Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 28th, 2008

LTTE’s Parappakkadantan Stronghold Falls – June 27: Tamil Eelam, Sri Lanka, War Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜுலை, 2008

விடுதலைப்புலிகள் பகுதியில் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் குண்டு வீச்சு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் மாங்குளத்திற்கு வடகிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை இலங்கை அரசாங்க விமானப்படைக்குச் சொந்தமான 8 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வான்படையினர் போன்ற விசேட அணியினருக்கான இந்தப் பயிற்சி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றியோ, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இதற்கிடையில், ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.

எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையில், நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.


ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


வவுனியா சுற்றிவளைப்பில் பலர் கைது

கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்
கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையையடுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற திடீர் தேடுதலின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை வவுனியா பொலிஸார் இரவு முழுதும் தடுத்து வைத்ததையடுத்து உறவினர்கள் அச்சமடைந்தனர். பதற்றமும் நிலவியது.

இன்று காலை பெரும் எண்ணிக்கையான உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தின் எதிரில் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 91 பேரில் இருவரைத் தவிர ஏனையோரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


பரப்புக்கடந்தானை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே உள்ள பரப்புக்கடந்தான் கிராமப்பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியில் மேலும் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான நிலப்பகுதியை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

மன்னார், வவுனியா, வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது வெள்ளிக்கிழமை நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 44 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

மன்னார் ஆண்டான்குளம், பாப்பாமோட்டை, நெடுவரம்பு மற்றும் வவுனியா வெலிஓயா போர்முனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளின்போதே விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் கொல்லப்பட்ட 25 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இஸடீன், வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தியதையடுத்து, இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சடலங்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கலிகை சந்திக்கருகில் நேற்றிரவு 8 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர் வவுனியா நகரில் புடவைக் கடையொன்றில் பணியாற்றி வந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜூன், 2008


வட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.

விநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.


புலர்ந்தும் புலராத விடியல் – பாகம் 4

மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை
மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதிகளில் மோதல்களுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி மந்தகதியிலேயே நடந்துவருகிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது; விலைவாசிகள் மிக வேகமாக உயர்ந்துவருகிறன.

சாலைகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பலர் கூறுகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவை என்றபோதிலும், அட்டையைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்களைப் போலவே விவசாயிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கிழக்கிலங்கையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஜூன், 2008

விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.

உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தவிர வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 25 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.


பிள்ளையான் – விமல் வீரவன்ஸ சந்திப்பு – ஓர் அலசல்

விமல வீரவன்ஸ
சிவநேசத்துரை சந்திரகாந்தன்





கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி. அதாவது மக்கள் விடுதலை முன்னணி கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய விடுதலை முன்னணி என்ற ஒரு புதுக் கட்சியைத் தொடங்கியுள்ள விமல வீரவன்ஸ இடையில் நேற்று சனிக்கிழமையன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விரு புதிய கட்சிகளும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணருவதால் ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் அரசியல் பின்புலம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை அரசியல் விவகார ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையில் கருத்து வெளியிட்டார்

டி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்கிற விவகாரத்தில் ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் நிலைபாட்டிலிருந்து விமல வீரவன்ஸ சற்று முரண்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழலில் டி.எம்.வி.பி. போன்ற அமைப்பினர் ஆயுதக் களைவு செய்வது சாத்தியமாகாது என்ற கருத்தை வீரவன்ஸ கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கட்டாயம் உடனடியாக ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்பது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முரண்பாடானது ஜே.வி.பி. கட்சியிலிருந்து வீரவன்ஸா விலகியதன் காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே வீரவன்ஸவுக்கு ஆதரவு வழங்குவதென்பது பிள்ளையானுடைய தார்மீகப் பொறுப்பாக கூட இருக்கலாம் என்று பேராசிரியர் தங்கராஜா தெரிவித்தார்.

அவரது பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜூன், 2008

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகிறார்கள்: இலங்கை இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளிடம் தோல்வியடைந்துவருகிறார்கள் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

நாட்டின் வட பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துவருவதாகவும் பதுங்கு குழிகளிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆர்ட்டிலரி குண்டுகளையும் சமாளித்து அரச படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மென்மேலும் முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரபு வழியில் சண்டையிடும் வல்லமையை புலிகள் இழந்துவிட்டார்கள் என்று சரத் ஃபொன்சேகா கூறினார்.

2006ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிந்ததிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒன்பதாயிரம் பேரை இராணுவத்தினர் கொன்றிருப்பதாகக் கூறிய தளபதி ஃபொன்சேகா, இராணுவத் தரப்பில் இந்த காலகட்டத்தில் 1700 பேரை தாம் இழந்துள்ளதாகக் கூறினார்.

புலிகள் தற்போது கட்டாய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ள நிலையில் இப்போது அந்த இயக்கத்தில் நான்காயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான கெரில்லா யுத்தம் என்பது நீடித்துகொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தெற்காசியாவிலேயே மிக அதிக பணவீக்கம் இலங்கையில்

இலங்கையின் வருடாந்திர பணவீக்கமானது 28.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக திங்களன்று வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் அதிகமான பணவீக்கம் இதுதான்.

உலகமெங்குமே பணவீக்கம் ஒரு பிரச்சினைதான்; ஆனால் இலங்கை மற்றெந்த நாடுகளையும் விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. நுகர்வுப் பொருட்களின் விலைகள் ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகரித்துவிட்டன.

இதற்கு உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததும், நாட்டில் எரிபொருட்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்ப்டுகிறது என்றும் அரசாங்கம் மிகவும் அதிகமாக செலவு செய்கிறது என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்க நிலை சீராகும் என்று மத்திய வங்கி நம்பிக்கை தருகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் இதற்கு முன்னாள் பலமுறை பொய்த்துப்போயுள்ளன.

விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் வந்துள்ளது. கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு திட்டமிடுகின்றன.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »