இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்று பா ஜ க குற்றச்சாட்டு.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு ஒருதலைப்பட்சமாகவும் தமிழர்களுக்கு விரோதமாகவும் நடந்து கொள்வதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்திய அரசின் இவ்வாறான நடவடிக்கையினை தமது கட்சி கண்டிப்பதாக அதன் தமிழகத் தலைவர் இல. கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் என்கிற போர்வையில் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக அனுப்பப்படுவதைக் கூட இலங்கை அரசு தடுத்து வருகிறது எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழியென்றும் இராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனவும் இல.கணேசன் கூறினார்.
இராஜாங்க வழிமுறைகளின் மூலமாகவும் சர்வதேச சமூகத்தின் மூலமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை விடுத்து, இராணுவ உதவிகளையும் வழங்கி அதற்கும் மேலாக பயிற்சியளிப்பதற்கு ஆட்களை அனுப்பி உதவிய இந்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் கூட்டணியில் இருக்கும் திமுக ஏன் இலங்கை தமிழர்கள் விடயத்தில் இவ்வளவு நாள் மௌனம் காத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அக்கறையுடனேயே செயல்படுவதாக காங்கிரஸ் கூறுகிறது
 |
|
இலங்கை அதிபருடன் இந்தியப் பிரதமர் |
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் அக்கரையுடனேயே செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலம் தொடக்கம் தற்போதுள்ள ஆட்சி வரை இவ்விடயத்தில் சர்வதேச இராஜதந்திர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வந்துள்ளது என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இராணுவத் தீர்வை தவிர்த்து அரசியல் ரீதியான தீர்வையே இந்திய அரசு எப்போதும் ஆதரித்து வந்துள்ளது என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார். இதே கொள்கையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தனிப்பட்ட அரசியல் கட்சிகள் பேசுவதற்கும் ஒரு அரசு மற்றுமொரு நாட்டுடன் பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஒலிக்கும் அரசியல் குரல்களுக்கு புலிகள் நன்றி தெரிவிப்பு
 |
|
விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் |
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதியில் தற்போது நடந்து வரும் இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள எதிர்ப்பு மற்றும் கண்டனக் குரல்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பு நன்றிதெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன் பிபிசிக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் இன அழிப்புப்போர் என்றும் இல்லாதவகையில் தீவிரம் அடைந்துள்ளது என்றும் இந்தநிலையில் தமிழ்நாட்டின் அரசியல்தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்தி குரல்கொடுத்து வருவது துன்பப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தைக்கொடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் உதவி ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் கிடைக்காதென்று இலங்கை அரசு கற்பனையில் மூழ்கியிருந்தவேளையில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கொதித்தெழுந்து அரசிற்கெதிராகக் கோபத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள் என்று தமிழ்க தமிழர்களை பாராட்டியுள்ள நடேசன் அவர்கள், சிங்கள அரசு நினைப்பதுபோல தமிழ்நாடு ஒரு சக்தியற்ற மாநிலமல்ல. அது ஆறுகோடி தமிழர்களின் தாய்நிலம் உலகத்தமிழரின் பண்பாட்டுமையம். இந்திய அரசியலில் முக்கிய அரசியல் சக்தியாக திகழும் மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையின் வன்னிப் பகுதிக்கு மீண்டும் தபால் சேவைகள் துவக்கம்
 |
|
விநியோகத்துக்காக காத்திருக்கும் தபால் பைகள் |
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் நடைபெற்று வரும் வன்னிப் பகுதிக்கு ஒரு மாத காலத்துக்கு பின்னர் மீண்டும் புதன்கிழமையன்று தபால் சேவைகள் தொடங்கியுள்ளன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இந்த தபால் சேவைகள் நடைபெறவுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கான சேவையும் அங்கிருந்து மறுமார்கமான சேவைகளும் வவுனியா தபால் அலுவலகத்தின் மூலமாக நடைபெறவுள்ளன.
ஏ-9 வீதியூடான போக்குவரத்து ஆபத்து நிறைந்ததாக கருதப்பட்டதையடுத்து இந்த தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் வன்னிப் பகுதிக்கான பெருந்தொகையான கடிதங்கள் வவுனியா அலுவலகத்தில் தேங்கிக் கிடந்ததாகவும் தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கடிதங்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனத்தின் மூலமாக வவுனியாவிலிருந்து வன்னிக்கும், வன்னியிலிருந்து வவுனியாவுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரச்சனை குறித்து விவாதிக்க வரும் 14 ஆம் தேதியன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
 |
|
முதல்வர் கருணாநிதி |
தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைப்பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டதினை எதிர்வரும் அக்டோபர் 14ம் நாளன்று கூட்டியிருக்கிறார்.
இலங்கை பிரச்சனையில் தனது நிலையை விளக்க கடந்த திங்கள் கிழமை திமுக ஏற்கனவே ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தது. தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாக போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு வந்துள்ளது
சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு- பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு: ஜெயலலிதா
 |
|
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா |
அ தி மு க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கைத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போருக்கும், அவர்கள் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தங்களுக்கென சுயாட்சி பெற்ற தாயகத்தை அடையும் வேட்கையினை புரிந்துகொள்வதாகவும், ஏற்றுக்கொள்வதாகவும் கூறி இருக்கிறார்.
வியாழக்கிழமை அவர் சென்னையில் வெளியிட்ட அறிக்கையில், சமத்துவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் நெடிய போராட்டத்தை தாம் எப்போதுமே ஆதரித்து வந்தவர் என்றும், ஆயுதமேந்திய போராட்டம் திசை மாறிப் போய் சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்ததையும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே கொலை செய்யப்பட்டதையும் தான் எதிர்ப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
பயங்கரவாதத்தையும், இந்தியாவில் பொது அமைதிக்கு பங்கம் வருவதையும் அதன் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் எதிர்க்கும் அதே நேரத்தில், இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போருக்கும் எப்போதுமே தனது கட்சியின் நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தவிரவும் போர் காரணமாக இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்க்ளுக்கு உணவு, மருந்து உட்பட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.