Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 7th, 2008

Hurricane Ike: Haiti in crisis after tropical Hurricane claims more than 500 lives – Floods caused by tropical storm Hanna

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2008

கரீபியன் தீவுகளைத் தாக்கிய சூறாவளி ஐக்

கரீபிய பிராந்தியத்தை தாக்கிய புதிய பலம் மிக்க சூறாவளியான ஹரிக்கேன் ஐக், கரீபிய தீவுகளை தாக்கியதில் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

தேர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் 80 வீதமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தங்குமிடத்துக்காக மக்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், அந்த தீவுகளின் பிரதமர் கூறியுள்ளார்.

மிகவும் பயங்கரமான, வகை நான்கைச் சேர்ந்த சூறாவளியான ஹரிக்கேன் ஐக், மணிக்கு இருநூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்துடன் தாக்கியதில், தாழ்வான பகுதிகளே முதலில் பாதிக்கப்பட்டன.

இந்த சூறாவளி காரணமாக கரீபியன் பிராந்தியத்தில் பெரும்பாலான பகுதிகளில் உசார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தாக்கிய கடும் சூறாவளியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மற்றும் கியூபா ஆகியவற்றின் ஊடாகவே இந்த சூறாவளி செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.


சூறாவளியினால் ஹெய்தியில் 500 பேர் பலி

சூறாவளியினால் சின்னாபின்னமான ஹெய்தி
சூறாவளியினால் சின்னாபின்னமான ஹெய்தி

ஹெய்தியில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் ஹன்னா சூறாவளியினால் சுமார் 500 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமானவர்கள் காணாமல் போயிருப்பதால், எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

ஹெய்தியில் இருக்கும் ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளரான ஜோயல் போட்ரூ, மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சூறாவளி தற்போது அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதியை தாக்கியுள்ளது.

இதற்கிடையே இன்னும் வலுவான சூறாவளியான எல்க்கி டர்க்ஸ்,காய்கோஸ் மற்றும் தெற்கு பஹாமாஸ் பகுதியை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதால், அங்குள்ளவர்கள் இடம்பெயர்கின்றனர்.

Posted in Economy, Govt | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Sep 06 – Sri Lanka, LTTE, Eezham: News & Updates

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2008

வவுனியா தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம் – இலங்கை அமைச்சர் ஒப்புதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவிலிருக்கும் வன்னிப் பிரதேசத்துக்கான பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் மீது
கடந்த செவ்வாய்கிழமையன்று, விடுதலைப் புலிகளால் தரைவழியாகவும் வான்வழியாகவும் நடத்தப்பட்டத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்துள்ளதை இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், வவூனியாவில், பராமரிப்பு ஒப்பந்ததில் கீழ் இருந்த இரண்டு இந்தியப் பிரஜைகள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா அல்லது தொழில்நுட்ப பணியாளர்களா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அவர் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய ராடார் வசதிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்துவந்தார்கள் என்று கூறினார்.

இலங்கையின் பாதுகாப்புக்காக நவீன ராடார்களை வழங்கியதுடன், தமது நாட்டுப் பிரஜைகளையும் அனுப்பி உதவி செய்த வலுவான எமது அண்டை நாட்டுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

ஆனால் இந்த தாக்குதலில் இந்தியர்கள் காயமடைந்தது குறித்து புது டெல்லி மவுனம் சாதித்து வருகிறது,

வவுனியா தாக்குதலில் காயமடைந்த இந்தியர்கள் யார் என்பது குறித்து இந்திய அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று, இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா அவர்கள் கோரியிருக்கிறார்.

அதே நேரம் வவுனியா தாக்குதலை அடுத்து இலங்கை ராணுவத்திற்கு உத வும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களை இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சியும் பாட்டாளிமக்கள் கட்சியும் கோரியிருக்கின்றன. இது குறித்து இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.


