நூல் அறிமுகம்: க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் ஜார்ஜ் ஆர்வெலின் மிருகங்கள் பண்ணை
– ந. கவிதா
பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் Animal Farm நாவலின் மொழிபெயர்ப்பே ‘மிருகங்கள் பண்ணை’. இலக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான க.நா. சுப்பிரமணியம் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். மூலம் 1946இல் வெளியானது. சென்னை அம்ருதா பதிப்பகம் தனது ‘Heritage Collection’ பதிப்பு வரிசையில் இம்மொழிபெயர்ப்பை 2006இல் மறுபதிப்புச் செய்திருக்கிறது.
ஆர்வெல் இந்தியாவில் பிறந்தவர். பர்மாவில் போலீஸ் அதிகாரியாகவும் இங்கிலாந்தில் ஆசிரியராகவும் பிரான்சில் பத்திரிகை ஆசிரியராகவும் பணிசெய்த பல்துறை அனுபவம் மிக்கவர். இவரது 1984, Burmese Days, Down and Out in Paris and London, The Road to Wigan Pier, Homage to Catalonia, Inside the Whale போன்ற நூல்கள் சிறப்பான கவனம் பெற்றவை. மிருகங்களின் பண்ணை விற்பனையிலும் மிகப் பெரிய சாதனை செய்தது. முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், ஆங்கிலத்தில் மட்டும் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது
இந்நாவல் ஒரு முதலாளியை வீட்டை விட்டும் பண்ணையை விட்டும் வெளியேற்றிவிட்டுத் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிய மிருகங்களின் கதை. ஆனால் முழுக்க முழுக்க அரசியல் பேசும் நாவல்.
முதலாளி ஜோன்ஸின் பண்ணையில் பன்றி, குதிரை, நாய், கோழி, ஆடு, வாத்து, காகம், நாய் என்று பல வித மிருகங்களும் பறவைகளும் இருக்கின்றன. அவற்றில் மூத்த பன்றியான கிழட்டு மேஜர்தான் விலங்குகளின் மனதில் புரட்சி விதையை விதைக்கிறது. உணவிற்காகப் பகலெல்லாம் ஜோன்சிற்கு உழைத்து ஓய்ந்துபோவது குறித்தும் அடிமைகளாக இருப்பது குறித்தும் விலங்குகளிடம் விழிப்புணர்வு ஏற்படுமாறு பேசியது இந்த மேஜர்தான். சில நாட்களில் இந்த மேஜர் இறந்துபோகிறது.
அதற்குப் பின்பு நெப்போலியன், ஸ்நோபால், ஸ்குவீலர் போன்ற பன்றிகள் பிற விலங்குகளிடம் இந்தப் புரட்சி மனப்பான்மையை வளர்க்கின்றன. எதிர்பார்த்தது போலவே மிஸ்டர் ஜோன்ஸைப் பண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றிப் பண்ணையைக் கைப்பற்றுகின்றன விலங்குகள்.
புரட்சி வெற்றியடைந்த பின் பன்றிகள் பிற விலங்குகளுக்குத் தலைமை ஏற்கின்றன. குறிப்பாக நெப்போலியனும் ஸ்நோபாலும். பண்ணை மிருகங்களின் எதிரி மனிதன்தான், அவனுக்கு அடிமையாக ஒருபோதும் இருக்கக் கூடாது; ஒரு விலங்கு இன்னொரு விலங்கைத் தாக்கக் கூடாது; மது அருந்தக் கூடாது; எல்லா மிருகங்களும் சரிசமம்; மிருகங்கள் துணி அணியக் கூடாது; படுக்கையில் படுத்துறங்கக் கூடாது என்று பல்வேறு விதிகளை வகுத்துக்கொள்கின்றன மிருகப் பண்ணை விலங்குகள். எல்லா விலங்குகளும் கல்வியறிவு பெறவும் ஏற்படாயிற்று.
பண்ணை வேலைகளில் அந்தந்தப் பருவ காலத்திற்குரிய அத்தனை வேலைகளையும் இந்த விலங்குகள் செய்தன. விலங்குகள் மிகக் கடினமான உழைத்தன. சுதந்திரமாக இருப்பதில் அவை வேலைப் பளுவை உணரவில்லை. சுதந்திரமாக இருப்பதில் அவை வேலைப் பளுவை உணரவில்லை. தலைமைப் பொறுப்பு வகிக்கும் பன்றி இனம் மட்டும் சில சிறப்புச் சலுகைகளை அனுபவித்தது. புத்திசாலி இனம் என்பதால் இந்தச் சலுகை என்று காரணம் சொல்லப்படுகிறது.
