5 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: துரைமுருகன், பொன்முடி, வேலுவுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை, பிப். 14: தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மூன்று மூத்த அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களின் இலாகா பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
திமுக அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோ.சி. மணியிடம் இருந்து வந்த கூட்டுறவுத் துறை மாற்றப்பட்டு உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் கூடுதலாக இருந்த ராணுவத்தினர் நலத்துறை கோ.சி. மணியிடம் வழங்கப்பட்டுள்ளது. கோ.சி. மணியிடம் இருந்த புள்ளியியல்துறை அவரிடமே இருக்கும். இனி, கோ.சி. மணி, புள்ளியியல் மற்றும் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
சட்டத்துறையைக் கவனித்து வந்த ஐ. பெரியசாமியிடமிருந்து அத்துறை பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இனி ஐ. பெரியசாமி வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
துரைமுருகன் இனி பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
முதலமைச்சரிடம் இருந்துவந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை பொறுப்புகள் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. உயர்கல்வி, தொழில் கல்வி, மின்னணு, அறிவியல், தொழில்நுட்பத்துறை ஆகியவற்றுடன் கூடுதலாக கனிமம் மற்றும் சுரங்கத் துறை பொறுப்புகளையும் பொன்முடி கவனிப்பார்.
கூடுதல் பொறுப்பு: புதிய மாற்றங்கள் மூலம் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவை 3-வது முறையாக மாற்றம்
சென்னை, பிப். 14: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவை அடுத்து, அவரது பொறுப்பு பெரியகருப்பனிடம் வழங்கப்பட்டது. குடிசை மாற்று வாரிய அமைச்சராக இருந்த பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவரிடம் இருந்த குடிசை மாற்று வாரியம் கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம் வழங்கப்பட்டது.
இரண்டாவது முறையாக பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சரவையில் சேர்க்கப்பட்டபோது மாற்றம் செய்யப்பட்டது. மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியிடம் கூடுதலாக இருந்த ஊரக தொழில்துறை பொங்கலூர் பழனிச்சாமியிடம் அளிக்கப்பட்டது. அத்துடன் முதல்வர் கவனித்துவந்த பணியாளர் நிர்வாகத்துறை ஆர்க்காடு வீராசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் சொன்னபடி மாற்றம்: சில தினங்களுக்கு முன்புதான், அதாவது பிப். 8-ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் “உசிதப்படி, உரிய நேரத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்’ என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாற்றத்துக்கு காரணம் என்ன?: கடந்த சில வாரங்களாக உடல் நலக் குறைவால் அமைச்சர் கோ.சி. மணி அவதிப்பட்டு வந்தார். மூன்று தினங்களுக்கு முன்னர்தான் அவரை மருத்துவமனையில் முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது அவர் வசமிருந்த கூட்டுறவுத் துறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்குப் பிறகு மாற்றம்?: அமைச்சரவையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட இலாகா மாற்றம் தாற்காலிகமானது என்று கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை முதல்வர் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.