அது பம்பாய் காலம்…
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் “வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.
அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.
1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.
எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.
தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.
ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. “”இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்” என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.
அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், “சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.
அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.
முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. “”சாந்தாராமை”ப் பற்றி எழுதுவதற்கும். “லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.
மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.
உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.
தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.
பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.
ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)