N Vittal – Indian Justice System Reformations: Law & Order
Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008
நீதித்துறையின் மறுநிர்மாணம்!
என். விட்டல்
அரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களாக சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.
தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.
அரசு நிர்வாகம் எங்கெல்லாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.
1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.
இப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.
ஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.
சட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.
விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும்? அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.
நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.
தாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.
வழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.
நம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.
பெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறையில் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.
நீதித்துறையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.
நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.
தற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.
அடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.
இந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்களுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்றுவது. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.
அடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசாரணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.
(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).
மறுமொழியொன்றை இடுங்கள்