வவூனியா தாக்குதல்களில் கொல்லப்பட்ட கரும்புலிகளின் சடலங்கள் ஒப்படைப்பு

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம்
வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் வெலிஓயா பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டு, இராணுத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 14 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் இன்று கையளிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இராணுவ கூட்டுப்படைத் தலைமைத் தளத்தின் மீது செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 10 கரும்புலிகளின் சடலங்களும், வெலிஓயா களமுனைகளில் கடந்த சில தினங்களில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்களுமே இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடிக்கு வடக்கே புளியங்குளம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களின் போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 16 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 7 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது,


கிழக்கு மாகாணத்தில் 7 சடலங்கள் கண்டெடுப்பு

இலங்கையின் கிழக்கே அம்பாறை மொனராகலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள அத்தியமலைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வியாழன் நன்பகல் 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

காட்டில் விறகு வெட்ட சென்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த போலீஸ் மற்றும் விசேட அதிரடிப் படியினரால் இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சடலங்களுடன் உழவு இயந்திர இழுவைப் பெட்டி ஒன்றும் அங்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்கள் தோட்டப் பயிர் செய்கையாளர்கள் என்று கூறும் போலீசார், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்தக் காட்டுப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றது.

இது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகவில்லை.

விமானத்தாக்குதலில் நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரையடுத்த பகுதியில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயமடைந்தனர்.

இவர்கள் இருவரும் முதலில் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நிறைமாத வயிற்றில் கல் ஒன்று தாக்கியிருந்ததால், அந்தத்தாய் பின்னர் வவுனியா மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது வயிற்றில் இருந்த சிசு இறந்து காணப்பட்டதால், அது உயிரிழந்த நிலையில் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டது.

அதேவேளை, இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் தரைப்படையினருக்கு உதவியாக, விமானப் படையினர், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இலங்கை விமானப்படை விமானங்கள்
இலங்கை விமானப்படை விமானங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலையிலும் நண்பகலிலுமாக மூன்று தடவைகள் அரச விமானப்படைக்குச் சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதாக அது கூறியுள்ளது.

அக்கராயன்குளத்திற்கு கிழக்கே விடுதலைப் புலிகள் மண்ணைக்குவித்து பெரிய பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்த இடத்தை இலக்கு வைத்தும், கிளிநொச்சி உடையார்கட்டு குளத்திற்குக் கிழக்கே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் வெடிப்பொருள் களஞ்சியம் மற்றும் விநியோகத் தளத்தின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கு மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உளவுப்பிரிவு தளத்தின் மீது இன்று காலை 6.45 மணிக்கு விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் ஏ9 வீதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள திருநகர் பகுதியில் இந்த விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதன்போதே அந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் வயிற்றில் கல் அடிபட்டு காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வன்னி நிலைமைகள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கவலை

பான் கி மூன்
பான் கி மூன்

இலங்கையின் வட பகுதியில் நடக்கின்ற மோதல்களின் அதிகரிப்பு குறித்தும், அங்கு ஏற்பட்டிருக்கின்ற மனித நேய நெருக்கடிகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன் அவர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரது சார்பில் பேசவல்ல அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணியாளர்களை வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நடமாடுவதற்கான சுதந்திரம் குறித்து செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவர்களது பொறுப்பு பற்றியும், மனித நேயப் பணியாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும் என்பது குறித்தும், மனித நேய உதவிகள் தேவைப்படும் மக்களை அவர்கள் சென்றடைவதற்கான தேவை குறித்தும் ஐ. நா செயலர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை உதவிப் பணியாளர்களின் வெளியேற்றம் வன்னியில் மோதலினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று தாம் அஞ்சுவதாக சர்வதேச அபய ஸ்தாபனம் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதனால், அங்கு மக்கள் விடுதலைப்புலிகளினால் மேலும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் அபய ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


வவுனியா இராணுவ தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய இராணுவ தளத்தின் மீது செவ்வாய் அதிகாலை வான்வழியாகவும் தரைவழியாகவும் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இவர்களில் 10 பேர் விடுதலைப் புலிகள் என்றும், படை தரப்பில் கொல்லப்பட்டவர்களில் 10 இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தாங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் இருந்த ரேடார் நிலையத்தை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

குண்டுத் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டையும் துரத்திச் சென்ற அரச விமானங்கள், முல்லைத்தீவு பகுதியில் அவற்றில் ஒன்றை சுட்டு வீழ்த்தி அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. ஆனால் புலிகள் இதனை மறுத்துள்ளனர்.

புலிகளின் தாக்குதலில் இந்தியப் பொறியியலாளர்கள் இருவர் காயம்?

ராடார் கண்காணிப்பு அமைப்பு ஒன்று

வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவதளத்தில் ரேடார் பராமரிப்பு வேலைகளுக்காக இந்திய ரேடார் தொழில்நுட்பப் பணியாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள் என்றும், தாக்குதலின்போது காயமடைந்த அவர்கள் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகப் பேச்சாளர் திங்கர் அஸ்தானா தெரித்தார்.

இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர் ஆபத்து அற்றவை என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த இராணுவத் தளத்தில் இந்தியப் பிரஜை எவரும் இருக்கவில்லை என்று இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.


வன்னியிலிருந்து வெளியேறப்போவதில்லை: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

இலங்கையில் செஞ்சிலுவைச் சங்க வாகனம்

வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் வெளியேறவேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், மனிதாபிமான உதவிப் பணிகள் தேவைப்படும் மக்களுடன் தங்கியிருந்து தாங்கள் தொடர்ந்தும் செயற்படப்போவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது.

தனது இந்த நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர். சியின் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

வன்னிப் பகுதியில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களின் அரசபடைகளுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் இடையில் அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் இனம் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று மூன்று தடவைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதமேற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

அத்துடன், வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்த மோதல்களில் மேலும் 13 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கிழக்குப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின்மீது இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை 10.20 மணியளவில் தமது குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கௌதாரிமுனையில் கடற் புலிகளின் தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை எற்படுத்தியிருப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க பெரேரா தெரிவித்திருக்கின்றார்.

எனினும் இந்த வான்வழி தாக்குதல்கள் பற்றியோ நேற்றைய களமுனை மோதல்கள் குறித்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



ரூகம் கிராமத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள்

பள்ளிவாசலில் தொழுகை
பள்ளிவாசலில் தொழுகை

இலங்கையின் கிழக்கே 1990 ஆம் ஆண்டு இதே காலப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட இன வன்முறைகளை அடுத்து, செங்கலடி பதுளை வீதியிலுள்ள ரூகம் கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு குடியேறத் தயாராகி வருகிறார்கள்.

இவ்வாறு அந்த கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக ஏறாவூரிலும் அட்டாளச்சேனைப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி வருகிறார்கள்.

தமது வீடுகளைப் பார்க்க வந்தவர்கள்
தமது வீடுகளைப் பார்க்க வந்தவர்கள்

தமது மீள்குடியேற்றத்துக்கு முன்னோடியாக அந்தப் பகுதியிலுள்ள காணிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வருவதாகவும், ரூகம் இடம் பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் செயலரான சீனி முகமது மஹரூஃப் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அங்கு சென்று தம்மால் மீண்டும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

அங்கிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு வந்து குடியேற முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு விடயம் என அங்குள்ள தமிழ் மக்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிகத் தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியில்



இலங்கை வவுனியா வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

திறப்பு விழாவில் முக்கியஸ்தர்கள்
திறப்பு விழாவில் முக்கியஸ்தர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா வைத்தியசாலையில் 132.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் வவுனியாவுக்கு முதல் தடவையாக வருகை தந்து அந்தக் கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுடன் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கு செயலணிக்குழுவின் தலைவருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண சபைக்கான அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த முக்கியஸ்தர்களின் வருகையையொட்டி வவுனியா நகரப்பகுதியில் படையினரும் பொலிசாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் கூறினார். இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னி களமுனைகளில் சனிக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணிநேரத்தில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் வீதி, தாலிக்குளம் பிரதேசம், வவுனியா பாலமோட்டை, கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம், வெலிஓயா, ஆண்டான்குளம் ஆகிய போர்முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இராணுவ தலைமையகம் தனது இணையத்தள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புக்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழி வரிசையொன்றின் மீது சனிக்கிழமை காலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இந்தப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »