Human trafficking case: Food chain Saravana Bhawan owner held over US visa fraud: City hotelier faked papers for visas
Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2008
உள்ளூர் பரபரப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் சரவண பவன், இப்போது உலகப் பரபரப்புக்கு அச்சாரம் போட்டிருக்கிறது!
சரவணபவன் அதிபர் அண்ணாச்சிராஜகோபாலின் மூத்த மகன் சிவகுமாரை ‘போலி தஸ்தாவேஜுகளைத் தயார் செய்து அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்ப முயன்றார்!’ என்ற குற்றத்துக்காக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத் திருக்கிறார்கள். இவருடன் ஹோட்டல் ஊழியர் ராமு என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சிவகுமார் பற்றி புகார் கொடுத்தது, சென்னையி லுள்ள அமெரிக்க துணை தூதரகம். சிவகுமாரைப் பற்றி விசாரிக்கப் போனால்… அவர் ஏகப்பட்ட சாகசங்களுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் பேசப் போன சமையல்காரர்!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற விருக்கும் உணவுப்பொருள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சரவணபவன் ஹோட்டல்களில் இருக்கும் சில
சமையல்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் சிவகுமார். அதன்படி மயிலாப்பூர் கிளையில் வேலைபார்க்கும் ராமு என்பவருக்கு விசா அப்ளை செய்யப்பட்டது. விசா தொடர்பான நேர்காணலுக்கு ராமு சென்றபோது தான் குளறுபடிகள் ஆரம்பமாயின. சரவணபவன் நிறுவனத்தில் உயர்பொறுப்பில் ராமு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நேர்காணலுக்குப் பின்னர், ராமு சாதாரண சமையல்காரர் என்பதும், அவர் தெரிவித்த மற்ற தகவல்கள் பொய் என்பதும் உறுதியானது. இதே போல் சுப்பிரமணியன், சேகர், ஆசைத்தம்பி ஆகியோரின் விசாக்களும் இதே காரணங் களுக்காக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த முறை சிவகுமார் நேரடியாகவே தூதரகத்துக்குச் சென்று, ஏன் விசா மறுக்கப்பட்டது என்று கேட்டார். தூதரக அதிகாரிகளுக்கும் அவருக்குமான உரையாடலின் ஒரு கட்டத்தில், ‘சமையல்காரன் அமெரிக்க நாடாளு மன்றத்திலா பேசப் போகிறான்?’ என்று கேட்க, அதை அதிகாரிகள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சிவகுமார் பேசியது முழுவதும் டேப்பிலும் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் வைத்து ஒரு ரிப்போர்ட் தயார் செய்து, அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி அந்தோணி ராமிரேஷ் போலீஸில் புகார் கொடுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீஸார், சிவகுமாரை முதலில் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள்.
‘ராமு கொடுத்த விசா விவரங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர், அமெரிக்கா செல்வதற்குத் தகுதி யானவர் என்று மட்டும்தான் நான் என் நிர்வாகத் தரப்பில் சொன்னேன்’ என்று விசாரணையில் சொன்னார். உடனடியாக, சரவணபவன் தரப்பே ராமுவை போலீஸார் வசம் ஒப்படைத்தது. ‘எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்!’ என்று ராமு சொல்லியிருந்தால், சிவகுமாரை போலீஸார் விசாரணையோடு விட்டிருப் பார்கள். ஆனால், ராமுவின் வாக்குமூலம் வேறு மாதிரியாக இருந்ததால்தான் சிவகுமார் மீது மோசடி, போலி தஸ்தாவே ஜுகளைத் தயாரித்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பேரம் வேண்டாம், ஓரங்கட்டு!
சனிக்கிழமை (8.11.08) மாலையில் சிவகுமாரை போலீஸார் அழைத்துச் சென்றவுடன், அவரை மீட்க அதிகார உச்சத்தில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் போனார் கள் சரவணபவன் தரப்பினர். ஒரு பெரும் தொகையைக் கேட்ட அந்தப் பெண்மணி, ‘வழக்கெல்லாம் போட்டிருக்க மாட்டார்கள். விசாரணைதான் நடந்து கொண்டிருக்கும், கவலை வேண்டாம்!’ என்று சொல்லியிருக் கிறார். ‘பெரிசில் அரை’ கேட்ட தாகவும் கூறப்படுகிறது. ‘பேரம் வேண்டாம். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து அழைப்பு வர… அவர்கள் திரும்பி விட்டார்கள். ‘சிவகுமாரை சிக்கவைக்க ஹோட்டல் நிர்வாகத்தில் இருக்கும் சிலரே அண்ணாச்சிக்குத் தவறான ஐடியாக்களைத் தருகிறார்கள்’ என்று இதையும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிளாக்மெயில் பதவி!
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிறையிலிருந்த அண்ணாச்சி, சிகிச்சைக்காக சென்னையின் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க சிவகுமார் சென்றார். அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் அந்த வழக்கு குறித்தும், ஹோட்டல் நிர்வாகம் குறித்தும் காரசார விவாதம் வெடித்தது. மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த சிவகுமார், ‘என் அப்பா என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்’ என்று போலீஸி டம் புகார் கொடுத்து, அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சொந்தங்களும், ஹோட்டல் நிர்வாகிகளும் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த, ‘ஹோட்டல் நிர்வாகத்தில் பெரிய பொறுப்பு கொடுத் தால் சமரசத்துக்குத் தயார்’ என்று சிவகுமார் தரப்பு சொன்னது. அப்போதுதான் வெளிநாடுகளில் இருக்கும் சரவண பவன் கிளைகளின் நிர்வாகப் பொறுப்பு சிவகுமாரின் கைக்கு வந்தது.
பாம்புப் பழிவாங்கல்!
சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்த சிவகுமார், அப்பா ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கியவுடன் முழு மூச்சாக நிர்வாகத்தைப் பார்க்க ஆரம்பித்தார். முதல்கட்டமாக ஹோட்டலின் ஸ்வீட், கார வகைகளின் டேஸ்ட்டை மாற்ற நினைத்தவர், ஏற்கெனவே ஸ்வீட் போட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக் குடைச் சல் கொடுக்க ஆரம்பித்தார். ‘எந்த டேஸ்ட்ல வேணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அந்த டேஸ்ட்ல ஸ்வீட்டைப் போட்டுக் காட்டுங்க. அதைப் பார்த்து நாங்க போடுறோம்’ என்று ஒட்டுமொத்த ஊழியர் களும் சொல்லத் தொடங்கினர். இவர்களை இயக்குவது குறிப்பிட்ட ஒரு ஊழியர்தான் என்று நினைத்த சிவகுமார், அந்த ஊழியர் வீட்டுக்குள் இரண்டு விஷப் பாம்புகளை விட்டார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக… விஷயம் போலீஸ் வரை போனது. ஒரு வழியாக பாம்பாட்டியை கூட்டிவந்து போலீஸ் விசாரிக்க, அவர் சிவகுமாரை கைகாட்டிவிட்டார். பிறகு தன்னுடைய ஊழியரை சமாதானப்படுத்தி, அந்த வழக்கிலிருந்து வெளியில் வந்தார் சிவகுமார்.
சமரச பாலிசி!
எந்த விஷயத்திலும் சிவகுமார், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டார். அந்த முடிவு களில் பெரும் சிக்கல்கள் வரும்போது, ரொம்பவும் சாமர்த்தியமாக எதிர்த்தரப்பை சமரசம் செய்வதில் அவர் கில்லாடி. வெளிநாட்டு உணவகங்களில் டிப்ஸ் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம்என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார்சிவகுமார்.
துபாய் துரத்தல்!
அசோக் நகர் சரவணபவன் கிளையை கவனித்து வரும் அதிகாரி ஒருவரின் உறவினர் துபாய் கிளைக்கு சமையல்காரராகப் பணியாற்றப் போனார். சொன்ன சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்று முதலில் புகார் கிளப்பிய சமையல்காரர், அடுத்து பதினாறு மணி நேர வேலைப் பளுவையும் சுட்டிக்காட்ட… சிவகுமார் களத்தில் இறங்கினார். உரிமை கேட்ட ஊழியர் நன்றாக ‘கவனிக்க’ப்பட, அது அடுத்த சில மணி நேரங் களில் போலீஸ§க்குப் புகாராகப் போனது. சிவகுமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட, கணிசமான தொகையை அந்த ஊழிய ருக்கு சன்மானமாகக் கொடுத்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. அந்த ஊழியரும் தொகையோடு சென்னை கிளம்பினார். அவர் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கிய வுடன், ஒரு கும்பல் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டு போனது. அந்த கும்பலை யார் அனுப்பி வைத்தது என்பதற்கு இதுவரை பதில் இல்லை!
திருஷ்டி பூஜை!
தன் இரண்டாவது மனைவி கிருத்திகாவுக்காக 1997-ல் அசோக் நகரில் ஒரு பங்களா கட்டினார் அண்ணாச்சி. அண்மையில் அண்ணாச்சியை விட்டு கிருத்திகா பிரிந்து போனவுடன், அசோக் நகர் வீடு மாற்றியமைக்கப்பட்டு, துளசி மாடம் இருந்த இடத்தில் ஒரு நீச்சல் குளம் கட்டப்பட்டது. மனது சரியில்லாத நேரங் களில் அண்ணாச்சி அந்த நீச்சல் குளத்தோரம் அமர்ந் திருப்பது சகஜம். சமீபத்தில் ஒரு நாள் நீச்சல் குளம் அருகில் அண்ணாச்சி நடந்து வந்தபோது, கால் வழுக்கி விழுந்து எலும்பு முறிந்து விட்டது. ‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது, இனியும் ஏதாவது நடக்காமல் இருக்க திருஷ்டி பூஜை செய்ய’ முடிவு செய்தார் அண்ணாச்சி. அதன்படி, அசோக் நகர் வீட்டில் திருஷ்டி பூஜை அமர்க்களப்பட்டது. அன்று மாலைதான் சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
என்ன பதில் சொல்ல?
சிவகுமார் தவறு செய்திருக்கிறாரா அல்லது அவரை சதிவலையில் சிக்க வைத்து விட்டார்களா? இந்தக் கேள்வியோடு அண்ணாச்சியிடம் பேசமுயன்றோம்.
”அவரு யாரு கூடவும் பேசுற மூடுல இல்ல. நீங்க மனு போட்டு புழல் சிறைக்குப் போய் சிவகுமார்கிட்டத்தான் கேட்கணும். அண்ணாச்சியைப் பொறுத்த வரைக்கும் தொழில் தர்மம் மீறாம, சட்டத்துக்கு உட்பட்டு நிர்வாகத்தை நடத்திக்கிட்டிருக்கார். இந்த விஷயத்தை சட்டரீதியா எதிர்கொள்வார்!” என்றார்கள்.
சீனியர் அமைச்சர்கள் இருவர் ஓட்டல் விவகாரங்களில் மறைமுக பங்கு கொண்டிருந்ததாகவும், அவர்களுடன் ஏற்பட்ட சமீபத்து மனக்கசப்புதான் புதிய – பழைய விவகாரங்களைக் கிளறி யெடுத்து அண்ணாச்சி தரப்புக்கு குடைச்சலாக மாறிவருவதாகவும்கூட ஓட்டல் வட்டாரங்கள் சொல்லத் துவங்கியுள்ளன.
சரக்கு மாஸ்டர்களுக்கு மவுசு ஜாஸ்தி!
அமெரிக்காவில் மட்டும் சுமார் பத்தாயிரம்இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல் முதல் திருப்பதி பீமாஸ், வசந்தபவன், உட்லாண்ட்ஸ், ஹாட்பிரெட்ஸ் என இந்தப் பட்டியல் நீளமானது. இவற்றின் பிரதான கஸ்டமர்கள் அமெரிக்கர்களே. இந்திய உணவு என்றால், அவர்களுக்கும் கொள்ளைப் பிரியம்! ஆனால், இத்தனை உணவு விடுதிகளிலும் சமையல் செய்ய ஆட்கள் தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். அமெரிக்க அரசு பல வருடங்களுக்கு முன்பு H1B(Employment visa) என்னும் விசாவை தாராளமாகக் கொடுத்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்திய உணவு விடுதிகளுக்கு சமையல்காரர்கள் பற்றாக்குறை. சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் அமெரிக்காவின் அனைத்து இந்திய உணவு விடுதிகளின் பட்டியல், யார் அதன் அமெரிக்க பார்ட்னர் போன்ற விவரங் கள் கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கிறது. ஹோட்டல் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு, பல கடுமையான சட்டதிட்டங்களையும் இது வைத்திருக்கிறது.
அமெரிக்க சட்டப்படி, டூரிஸ்ட் ஆக வருகிறவர்கள் வேலை செய்யக்கூடாது. ஆனால், சில உணவு விடுதிகள், விசா காலா வதியானவர்களை வேலைக்கு வைத்திருப்பது தொடர்ந்து நடக்கிறது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, வேலை விசா இன்றி பணியில் அமர்த்தும் முதலாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவந்தது.
இவற்றையெல்லாம் மீறி கனடா விசா எடுத்து, இந்தியாவிலி ருந்து கனடாவுக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறவர்களும் உண்டு. திறமையான சரக்கு மாஸ்டர் இல்லாமல் மெக்ஸிகன் மற்றும் அரபு நாட்டி னரை தோசை, இட்லி போடக் கற்றுக்கொடுத்து வியாபார சமாளிப்பு நடத்துபவர்களும் உண்டு.
மொத்தத்தில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள் ரேஞ்சுக்கு சரக்கு மாஸ்டர்களுக்கும் மவுசு அதிகம். சரக்கு மாஸ்டர் பிரச்னையால் அவதிப்பட்ட ஹோட்டல்களில் அண்ணாச்சியின் சரவணபவனும் அடக்கம். இதனால், அட்லாண்டா நகரில் உள்ள ஒரு இந்திய வக்கீல் பேச்சைக் கேட்டு சரவணபவன் ராஜகோபாலின் மகன் சிவகுமார், சரக்கு மாஸ்டர்களை வேலைக்கான விசா இல்லாமல் கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குக் கடத்திவரும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை சென்னையின் அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் எச்சரித்தும், ‘சிகாகோவில் உணவுத் திருவிழா வுக்குப் போகிறேன்… தமிழ்ச்சங்க விழாவில் தமிழக உணவு சப்ளை செய்யப்போகிறேன்’ என்றெல்லாம் அவர் மனு போடுவாராம். இதன் உள்திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரி களுக்கும் ஐயப்பாடு இருக்கவே செய்ததாம்.
இதற்கிடையே, துபாயில் உள்ள மிகப் பிரபலமான ஒரு நிறுவனம், சரவணபவனுடன் சர்வதேச அளவில் கூட்டணி போட்டது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ‘விசா’ எடுத்து அனுப்ப முடியாதவர்களை துபாய், சிங்கப்பூர் வழியாகக் கள்ளத்தனமாக அனுப்பினார்கள். இதையும் அமெரிக்க அரசு கவனிக்கத் தவறவில்லை.
ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஊழியர்களாக சுமார் 50 பேர் அமெரிக்க விசா வில் வந்து, உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அதில் பலருக்கு வேலைக்கான விசாவில் சிக்கல் உண்டாகவே, திரும்பிச் சென்றுவிட்டனர். பலர் அகதிகளாக இன்னமும் அமெரிக்காவில் பல பிரச்னைகளுக்கு நடுவே பிழைப்பு நடத்துகின்றனர்.
– நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி
– எஸ்.சரவணகுமார்
படங்கள்: கே.கார்த்திகேயன்
மறுமொழியொன்றை இடுங்கள்