகு, மோசமடைந்து கொண்டிருக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி கெவார்க்கியனை பரோலில் விடுதலை செய்திருக்கிறார்கள்; “”வெளியே போனதும் சமர்த்துப் பையனாக இருக்கவேண்டும்; யாரையும் கொல்லக் கூடாது” என்ற நிபந்தனையுடன். வெளியே காத்திருந்த டாக்டரின் ரசிகர்கள் விழாவே கொண்டாடிவிட்டார்கள். வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் பலர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவு தெரிவித்தார்கள். “”இறப்போரின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் டாக்டர் கெவார்க்கியன்.

ஒரு வயதான பெண்மணி ஐ.சி.யூவில் நினைவின்றிப் படுத்திருக்க, பக்கத்தில் ஒட்டுக் கேட்கப்பட்ட உரையாடல்: “”இவங்கதான் என் மாமியார். வயசு அறுபதுக்கு மேலே ஆகிவிட்டது. வீட்டிலே இருக்கும்போதெல்லாம் “நொய் நொய்’னு ஒரே பிடுங்கல். நீங்களாவது கொஞ்சம் பார்த்து ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர். என்ன செலவானாலும் பரவாயில்லை!”

“”உம். புரியுது, புரியுது. முடிச்சுருவோம்!”

Posted in activism, Activist, Arrest, Christianity, dead, Death, discussion, Disease, Doctor, Euthanasia, Healthcare, Illness, Issue, Justice, Kevorkian, Law, Medicine, Murder, Order, Pain, physician, Raman Raja, Ramanraja, Religion, SNEHA, suffering, Suicide, US, USA, Will | Leave a Comment »

Unsung Heroes of Indian Independence Struggle

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…?

தி. இராசகோபாலன், விடுதலை வீரர் பாஷ்யம

இயற்கை உரமிட்ட வயல், மனம் விரும்பும் மகசூலைத் தந்தே தீரும்! தாய்ப்பால் ஊட்டி ஆரோக்கியமாக வளர்க்கப் பெற்ற குழந்தை, கொழுகொழு என்று வளர்ந்தே தீரும்! ஆனால், சர்வ பரித்தியாகத்தை உரமாக்கி, கண்ணீரைத் தண்ணீராக வார்த்து வளர்க்கப் பெற்ற சுதந்திரப் பயிர், எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லையே, ஏன்?

கொஞ்சமோ நம்மவர் தியாகம்? 1772இல், ஆர்க்காடு நவாப் கும்பினியின் படைத்துணையோடு சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டான். அரண்மனை அருகே வெடிமருந்து வைக்கோல் போர்போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. கும்பினியாரின் போர்ப்பிரகடனத்தைச் சந்திப்பதற்காக, வேலுநாச்சியார் படை நடத்தி வருகிறார்.

அன்று ஆயுதபூசை – நவராத்திரி விழா. இராஜேசுவரி அம்மனைத் தரிசிக்க ஆலயம் திறந்து விடப்பட்டது. குயிலி என்ற பணிப்பெண் தன்னுடல் முழுவதும் நெய் பூசிக்கொண்டு, நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு, அரண்மனை மேல் மாடத்திலிருந்து வெடிக்கிடங்கில் குதித்து, ஆயுதக் கிடங்கை அழித்துவிட்டாள். ஆயுதபூசை அன்று, உண்மையிலே ஆயுதபூசை செய்த அந்தக் குயிலியின் தியாகத்திற்கு ஈடு ஏது? இணை ஏது?

பணிப்பெண் மட்டுமன்று; பாலகன் ஒருவன் விடுதலை வேள்வியில் செய்த உயிர்த்தியாகத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிலிர்க்கின்றது. மகாராஜா ரஞ்சித் சிங் படையில், சீக்கியர்களில் ஒரு பிரிவான நாமதாரிகள் (கூக்கர்கள்) பணிபுரிந்து வந்தனர். குரு ராம்சிங்கைத் தலைவராகக் கொண்ட கூக்கர்கள், ஆங்கில ஆட்சியை முற்றாக அகற்றுவதில் முனைப்பாக நின்றனர். அவர்களைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தான் கவுன் என்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி. 1872ஆம் ஆண்டு அமிர்தசரசில் நீராடுவதற்காகச் சென்ற கூக்கர்களைத் தாக்கும்படி, கவுன் தன் கைக்கூலியான மலர்கோட்லா என்ற சமஸ்தானத்தை ஆண்ட மன்னனுக்குக் கட்டளையிட்டான். போரை எதிர்பார்க்காத கூக்கர்களில் 59 பேர்களைக் கைது செய்து, அவர்கள் வழிபாடு செய்த கோயில் வாசலிலேயே பீரங்கி வாயில் கட்டிச் சுட்டுத் தள்ளினான். 18 கூக்கர்களைச் சாலையோரத்தில் மரத்தில் கட்டித் தூக்கிலிட்டான்.

