84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை
சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.
சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.
கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.
அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.
இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.
என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.
நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.
இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.
நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.
ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.
நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.
முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.
வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.
இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.
ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.
எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.
டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.
உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.
அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.
அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.
பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.
அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.
இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.
84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.
இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.
முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.
————————————————————————————————
சாதனைகள் :
– ப்ரியன்
* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்
சந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே!
* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்
பேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.
* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.
* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.
* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.
* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.
* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.
* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.
* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.
* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.
* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.
* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.
* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது
திட்டங்களே.
* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியது.
* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.
* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு
நினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.
பின்னடைவுகள்:
* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த
பின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.
* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.
* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.
* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட
- வீராணம்,
- பூச்சி மருந்து,
- கோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.
* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.
* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை
ஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.
* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்
மாவட்டங்களில் ஜாதிமோதல்கள் நடந்தன.
* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு
அறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.
* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.
* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.
* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்
பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடியக்கரை வழியாக
தப்பிச் சென்றது.
* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.
* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.
* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.
– ப்ரியன்