வரலாற்று இல்லங்கள்! — சாருகேசி
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008
“சென்னை வாரம்’ தொடர்பாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மெட்ராஸ் புக் கிளப் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சரித்திர-தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்ரா மாதவன் சென்னையில் அதிகம் அறியப்படாத ஆலயங்கள் பற்றிய உரையும் குறிப்பிடத்தகுந்தவை.
வி.ஸ்ரீராம் எழுதி, கலம்க்ரியா பதிப்பித்திருக்கும் “சென்னையின் வரலாறு படைத்த இல்லங்கள்’ வெளியீட்டு விழா ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. இடப்புறம் ஓவியர் விஜயகுமார் வரைந்த கட்டடமும், வலப்புறம் ஆங்கிலப் பகுதியோடு பத்மா நாராயணனின் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட இந்த நூலில் வரலாறு படைத்த 50 வீடுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கின்றன.
கல்கி கார்டன்ஸ், அன்னை இல்லம், ப்ராடீகாஸில், செட்டிநாடு மாளிகை, பாரதி இல்லம், சி.வி.ராமன் இல்லம். “ஜலதரங்கம்’ ரமணய்ய செட்டி இல்லம். டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு, வீணை தனம்மாள் வீடு, உட்லண்ட்ஸ், திருவொற்றியூர் தியாகய்யர் இல்லம், ஓவியர் ராஜம் வீடு என்று தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டிக்கிறது.
நூல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நூல்.
சித்ரா மாதவன், கபாலி கோயில் தொடங்கி, சுமார் முப்பது கோயில்களைப் பற்றி பேசும்போது, குடமுழுக்கு என்ற பெயரில் அக்ரிலிக் வர்ணத்தைப் பூசி பழைமையை மாற்றுவதையும், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தேவையான கல்வெட்டுக்களை முழுமையாக மறைத்துவிடுவதுபோல பாத்ரூம் டைல்களைப் பதிப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அழகான சிற்பங்கள் சில தூண்களில் இருப்பதைப் பலரும் காணாமலே இருந்து விடுவதைச் சுட்டிக்காட்டினார். அனாவசியமாகப் புதிய கட்டுமானங்கள் கட்டி பழைமையை அழிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.
“சேமியர்ஸ்’ விடுதியில் நடந்த இந்தச் சொற்பொழிவுக்குப் பின், பலரும் இந்தக் கோயில்களைப் பார்க்க ஒரு முழு நாளை ஒதுக்கவும், சித்ரா மாதவனுடன் சென்று பார்க்கவும் விருப்பம் தெரிவித்தனர்.
மியூசிக் அகடமி, அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் மாதம்தோறும் நடத்தி வருகிறது.
தேவார மூவர் பற்றி கபாலி ஓதுவார் வழங்கிய உரையில் அவர் தெளிவாக எடுத்துரைத்த நிகழ்ச்சிகளும், அவர் பாடிய தேவாரப் பாடல்களும் மனத்தைத் தொட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி, அவர்கள் அந்த சந்தர்ப்பங்களில் பாடிய பதிகங்களைப் பாடினார் கபாலி ஓதுவார். “மடையில் வாளை பாய மாதரார், மறையுடையாய் தோலுடையாய், மாதர் மடப்பிடியும், கொட்டமே கமழும், அவ்வினைக்கு இவ்வினையாம், மட்டிட்ட புன்னையும், தொழுது தூமலர் தூவி’ என்று பதிகங்களையும், திருத்தாண்டகத்தையும் பாடி நெகிழ்வித்தார். ராகங்களை அந்தக் காலப் பண் பெயரில் எப்படி வழங்கினார்கள், அதற்கு இணையான இன்றைய ராகம் எது என்று கூடுதல் தகவல்களையும் அளித்தார். (உதாரணத்துக்கு, மாதர் மடப்பிடியும் என்ற பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்திருக்கிறது என்றும், அடாணா என்ற இன்றைய ராகப் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் இதை யாழ்முறி அமைப்பு என்றும் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்)
ஜானகி ராமானுஜம் வழங்கிய சமஸ்கிருத சாகித்தியங்கள் நிகழ்ச்சியும் வித்தியாசமாக இருந்தது. அரங்குகளில் அதிகம் பாடப்படாத பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார் ஜானகி ராமானுஜம். (நடுவே பந்துவராளி ஆலாபனைக்குப் பிறகு “ஞான மொசகராதா’ என்ற தியாகராஜரின் தெலுங்கு கிருதியைப் பாடியபோது தூக்கி வாரிப் போட்டது! ஆனால் அகடமி செயலர்களில் ஒருவரான பப்பு வேணுகோபால் ராவ் மளமளவென்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி மேடைக்கு அனுப்பியதைப் பாராட்ட வேண்டும்.)
மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் பத்ராசலம் ராமதாசர் இயற்றிய தெலுங்குப் பாடல்களைக் கோட்டப்பள்ளி வந்தனா என்ற பாடகி பாடினார். நல்ல உச்சரிப்பு, இனிமையான குரல் இரண்டும் இவருடைய ப்ளஸ் பாயின்ட்டுகள்.
ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம், இந்த மூன்று நாட்களுமே அயல்நாட்டு (அமெரிக்க, ஜப்பானிய) இசை ரசிகர்கள் வந்திருந்து அமர்ந்து ரசித்ததுதான்.
தென்மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்து, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகார் மற்றும் ஹரியாணா மாநில நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடலைப் பாடி, அவற்றுக்கு அந்த மாநிலக் கலைஞர்கள் நடனமும் ஆடினர்.
கணவர் மகிழ்ச்சியாக இருக்க மனைவி பாடி ஆடும் நடனம் பிகார் கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சி. குஜராத் மாநில கர்பா நடனம் போல இது இருக்கும் என்று அறிவித்தாலும், குழு நடனம் என்பதைத் தவிர, அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஹரியாணா கலைஞர்களின் நடனம் கிட்டத்தட்ட பஞ்சாப் மாநில பங்க்ரா போல இருந்தாலும், அறுவடை முடிந்து ஆடும் நடனம் என்ற வகையில் அதன் தனித்தன்மை வெளிப்பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்