Northern Province Athletic Meet (NPAM) – Maharagama Teacher Training College: Jaffna peninsula students stranded in Trincomalee
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008
புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஜூன், 2008
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்
![]() |
![]() |
வடக்கில் கடும் மோதல்கள் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மன்னார் – பூனகரி வீதியில் உள்ள பாப்பாமோட்டைக்குத் தென்பகுதியிலும், பாப்பாமோட்டைக்குக் கிழக்குப் பகுதியில் மராட்டிகன்னாட்டி, மின்னியறைஞ்சான் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினர் பின்தள எறிகணை சூட்டு ஆதரவோடு, மும்முனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் படையினர் முன்னேறி வருவதாகக் கூறும் பாதுகாப்பு அமைச்சகம் இப்பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.
பாப்பாமோட்டைக்குத் தெற்கே பல இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் சமர் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.
![]() |
![]() |
புலிகளுக்கு இழப்பு என்று இராணுவம் கூறுகிறது |
இப்பகுதியில் இன்று காலை முதல் இடம்பெற்று வரும் கடும் மோதல்களையடுத்து, படையினருக்கு உதவியாக மன்னார் நகரப்பகுதியில் உள்ள தள்ளாடி பிரதான இராணுவ தளம் உட்பட முக்கிய இராணுவ முகாம்களில் இருந்து பாப்பாமோட்டை பகுதியை நோக்கி எறிகணை தாக்குதல்களும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் படையினர் நடத்தியதாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜூன், 2008
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக வந்த யாழ் மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்
![]() |
![]() |
வவுனியாவில் நடைபெறவிருந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்திலான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலம் வந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டே அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக, அவர்களது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி இந்த விளையாட்டுப்போட்டி வவுனியாவில் நடைபெறவிருந்த போதிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் அங்கிருந்து இதில் கலந்து கொள்வதற்கு ஆளுனர் அனுமதி மறுத்திருந்தார்.
இதனையடுத்து இந்தப் போட்டிகள் யாழ் மாவட்ட மாணவர்களின்றி நடைபெறுவதாக இருந்தது. எனினும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, நேற்று இந்த மாணவர்கள் கப்பலில் புறப்பட்டு இன்று திருகோணமலையை வந்தடைந்தனர்.
இருந்த போதிலும் இந்த மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் பிறிதொரு தினத்தில் நடத்தப்பட்டு வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் அதில் பங்கேற்க வழி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஆங்கில மூல ஆசிரியர் பயிற்சி இடைநிறுத்தம்
![]() |
![]() |
இலங்கையின் தெற்கே மஹரகம மற்றும் களுத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் மறு அறிவித்தல்வரை ஆங்கில மூல ஆசிரியர் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு பயிற்சி பெற்று வந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மீண்டும் தாம் கடமையாற்றிய பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர்.
மஹரகம ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று வந்த வடபகுதியைச் சேர்ந்த, 2 பெண்கள் உட்பட 4 பேர் கொழும்பில் 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வேறு இடங்களில் ஆசிரியர் பயிற்சியை தொடர்வதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பணிப்பாளர் கே. மொகமட் தம்பி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது
இலங்கைக்கான அமெரிக்க தூதரக வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான பவுடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தூதரக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்துக்குரிய பவுடர் ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வரும் வரை தூதரகம் பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இருந்த போதிலும், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளின் நலன்கருதி, தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு தொடர்ந்தும் திறந்திருக்கும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்