Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 21st, 2008

U Ra Varadarasan: Rural Economy – Agriculture, Industry, Services

Posted by Snapjudge மேல் ஜூன் 21, 2008

கிராமப்புற பொருளாதாரம் – சில கவலைகள்!

உ . ரா. வரதராசன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளின் பங்கு (2001 – 02ஆம் ஆண்டில்) கீழ்வருமாறு அமைந்திருந்தது.

விவசாயம் – 15 சதவிகிதம், தொழில் – 31 சதவிகிதம், சேவைப்பணிகள் – 54 சதவிகிதம்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 15 சதவிகித அளவிலேயே வேளாண்துறையின் பங்களிப்பு இருக்கிறது.

ஆனால் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சற்றொப்ப 60 சதவிகிதத்தினர் வேளாண் துறையையே சார்ந்து வாழ்பவர்களாக உள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1.30 லட்சம் கிலோ மீட்டரில் 17.59 சதவிகிதம் காடுகளாகும்.

இவை நீங்கலாக உள்ள நிலப்பரப்பில் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களில் பாசன வசதி அமையப்பெற்றது 48 சதவிகிதம் மட்டுமே; மீதமுள்ள 52 சதவிகித நிலங்கள் பாசன வசதியற்றவையாகும்.

1979 – 80இல் தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 48.1 சதவிகிதம் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை இருந்தது.

இது 2005 – 06இல் 38.5 சதவிகிதமாகச் சுருங்கிவிட்டது என்பது அலட்சியப்படுத்த முடியாததோர் அபாய அறிவிப்பாகும்.

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில், பாசன வசதி கிடைக்கப்பெறும் நிலங்கள் சரிபாதிக்கும் குறைவு என்பது ஒன்று.

இந்தப் பாசன வசதியும், பருவமழையைப் பொறுத்ததுதான் என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய மற்றொன்று.

பருவமழை பொய்க்கும்போது, தமிழ்நாடு வறட்சி நிலைமைகளைச் சந்திப்பது தொடர்ந்து நாம் அனுபவித்து வந்துள்ள துயரமான நிகழ்வுகள் என்பது மறக்கக்கூடியதல்ல.

தமிழ்நாட்டு விவசாயத்திற்குப் பாசன வசதியைப் பெருக்குவது என்பது, நமது அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை மிகவும் சிக்கலாக நீடித்து வருவதால், உடனடியாக சாத்தியப்பாடு இல்லாத விஷயம்.

எனினும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, பருவமழை சராசரி அளவுக்கும் அதிகமாகப் பெய்யும் காலங்களில் மாநிலத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை மீறி நீர் வெளியேறிக் கடலில் கலப்பதைத் தடுப்பது, பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படுவது, நீர் சேதாரத்தைத் தவிர்க்கும் வகையிலான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது, பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேளாண்துறையைப் பலப்படுத்த உதவும்.

மாநிலத்தில் விவசாயிகள் கையில் உள்ள நில அளவு மற்றோர் அடிப்படையான அம்சமாகும்.

1995 – 96ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 74.3 சதவிகிதம் உள்ள ஏழை – குறு விவசாயிகளிடத்தில் மொத்த விளைநிலத்தில் 30 சதவிகிதமே இருந்தது என்று அறியப்பட்டுள்ளது.

சிறிய – நடுத்தர – பெரும் விவசாயிகளின் சதவிகிதம் 10 மட்டுமே; ஆனால் அவர்கள் கையில் உள்ள நிலம் 46.1 சதவிகிதம் என்று அதே கணக்கீடு எடுத்துச் சொல்கிறது.

இந்தக் குறு விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிவருவதும், இதனால் தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடிகளில் ஒரு பெரும் பகுதி ஏழ்மையில் தள்ளப்படுவதும் தொடர்கிறது என்பதையும் அரசுத்தரப்பு ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.

இந்த நிலைமைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னுரிமை நடவடிக்கை என்பது அடிப்படை நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும்.

தமிழ்நாட்டில் இன்றைய திமுக அரசு அறிவித்துள்ள இலவச நில விநியோகத் திட்டம் விரிவாக்கப்படுவதும், விரைவுபடுத்தப்படுவதும் அவசர அவசியத் தேவையாகும்.

இதில் செல்வாக்குப் படைத்த தனியாரிடத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களைக் கண்டறிந்து கையகப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்க வேண்டியது உடனடிக் கடமையாக முன்நிற்கிறது.

இந்த இலவச நில விநியோகத் திட்டத்தையும் தாண்டிச் சென்று, தமிழகத்தின் கிராமப்புறங்களில் இன்று நிலவுகிற நிலக் குவியலைத் தகர்ப்பதற்கான நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பயிர் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் நிலத்தின் அளவு 1979 – 80இல் 62.59 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இது 2005 – 06இல் 50.10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

சதவிகிதக் கணக்கில் 48.56}லிருந்து 38.46ஆக இதே காலகட்டத்தில் சுருங்கியுள்ளது. இந்தப் பின்புலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், “ரியல் எஸ்டேட்’ கட்டுமானத் துறையில் வேகவேகமாக நுழைய அனுமதிக்கப்படும் வெளிநாட்டு – உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களும், சாகுபடிக்கு உட்படுத்தப்படும் நிலத்தின் அளவை மேலும் வெட்டிச் சுருக்க அனுமதிப்பது. கிராமப்புறங்களில் ஒரு ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும்.

இதே போக்கு இந்தியா முழுவதிலும் நிகழ்ந்து வருவது கண்கூடு. எனவே இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தடுத்து நிறுத்தாவிட்டால், 100 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்துறையின் பங்கு குறைந்து வருவதையடுத்து, இதைச் சார்ந்து நிற்கும் சற்றொப்ப 60 சதவிகித மக்களைப் படிப்படியாக வேறு துறைகளுக்கு மாற்றுவது என்பது தவிர்க்க முடியாதது.

ஆனால் இன்று இந்தக் கணிசமான மக்கள் பகுதியினருக்குப் பயனுள்ள – வருவாய் ஈட்டத் தகுந்த – மாற்று வேலைகள் பெற்றுத் தருவது என்பது சுலபமல்ல.

எனவே கிராமப்புறங்களிலேயே வேளாண்துறையைச் சார்ந்த இதர தொழில்களை வளர்ப்பதில் ஒரு திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது இன்றியமையாததாகும்.

தமிழக கிராமப் பொருளாதாரம் தொடர்பான இந்தக் கவலைக்குரிய அம்சங்களில் மாநில அரசு உடனடியாகக் கவனம் செலுத்துமா என்பதே கேள்வி!

(கட்டுரையாளர்: தேசியச் செயலர், சி.ஐ.டி.யூ.)

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Herbs & Naturotherapy: Ayurvedha Corner – Sathakuppai

Posted by Snapjudge மேல் ஜூன் 21, 2008

மூலிகை மூலை: கீல் வாயுவிற்குச் சதகுப்பை!

சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “”சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது. இந்தச் செடி எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. மலர்களில் விதைகள் தோன்றும். பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். இலை இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் வெப்பத்தை அதிகரிக்கும். லகு குணம் வெப்பத்தன்மை கொண்டது. சடராக்கினிக் குறைவையும் கிருமிகளையும் போக்கும்.

விந்துவைக் குறைக்கும். இதயத்திற்கு நன்மை தரும். மலத்தைக் கட்டும். இதன் வேரும் விதைகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. சூடு இருமல், வாந்தி, கபம், வாதம், பெண் குறியில் தோன்றும் நோய்கள் முதலியவற்றைப் போக்கும் மருத்துவக் குணம் உடையது.

வேறு பெயர்கள்: சோயிக்கீரை, விதை, மதுரிகை.

ஆங்கிலப் பெயர்: pencedanum grande; umbelli ferae

மருத்துவக் குணங்கள் ; சதகுப்பைச் சூரணம் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கும். வாதநோயைக் கட்டுப்படுத்தும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுகளை அகற்றும்.

சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை மாலை இருவேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர உதிரச் சிக்கல், நீங்கிக் கருப்பை பலப்படும்.

சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு அரைத்து எடுத்து 500 மில்லி விளக்கெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்க்கு 5 சொட்டு வீதம் 3 வேளை கொடுக்கலாம். இதையே சூதகசந்தி, சூதகக்கட்டு, காக்கை வலிப்பு முதலியவற்றிற்கும் கொடுக்கலாம்.

சதகுப்பை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 15 கிராம் எடுத்து சிறிது சர்க்கரையுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வர தலைநோய், காது வலி, பசி மந்தம், கீழ்வாய்க் கடுப்பு, மூக்கு நீர்ப் பாய்தல் முதலியவை குணமாகும்.

சதகுப்பை இலையை விளக்கெண்ணெய் தடவி வதக்கி கட்டிகளுக்கும், வீக்கங்களுக்கும் வைத்துக் கட்டி வர சீக்கிரம் பழுத்து உடையும். தோல் சிவக்கும்படி இலையை இடித்து வைத்தும் கட்டலாம்.

சதகுப்பை இலையைக் காயவைத்துப் பொடியாக்கி நோயாளியின் படுக்கை அறையில் வைத்துப் புகைக்க தலை நோய், காது வலி, மூக்கில் நீர்பாய்தல் கட்டுப்படும்.

சதகுப்பை இலையை அரைத்து 15 கிராம் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி 30 மில்லியளவு 3 வேளையாகக் குடித்து வர பசி மந்தம், மூக்கு நீர்ப் பாய்தல் குணமாகும்.

சதகுப்பை இலைச்சாறு 10 முதல் 20 துளிகள் தேன் அல்லது கோரோசனையுடன் கலந்து 4 மணிக்கு ஒரு தடவையாகக் கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் இசிவு, வயிற்றுப் புழு வெளியேறும்.

சதகுப்பை இலையைக் கைப்பிடியளவு எடுத்து இடித்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி பிள்ளை பெற்றவருக்குக் குடிக்கக் கொடுக்க உதிரச் சிக்கல் அகலும்.

சதகுப்பை விதையை இடித்துப் பொடியாக்கி 30 கிராம் எடுத்து 500 மில்லி வெந்நீரில் ஊற வைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், குணமாகும். இத்துடன் சுண்ணாம்பு தெளிந்த நீரைச் சிறிது சேர்த்துக் கொடுக்க இது அதிகப் பலனைக் கொடுக்கும்.

சதகுப்பை விதையை அரைத்து, வெந்நீராவியில் வேகவைத்து இதன் வேருடன் அரைத்து கீல் வாயுவிற்குப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.

சதகுப்பைப்பூ ஒரு பங்கு, நீர் 20 பங்கு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 200 மில்லியளவு குடிக்க குருதிச் சிக்கலை அறுத்து வெளியேற்றும்.

சதகுப்பையை தீநீராக்கினால் அந்த நீர் மீது எண்ணெய் மிதக்கும். அதை 35 கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் சரியாகும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | 2 Comments »