ஸ்நோபாலுக்குக் காற்றாடிக் கட்டிடம் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் யோசனை வருகிறது. அதற்குப் பண்ணைக் காரியங்களில் செய்யும் வேலையைவிடக் கூடுதலாக வேலை செய்ய வேண்டி வரும் என்றும் உணவுத் தன்னிறைவுதான் முதல் தேவை என்றும் நெப்போலியன் தரப்பில் கூறப்படுகிறது. விலங்குகளுக்கு மின்சார விளக்கொளியும் வெதுவெதுப்பான நீரும் ஆசையைக் கிளப்புகின்றன. ஆனால் நெப்போலியன் அதை மறுக்கிறது. அதோடு வேட்டை நாய்களின் உதவியோடு ஸ்நோபாலைப் பண்ணையை விட்டு விரட்டுகிறது. அதிர்ச்சியடைந்த பிற மிருகங்களிடம் ஸ்நோபால் ராஜதுரோகம் செய்தது என்று அதன் துரோகச் செயல்கள் கதைகளாகக் கூறப்படுகின்றன. அதை விலங்குகளும் ஏற்றுக்கொள்கின்றன.
நெப்போலியன் அதிகாரத்தின் மொத்த உருவாக மாறியது. சில மாதங்களில் காற்றாடிக் கட்டிடம் கட்டும் யோசனையை நெப்போலியன் முன்வைக்கிறது. மேலும் ஸ்நோபால் தனது திட்டத்தைத் திருடியது என்றும் குற்றம் சாட்டுகிறது நெப்போலியன். பசுக்கள் கறக்கும் பால் முழுவதும் பன்றிகளின் உணவில் கலக்கப்படுகின்றன. உதிர்ந்த ஆப்பிள்கள்கூட பிற விலங்குகளுக்குக் கொடுக்கப்படவில்லை. காரணம் மூளை வேலை செய்யும் இனம் என்பதனால் சலுகை.
விலங்குகள் கடினமாக உழைத்து நெப்போலியனின் கட்டளைப்படி காற்றாடிக் கட்டிடம் கட்டுகின்றன. நிறைவுறும்போது புயல் காற்று கட்டிடத்தைச் சிதைத்தது. பழி ஸ்நோபால்மீது போடப்பட்டது. மீண்டும் கட்டிடம் கட்டப்பட்டது. மனித எதிரிகள் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். உழைப்பு வீணாணது. விலங்குகளுக்கு உழைப்பிற்கேற்ற உணவு கிடைக்கவில்லை. நெப்போலியன் வேட்டை நாய்களோடு வலம் வந்துகொண்டிருக்கிறது. துரோகம் செய்த விலங்குகள் கொல்லப்படுகின்றன. பிற விலங்குகள் பயத்தால் தலைவனின் ஆணைப்படி நடந்துகொள்கின்றன.
நெப்போலியன் விதிகளை மீறி மனிதர்களோடு நட்பு கொள்கிறது. படுக்கையில் படுத்துத் தூங்குகிறது. பன்றி இனம் குடிக்கிறது. விதிகள் மாற்றி எழுதப்படுகின்றன. சில விதிகள் தளர்த்தப்படுகின்றன. பிற விலங்குகள் கேள்விகள் கேட்க முடியாமல் வாயடைத்துப்போகின்றன. கடின உழைப்பாளியான பாக்ஸர் குதிரை கொல்லப்படுகிறது.
கேள்வி கேட்பதற்கு இயலாமையால் பிற மிருகங்கள் தவிக்க, பன்றி இனம் மனிதர்களோடு வியாபாரம் பேசிக்கொண்டு சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. குடிபோதையில் இருவருக்கும் சண்டை வலுக்கிறது. மனித முகத்திற்கும் பன்றி முகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மனித முகம் பன்றியாகவும் பன்றி முகம் மனித முகமாகவும் தெரிகிறது என்று கதை நிறைவடைகிறது.
மிருகங்களின் பண்ணை ருஷ்யப் புரட்சிக்குப் பின் நிலவிய ஊழலையும் ஒடுக்குமுறையையும் விமர்சிக்கும் நாவல் என்று சொல்வார்கள். ஆனால் இந்தக் கதை எந்த நாட்டிற்கும் அதன் அரசியல் சூழலுக்கும் பொருந்தக்கூடிய கதைதான். அரசியலைப்பில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தாமே எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தையும் சலுகைகளையும் இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது.
எல்லாக் காலத்திலும் அதிகார வர்க்கத்தின் போக்கை விமர்சிப்பதாக இந்நாவலைப் புரிந்துகொள்ள முடிகிறது. க.நா.சு.வின் மொழிநடை சிறப்பாக இருக்கிறது. இருந்தாலும் அவரது காலத்துத் தமிழில் சகஜமாக இருந்த வடமொழிச் சொற்களின் பயன்பாடு பல இடங்களில் நெருடுகிறது. நாவலின் தலைப்பு அட்டையில் மிருகங்களின் பண்ணை எனவும் உள்ளே மிருகங்கள் பண்ணை எனவும் தரப்பட்டிருக்கிறது. சின்ன விஷயத்தில் ஏன் இந்தக் குழப்பம்?
மிருகங்களின் பண்ணை
– ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்:
க.நா. சுப்பிரமணியம்
விலை: ரூ. 75.
வெளியீடு: அம்ருதா பதிப்பகம், சென்னை – 116.