Arputharaj: Political conferences & Public hassle – Disturbing normal life with Abundant Exuberance
Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008
அற்புதராஜுக்கு நன்றி!
அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.
இந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.
வேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு?
கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.
அது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.
பொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.
இந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு!
இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.
உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.
பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.
ஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.
கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்