Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை, 2008

Bhutanese temple thieves get life

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

பூட்டானில் ஆலயத் திருட்டுக்கு ஆயுள் தண்டனை

பூட்டானில் ஒரு புத்த மடாலயம்
பூட்டானில் ஒரு புத்த மடாலயம்

இமயமலைப்பகுதி நாடான பூடானில் புத்த விஹாரங்கள் மற்றும் கோவில்களில் இருந்து விலைமதிப்மிக்க கலைப்பொருட்களை திருடியதற்காக, பல திருடர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குப்புற மாவட்டமான பாரோவில் இரண்டு திருடர் கும்பல்கள் செயல்பட்டுவந்தன.

செல்வந்த பூடானியர்கள் நகைகள், தங்கத்தினாலான புத்தர் சிலைகள் மற்றும் பிற பொக்கிஷங்களை கோவில்களுக்கு காணிக்கைப் பொருட்களாக அடுக்கடி கொடுப்பதுண்டு.

இந்த பொருட்களை திருடுவது என்பது 1970களில், மேலை நாட்டு சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பூடானுக்கு வர அனுமதிக்கப்பட்டபோது தொடங்கியது.

வெளிநாடுகளிலிருந்து வாங்குவோருக்காக, உள்ளூர் திருடர்கள் இவைகளை திருடியிருக்கலாம் என்ற கவலை நிலவுகிறது.

Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

JVP call for the island wide strike in Sri Lanka; Opposition MP Joseph Michael Perera blames army for attacks on media

Posted by Snapjudge மேல் ஜூலை 10, 2008

09 ஜுலை, 2008

இலங்கையில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஜே வி பி அழைப்பு

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களிற்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் பொதுவேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் குறித்து கருத்துவெளியிட்டுள்ள ஜே.வி.பி யின் தொழிற்சங்கங்களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.டி.லால்காந்த, அரச துறையிலுள்ள சுமார் 90 சதவீதமான தொழிற்சங்கங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இது ஒரு அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் மட்டுமே எனக்கூறியுள்ள லால்காந்த இந்தப் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காது போனால் இவ்வாறான போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பின் 14வது சரத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்தினைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரசு பொய்யான பிரச்சாரங்களிலும், எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம் இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு இன்று அழைப்பு விடுத்திருக்கிறது.


செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை இராணுவத் தளபதியே காரணம் என்று குற்றச்சாட்டு

இலங்கை இராணுவத் தளபதி ஃபொன்சேகா
இராணுவத் தளபதி லெப். ஜென். சரத் ஃபொன்சேகா

இலங்கையில் செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அந்நாட்டின் மிக மூத்த இராணுவ அதிகாரியே காரணம் என்று முக்கிய எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவான ஜோசப் மைக்கேல் பெரேரா, இவ்வாறு செய்தியாளர்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்காகவே ஒரு சிறப்பு குழு இராணுவத் தளபதி லெப்டிண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா அவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக கூறியுள்ளார்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு முழு யுத்தத்தை அரசு நடத்தி வரும் நிலையில், ஊடகச் சுதந்திரம் குறித்து மனித உரிமை அமைப்புகளின் அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மீதான இந்தக் குற்றச்சாட்டை எதிர் கட்சி உறுப்பினரான ஜோசப் மைக்கேல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார இது குறித்த ஆதாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசம் இருக்குமாயின் அவர் போலீஸிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த வாரம், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல், ராணுவ விவகாரங்கள் குறித்து எழுதி வரும் ஒரு தனிப்பட்ட செய்தியாளரும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியும் ஒரு வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தப்போது மறைந்திருந்தவர்களால் உருட்டுக் கட்டைகளினால் தாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் செய்தியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடக்கம் இதுவரை ஊடகத்துறையைச் சேர்ந்த 12 பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

போர் செய்திகளை வெளியிடுபவர்கள் துரோகிகள்

இலங்கையின் வடக்கே கடும் போர் நடைபெற்றுவருகிறது
இலங்கையின் வடக்கே கடும் போர் இடம்பெறுகிறது

இதனிடையே நாட்டில் நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளை, ஒருதலைப் பட்சமாகவும் பொறுப்பற்ற வகையிலும் வெளியிடுவதாக தாம் கருதுவதற்கு எதிராக தமது கடுமையான ஆட்சேபணைகளை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

போரின் போது விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்படும் இழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக இராணுவம் வெளியிடும் தகவல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது, இராணுவத்தில் வழங்கப்படும் பதவி உயர்வுகளை வினவுவது, இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் ஊழல் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டுவது போன்ற செய்திகளை வெளியிடுபவர்களை துரோகிகள் என்றும் விரோதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் முத்திரை குத்தியுள்ளது.


யாழிலிருந்து கொழும்பு செல்ல புதிய கட்டுப்பாடுகள்

யாழ் பஸ் நிலையம்
யாழ் பஸ் நிலையம்

இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்குப் படையினரால் வழங்கப்படும் பிரயாண அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றம் காரணமாக பிரயாண அனுமதி பெறுவதற்கு சுமார் 2 வாரம் காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு செல்லும் ஒருவர் தனது பிரயாணத்திற்கான காரணத்தை ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்தும் அதேவேளை, அங்கு தங்கியிருக்கப் போகும் உறவினர் அல்லது நண்பர்கள், தெரிந்தவர்களின் முழு விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்பதுடன், இந்த விபரங்கள் பொலிசாரின் ஊடாக அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்குக் கிடைத்த பின்பே பிரயாண அனுமதி வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பனம் இல்லை
கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை?

சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்.


07 ஜுலை, 2008

மன்னார் படுகை எண்ணெய் அகழ்வாய்வு: இலங்கை அரசுடன் இந்திய நிறுவனம் உடன்படிக்கை

மன்னாய் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை அகழ்வாய்வு செய்யும் அனுமதிக்கான பெட்ரோலிய வள உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கமும், கெயின் இந்தியா நிறுவனமும் திங்களன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் மூத்த அமைச்சர்மார் முன்னிலையில் கைச்சாத்திட்டுக்கொண்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட வைபவமொன்றில் இலங்கை அரசின் சார்பில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியும், கெயின் இந்தியா நிறுவனத்தின் சார்பின் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிதி அலுவலருமான இந்திரஜித் பனர்ஜியும் கைச்சாத்திட்டனர்.

பின்னர் இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய இந்திரஜித் பனர்ஜி, இலங்கைக் கடற்பரப்பில் மன்னார் படுகை அகழ்வாய்விற்கு உட்படுத்தப்படவில்லை என்பதால் அந்த வகையில் அது ஒரு முன்னிலை பெட்ரோலிய வலயத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் எண்ணெய் அகழ்வாய்வு வேலையில் அனுபவம்மிக்க தமது நிறுவனம், இங்கே வர்த்தகப்படுத்தக்கூடிய அளவிற்கு ஹைட்ரோகாபன் இருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்த பல மில்லியன் டாலர்கள்களை முதலீடுசெய்து, சிறந்த தொழில்நுட்பங்கள், மற்றும் தொழில்துறை நடைமுறைகளை பிரயோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இலங்கையின் வடக்கே கடந்த ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திங்களன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சோதனைச் சாவடியில் உள்ள தமது அலுவலகத்தை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் மூடியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு பிரதிநிதிகள் ஆகியோரின் பாதுகாப்பு உரிய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்படும் வரையில் இந்த சோதனைச் சாவடியில் இருந்து தாங்கள் தற்காலிகமாக விலகியிருக்கப்போவதாக என்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கூறியிருந்தனர்.

தற்போது ஓமந்தை சோதனைச் சாவடி தொகுதியில் பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, புதன் பிற்பகல் 3 மணிக்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடிக்குத் திரும்பியுள்ளதாக அந்தக் குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் கடமைக்குத் திரும்பியதை அடுத்து திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச் சாவடி திங்களன்று சுமார் ஒரு மணித்தியாலம் மாத்திரமே திறந்திருந்ததாகவும், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 50 பேர்வரையில் மாத்திரமே வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் ஓமந்தை சோதனைச்சாவடிக்குச் சென்று தமது பிரயாணத்தைத் தொடரமுடியாமல் மீண்டும் வவுனியா நகருக்குத் திரும்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வன்னிப்பிரதேசத்திலிருந்து எவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்று வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் நாளை முதல் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பிரதேசத்திற்கான அத்தியாவசிய பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து என்பன வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy: Clove, Ilavangam, Wild Cinnamon, Cassia bark – Spices

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2008

மூலிகை மூலை: பசியைத் தூண்டும் இலவங்கம்

விஜயராஜன்

இலவங்க மரம் பச்சைநிறம் கொண்டிருக்கும். அதிக நறுமணம் கொண்டதாகும். இம்மரத்தின் உள்ள மலர்களின் மொட்டுகளைத்தான் இலவங்கம் என்று அழைப்பார்கள். இலவங்கத்தின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

இலவங்கத்தை உணவுடன் சேர்த்து வர உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்.

இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் உடனே குணமாகும்.

இலவங்கத்தைத் தணலில் வதக்கி வாயில் போட்டுச் சுவைக்க, தொண்டைப்புண் ஆறும். தொடர்ந்து சுவைத்து வர பற்களின் ஈறுகள் கெட்டியாகும்.

இலவங்கத்தைப் பொடியாக்கி பத்துகிராம் எடுத்து இருநூறு மில்லி வெந்நீருடன் கலந்து குடிக்கப் பசியைத் தூண்டி, கழிச்சலைப் போக்கும்.

இலவங்கம், சுக்கு வகைக்கு 20 கிராம் எடுத்து ஓமம், இந்துப்பு வகைக்கு 40 கிராம் எடுத்துச் சேர்த்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து 1 டம்ளர் வெந்நீருடன் கலந்து குடிக்க, பசியைத் தூண்டி உண்ட உணவை நன்றாகச் செரிமானம் ஆக்கும். இலவங்கம், நிலவேம்பு சம அளவாக பத்து கிராம் இடித்து 1 டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடிக்க காய்ச்சலுக்குப் பின்னால் உண்டாகும் களைப்பைப் போக்கும். அயர்ச்சி நீங்கும். நன்றாகப் பசியைத் தூண்டும்.

நிலாவாரையை கைப்பிடியளவு எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு அத்துடன் இலவங்கப் பொடியும், சுக்குப் பொடியும் வகைக்கு 2 கிராம் சேர்த்து 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க சுகமாகப் பேதியாகும்.

இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்த தைலம் துல்லியமாகவும், காரமாகவும், நல்ல மணமுள்ளதாகவும், இருக்கும். நாவில் பட்டால் சிவக்கும். சிறிது சர்க்கரையுடன் 3 சொட்டு இலவங்கத் தைலம் சேர்த்துச் சாப்பிட பசியைத் தூண்டும். உடலுரமாக்கும்.

இலவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து பல் நோய்க்கு வைக்க சாந்தமாகும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Ayurvedha Corner: Restless Leg Syndrome

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆடும் கால்கள் அமைதியாக…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனது மகன் வயது 23. அவனுக்கு நோய் தாக்கப்பட்டுள்ளதாக ஆங்கில வைத்தியர் கூறுகிறார். இந்நோய் காரணமாக காலில் குடைச்சல் ஏற்படுகிறது. அதன் காரணமாக காலை ஆட்டிக் கொண்டே இருக்கிறான். இரவில் குடைச்சல் காரணமாகத் தூக்கமின்றித் தவிக்கிறான். மன உறுத்தல் ஏற்பட்டு படிக்கவும் முடியாமல் சிரமப்படுகிறான். இதற்கு ஆங்கில வைத்தியத்தில் மருந்துகள் இல்லை என்று கூறுகிறார்கள். ஆயுர்வேத

முறையில் இதற்குச் சிகிச்சை செய்ய முடியுமா?

என்.கங்காதரன், இராமேஸ்வரம்.

நம் மனித உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகை தோஷங்கள் தம் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன. அதிலும் முக்கியமாக இடுப்பு மற்றும் அதன் கீழ்ப் பகுதிகள் அனைத்தும் வாததோஷத்தின் முக்கிய இருப்பிடங்களாகும். இந்த வாதத்திற்கென்றே சில பிரத்யேக குணங்கள் இருக்கின்றன. வறட்சி, குளிர்ச்சி, நுண்ணியது மற்றும் அசையும்தன்மை ஆகிய இதன் குணங்கள் எப்போதும் ஒரே சீரான நிலையில் இருக்க, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களும் உணவு வகைகளும் உதவுகின்றன. இந்தக் குணங்கள் அனைத்தும் தவறான செயல் மற்றும் உணவுகளால் சீற்றமடைந்துவிட்டால் அவற்றின் தாக்கத்தை இடுப்பிலும், உடல் கீழ்ப்பகுதிகளிலும் அதிகமாக உணரலாம். நீங்கள் குறிப்பிடும் ரெஸ்ட் லெஸ் லெக் எனும் நோயில், வாத தோஷத்தின் அசையும் தன்மை எனும் தனிப்பட்ட குணம் மற்ற குணங்களைவிட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் காரணமாக காலில் குடைச்சலும், எந்நேரமும் காலை ஆட்டிக் கொண்டிருத்தலும் ஏற்படுகிறது. இந்தத் தனிப்பட்ட குணம் சீற்றமடையக் காரணமாக அதிக தூரம் சைக்கிளை மிதித்து பயணம் செய்தல், தையல் மெஷினில் காலை வேக வேகமாக ஆட்டித் துணிகளைத் தைத்தல், அதிக அளவில் நடைப்பயிற்சி செய்தல், சிற்றின்பத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுதல், நீண்ட தூரம் நடந்து வீடு வந்ததும் குளிர்ந்த நீரால் கால்களை அலம்புதல், குளிர்ந்த நீரில் குளித்தல், குடித்தல், ஆழ்ந்த உறக்கமின்றிப் புரண்டு புரண்டு படுத்தல், உணவில் உப்புக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, பருப்பு வகைகள், காரம், கசப்பு. துவர்ப்புச் சுவை ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அசையும் தன்மை எனும் குணத்திற்கு நேர் எதிரான குணமாகிய ஸ்திரம் எனும் நிலையானது, மருந்தாகவும், உணவாகவும், செயலாகவும் தங்கள் மகனுக்கு அளிக்கப்படுமேயானால் அவர் இந்த உபாதையிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் ஆயுர்வேத மருந்தாகிய அஸ்வகந்தாதி லேஹ்யம் 10 கிராம், 10 சொட்டு க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய்யை அந்த லேஹ்யத்துடன் நன்றாகக் கலந்து, காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல மருந்தாகும். இந்த மருந்தைச் சாப்பிட்ட பிறகு அரை கிளாஸ் வெதுவெதுப்பான பசும்பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிடவும். சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். மேல்பூச்சாக மஹாமாஷ தைலமும், பலா அஸ்வகந்தாதி குழம்பு எனும் தைலமும் வெதுவெதுப்பாக இடுப்பிலிருந்து கால்பாதம் வரை தேய்த்து சுமார் முக்கால் மணி நேரம் வரை ஊற வைத்து வெந்நீரில் குளிப்பது நல்லது. உணவில் எண்ணெய்ப் பசையுள்ளதும், சூடான வீர்யம் கொண்டதுமான உணவு வகைகளும், இனிப்புச் சுவை, புளிப்புச்சுவை, உப்புச் சுவைகளுள்ளதுமான பொருட்களை அதிகம் சேர்க்க வேண்டும். கால்களை இதமாகப் பிடித்து விடுதல், வாதநாராயணன், நொச்சி இலை, ஆமணக்கு இலை, புங்கன் இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரில் இடுப்புவரை அமிழ்ந்து இருத்தல் போன்றவை நன்மை தரும். கடற்கரைக் காற்று அதிகமுள்ள இடத்திலிருந்து சற்று சூடான பூமியும் காற்றுமுள்ள ஊரில் உங்கள் மகன் சிலகாலம் வாழ்வதும் நல்லதேயாகும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

GoSL Military: 37 LTTE Rebels, 1 Soldier Killed in Fighting; Sri Lankan Security Chiefs Try to Stop Rebel Resurgence in East

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2008


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

விமான தாக்குதல்
விமான தாக்குதல்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினர் சந்திப்பு நடத்தும் முக்கிய இடத்தின் மீது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இரணைமடுகுளத்திற்கு வடகிழக்கே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேசத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

எனினும், வட்டக்கச்சி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுகிழமை மதியம் இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியதாகத் கூறியிருக்கும் விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

3 வீடுகள் தரைமட்டமாகியிருப்பதுடன் 15 வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார், வவுனியா, வெலிஓயா ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


இலங்கையின் வடக்கே மோதல் தொடர்கிறது

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதிக்கான ஒரேயொர நுழைவாயிலாகத் திகழும் ஓமந்தை சோதனைச்சாவடி இன்று சனிக்கிழமை நான்காவது நாளாக மூடப்பட்டிருந்த போதிலும், வன்னிப்பிரதேசத்தில் இருந்து அவசர மேல் சிகிச்சைக்கான 18 நோயாளிகள் இந்த சோதனைச்சாவடியின் ஊடாக வவுனியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வெலிஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் அரச படையினர் விடுதலைப் புலிகளின் மைக்கல் தளம் எனப்படும் முக்கிய தளம் ஒன்றினை நேற்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. இந்த நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகளுடன் மூன்று தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மன்னார், வவுனியா வெலிஓயா மற்றம் முகமாலை முன்னரங்க பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மற்றைய வெவ்வேறு தாக்குதல்களில் 37 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு உட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சனிக்கிழமை கரும்புலி தின வைபவங்கள் பரவலாக அனுட்டிக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாவலடியில் சோதனைச்சாவடி
நாவலடியில் சோதனைச்சாவடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு மேலதிகமாக தற்போது இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் சில இடங்களில் புதிதாக இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.வீதித் தடைகளும் நிரந்தர வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் சுற்றி வளைப்பு தேடுதல்களும் அங்கு இடம் பெற்று வருவதாக தகவல்கள் மூலம் தெரிகின்றது.

இம்மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளபடப்ட சில தாக்குதல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என பாதுகாப்பு தரப்பு இது பற்றி கூறுகின்றது.

ஆனால் பொது மக்களைப் பொறுத்த வரை பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளினால் தமது அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தங்களிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Ingrid Betancourt freed in Colombia: Former Hostage is rescued from FARC & Reunited With Children

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2008

பிரான்ஸில் பெத்தான்கூர்

ஃபார்க் கிளர்ச்சிக்காரர்களால் 6 வருடங்கள் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட கொலம்பிய அதிபர் தேர்தலுக்கான முன்னாள் வேட்பாளரான இன்கிரிட் பெத்தான்கூர் அவர்கள், தான் வளர்ந்த பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த தருணத்துக்காக தான் 7 வருடங்கள் காத்திருந்ததாகவும், பிரான்ஸுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

அவரது மீட்புக்கான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்காத போதிலும், அவரை விடுவிக்க வேண்டும் என்று ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்துவந்த, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அவர்களையும் பெட்டன்கூட் அவர்கள் சந்தித்தார்.

தேர்தலில் சர்கோஸிக்கு கிடைக்கவிருந்த மோசமான வாக்குவீதத்தை மாற்றி அதனை ஊக்குவிப்பதற்காகவே, உண்மையில்பெத்தான்கூரை விடுவிக்க வேண்டும் என்று சர்கோஸி பிரச்சாரம் செய்துவந்தார் என்று அவரது விமர்சகர்கள் கூறிவந்தனர்.

Posted in Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

PAKISTAN: Taliban kidnap two local journalists on Restive Border

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2008

பாகிஸ்தானில் செய்தியாளர் இருவர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளனர்

ஆப்கானிய எல்லைக்கு அருகேயுள்ள ஒரு பழங்குடியின மக்களின் பிராந்தியத்தில் வைத்து பாகிஸ்தானிய செய்தியாளர்கள் இருவரை தலிபான் போராளிகள் கடத்தியுள்ளனர்.

சுயாதீன நிருபரான ஸுபைர் ஷா மற்றும் புகைப்படப்பிடிப்பாளரான அக்தர் சும்ரோ ஆகியோரை மொஹ்மண்டில் வைத்து வியாழக்கிழமை பிற்பகலில் அவர்கள் கடத்தியுள்ளனர்.

தலிபான்களின் அனுமதியில்லாமல் அவர்கள் புகைப்படங்களைப் பிடித்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

அவர்களை விடுதலை செய்வதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக அங்கு பல பழங்குடியின மூத்தவர்கள் சென்றதாக பிராந்திய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் என்ன செய்வது என்று முடிவெடுக்க தமது சபை கூடும் என்று பாகிஸ்தானிய தலிபான்கள் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Breakaway LTTE, TMVP leader Karuna back in Colombo; US ‘concerned’ over Sri Lanka rights, attacks on media; Victor Perera the new Governor of the Northern Province

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்கு தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராக கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாக கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

இவர்களது செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய கர்ணல் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்கு நேற்று(புதன்கிழமை) திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்துக்காக பேசவல்ல அதிகாரியான டோமினிக் வில்சன் தமிழோசையிடம் உறுதி செய்தார்.

கருணா இலங்கை திரும்பியுள்ளதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானாவும் உறுதி செய்துள்ளார்.

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியவுக்குள் நுழைந்த வழக்கில் பிரித்தானிய அரசால் கைது செய்துபட்ட கருணா அவர்களுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் அவர் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே கருணா இலங்கை திரும்பிவிட்டாலும், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கைக் கடற்பரப்பரப்பில் நுழைந்த பல நூறு இந்திய மீன்பிடிப் படகுகள் விசாரணையையடுத்து விடுவிப்பு

இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்
இராமேஸ்வரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள்

இலங்கைக் கடற்பரப்பின் மன்னார் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பல நூறு இந்திய மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்றுமாலை கைதுசெய்து, பலமணிநேர தீவிர விசாரணைகளின் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, நேற்று, புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவு பகுதியை நோக்கி இந்த இந்திய மீன்பிடி படகுகள் சென்று கொண்டிருந்தவேளை, நெடுந்தீவிற்கு மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, தலைமன்னார் கடற்கரைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வைத்து இவர்கள் மீது கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு ஒன்று

இதன்பின்னர் சுமார் இரவு 10 மணியளவில் இதில் 299 இந்திய படகுகள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சிய ஒரு படகில் திசையறிகாட்டிபோன்ற கருவிகள் காணப்பட்டதால், மேலதிக சோதனைக்காக அது தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இன்று காலை அதுவும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனை நடவடிக்கைகளின்போது இந்திய மீனவர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடைய படகுகளில் இருந்தோ சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, இந்திய மீனவர்கள் இவ்வாறு அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்துவருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கைப் படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்ததை கண்டிக்கும் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவரான போஸ் அவர்கள், ஆனால், தமது மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குள் சென்று மீன்பிடிப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த போஸ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்பு

விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி
விக்டர் பெரேரா பதவியேற்கும் காட்சி

இந்த வார முற்பகுதியில் இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற விக்டர் பெரேரா அவர்கள் வடக்கு மாகாணத்தின் ஆளுனராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்திருந்த வடகிழக்கு மாகாணம், நீதிமன்றத் தீர்பொன்றின் பின்னர் இருவேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கென தனியொரு ஆளுனர் நியமிக்கப்படிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் தற்போது கிழக்கு மாகாண ஆளுனராகப் பணிபுரிந்துவரும் முன்னாள் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவே வடக்கு மாகாண ஆளுனராகவும் கடமையாற்றிவந்தார்.


இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா கவலை

ஊடகங்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதாக கவலை

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தமக்கு மகிழ்சியளிக்கவில்லை என்று அமெரிக்கா இலங்கையிடம் கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைச் சூழல் குறித்தும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் குறித்தும் அமெரிக்கா அதிகமாக கவலைப்படுவதாக, ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலரான இவான் பைஜன்பாம், இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து உடகவியலாளர்கள் எழுப்பிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு அமைச்சகக் குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்றும் பைஜன்பாம் தெரிவித்துள்ளார்.


ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் – பெட்டகம்

பாதை திறக்காத நிலையில் பயணத்தின் பாதிவழியில்…

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையிலான ஓமந்தை சோதனைச்சாவடி 3 ஆவது நாளாக இன்றும் திறக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் வன்னிப் பகுதிக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் என்பனவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வன்னிப்பிரதேசத்திற்குச் செல்வதற்காக வவுனியாவில் சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றார்கள்.

கையிலிருந்த பணம் செலவழிந்துவிட்டதனால் சாப்பிடவும் வழியில்லை செலவுக்கும் வழியில்லை என இவர்கள் வவுனியா செயலக அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை OFFER என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியோடு அரச அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

போக்குவரத்தின்மை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் நிவாரண விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Tamil Internet Computing: Web Technology & Thamizh Blogs – Thamizmanam Conference Poster for Pudhucherry

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2008

நன்றி: திரட்டி.காம்: தமிழ்மணம் கருத்தரங்கு – சுவரெட்டி

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »