Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2009

கருணாநிதி விளக்கம்

ஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுமுகம்

2009-ம் ஆண்டு மே திங்கள் 13-ம் நாள் நடைபெறும் 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற 21 வேட்பாளர்களின் பட்டியலை-பரபரப்பு எதுவுமின்றி-பத்திரிகையாளர் சந்திப்பு இன்றி-தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பப்பட்டு-அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. நமது அணியின் தோழமைக் கட்சிகள் சார்பில் மற்ற 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுவதும்- செய்தியாளர்கள் அதனை ஒரு கேள்வியாகக் கேட்பதும்- புது முகங்களும் இருப்பார்கள் என்று பதில் சொல்வதும் வாடிக்கையான ஒன்று. இந்த முறையும் அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டு, புது முகங்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று பதில் கூறியிருந்தேன்.

தேர்தலையொட்டி நான் கூறிய இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதை பட்டியலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆமாம், 21 பெயர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 13 பேர் 14-வது நாடாளுமன்றத்தில் இடம் பெறாதவர்கள்- கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 15 பேர்களில் 8 பேர்கள் மட்டுமே தற்போதைய பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். அதாவது பழைய முகம் 8 – புதிய முகம் 13.

வருத்தம் அளிக்கிறது

கடந்த முறை பட்டியலிலே இடம் பெற்றிருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப் படவில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான். இதற்கும் அண்ணா கூறிய உவமையைக் கூற வேண்டுமென்றால்- பீரோ நிறைய ஏராளமான பட்டுப் புடவைகள் இருந்த போதிலும்- இன்று செல்லும் இந்தத் திருமணத்திற்கு இந்தக் கலர் பட்டுப் புடவையை எடுத்துக் கட்டிக்கொள்கிறேன் என்றால், அடுத்து இன்னொரு திருமணத் திற்குச் செல்லும்போது மற்றொரு புடவையை எடுத்துக் கட்டிக்கொள்வேன். இன்று இதனைக்கட்டிக்கொள்வதால் மற்றது எல்லாம் பிடிக்காது என்று அர்த்தமல்ல என்று சொன்னதைப் போல இந்தத் தேர்தலுக்கு இவர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த முறை உறுப்பினர்களாக இருந்த ஏழு பேர்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்று எழுதியதில்- தம்பி ரகுபதி, தம்பி வேங்கடபதி, தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கை ராதிகா செல்வி ஆகியோர் அமைச்சர்களாகவே பங்கேற்று திறம்பட செயல்பட்டவர்கள்.

இவர்களில் தங்கை சுப்புலட்சுமி ஜெகதீசன் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே என்னைச் சந்தித்து- “இந்த முறை குடும்ப சூழ்நிலை காரணமாக நான் போட்டியிடவில்லை, வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று கைப்பட கடிதமே எழுதி கொடுத்தபோது-இப்படியே ஒவ்வொருவரும் இருந்தால் என்று ஒரு கணம் நினைத்தேன்.

அமைச்சராக இருந்த தம்பி ரகுபதியின் புதுக்கோட்டை தொகுதியே இந்த முறை காணாமல் போய்- புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியே திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குப் போய்விட்டது. அதோடு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி- தம்பி வேங்கடபதி போட்டியிட்ட கடலூர் நாடாளுமன்றத் தொகுதி- தங்கை ராதிகாசெல்வி கோரிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஆகிய மூன்றும் தொகுதி உடன்பாட்டின்போது காங்கிரஸ் கட்சிக்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்டது.

பெண்களுக்கு முக்கியத்துவம்

இவர்கள் தவிர கடந்தமுறை நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர்- பாட்டாளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் தம்பி குப்புசாமிக்கு; வயது, உடல் நிலை காரணமாகவும்-ஒரு பெண்ணுக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக தம்பி கிருஷ்ணசாமிக்கும் – புதியவர் ஒருவருக்கு ராமனாதபுரம் தொகுதியிலே வாய்ப்பு தர வேண்டுமென்பதற்காக; தங்கை பவானி ராஜேந்திரனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்க முடியாமல் போய் விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இப்போது பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இவர்கள் வாய்ப்புக்கு உரியவர்களாவார்கள். குறிப்பாக தம்பி கிருஷ்ணசாமி நேற்று காலையில் என்னை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது- இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க முடியாமல் இருக்கிறது, உன் தொகுதியிலாவது உனக்குப் பதிலாக ஒரு பெண்ணை நிறுத்தலாம் என்று நினைக்கிறேன், யாரை நிறுத்தலாம் என்று நீயே யோசனை கூறு என்று சொன்னவுடன், சரி அண்ணே, அழைத்து வருகிறோம் என்று கூறி அவரும் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியும் சென்று- தற்போது நிறுத்தப்பட்டுள்ள சகோதரி காயத்ரி ஸ்ரீதரனை அழைத்து வந்தார்கள்.

அந்தக் காயத்ரி யார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும், பிறகு என்னுடனே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பழம்பெரும் கழக நண்பர் கிண்டி கோபாலின் பேத்தி என்கிறபோது நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

எந்த அளவிற்கு தம்பி கிருஷ்ணசாமி பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்பதை எண்ணி நான் எனக்குள்ளேயே பெருமைப்பட்டுக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவரது செயல்பாட்டில் எனக்கோ, கழகத்திற்கோ எந்தவிதமான குறைபாடும் இல்லை. இருந்தாலும் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்பதை அவர் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்.

தூத்துக்குடி

இது போலவே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியின் புதல்வர் போட்டியிட மனு செய்திருந்தார். அந்தத் தொகுதியிலிருந்து வந்திருந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் எல்லாம் அவரைத்தான் பரிந்துரையும் செய்திருந்தார்கள். அதற்குப் பக்கத்து தொகுதியான திருநெல்வேலிக்கு மனு செய்திருந்த சகோதரி ராதிகா செல்விக்கு அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்குப் பகிர்ந்து கொள்ளப்பட்டுவிட்ட காரணத்தால்-தூத்துக்குடி தொகுதியிலாவது வாய்ப்பு தரலாமா என்றும் யோசிக்கப்பட்டது. அவரிடமும் அதுபற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

அவர் தனக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதைவிட, அந்தத் தொகுதியிலே கழகம் வெற்றிபெற வேண்டியது முக்கியம் என்பதை நினைவூட்டினார். பின்னர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியசாமியை வரவழைத்துப் பேசினேன். அப்போது அவர் அண்ணே, நானோ மாவட்டக் கழகச் செயலாளர், என் பெண்ணோ அமைச்சராக இருக்கிறார், இதிலே என் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றால் ஒரு சிலர் அசூயை கொள்ள நேரிடும் என்று அவரே முன்வந்து கூறியதோடு எழுதியும் கொடுத்தார்.

வாய்ப்பு

பின்னர் நான் அவரிடம் நீயே யோசனை சொல், யாரை நிறுத்தலாம் என்று கேட்டபோது, அவரே ஒருவரை அழைத்து வந்து, இவரை நிறுத்தலாம், வெற்றிக்கனியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதின் பேரில்-தன் குடும்ப நலனைவிட, கழகத்தின் நலனைப் பெரிதாகக் கருதிய அந்தத் தம்பியை வாழ்த்திவிட்டு, அவர் அழைத்து வந்தவரையே அந்தத் தொகுதியிலே வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம்.

அவரைப் போலவே வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களும் பெருந்தன்மையாக இந்தமுறை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அடுத்தமுறை நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் 1999-ம் ஆண்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தம்பி ஆதிசங்கருக்கு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தம்பி வேங்கடபதிக்கு அந்தத் தொகுதியிலே வாய்ப்பு தரப்பட்டு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார்.

கடந்தமுறை வாய்ப்பு தரப்படவில்லை என்பதற்காக தம்பி ஆதிசங்கர் கோபித்துக் கொண்டு சோர்வுற்றுவிடவில்லை. முறையாக கழகப் பணிகளை ஆர்வமுடன் தொடர்ந்து ஆற்றி வந்தார். இப்போது மீண்டும் ஆதி சங்கருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே அண்ணா சொன்னதைப் போல மாறி மாறி வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

தாங்க முடியாத வலி

நேர்காணல் பணிக்காக இரண்டு நாட்கள் காலை முதல் இரவு வரை சக்கர நாற்காலியை விட்டு நான் இறங்காமல் உட்கார்ந்திருந்ததை உடன்பிறப்பே, நீ நன்கறிவாய். பேராசிரியர் போன்றவர்கள், நீங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் பார்க்கிறோம் என்று சொன்னபோது கூட, நான் கேட்கவில்லை. ஏனென்றால் தகுந்தவர்களை தேர்வுசெய்து வேட்பாளர்களாக உன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், நீ மக்களிடம் சென்று அவர்களுக்காக வாக்குகளை முறையாகச் சேர்க்க முடியுமென்பதற்காகத் தான் என் சிரமத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அமர்ந்திருந்தேன்.

அப்படி அமர்ந்திருந்ததின் விளைவை நேற்று அதிகாலை 3 மணி அளவில் என்னால் உணர முடிந்தது. ஆமாம், அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்திற்கு கீழே இடுப்பு மற்றும் கால் பகுதியில் கடுமையான வலி. வீட்டாரிடமும், மருத்துவரிடமும் வலி பற்றி கூறினால்- தொடர்ந்து பலமணி நேரம் உட்கார்ந்திருந்ததைக் கூறி; அவர்கள் நம்மைத் தான் கோபிப்பார்கள் என்பதற்காக வலியைப் பொறுத்துக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. வலியையும் பொறுத்துக் கொண்டு-இரண்டு மூன்று தொகுதிகளுக்கு சரியான வேட்பாளரை நிர்ணயிக்க முடியவில்லையே என்பதற்காக அந்த இரவு நேரத்தில் தம்பி துரைமுருகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரையும், சில மாவட்டக் கழகச் செயலாளர்களையும் வரச்செய்து பேசினேன். தொடர்ந்து அதே நேரத்தில்தான் திருவள்ளூர் தொகுதி பற்றி சிந்தித்து, மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி சிவாஜியையும், தம்பி கிருஷ்ணசாமியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை நேரில் வரச்செய்து, அந்த தொகுதி பற்றி முடிவெடுத்து அறிவித்தோம்.

பட்டதாரிகள்

கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 21 வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர அனைவருமே பட்டதாரிகள்- ஒரு சிலர்பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். கழகத் தலைமையின் சார்பில் தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி தொகுதி உடன்பாடு கண்டு-தேர்தல் அறிக்கை வெளியிட்டு-வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்துவிட்டோம். வாக்காளர்களிடம் சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு-இத்தகைய சாதனைகள் மேலும் தொடர்ந்திட இந்த அணியினை ஆதரிக்க வேண்டுமென்று கேட்டு வெற்றியைத் தேடித்தர வேண்டிய பொறுப்பு கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தோழர்களுக்கும் இருக்கிறது. அந்தப் பணியிலே அவர்கள் எல்லாம் ஈடுபட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான உந்து சக்தியை நமது தோழமைக் கட்சிகளான அனைத்துக் கட்சி உடன்பிறப்புகளுக்கும் வழங்க வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு என்பதை மறவாதே – தேர்தல் களம் அழைக்கிறது, புறப்படு!

இவ்வாறு அறிக்கையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: