மட்டக்களப்பில் ஆட்கடத்தல்கள்; ஈ.பி.டி.பி – டி.எம்.வி.பி. பரஸ்பர பழிசுமத்தல்
![]() |
![]() |
இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பி. கட்சியினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்கடத்தல் தொடர்பாக பொலிசார் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக கடத்தப்பட்ட தேவதாசன் சுரேஷ்குமாரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை, தனது தாயாரைக் காண்பதற்காக இரு குழந்தைகளின் தந்தையாகிய தேவதாசன் சுரேஷ்குமார் வீட்டிலிருந்து கிளம்பியபோது, வாகனம் ஒன்றில் வந்த ஈ.பி.டி.பி. கட்சியினர் அவரைக் கடத்திச் சென்றதாக தேவதாசனின் மனைவி தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த இருபதாம் தேதியன்று தேவதாசனும் வேறு இரண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களும் ஈ.பி.டி.பி. பிரதேச பிரதிநிதி ஒருவர் சென்ற வாகனத்தின் மீது கல்லெறிந்ததால் அவர்களைப் பிடித்து எச்சரித்துவிட்டு விடுவித்துவிட்டதாகவும், தற்போது டி.எம்.வி.பி.யினரின் வற்புறுத்தலின் பேரில் தேவதாசனின் மனைவி பொலீசில் பொய் புகார் கொடுத்திருப்பதாகவும் தமிழோசையிடம் பேசிய மட்டக்களப்பு மாநகர சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினரான அருமைலிங்கம் தெரிவித்துள்ளார். அதேநேரம் காளியப்பன் குணசீலன் என்ற ஈ.பி.டி.பி. உறுப்பினரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த இருபதாம் தேதியன்று கடத்திச் சென்றுள்ளதாக அருமைலிங்கம் குற்றம்சாட்டினார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை டி.எம்.வி.பி. சார்பாகப் பேசவல்ல ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார். இவர்களது கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மட்டக்களப்பு வன்முறையில் நால்வர் பலி
இலங்கையில் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படையினர் இருவர் கண்ணிவெடியில் கொல்லப்ட்டுள்ளனர்.
இந்தக் கிளெமோர் கண்ணியை வைத்தது புலிகள் என அரசு கூறுகிறது. ஆனால் விடுதலைப் புலிகள் அது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
களுதாவளைப் பகுதியில் காலை வேளை சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மற்றும் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட பொதுக் குடிமகன் ஒருவர் இந்த சைக்கிள் கண்ணி வெடியில் காயமடைந்துள்ளார்.
இதைத் தொடாந்து அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது படையினர் இரண்டு உள்ளூர்வாசிகளைச் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
களுதாவளைப் பகுதியில் பதட்டம் நிலவுவதாகவும், அங்கே பொதுமக்கள் சிலர் தாக்கப்பட்டு, உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் மேலதிக செய்திகள் கூறுகின்றன.
அரச படைகள் இந்தக் குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளன.