சாலையோர பிரம்மாக்கள்!
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008
என். சுரேஷ்குமார்
வெள்ளி நிறத்திலும், பொன் நிறத்திலும் ஜொலிக்கும் குபேர சிலைகள், வீரமுடன் சுதந்திர தேவி சிலை, சரஸ்வதி,
முருகன், சிவன் என்று தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் நம் கண் முன் மிகவும் தத்ரூபமாக… இன்னும் கூடுதலாக, இன்னும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள்.
வரும் செப். 3 விநாயகர் சதுர்த்தி. வரும் பண்டிகைக்காக உயரம் வாரியாக உருவாக்கப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள்.
இச்சிலைகளை வடிக்கும் சிற்பக் கலைஞர்களைச் சந்தித்தோம்.
“”நாங்கள் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம் ராஜ்பூரா என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய குலத்தொழிலே சிலை செய்வதுதான். தேங்காய் நார் மற்றும் சில பொருள்களுடன் அச்சு வார்த்து அதில் பிளாஸ்டர் ஆப் பாரிûஸக் கலந்து சிலை வடித்து வருகிறோம்.” என்றார் திருநெல்வேலிக்கு வந்து சிலை செய்து பிழைப்பு தேடும் சிற்பக்கலைஞர் மோகன்லால்.
“”தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இடங்களில் எனது சொந்தங்கள் குடும்பத்துடன் தொழில் செய்து வருகிறார்கள். இது தவிர வெவ்வேறு மாவட்டங்களில் எங்கள் மாநிலத்திலிருந்து அதிகமான குடும்பத்தினர் இத்தொழிலை மட்டுமே நம்பி கூடாரம் அமைத்து தங்கியிருந்து சிலை வடித்து வருகிறார்கள்.
வருடந்தோறும் சிலை செய்கிறோம். செய்த சிலைகளை உயரம், வண்ணங்களுக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம். அதில் சிலைக்கு ரூ. 40-லிருந்து ரூ. 500 வரைக்கும் விலை வைத்து
விற்போம். ஆனால், விலை குறைந்த சிலைகள் மட்டுமே ஓரளவு விற்பனையாகின்றன.
முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூட்டை ஒன்று ரூ. 250-லிருந்து 280 வரை இருந்தது. ஆனால், தற்போது ரூ. 400 வரை உயர்ந்து விட்டது. இந்த விலை உயர்வை நாங்கள் வடிக்கும் சிலையில் சுமத்தினால் வாடிக்கையாளர்கள் வாங்கத் தயாராக இல்லை.
தற்போது இங்கு எனக்கு உதவியாக என்னுடைய மகன் மட்டும் உள்ளான். தினமும் காலையிலும், இரவிலும் மட்டுமே சாப்பிடுவோம். மதிய நேரம் பெரும்பாலும் பட்டினிதான்.
மற்ற குழந்தைகள், என்னுடைய மனைவி அனைவரும் கேரள மாநிலம், கோட்டயத்தில் சிலை செய்து விற்பனை செய்து வருகிறார்கள்” என்று சொல்லும் மோகன்லாலுக்கு வயது 38. மனைவி கமலா. குழந்தைகள் மொத்தம் 7.
தற்போது மோகன்லாலுடன் இருக்கும் அவரது மூன்றாவது மகனின் வயது 12. வயதைக் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி. படிக்கும் வயதில்… என்று நாங்கள் கேள்வி கேட்கும் முன்பே முந்திக்கொண்டார் மோகன்லால்.
“”எங்க சமுதாயத்துலே பிள்ளைங்கள படிக்க வைக்கறது இல்ல. நான், எனது மூத்த சகோதரர்கள் எங்களது தந்தையாருக்கு உதவியாக இருந்தோம். அதேபோல எனது பிள்ளைகள் எனக்கு உதவியாக இருக்காங்க. குடும்பத்தோட உழைச்சாதான் இரண்டு வேளை சாப்பாடாவது கிடைக்கும். பிள்ளைங்கள படிக்க அனுப்பிச்சா வேலையை பார்க்கிறது யாரு? விநாயகர் சதுர்த்திக்குன்னு ஸ்பெஷலா செய்ற சிலை 5 அடியிலிருந்து 12 அடி வரை செய்வோம் ஒரு சிலை ரூ.5000-லிருந்து 12 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.
போனவாரம்தான் கேரளத்திலிருந்து ஒரு ஆர்டர் வந்திச்சு. 12 சிலைக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. இந்த வருமானம்தான் எங்களுக்கு அடுத்த வருஷம் வரைக்கும். அந்த பணத்துலதான் ஏதாவது கொஞ்சம் காசு சேத்துவச்சு பிள்ளைங்களுக்கு புது துணி வாங்கி கொடுப்போம். தினமும் கடவுள் சிலைகளதான் செய்யறோம். இந்த கடவுள் எங்க குழந்தைகளைத் தெருவில் விட்டுட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது!” என்று இந்தி கலந்த தமிழில் மோகன்லால் சொல்லும்போது, நம் மனது கனத்தது.
This entry was posted on ஓகஸ்ட் 24, 2008 இல் 5:57 முப and is filed under Tamil. குறிச்சொல்லிடப்பட்டது: Architecture, Artisans, Arts, bargain, Cool, Dolls, Export, Ganapathy, Ganesh, God, Handicrafts, Images, Plaster of paris, Road, Statue, stones, Worksmanship. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்