மேலும் பீரங்கியால் சுடப்பட இருந்தவர்களில் பதிமூன்று வயது பாலகனும் ஒருவன். இக்கொடுமையைக் காணச் சகியாத துணைக்கமிஷனரின் மனைவி, அந்தப் பாலகனை மட்டும் விட்டுவிடுமாறு கணவனிடம் கெஞ்சினாள். அதற்கிணங்க அந்தக் கொடும்பாதகன் அந்தப் பாலகனைப் பார்த்து, “”அந்த நீசன் ராம்சிங்கின் கூட்டத்தில் இனிச் சேர மாட்டேன் என வாக்களித்தால், விட்டு விடுகிறேன்’ எனச் சொன்னவுடனேயே, அந்தப் பாலகன் துணைக் கமிஷனரின் தாடியைப் பிடித்து உலுக்கி, “”என் குருவை அவமதிக்க உனக்கு என்ன தைரியமடா” என்றான். உடனே அந்தப் பாவி அப் பாலகனின் கைகளைத் தனியாக வெட்டி, அதற்குப் பின், பீரங்கி வாயில் அவனையும் கட்டிச் சுட்டுவிட்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த சோவியத் ஓவியர் “விர்ஷெக்தசின்’ அந்தக் கோரக் கொலையைக் கண்டு, ஓவியமாகவே தீட்டிவிட்டார். ரத்த சாட்சியாக வரையப்பட்ட அந்த ஓவியம், பொற்கோயிலின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருப்பதை இன்றைக்கும் காணலாம்.

பணிப்பெண் – பாலகன் மட்டுமன்றி, விடுதலைப் போராட்டத்தில் ஆதிவாசிகள் ஆற்றிய தியாகமும் அளப்பரியது. பஞ்சாப் படுகொலையால் சினந்தெழுந்த அல்லூரி சீதாராம ராஜு, ஆதிவாசிகளுக்கு மத்தியில் விடுதலைப் பறையை வேகமாகத் தட்டினார். அல்லூரியைக் கண்டுபிடித்து அவர் கதையை முடித்து விட வேண்டுமென்று கணக்குப் போட்ட ஆங்கில அதிகாரிகளுக்கு அவர் கோதாவரி மாவட்டத்தில், மலைப்பகுதியில், ஆதிவாசிகளுக்கிடையில் தலைமறைவாக வாழ்வதாகச் செய்தி கிடைத்தது. அல்லூரியைச் சரணடைய வைப்பதற்காக ஆங்கில அதிகாரிகள், ஆதிவாசிகளைச் சித்திரவதை செய்தனர். மலபார் ஸ்பெஷல் போலீûஸ ஏவி, ஆதிவாசிகளின் குழந்தைகளைத் துப்பாக்கி முனையிலுள்ள குத்தீட்டியால் குத்திக் கொன்றனர்; போராளிகளைக் கொன்று குவித்தனர். இறுதியில் ஆதிவாசிப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முனைகையில், அல்லூரி சீதாராம ராஜு அக் கொடுமையிலிருந்து பெண்களைக் காக்க, தானே சரணடைந்தார். சரணடைந்த இடத்திலேயே அல்லூரி சுட்டுக் கொல்லப்பட்டார். அல்லூரி செய்த தியாகம், அன்னியரை விரட்டியது; ஆனால், நமக்கு அது ஆனந்த சுதந்திரத்தைத் தந்ததா?

இந்திய விடுதலைப் போரில் முன்னணித் தலைவர்கள் ஆற்றிய தொண்டு வெளியில் தெரிகின்றது; ஆனால், முகவரியே தெரியாத பலர் ஆற்றிய தொண்டு இன்னும் இருட்டில்தானே கிடக்கின்றது! மன்னார்குடி சேரன்குளத்தில் பிறந்த ஓர் ஓவியர், 1932 ஜனவரி 25ஆம் தேதி இரவு, ஓவியத்தில்கூட வரைய முடியாத அர்ப்பணிப்பைச் செய்திருக்கிறார். சென்னை ஜார்ஜ் கோட்டையிலுள்ள நீண்டு உயர்ந்த 200 அடிக்கம்பத்தில், தன் கையாலேயே தீட்டிய மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டார். நள்ளிரவில் கலங்கரை விளக்கத்தின் ஒளி வினாடிக்கு வினாடி சுற்றி வரும்போது, கம்பத்தோடு உடலை ஒட்டிக் கொண்டு உச்சியில் ஏறி, அந்த அரும்பெரும் பணியைச் செய்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஆங்கில அதிகாரிகள், கே. பாஷ்யம் ஐயங்கார் என்ற அந்த ஓவியரைப் பெல்லாரி சிறையில் தள்ளினர்.

பெல்லாரி சிறையில் குல்லாய் அணிய மறுத்தமைக்காகத் தேசபக்தர் மகாவீர் சிங்கினுடைய கை – கால்களைக் கட்டி, மற்ற கைதிகள் பாடம் பெற வேண்டி, அனைவரும் பார்க்கும்படியாக 30 கசையடிகள் கொடுக்க ஆணையிட்டான் மேஜர் ஜெனரல் இன்ஸ். மகாவீர் சிங்கிற்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் கண்டு மனங்கொதித்த ஓவியர் பாஷ்யத்திற்குப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. சிறையதிகாரிகளிடம் தனக்குப் பேதி மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கி, அதை வாயிலேயும் போட்டுவிட்டார். ஆனால், அதை விழுங்கிவிடாமல் ஒருபக்கத்தில் வாயிலேயே ஒதுக்கி வைத்து, வெளியில் துப்பிவிட்டார். “அவசரம்’ என்று சொன்னவுடன் கழிப்பிடம் போக, கைவிலங்குகளை அவிழ்த்து விட்டனர். வெளியே வந்த ஓவியர் யாரும் எதிர்பார்க்காத வகையில், பூட்ஸ் காலால் ஜெனரல் இன்ஸ் தலைமேலே ஆத்திரம் தீர ஓங்கி ஓங்கி உதைத்தார். “எங்கள் வீரர் மகாவீர் சிங்கிற்குக் கொடுத்த தண்டனைக்கு இதுதான் பரிசு” என்றார். வெறி கொண்டெழுந்த மேஜர் இன்ஸ், ஓவியர் பாஷ்யத்தைத் தனியறையில் தள்ளி சதைநார்கள் பிய்ந்து ரத்தம் பீறிட்டு அடிக்குமாறு சவுக்கால் அடித்தான். ஒவ்வோர் அடி விழும்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல், “வந்தேமாதரம் ஜெயபேரிகை கொட்டடா’ என முழங்கினார். கசையடி முடிந்ததும் அவர் வாய் “ஜயமுண்டு பயமில்லை மனமே’ எனும் பாரதியின் பாடலை முணுமுணுத்தது. இவ்வாறு பெற்ற சுதந்திரம் எதிர்பார்த்த பலனைத் தந்ததா?

1947ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, அரசியல் நிர்ணய சபையில் பேசிய நேரு பெருமானார், “”உலகம் உறங்குகின்ற நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்தது. வாழ்வும் விடுதலையும் பெறுகின்றது” என்றார். அவர் சொன்னவாறு விடுதலை வந்தது; வாழ்வு வராமல் போனதேன்? இன்றைக்கும் நாட்டில் 30 கோடிப் பேர் ஒருவேளை உணவுக்கும் உத்தரவாதமின்றி வாழும் நிலைதானே உள்ளது! உழவுத்தொழில் செய்தும், தரித்திரம் தீராததால் தற்கொலை செய்துகொண்ட 22 திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரணம் வழங்கத்தானே வேண்டியிருக்கிறது!

“ஏழ்மை மிக்கவரும் இது தங்கள் நாடு என்றும், இதை உருவாக்குவதில் தங்களுக்கும் பங்கும் பொறுப்பும் உண்டு என்றும் உணர்வு கொள்ளும் வகையில் அமையும் இந்திய நாட்டை உருவாக்கவே நான் பாடுபடுவேன்” என மகாத்மா காந்தியடிகள் பிரகடனம் செய்தாரே, அந்த மகான் கண்ட கனவு நனவாகாமல் போனதேன்?

இந்த மண்ணின் மைந்தர்கள் தங்களுக்கு வாழ்வு விடியாததால்தானே, அன்னிய தூதரகங்களுக்கு முன்னர் விடிவதற்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள்! இவற்றுக்குரிய காரணங்களை எண்ணிப் பார்த்தால், இந்தநாள், இனியநாள் ஆகும்!

Posted in Activist, Award, Biography, Biosketch, Dinamani, Freedom, Heroes, Independence, India, Tamil | 1 Comment »

‘I am Sorry’ PM to Pakistan Human Rights Activist Asma Jehangir

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

பாக். மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தில்லியில் தங்கியுள்ள ஹோட்டல் அறையை போலீஸôர் சோதனை செய்தது தொடர்பாக அவரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் நன்கு அறிமுகமானவர் அஸ்மா ஜஹாங்கீர். அவருக்கு ஏற்பட்ட அசெüகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக மன்மோகன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

பிரதமரின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பாரு இத் தகவலைத் தெரிவித்தார். தில்லியில் நடைபெறும் மனித உரிமைக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு உறுப்பினராக அஸ்மா ஜஹாங்கீர் இந்தியா வந்துள்ளார். இதனிடையே, அஸ்மா ஜஹாங்கீர் தங்கியுள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தில்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

Posted in Activist, Apology, Asma Jehangir, Dinamani, Human Rights, India, Manmohan Singh, New Delhi, Pakistan, PM, Prime Minister, Sorry, Tamil | Leave a Comment »