Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘1974’ Category

Ganga-Cauvery water inter-linking – National River Integration

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

கங்கை-காவிரி இணைப்பு-பலிக்குமா பாரதியின் கனவு?

இராமசாமி

“”இந்திய நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், கங்கை – காவிரி இணைப்பு என்பது இன்னும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.

செயற்கைக்கோள் படங்களை வைத்து இக் கட்டுரையாளர் மற்றும் அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தொலையுணர்வு மையத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடத்திய ஆய்வுகளின்படி, காவிரி நதி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்கேனக்கல்லில் இருந்து (1) வடகிழக்காக தர்மபுரி-ஆம்பூர்-வாணியம்பாடி-வாலாஜாபேட்டை-திருவள்ளூர் வழியாக ஓடி, சென்னைக்கு வடக்கே கடலில் கலந்தது தெரியவருகிறது.

அப்போது சென்னைப் பகுதியில் பூமி மேலே எழும்பிய காரணத்தால் இப்பாதையை, காவிரி விட்டு விட்டு தற்போது மேட்டூர் அணையிருக்கும் இடத்திலிருந்து தோப்பூர் ஆறு – வாணியாறு(2) – பொன்னையாற்றின் தற்போதைய பாதை(3) வழியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடி கடலூர் பகுதியில் கடலில் கலந்திருக்கிறது.

இக்கால கட்டத்தில், அடிக்கடி ஏற்பட்ட கடல் அலைகளின் சீற்றத்தாலும், மேலும் இன்றைய மேட்டூர் அணையிலிருந்து ஈரோடு வழியாக வடக்கு – தெற்காக ஒரு பெரிய பூமி வெடிப்பு (4) உருவான காரணத்தாலும், இந்த இரண்டாவது பாதையையும் விட்டுவிட்டு, தற்போதைய மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து தெற்காகத் திரும்பி அப்பூமி வெடிப்பின் வழியாக ஓடி, கரூர் – திருச்சி பகுதியை சுமார் 2300 ஆண்டுவாக்கில் அடைந்து இருக்கிறது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

பின்னர், திருச்சியில் இருந்து கிழக்காக பல கிளை நதிகளாகப் பிரிந்து ஓடிக் கடலில் கலந்து இருக்கிறது. இக்கிளை நதிகள் தெற்கே தற்போது உள்ள புதுக்கோட்டை வெள்ளாறு(5), அம்புலியாறு, அக்னியாறு பகுதிகளில் இருந்து வடக்கே தஞ்சாவூர், கும்பகோணம், பூம்புகார் வரை வியாபித்து ஓடியிருக்கிறது.

தற்போதுள்ள கொள்ளிடம் (6) பாதையின் வயது சுமார் 750 ஆண்டுகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் பகுதியில் ஓடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே புதுக்கோட்டை வரை தடம் மாறி ஓடி, பின் வடக்காகத் திரும்பி கொள்ளிடமாக நிலை பெற்ற பின், காவிரி விட்டுச் சென்ற பழைய பாதைகளைத்தான் பாலாறு, பொன்னை ஆறு புதுக்கோட்டை வெள்ளாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி போன்ற பல நதிகள் பின்னாளில் ஆக்கிரமித்துக் கொண்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வைகை நதி(7) முன்பு குண்டாறு வழியே ஓடி பின் வடப் பக்கமாகத் திசைமாறி ஓடி, தற்போது ராமேசுவரம் அருகே கடலை அடைகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், நதிகளை இணைப்பதற்காக மிகப் பெரிய இணைப்புக் கால்வாய்களை வெட்டுவதற்குப் பதிலாக, நிலவியல் மாற்றங்கள், நதிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பல புதையுண்ட நதிகளைப் பயன்படுத்தி இந்திய நதிகளை இணைக்கலாம் என்று இவ்வாய்வு கூறுகிறது.

ஏனெனில், இப்புதையுண்ட பாதைகளைத் தேர்ந்தெடுப்பதால் குறைந்த அளவே ஆழப்படுத்தும் பணி தேவைப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் புதிய கால்வாய்களை உருவாக்குவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகளும் இருக்காது.

மேலும் இப்புதையுண்ட பழைய பாதைகள், ஏற்கெனவே நதிகள் ஓடும் பாதைகளாக இருந்ததனால், எளிதாக புதிய நீர்வளத்தை ஏற்றுக்கொள்ளும். வெள்ளமோ அல்லது சுற்றுப்புறச்சூழல் கேடோ ஏற்படுத்தாது. ஆகவே இவ்வாய்வின் மூலம் முதற்கட்டமாக எவ்வாறு தமிழக நதிகளை இணைக்க முடியும் என்ற மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அ. ஒக்கேனக்கல் பகுதிகளில் காவிரியில் வரும் வெள்ளத்தை சென்னைக்கு காவிரியின் பழைய புதையுண்ட பாதை(1) வழியாகக் கொண்டு செல்லுதல்.

1. ஒக்கேனக்கல் – வாணியம்பாடி இடையே சுரங்கப்பாதை (8) ஏற்படுத்தி காவிரி நீரைக் கொண்டு செல்லுதல்.

2. வாணியம்பாடி – வாலாஜாபேட்டை இடையே பாலாற்றில் (9) காவிரி நீரை ஓடச் செய்தல்

3. வாலாஜாபேட்டை வரை பாலாற்றில் கொண்டு வந்த காவிரி நீரை வாலாஜாபேட்டைக்கு கிழக்கே ஒரு தடுப்பு அணையைக்கட்டி நீரின் ஒரு பகுதியை வாலாஜாபேட்டை – திருவள்ளூர் – சென்னை வரை, காவிரியின் புதையுண்ட பாதையை (10) சற்று ஆழப்படுத்தி, அதன் வழியாகக் கொண்டு செல்லுதல். மீதி காவிரி நீரை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியின் மேம்பாட்டிற்காக பாலாற்றில் ஓடச் செய்தல்.

ஆ. ஒக்கேனக்கல்லில் இருந்து – சென்னைக்கு காவிரி நீரைக் கொண்டு செல்ல மாற்று வழிப்பாதை

4. மேற்கூறிய (பகுதி அ-வில் கூறப்பட்டவை) இணைப்பு சாத்தியமில்லையெனில் கீழ்க்கண்ட மாற்று வழியைப் பயன்படுத்தலாம். மேட்டூர் நீர்த் தேக்கத்திற்கு கிழக்காக காவிரியின் பழைய பாதையில் தற்போது ஓடும் தொப்பூர் ஆறு மற்றும் வாணியாறுகளை (2) சிறிது ஆழப்படுத்தி, காவிரியின் நீரை மேட்டூர் அணையிலிருந்து சாத்தனூர் நீர்த்தேக்கத்துக்குக் (11) கொண்டு செல்லுதல்.

5. சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 8 – 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கே அமைந்துள்ள முட்டனூர் வரை ஒரு கால்வாய் அமைத்து, காவிரி நீரை செய்யாற்றுக்கு கொண்டு சென்று செய்யாற்றில் (12) ஓடச் செய்தல்.

6. இவ்வாறு செய்யாற்றுக்கு கொண்டு வந்த காவிரி நீரை, பூனாம்பலம் அருகே செய்யாற்றில் ஒரு தடுப்பு அணையைக் கட்டி, அதோடு பூனாம்பலத்தில் இருந்து வடக்கே வாலாஜாபேட்டை (8) வரை ஒரு கால்வாயை சுமார் 10 – 12 கிலோ மீட்டருக்கு (13) அமைத்து, காவிரி நீரை பாலாறுக்கு கொண்டு செல்லுதல். வாலாஜாபேட்டையில் இருந்து இந்நீரை திருவள்ளூர் – சென்னை வரை காவிரியின் பழைய பாதையில் கொண்டு செல்லுதல்.

7. சாத்தனூர் அணையிலிருந்து (11) மீதம் உள்ள காவிரி நீரை பொன்னையாறு (3) வழியாகக் கொண்டு சென்று விழுப்புரம் பகுதியை வளமுறச் செய்தல்.

இ. காவிரியை புதுக்கோட்டை வெள்ளாற்றோடு இணைத்தல்

8. எஞ்சியுள்ள காவிரி வெள்ள நீரின் ஒரு பகுதியை, திருச்சி – முக்கொம்பு அருகே ஒரு சிறிய தடுப்பு அணையை அமைத்து, முக்கொம்பு – வெம்பனூர் இடையே காணப்படும் காவிரியின் புதையுண்ட ஒரு கிளை நதி வழியாகக் கொண்டு சென்று, புதுக்கோட்டை வெள்ளாறு (5) வழியாக ஓடச் செய்து, வறட்சிப் பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர் வளத்தை மேம்படுத்துதல்.

ஈ. காவிரியை அம்புலியாறு – அக்னியாறோடு இணைத்தல்

9. மேற்கூறியவாறே, திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே மேலும் ஒரு தடுப்பு அணையை அமைத்தோ அல்லது கல்லணையைப் பயன்படுத்தியோ கல்லணைக்கு தெற்கே காணப்படும் காவிரியின் புதையுண்ட இக்கிளை நதிகளின் வழியாக காவிரி நீரை புதுக்கோட்டை வெள்ளாற்றிற்கு வடக்கே உள்ள காவிரியின் புதையுண்ட கிளை நதிகளில் தற்போது ஓடும் அக்னியாறு மற்றும் அம்புலியாறுக்கு திருப்பி விடுதல்.

உ. தஞ்சை வண்டல் பகுதியில் நீர் வளத்தை மேம்படுத்துதல்

10. மேலும் தஞ்சை பகுதிகளில் காவிரியின் புதையுண்ட பழைய கிளை நதிகளில் தற்போது ஓடும் வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளை ஆழப்படுத்தி காவிரி வெள்ள நீரின் வரத்தை அதிகம் செய்து நீர்வள மேம்பாடு செய்தல்.

ஊ. காவிரியை மணிமுத்தாறு – வைகையோடு இணைத்தல்

11. புதுக்கோட்டைக்கு மேற்கே வேம்பனூர் அருகே புதுக்கோட்டை வெள்ளாற்றில் ஒரு தடுப்பு அணையை அமைத்து, வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி வழியாக மதுரைக்கு வடமேற்கு வரைக்கும் கால்வாய் அமைத்து (14), காவிரியை வைகையாறோடு இணைத்து, அந்நீரை வறட்சி மாவட்டங்களான சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் காணப்படும் புதையுண்ட கிளை நதிகளின் மூலம் கொண்டு சென்று அம்மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி/ குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

12. தேவகோட்டைக்கு மேற்கே சேந்தலப்பட்டியில் இருந்து மேற்கூறிய வேம்பனூர் – பொன்னமராவதி – சேந்தலப்பட்டி – மதுரை கால்வாயில் இருந்து ஒரு பகுதி காவிரி நீரை மணிமுத்தாறில் (15) ஓட வைத்து தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏரி / குளங்களில் சேமித்து நீர் வளத்தை மேம்படச் செய்தல்.

இந்த ஆய்வு தமிழக நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரியின் மிகுந்து வரும் வெள்ளத்தைக் கடலில் வீணாக்காமல் நீர் வள மேம்பாடு செய்வதில் ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளிக் கொணர்ந்துள்ளது.

காவிரியின் வெள்ளத்தோடு கோதாவரி, கிருஷ்ணா அல்லது கங்கை போன்ற எந்த ஒரு நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் கொண்டு வந்தாலும் அதன் நுழைவு வாயில் ஒக்கேனக்கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்பது புவியியல் அமைப்பு கூறும் ஒரு மிகப் பெரிய உண்மை.

அப்போதுதான் தமிழ்நாடு முழுவதும் மேற்கூறியவாறு நீர்வள மேம்பாடு செய்ய இயலும். அதைவிடுத்து, இந்நதி இணைப்புத் திட்டத்தில், கடலோரத்தில் கால்வாய் அமைத்து, பெண்ணாறு – காவிரி இணைப்பு செய்தால், வண்டல் மற்றும் கடலோர மக்கள் மட்டுமே பயன் பெற முடியும். தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் பயனடையாது.

இவ்வாறு தமிழக நதிகளை இணைப்பது சாத்தியமானதாக இருப்பதால், புவியியல் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் இணைந்து செயலாற்றி, நதிகள் இணைப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: இயக்குநர் மற்றும் தலைவர், தொலையுணர்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி).

திருப்தி அளிக்காத தீர்ப்பு

ஆர். கருப்பன்

வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்கிற இளங்கோவடிகளின் கூற்று 1974ம் ஆண்டு முதல் இன்றுவரை பலமுறை பொய்த்துக் கொண்டே வந்திருக்கின்றது.

1974ம் ஆண்டு, காவிரி ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என கர்நாடகம் பொய்ப்பிரசாரம் செய்தது. இதை தமிழ்நாட்டுத் தலைவர்களும் நம்பினார்கள்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலால், கர்நாடக அரசின் விடாப்பிடி போக்கினால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவசியமானால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையோடு வாபஸ் பெறவில்லை எனக் கூறி மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது என்கிற சட்ட ஆலோசனையால் தமிழகம் தவித்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகஜீவன்ராம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழகத்துக்கு 377 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடகம் ஒப்புக்கொண்டது. அதை அன்று ஏற்க மறுத்துவிட்டனர். அதுவும் சரியே. காரணம் தமிழகத்தின் பங்கு 533 டி.எம்.சி.க்கு மேல் எனக் கருதி வந்தோம்.

கர்நாடகம் அதிவேகமாக காவிரி நதி நீரை முழுமையாகப் பயன்படுத்த எண்ணி ரகசியமாக புதிய அணைகளையும், புதிய பாசனத் திட்டங்களையும் தொடங்க ஆரம்பித்தது. மேட்டூருக்கு தண்ணீர் திறந்து விடுவது நின்று போனது. கர்நாடகம் தன் தேவைக்கு மேல் தண்ணீரைத் தேக்கி வைக்க ஆரம்பித்தது. பயிர்களைப் பாதுகாக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கர்நாடக அரசிடம் தமிழக அரசு கெஞ்சுவதும், கர்நாடகம் மறுப்பதும் பின்னர் ஏதோ பிச்சை போடுவது போல சில டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதும் வாடிக்கையாகப் போனது.

கர்நாடகத்தின் போக்கு நியாயத்திற்கும் தர்மத்திற்கும் மாறாக இருப்பதும் அதனால் தமிழக விவசாயிகள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாவதையும் பொறுக்க இயலவில்லை. 1924ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகம் புளுகிவருவதுபோல காலாவதியாகவில்லை என்பது புலனானது.

1924ம் ஆண்டின் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் அனைத்துலக நதிநீர்ச் சட்டத்தின்படி, உருவெடுக்கும் நாட்டிற்கு மட்டும் நதி சொந்தமில்லை. அது ஓடிப் பாய்ந்த கடைசி நாடு வரை பங்கு கோரலாம் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தக் காரணங்களை முன்னிறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் 1983ம் ஆண்டு முதல் கர்நாடகம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் வழக்குத் தொடுத்து வந்தேன். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் மேட்டூருக்கு தண்ணீர் வருவதும், வழக்கு தள்ளுபடியாவதும் வழக்கமானது.

இத்தகைய சூழலில் 1988ம் ஆண்டு ஒரு பொது நல வழக்கைத் தொடுத்தேன். கர்நாடகம் இம்முறை இசைந்து வரவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசை திருப்பி அனுப்பிவிட்டு, விசாரணையின்போது ஆஜராக மறுத்துவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினை குறித்து நதிநீர்த் தீர்ப்பாயம்தான் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கர்நாடகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மறுவிசாரணைக்குள் அவசர அவசரமாக கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என வேண்டியது. அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு வழக்கு தில்லிக்கு மாற்றப்பட்டது.

காவிரி வழக்கு புத்துயிர் பெற்றது. தமிழக அரசும் இவ்வழக்கில் ஆர்வம் காட்டியது. இதையடுத்து எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பாயத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பாயம் பல்வேறு நிலைகளை ஆய்வுசெய்து 1991-ம் ஆண்டு தனது இடைக்கால உத்தரவை வெளியிட்டது.

கர்நாடக சட்டமன்றம் கூடி, காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை ஏற்கமறுத்து அதை ரத்துசெய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. காவிரி நதிநீர்ப் பாதுகாப்பு என்கிற அவசரச் சட்டத்தையும் பிறப்பித்தது.

தீர்ப்பாயம் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்கள் நீதிபதிகள்.

இந்நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தது. கர்நாடக அரசியல்வாதிகள் ஒருமித்த குரலில், தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்கிற அறிவிப்பினை வெளியிட ஆரம்பித்தனர்.

உறுதியான நீர்வரத்து 50 சதவீதம் என்கிற அடிப்படையில் பங்கீடு செய்துள்ளதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. முழு அளவு நீர் அதாவது 100 விழுக்காடு அளவு வந்தால் உபரியாக வரும் 50 சதவீதம் அளவு நீர் கர்நாடகத்திற்கு அல்லவா போய்ச் சேரும். அது எப்படி நியாயமாகும்?

சரி தீர்ப்பாயப்படி தமிழகத்திற்குத் தேவையான அளவு வெறும் 200 டி.எம்.சி. அளவுதான் என்றாலும் உபரியான 350 டி.எம்.சி. நதிநீர் தமிழகத்தின் பங்கு அல்லவா? 1976 முதல் 2007 வரை கணக்கிட்டு காவிரிப்படுகை விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டிருக்க வேண்டுமல்லவா?

தமிழகத்தின் நீரை கர்நாடகத்திற்கு தீர்ப்பாயம் தாரை வார்ப்பது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல் அல்லவா இருக்கிறது.

கர்நாடகம் ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் தமிழகத்துக்கு நேரிட்ட சேதத்துக்கு இழப்பீடு ஏதும் கொடுக்காதது ஏன்?

1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி புதிதாக விவசாயத்திற்கு கொணர்ந்த நன்செய் நிலங்களில் சாகுபடி செய்யக் கூடாது என உத்தரவு கோரியிருந்த வேளையில், புதிய நன்செய் சாகுபடியை கர்நாடகம் ஆமோதித்தது. அத்துடன் அத்துமீறி புன்செய் சாகுபடியையும் விரிவுபடுத்தியது.

அதே தருணம் தமிழகத்தில் விரிவுபடுத்திய புதிய சாகுபடி நிலங்களைப் பயிரிட வேண்டாம் என்றல்லவா கூறிவிட்டது. இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால், காவிரியின் நீர்வரத்து 1000 டி.எம்.சி. அளவுக்கு இருக்கும்; அதை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டு மிகக் குறைவான பங்கீட்டை தமிழகத்திற்கு கொடுக்க நடந்த மோசடி நாடகத்தின் முடிவுதான் இறுதித் தீர்ப்பு.

தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு நம்முடைய எழுச்சியையும், எதிர்ப்பையும் கர்நாடகத்துக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்க வழிபிறக்கும்.

ஆரம்ப நாள் முதலே கர்நாடகம் செய்வது அடாவடித்தனம்; சட்டரீதியான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை; நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டேன்; அதைத் தள்ளுபடி செய்து விட்டோம் எனப் பிரகடனப்படுத்துவது, கர்நாடக வாழ் தமிழர்களுக்கு எதிராக தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவது. இவற்றையே கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

எனவே உரிய நிவாரணங்களைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனே வழக்குத் தொடர வேண்டும். தீர்ப்பாயத்திடம் மறு ஆய்வுக்குச் செல்லுவதால் எந்தப் பலனும் நேராது. வெறும் கால இழப்புதான் மிஞ்சும். தவறான தீர்ப்பை மறு ஆய்வு என்கிற பேரால் எந்தத் தீர்ப்பாயம் திருத்தி எழுதும்?

முன்போல் காவிரிப்படுகை விவசாயிகளின் பிரதிநிதிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்து, அவர்கள் கோரிய நிவாரணம் வேண்டும் எனத் தனியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

——————————————————————————-

சிக்கலில் சிந்து நதிநீர் ஒப்பந்தம்

எம். மணிகண்டன்

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர்ப்பங்கீடு குறித்த உடன்பாடு 1960-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டபோது, அத்துடன் இருநாடுகளுக்கு இடையே நிலவிவந்த நீர்ப்பங்கீட்டு பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகவே அனைத்துத் தரப்பினரும் நினைத்தனர். ஆனால் 1980க்குப் பிறகு எழுந்த நவீன காலப் பிரச்னைகள் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சிந்து மற்றும் அதன் கிளை நதிகளான

* ஜீலம்,
* சீனாப்,
* பியாஸ்,
* ரவி,
* சட்லெஜ்

ஆகியவற்றில் மேற்கு பக்கம் இருக்கும் சிந்து, ஜீலம், சீனாப் ஆகியவை பாகிஸ்தானுக்கும், மற்ற மூன்று நதிகள் இந்தியாவுக்கும் “உரிமையானவை’ என சிந்து நதிநீர் ஒப்பந்தம் கூறுகிறது.

இந்த நதிகளின் போக்கை மாற்றாமல் அணைகளைக் கட்டிக் கொள்ளலாம் எனவும் இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. வளர்ச்சிப் பணிகளைக் காரணம் காட்டி பாகிஸ்தான் உரிமை பெற்ற நதிகளின் குறுக்கே இந்தியா அணைகளைக் கட்டுவதும், அதற்குப் பாகிஸ்தான் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஜீலம் நதியில் கோடைக்காலத்தில் படகுப் போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்டப்பட்ட ஊலர் தடுப்பணை, பக்லிஹார் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் திட்டங்கள் ஆகியவை இந்தியாவின் “பிரச்னைக்குரிய’ திட்டங்கள். தற்போது ஊரி நீர்மின் திட்டமும் இப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட எந்தத் திட்டத்திலும் பாசனத்துக்காக நதிநீரை இந்தியா பயன்படுத்தவில்லையே? பிறகு ஏன் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்று ராஜதந்திரம் தெரியாதவர்கள் அப்பாவியாகக் கேட்கக் கூடும்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் எழுச்சியைக் கண்டு பொறாமை கொண்ட பாகிஸ்தான் இது போன்ற தேவையற்ற வேலைகளில் ஈடுபடுகிறது என்றுகூட நம்மில் சிலர் நினைக்கலாம். இவற்றைப் பற்றி பார்ப்பதற்கு முன் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்.

சிந்து நதிநீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு உரிமையான நதியின் வேகத்தை அணையைக் கட்டி இந்தியா தடுக்கக்கூடாது. அதாவது பாகிஸ்தானுக்குள் செல்லும்போது அந்த நதி சீரான வேகத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஊலர் தடுப்பணை, பக்லிஹார் நீர்மின் திட்டம், ஊரி நீர்மின் திட்டம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அணைகள், நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.

சாதாரணமான நேரங்களில் இந்த அணைகளைக் கொண்டு பாகிஸ்தானுக்கு பிரச்னை எதையும் ஏற்படுத்தாமல் சமர்த்தாக நடந்து கொள்ளும் இந்தியா, போர்க்காலங்களில் இவற்றையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் பலமாகச் சந்தேகிக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டில் பக்லிஹார் அணை திடீரெனத் திறக்கப்பட்டதால் பாகிஸ்தான் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அந்நாடு சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, விவசாயத்தை நம்பியிருக்கும் பாகிஸ்தானின் சிந்து, பஞ்சாப் மாகாண மக்கள் இந்த அணைகளால் பாதிக்கப்படுவார்கள் என்ற பிரச்னையையும் பாகிஸ்தான் முன்வைக்கிறது.

இந்தியாவைக் கடந்துதான் பாகிஸ்தானுக்குள் இந்த நதிகள் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சம். உலக அரங்கில், ஒப்பீட்டளவில் செல்வாக்கு மிகுந்த நாடான இந்தியாவுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கும் என்பது பாகிஸ்தானை எரிச்சலடைய வைக்கும் மற்றொரு விஷயம். ஏற்கெனவே, பக்லிஹார் நீர்மின் திட்ட விவகாரத்தில் “கிட்டத்தட்ட’ வெற்றியைப் பெற்றுவிட்ட இந்தியாவுக்கு, தற்போது ஊரி நீர்மின் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு ஒன்றும் தலைபோகும் விஷயமல்ல.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எழுந்த பிரச்னைகள் எதுவும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. இரு நாடுகளும் அணுஆயுத சக்திகளாக மாறிவிட்ட பிறகு இந்த பிரச்னைகளின் வீரியம் கூடியிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இந்நிலையில், புதிய பிரச்னைகள் உருவாவது அல்லது உருவாக்குவது போன்றவை, ஏற்கெனவே பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு இப்பிரச்னைகள் தீராத தலைவலியாக இருக்கும் என்பதுதான் நிபுணர்கள் கருத்து.

அதனால் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து அதிகரித்து வரும் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா வளைந்து கொடுப்பதுதான் சரியான ராஜதந்திரமாக இருக்கும். அதுமட்டுமல்ல, மின்திட்டங்கள் அமைப்பதற்காக வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நல்ல சேதி இல்லை.

Posted in 1974, Byas, Cauvery, Chenab, Dam, Devakottai, Ganga, Hogenakal, Hogenakkal, Interlink, Issue, Jhelum, Karnataka, Karuppan, Kaviri, Kollidam, Pakistan, Pyas, R Karuppan, Rain, Ravi, River, Sathanoor, Sathanur, Season, Seyyar, Sindhu, Sutlej, Tamil Nadu, Thiruchirappalli, TMC, Trcihy, Vaaniyambadi, Wallajapet, Water | Leave a Comment »