ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு
 |
முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல் |
இந்தியாவில், அரச பணியாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடில்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் திகதிக்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்க்கப்பட்ட அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்திட்டத்தில் திரட்டப்படும் நிதியில், ஐந்து சதவீதத்தை பங்குச் சந்தையிலும், அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம் என்பது அரசின் திட்டம்.
இதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் உள்பட 19 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இருந்த போதிலும், அந்த நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான, இடைக்கால முதலீட்டு முறை தொடர்பான அரசு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அந்த மசோதாவுக்கும் அக்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, ஒரு சில திருத்தங்களுடன் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையிலும், அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்ய மாநில அரசுகள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தங்களது நிலையில் பிடிவாதமாக உள்ளன.
பதறிய காரியம் சிதறும்
புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது ஒரு புதிய அச்சுறுத்தல்தான்.
வெறும் 5 சதவீதம் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பது கூடாரத்துக்குள் தலையை மட்டும் நுழைத்துக்கொள்ள அனுமதி கேட்ட ஒட்டகத்தின் கதை போலத்தான். பெரும் எதிர்ப்புகளைத் தவிர்க்கவே, “5 சதவீதம் மட்டுமே’ என்று அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி, மெல்ல 10 சதவீதமாக உயர்த்துவார்கள். பின்னர் 15….
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தவறானதா என்று கேட்டால், அது தவறு இல்லைதான். ஆனால் பங்குச் சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, பங்குகளின் விலை ஏறும் அல்லது இறங்கும். பெரும் வீழ்ச்சியில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. கணிப்புகளும், “பார்த்துவிடலாம்’ என்ற துணிச்சலும்தான் பங்குச் சந்தையின் முதுகெலும்பு. இந்தத் துணிச்சலான முடிவை மேற்கொள்ளப் போகிறவர்கள் யார்? அரசு அதிகாரிகள். அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு இந்த அதிகாரிகள் தவறான பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
ஓய்வூதிய நிதிக்கு வட்டி கொடுக்க முடியவில்லை என்பதால்தான் பங்குச் சந்தைமூலம் அதிக லாபம் பெறும் முடிவுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.
ஓய்வூதிய நிதியின் பெரும்பகுதி அரசுத் திட்டங்களில் 8 சதவீத வட்டிக்கு முதலீட்டுக் கடனாக வழங்கப்படுகிறது. ஆனால் ஓய்வூதியதாரர்களுக்கு நடப்பாண்டுக்கு 8.5 சதவீத வட்டி தர வேண்டியிருக்கிறது. இந்த 0.5 சதவீத வட்டி வேறுபாட்டினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை ஆண்டுக்கு ரூ.450 கோடி.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசுத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கலாம் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கிகள் அதிகபட்சம் 8.5 சதவீதத்துக்கு அரசுத் திட்டங்களுக்கு கடன் தரத் தயாராக இருப்பதால், ஓய்வூதிய நிதியை வாங்க முன்வர மாட்டார்கள். இதனால் அரசுக்கு பலமடங்கு நிதிச்சுமை ஏற்படும். ஓய்வூதியதாரர் நிதிக்கு அளிக்கப்படும் வட்டியை, வங்கிகளுக்கு இணையாக குறைப்பதற்கும் கடும் எதிர்ப்பு இருக்கிறது.
புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெருகி வரும் இந்நாளில் ஓய்வூதியத் திட்டம், விபத்துக் காப்பீடு, மருத்துவச் செலவு காப்பீடு என்பது ஒரு தொழிலாளியின் தனிப்பட்ட சேமிப்பாக, தனிப்பட்ட அக்கறை சார்ந்த விஷயமாக மாறி வருகிறது. இதற்கான திட்டங்களை (உதாரணமாக- பி.பி.எப், மாத வருவாய்த் திட்டம்) பாரத ஸ்டேட் வங்கி, அஞ்சல்துறை மற்றும் பிற வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.
இத்தகைய திட்டங்களில் சேர்வோர் தங்கள் கணக்கிலிருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று, அதனை தாங்கள் விரும்பும் மாற்றுத் திட்டங்களில் (பங்குச் சந்தை உள்பட) அவர்களாகவே முதலீடுகளைச் செய்துகொள்கின்றனர். இதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கினாலும், பணத்தை இழந்தாலும் அது அவர்களை மட்டுமே பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.
ஆனால். சுமார் 40 கோடி தொழிலாளர்களின் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதில் எதிர்பாராத இழப்புகள் நேர்ந்தால் அதை யார் ஏற்பது? அரசா, ஓய்வூதியதாரர்களா? அரசு முதலில் இதைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசின் இந்த முடிவை இடதுசாரிகள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது போகப்போகத் தெரியும்.