கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை
கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.
ஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிறது.
இந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.
ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
மத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
இந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது
![]() |
![]() |
மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம் |
இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.
ஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.