60 ஆண்டு மருத்துவ சேவையில் “2 ரூபாய் டாக்டர்’
வேலூர், டிச.21: வேலூர் அடுத்த காந்தி நகரில் வசிக்கும் டாக்டர் வி.எஸ். ஜெயராமன் (85) ரூ.2 என்ற குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
காந்தி நகரில் 2 ரூபாய் டாக்டர் என்றால் ஜெயராமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு இவர் பிரபலம்.
1946-ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து தனது சேவையைத் தொடங்கிய இவர் இன்று வரை மாலை நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறார்.
சாதாரண ஜுரம், சளி, இருமல் உள்ளிட்ட வியாதிகளுக்கு இவரே மாத்திரை, மருந்துகளை வழங்குகிறார். இதற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கும் அவர் பரிசோதனைக்கு பணம் பெறுவதில்லை. மஞ்சள் காமாலை, டைஃபாய்டு உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கு மருந்தளித்து ரூ.3 கட்டணம் பெறுகிறார்.
தவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே மருந்துக் கடைகளில் சற்று கூடுதலான விலையில் கிடைக்கும் மருந்துகளை எழுதித் தருகிறார். அவையும் ரூ.10-க்கு மிகாமல் கிடைத்து விடும். இவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சில மருந்துக் கடைக்காரர்கள் தனியாக வரவழைத்து விற்பனை செய்வதும் உண்டு.
“மருந்துக் கடைகளில் மிகக் குறைந்த விலையில் பல வீரியமாக செயல்படக்கூடிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் நான் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகளை தருவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் தயங்குவதுண்டு’ என்கிறார் ஜெயராமன்.
மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அளிப்பதுண்டு. அந்த முறையில் அவற்றை வாங்கி நோயாளிகளுக்கு தருவதால் ரூ.2 கட்டணம் எனக்கு கட்டுப்படியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.