Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Touring British Minister Lord Malloch-Brown meets President; Neil Buhne, United Nations (UN) representative & Humanitarian coordinator, on a fact finding visit to Batticaloa

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2008

இலங்கையில் பிரிட்டிஷ் அமைச்சர் மலக் பிறவுண்

பிரித்தானியாவின் ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மலக் பிறவுண் அவர்கள் இன்று மூன்று நாள் அரசமுறை பயணமொன்றினை மேற்கொண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மற்றும் சமயத் தலைவர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசி வருகிறார்.

இவரது விஜயம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், அமைச்சர் பிறவுண் தனது சந்திப்புக்களின்போது குறிப்பாக இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து கலந்துரையாட இருப்பதாகவும், மனித உரிமை ஆணைக்குழு, அதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற மனித உரிமை மீறல் நிலைமைகளை கண்காணித்துவரும் அமைப்புக்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றினைக்காணுவதற்கு ஊக்கமளிக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு தனது இந்த விஜயத்தினைப் பயன்படுத்தவுள்ள பிரித்தானிய அமைச்சர் பிறவுண், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் வளர்ச்சிப்போக்கு குறித்தும், அக்குழுவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால விதந்துரைகளின் நடைமுறைப்படுத்தல்கள் குறித்தும் இலங்கை அரச தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும், பிரித்தானிய தூதரகம் தெரிவித்திருக்கிறது.


மட்டக்களப்பில் ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி

நியூ பொனே
நியூ பொனே

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்புக்கு இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் மற்றும் மனிதாபிமான பணிக்கான இணைப்பாளருமான நியூ பொனே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளார்.

ஐ.நா.வின் முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் என்று பல்வேறு தரப்பினரை சந்தித்து இது பற்றி ஆராய்ந்த அவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்தில் காணப்பட்ட சூழ்நிலையுடன் தற்போதைய சூழ்நிலையை ஒப்பிடும் போது தமது பணிக்கு முன்னேற்றகரமானதாகவும்,சாதகமானதாகவும் நிலைமைகள் தற்போது இருப்பதாகக் கூறினார்


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு இலங்கையிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்-திமுக கோரிக்கை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவரை அழைத்து தொடரும் அச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என திமுகவின் உயர்நிலைக்குழு கேட்டுககொண்டிருக்கிறது.

தவிரவும் விரைவில் நடைபெறவிருக்கிற தெற்காசிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மன்மோகனசிங், அச்சமயத்தில் இலங்கை அதிபரிடம் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி அமைதியான சூழல் திரும்புவதை உறுதி செய்யவேண்டும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டது.

திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி இயற்றப்பட்ட தீர்மானங்களை செய்தியாளர்கள் மத்தியில் படித்தார்.

இன்னொரு தீர்மானம் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படையும் கடலோரப்படையும் இணைந்து பாதுகாப்பளிக்க வேண்டும் எனக் கோரியது.

இன்றைய தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் ஜூலை 19ஆம் நாள் மாநிலம் முழுதும் ஒரு நாள் உண்ணாநோன்பு இருப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

முதல்வர் கருணாநிதி கடல் எல்லையை மீறுகின்ற தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார்.

கடற்கரையில் மீனவர்கள்
கடற்கரையில் மீனவர்கள்

தவிரவும் முதல் கச்சதீ¢வு ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருந்ததையும், பின்னால் அப்பிரிவுகள் நீக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி மீண்டும் அவ்வுரிமைகள் நிலைநாட்டப்படும் நேரம் வந்திருப்பதாககூறினார்.

இதனிடையே இன்று காலை முதல்வர் கருணாநிதியையும் உயர் அரசு அதிகாரிகளையும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சந்தித்தபோது, பாதிக்கப்ட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு ஐந்துலட்சரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும், மற்றும் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மீனவர்களின் பிரச்சினை பற்றி மத்திய அரசிற்கு எடுத்துக்கூற புதுடெல்லி செல்லும் என்ற வாக்குறுதிகளின் பேரில் தங்களது வேலைநிறுத்தத்தினை முடித்துக் கொள்வதாக கூறினர்.


மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் போலீசார் விசாரணை
மட்டக்களப்பில் போலீசார் விசாரணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு ஈபிடிபி அமைப்பினரால் கடத்தப்பட்டாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவரது சடலம் அடிகாயங்களுடன் அந்தப் பகுதியிலுள்ள ஈபிடிபி காரியாலயத்துக்கு அருகிலுள்ள காணி ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

36 வயதான தேவதாசன் சுரேஷ் குமார் எனும் இந்த வர்த்தகர், கடந்த மாதம் 19 ஆம் தேதி கடத்தப்பட்டு காணாமல் போனதாக உறவினர்களால் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் அந்த அமைப்பின் பிரதேச அமைப்பாளர் உட்பட நான்கு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

விசாரண நடவடிக்கைளை அடுத்து மேலும் இரு ஈபிடிபி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கொடுத்த தகவலையடுத்தே இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஏறாவூர் போலீசார் கூறுகிறார்கள்.

அந்த வர்த்தகர் ஈபிடிபி அலுவலத்தில் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்பு அருகில் ஈபிடிபியின் பாவனையிலுள்ள காணியில் புதைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கும் தமது அமைப்புக்கும் தொடர்புகள் இல்லை என்று ஈபிடிபி கட்சியின் தலைவரும் இலங்கை அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.


வவுனியா நலன்புரி நிலையத்தில் தீ விபத்து

வவுனியா நலன்புரி நிலையத்தின் தீ விபத்து
தீக்கிரையான வவுனியா நலன்புரி நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நலன்புரி நிலையத்தில் 2500க்கும் கூடுதலானவர்கள் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீ விபத்தின் காரணமாக குறைந்தபட்சம் 400 பேர் வாழ்விட வசதிகளை இழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிசாரும், இராணுவத்தினரும், விமானப்படையினரும் தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவும் மாற்று வசிப்பிட வசதிகளை வழங்கவும் ஏனைய நிவாரண உதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நலன்புரி நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாததையே இந்த தீ விபத்து எடுத்துக்காட்டுவதாக அந்த நலன்புரி நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றார்கள். இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்திருந்த சட்டரீதியற்ற வீடுகளை பொலிசார் அகற்ற முற்பட்டதால் களேபரம்

கொம்பெனி வீதியில்ரயில் தண்டவாளத்தை ஒட்டிய குடியிருப்புகள்

கொழும்பு கொம்பனி வீதி ரயில் பாதைக்கு அண்மையில் பல வருடங்களாக அமைந்திருந்த சட்டரீதியற்ற குடிசைப் பகுதி வீடுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் பேரில் பொலிசார் அகற்ற முற்பட்டதால் வெள்ளியன்று பிற்பகல் அப்பகுதி வாசிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள தெற்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டினையொட்டி எடுத்துவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக கொழும்பு கொம்பனி வீதியில் கிளேனி பிளேஸ் பகுதியில் ரயில்வேக்கு சமீபமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 350 சட்டரீதியற்ற குடிசைகளில் வசிப்போரை அங்கிருந்து குறித்த காலப் பகுதிக்குள் வெளியேறும்படி நகர அபிருத்தி அதிகாரசபை இவ்வார முற்பகுதியில் முன்னறிவித்தல் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

ஆனால் அங்கிருந்து மக்கள் வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவிற்குள் வெளியேறாததால் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தரவின் பேரில் பொலிசார் அகற்ற முற்பட்டனர். இதேவேளை, இப்பகுதி மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இப்பகுதிமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எதிர்வரும் 22ஆம் திகதி வரை இடைநிறுத்திவைக்குமாறு உத்தரவொன்றினை பிறப்பித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த நீதிமன்ற உத்தரவு தமக்குக் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபையினர், அங்குள்ள குடிசைகள் சிலவற்றை அகற்றமுற்பட்டபோது ஆத்திரமுற்ற அப்பகுதிவாசிகளுக்கும் அவர்களுக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

இதனால் நிலைமையைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர பொலிசார் கண்ணீர்புகைப்பிரயோகம் மேற்கொண்டனர். ஆனாலும் பொலிசாரின் உத்தரவிற்கு இணங்க சிலர் வெளியேறியதையும் காணமுடிந்தது.

இங்கு பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலர், இந்திய தூதரகம் சென்று மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.


திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

திருகோணமலை நகர மணிக்கூட்டுக் கோபுர பகுதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவ குடும்பங்கள் கலந்து கொண்டன.

மீன் பிடிப்பதற்கான இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும், அல்லது அதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பம் ஒவ்வொன்றுக்கும் நஷ்டஈடாக மாதாந்தம் இருபதினாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான ஜே.வி.பி. உறுப்பினர், ஜயந்த ஜயசேகர மற்ரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.


தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரம்: மத்திய அரசுக்கு திமுக கடிதம்

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, இன்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி தலைமையில், திமுகவின் உயர்நிலைச் செயல் திட்டக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் விவாதித்தது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானத்தின் நகலை, வெள்ளிக்கிழமையன்று பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார் டி.ஆர். பாலு. இந்தப் பிரச்சினையில் அரசு முன்னுரிமை கொடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரணாப் முகர்ஜி உறுதியளித்திருப்பதாக டி.ஆர். பாலு தெரிவித்தார்.

மேலும, வரும் 20-ம் தேதி திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இநதப் பிரச்சினை தொடர்பாக பிரதமரைச் சந்திக்க இருப்பதாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: