Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 17th, 2008

Is Mu Ka Azhagiri taking helm at DMK & Tamil Nadu Government: Waning MK Stalin

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கைமாறுகிறதா கழகம்?

கடலூர், ஜூன் 15: கடலூர் மக ளிர் அணி மாநாடு திமுகவில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அங்கீகாரம் தேடித் தருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதைவிட, திமுகவின் வருங்காலத் தலை மைக்கான பதவிப் போட்டியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த பிள்ளையார் சுழி போட்டிருக்கி றது என்பதுதான் பார்வையா ளர்களின் கருத்து.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடக்கும் “நிழல் யுத்தத்தின்’ வெளிப்பாடுதான் இந்த மாநாடு என்று கருதும் வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான மு.க. ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் மாநாட்டில் கலந்து கொள்ளாததைச் சுட்டிக் காட்டுகிறார்கள். உடல்நிலை சரியில்லை என்று மு.க. ஸ்டா லின் தரப்பில் கூறப்பட்டாலும், அவரது சார்பில் ஏன் மகன் உதய நிதி கூடக் கலந்து கொள்ள வில்லை என்கிற கேள்வி எழுப் பப்படுகிறது.
மு.க. அழகிரியின் மகள் கயல் விழியின் கன்னிப்பேச்சு மகளிர் அணி மாநாட்டில் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது என்பது மட்டுமல்ல, மு.க. அழகிரி, அவ ரது மகன் துரை தயாநிதி என்று அழகிரி குடும்பமே திரண்டு வந் திருந்தது.

முதல்வரின் மனைவி தயாளு அம்மையார், துணைவி ராஜாத்தி அம்மாள் என்று குடும் பத்தினர் அனைவரும் ஆஜராகி இருந்தபோது, மு.க. ஸ்டாலி னின் குடும்பத்தினர் யாருமே வராதது தொண்டர்கள் மத்தியி லேயே பல வதந்திகளைக் கிளப் பிவிட்டிருக்கிறது.
“”உடல்நிலை சரியில்லை என் பது ஒருபுறம் இருக்க, மு.க. அழ கிரியைப்போல் எதிரிகளைச் சமாளிக்கும் சாமர்த்தியம் தள பதி ஸ்டாலினுக்குக் கிடையாது என்று தலைவர் தீர்மானித்து விட்டார். இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக விரைவிலேயே மு.க. அழகிரி கட்சியின் துணைப் பொதுச்செயலாள ராக அறிவிக்கப்படுவார்” என்று தொண்டர்கள் மத்தியில் பரவ லாகவே பேசப்பட்டது.
தனது ஆதரவாளர்களை அமைச்சர் ஸ்டாலின் பாதுகாப் பதில்லை என்பதும், அவர்க ளுக்கு ஆதரவாகக் குரல் எழுப் பாமல் மௌனம் சாதிக்கிறார் என்பதும் அவரைப் பற்றிய பரவ லான குற்றச்சாட்டு.

  • ஸ்டாலி னின் தீவிர ஆதரவாளரான தா.கிருட்டிணன் கொலைக்கு, அமைச்சர் ஸ்டாலினின் பதில் மௌனம்தான் என்பதும்,
  • அவ ரது ஆதரவாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகா பறிப்பு,
  • பூங்கோதை யின் ராஜிநாமா,
  • கருப்பசாமிப் பாண்டியன் ஓரங்கட்டப்படுதல் போன்ற நிகழ்வுகளும் மு.க.

ஸ்டாலினின் ஆதரவாளர்களை மிகவும் சோர்வடைய வைத்தி ருக்கின்றன.
“”பாவம், தளபதியின் குரல் இப் போதெல்லாம் எடுபடுவ தில்லை. அவரும் மிகவும் மென் மையாகவும், ஜென்டிலாகவும் நடக்க விரும்புவதால், அந்த பல வீனத்தை மற்றவர்கள் பயன்ப டுத்திக் கொள்கிறார்கள். தலைவ ரின் குடும்பத்தில் இப்போதெல் லாம் மு.க. அழகிரி வைத்தது தான் சட்டம். உடல்நிலையைக் காரணம் காட்டி தளபதி விரை விலேயே ஓரங்கட்டப்படுவார்” என்று போதையில் இருந்தாலும் தெளிவாகவே பேசினார் தொண்டர் ஒருவர்.

அடுத்த தேர்தலில் ஜெயலலி தாவுக்குப் போட்டியாக கனி மொழியும் கயல்விழியும் பிரசா ரத்தில் இறங்குவார்கள் என்றும், அது திமுகவுக்கு பெண்களின் வாக்குகளை அள்ளித் தந்துவி டும் என்றும் மாநாட்டிற்கு வந்தி ருந்த சில பெண்கள் நிஜமாகவே நம்புகிறார்கள்.
மாநாட்டுக்கு வந்திருந்த மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் கூறிய விஷயம்~ “தலைவர் இப் படி அதிகார மையங்களை அதி கரித்துக் கொண்டே போவது கட்சியின் வருங்காலத்திற்கு நல் லதல்ல. ஒன்று அல்லது இரண் டுக்கு மேல் அதிகார மையங்கள் இருந்தால், வாரிசுப் போட்டி ஏற் பட்டு வருங்காலத்தில் கட்சி சின் னாபின்னாமாகி விடும். இது ஏன் எங்கள் தலைவருக்குப் புரிய வில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது’.
வாரிசுப் போட்டியில் வலுக்கி றது அழகிரியின் கரங்கள் என் பதை மாநாடு தெளிவாக்கியது.

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

Tamil Actor Kamalahassan: Life story, Biography, Movie History – Dinathanthi

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

மங்கள வாத்தியம்

இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத் தயாரித்த “மங்கள வாத்தியம்” என்ற படத்திலும் கமல் ஹீரோவாக நடித்தார்.

கமல் அறிமுகமாகிற காட்சியில் “வண்டின்னா வண்டிதான் இது வாத்தியாரு வண்டிதான்” என்ற பாடல் வரும். பாடல் காட்சியின்போது கமல் “வாத்தியார்” என்று பாடுகிற இடத்தில், எம்.ஜி.ஆர். பட போஸ்டரை திரையில் காட்டுவார்கள். இந்தக் காட்சியின்போது, திரையரங்குகளில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

கமல் எம்.ஜி.ஆரின் அபிமானி என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு கமலின் ரியாக்ஷன் எதுவுமில்லை என்பதால் அந்தப் பேச்சு அடங்கிவிட்டது. படமும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

“பராசக்தி” படத்தில் சிவாஜியை இயக்கிய டைரக்டர்கள் கிருஷ்ணன் – பஞ்சு கமலை நாயகனாக வைத்து இயக்கிய முதல் படம் “நீலமலர்கள்.” இந்தியில் வெற்றி பெற்ற “அனுராக்” என்ற படத்தை தமிழில் ரீமேக்காக உருவாக்கினார்கள், இவர்கள். தமிழில் சுமார் என்றாலும், தெலுங்கில் “அனு ராகலு”, மலையாளத்தில் “ராகம்” என்ற பெயர்களில் “டப்” செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

உல்லாசப் பறவைகள்

1980-ம் ஆண்டுவாக்கில் பெரிய பட்ஜெட்டில் கமலை வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் “உல்லாசப் பறவைகள்.” படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்தது. கமலுக்கு ஜோடியாக “புதிய வார்ப்புகள்” ரதி நடித்தார். சி.வி.ராஜேந்திரன் இயக்கினார்.

இந்தப்படமும் கமல் பட வரிசையில் `சுமார்’ பட்டியலில்தான் சேர்ந்தது.

டைரக்டர் ஐ.வி.சசி, கமல்-ரஜினி இருவரையும் தனது இயக்கத்தில் “அலாவுதீனும் அற்புதவிளக்கும்” மலையாளப்படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படம் தமிழிலும், தெலுங்கிலும்கூட `டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது.

படத்தில் கமலுக்கும், ரஜினிக்கும் பிரமாண்டமான சண்டைக் காட்சிகளும் இருந்தன. இருந்தும் எல்லோருக்கும் தெரிந்த “அலாவுதீன்” கதை என்பதால், ரசிகர்கள் படத்தை பெரிதாக ரசிக்கவில்லை. குறிப்பாக தமிழ் ரசிகர்களிடம் “அற்புத விளக்கு” ஒளிவீசவில்லை.

இதன்பிறகு ஐ.வி.சசி கமலை மலையாளத்தில் “ஈட்டா” என்ற படத்தில் நடிக்க வைத்தார். இதுவும் கமலின் பட எண்ணிக்கையை கூட்டும் படமாகவே அமைந்துவிட்டது.

குரு

எப்படியும் கமலுக்கு ஒரு வெற்றிப்படம் தந்தேயாகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் ஐ.வி.சசி. இந்தியில் வெற்றி பெற்ற “ஜ×க்னு” என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்து கமலைப் பார்த்தார். போலீசுக்கே டிமிக்கி கொடுக்கும் ஒரு கொள்ளைக்காரன், ஏழைகளுக்கு உதவும் குணம் படைத்தவன். அனாதை இல்லமும் நடத்தி வருகிறான். கொள்ளைப் பணத்தில் கோடீசுரவனான அவன்தான் `பிரபல கொள்ளையன்’ என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவனை பொறி வைத்து பிடிக்க போலீஸ் காத்திருக்கிறது.

இப்படியொரு கொள்ளைக்கார “குரு” வேடத்தில் கமல் நடித்தார். ஸ்ரீதேவியுடனான காதல், போலீசுக்கே சவால் விடும் வகையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தங்க மீனை திருடும் சாகச காட்சி என்று ரசிகர்கள் ரசிக்க நிறைய விஷயங்கள் இருந்தன.

“பறக்காதே கிடைக்காது”, “பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?” போன்ற இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் உற்சாக இறக்கை கட்டிப் பறந்தார்கள். படம் நூறு நாள் படமாகி, ஐ.வி.சசியின் லட்சியத்தையும் நிறைவேற்றி வைத்தது.

திரைப்பட வரலாறு :(944)
கமல்-ஸ்ரீதேவி நடித்த “மீண்டும் கோகிலா”

கமல் நடிப்பில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது “மீண்டும் கோகிலா.” இந்தப் படத்தை முதலில் டைரக்டர் மகேந்திரன் இயக்குவதாக இருந்தது. அவர் விலகிக் கொண்ட பிறகு டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கினார். இதுவும் வெற்றிப்படமானது.

படத்தில் கமல் ஜோடியாக ஸ்ரீதேவியும், நடிகை கேரக்டரில் தீபாவும் நடித்தார்கள். தீபா கேரக்டரில் முதலில் பிரபல இந்தி நடிகை ரேகா (ஜெமினிகணேசன் மகள்) நடித்தார். அவர் விலகிக்கொள்ள, தீபா அந்த வேடத்தை ஏற்றார்.

“மீண்டும் கோகிலா” படத்தின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன், இந்தப்படம் வளர்ந்த பின்னணி பற்றி கூறியதாவது:-

மகேந்திரன் விலகல்

“டைரக்டர் மகேந்திரன்தான் “மீண்டும் கோகிலா” படத்தை இயக்க இருந்தார். படத்துக்கு பூஜை போடப்பட்டு ஒரு பாடலும் பதிவாகி விட்ட நிலையில், சில காரணங்களால் மகேந்திரன் விலகிக் கொண்டார்.

இதன் பிறகு கமல் என்னை அழைத்து, “அண்ணா! இந்தப் படத்தை நீங்கள் இயக்குங்கள்” என்றார். கதை விவாதத்தில் என் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்தார்.

இந்தக் கதை பிராமண குடும்ப பின்னணியை கொண்டது. பிராமணர்களான கமலும், அனந்தும் கதை விவாதத்தில் என்னுடன் கலந்து கொண்டனர். சில காட்சிகளை நான் சொன்னபோது, “பிராமணர் பாணி உச்சரிப்பை அப்படியே உச்சரிக்கிறீர்களே! எப்படி?” என்று கமல் ஆச்சரியப்பட்டார். கோவை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அக்ரஹாரம் பகுதியில்தான் எங்கள் குடும்பம் வசித்தது என்பதை கமலிடம் சொன்னபோது “அதனால்தான் பாஷை இவ்வளவு இயல்பாக வருகிறதா!” என்றார்.

ரேகா விலகல்

இந்தப் படத்தில் வரும் நடிகை கேரக்டரில் பிரபல இந்தி நடிகை ரேகாவை முதலில் ஒப்பந்தம் பண்ணிக் கொடுத்ததே கமல்தான். அவரும் உற்சாகமாக அந்த கேரக்டரில் நடித்தார். 3 ஆயிரம் அடி வரை அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தொடர்ந்து நடிக்க வராமல் இருந்து விட்டார். வராததற்கான காரணத்தையும் சொல்லவில்லை.

ரேகா சொல்லாமல் கொள்ளாமல் நின்று விட்டதில் கமல் `அப்செட்’ ஆகிவிட்டார். பிறகு அந்த கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது `தீபா’வை சிபாரிசு செய்ததும் அவர்தான்.

கணவனையே உயிராக நினைக்கும் மனைவி. கணவனோ ஒரு நடிகை மீது சபலம் கொண்டு திரிகிறான். வக்கீலாக இருந்தாலும் தொழிலில் அக்கறை இல்லாமல் இப்படி நடிகையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததால் எந்த மனைவிக்கு பொறுக்கும்? இதில் மனைவி கேரக்டரில் ஸ்ரீதேவி நடித்தார். “மாமி” மேக்கப் அவருக்கு ரொம்பப் பொருந்தியது.

காமெடி

இந்த சீரியஸ் கதையின் முதல் நாள் படப்பிடிப்பின்போது தனது கேரக்டரில் சில மேனரிசங்களை கமல் கொண்டு வந்தார். கண்களை `சட் சட்’டென இமைப்பது, வெகுளித்தனமான நடவடிக்கைக்கான பாடி லாங்வேஜ் என்று அவர் வெளிப்பட்டபோது, அவரது கேரக்டரை காமெடிப் பின்னணியில் கதைக்குள் செலுத்த முடிவு செய்தோம். முழுப்படத்திலும் கமலின் இந்த `வெகுளித்தன’ நடிப்பு ஜொலித்தது. இந்த வகையில் ஒரு சீரியஸ் கதை கமலின் நடிப்பு வித்தியாசத்தில் நகைச்சுவை முலாம் பூசிக்கொண்டதில் படம் பெரிய வெற்றிப்படமானது.

செட்டில், சதா ஜாலியும், கேலியுமாக கமல் வலம் வருவார். எதற்காவது எனது உதவியாளர்களை சீண்டிக் கொண்டே இருப்பார். `கிளாப்’ அடிக்க வருபவரைக்கூட இடுப்பில் `கிச்சு கிச்சு’ காட்டி அலற வைப்பார். ஆனால் கேமரா `ஸ்டார்ட்’ ஆனதும் அந்தக் கணமே மாறிவிடுவார். எந்தக் கேரக்டரில் நடிக்கிறாரோ அந்த கேரக்டரை அப்படியே காமிராவுக்குள் பதிவு செய்துவிடுவார். முந்தின நொடியில் கேலியும் கிண்டலுமாய் சீண்டிக் கொண்டிருந்தவரா இவர் என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

இந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவான “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி” என்ற பாடல் ரசிகர்களுக்கு தெவிட்டாத தேனாகிப்போனது. உரலில் வெற்றிலை இடிக்கும் ஓசையைக்கூட இசையாக்கி இருந்தார் இசைஞானி.”

இவ்வாறு டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் கூறினார்.

வறுமையின் நிறம் சிவப்பு

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரிக்கத் தொடங்கியிருந்த 1980-களில் அதை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார் டைரக்டர் கே.பாலசந்தர்.

படித்த பட்டதாரி இளைஞன் படிப்புக்கான வேலை கிடைக்காவிட்டால் தன்னை மாய்த்துக்கொள்வதோ, விரக்தியடைவதோ சரியான முடிவல்ல. “உழைக்கத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான்” என்ற கண்ணோட்டத்தில் உருவாக்கிய இந்தக் கதைக்கு “வறுமையின் நிறம் சிவப்பு” என்ற பெயரை சூட்டினார்.

படித்து பட்டம் பெற்ற நான்கு இளைஞர்களின் கனவை, தனக்கே உரிய பாணியில் கையாண்டிருந்த பாலசந்தர், படத்தின் பெரும் பகுதிக்காட்சிகளை டெல்லியில் எடுத்திருந்தார்.

மற்ற 3 நண்பர்களும் தங்களுக்கேற்ற நல்ல வாழ்க்கையை தீர்மானித்துக் கொள்ள, கமல் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார். அந்த போராட்ட வேளையிலும் கமலை மனதார நேசிக்கும் ஸ்ரீதேவி, படித்து நல்ல வேலையில் இருப்பதால் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரதாப்.

நல்ல வேலையில் அமரும்வரை வீடு திரும்புவதில்லை என்று தந்தையிடம் சபதம் செய்யும் இளைஞன் கமல், தன் லட்சியத்தில் பின்னடைவு ஏற்படும்போது சலூன் கடையில் வேலைக்கு சேர்ந்து தனது தன்மானத்தையும் பொருளாதார தேவையையும் ஈடுகட்டுகிறார். கடைசியில் பெற்ற தந்தைக்கே முடி திருத்தும் காட்சியுடன், படத்தை உணர்ச்சிபூர்வமாக முடித்திருந்தார், பாலசந்தர்.

“நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்”, “சிப்பியிருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் என்னடி ராஜாத்தி”, “தீர்த்தக் கரைதனிலே” போன்ற பாடல்களும் படத்தின் வெற்றிக்குத் துணை நின்றன. நூறு நாளைத்தாண்டி ஓடிய படம் இது.

படத்தில் கவிஞர் கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் “சிப்பியிருக்குது முத்தும் இருக்கிறது” பாடலை புதுமையாக உருவாக்கியிருந்தார்கள். ஸ்ரீதேவி சந்தம் சொல்கிற மாதிரியும், கமல் அதற்கு வார்த்தைகளை பொருத்துகிற மாதிரியும் அந்தப்பாடல் அமைந்து ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதுவரை நட்பாக பழகும் இருவரும் தங்களுக்குள் காதலை உணர வைக்கிற பாடலாகவும் இதை பிரமாதப்படுத்தியிருந்தார், பாலசந்தர்.

99-வது படம்

இதற்கிடையே, தேவர் பிலிம்சில் இருந்து “தாயில்லாமல் நானில்லை” வெற்றியைத் தொடர்ந்து மறுபடியும் கமலுக்கு அழைப்பு வந்தது. யானை வளர்க்கும் இளைஞனாக, “ராமன் லட்சுமணன்” படத்தில் கமல் நடித்தார். இதுவும் நூறுநாள் படம். கமலுக்கு அவர் நடிப்பில் இது 99-வது படம்.

திரைப்பட வரலாறு 943
ஜி.என்.ரங்கராஜன் டைரக்ஷனில்
கமலஹாசன் நடித்த “கல்யாணராமன்
வெள்ளி விழா கொண்டாடியது

கமலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த “கல்யாணராமன்” மிகப்பெரிய வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடியது.

கமலின் தமிழ்ப்பட மார்க்கெட்டை நிமிர்ந்து நிற்கச் செய்த படங்களில் கல்யாண ராமனுக்கு முக்கிய இடம் உண்டு. கமலின் அன்புக்குப் பாத்திரமான ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய முதல் படம் இது.

பல் அழகன்

படத்தில் கமல் இரட்டை வேடங்களில் நடித்தார். அதில் ஒன்று, எடுப்பான பல் கொண்ட இளைஞன். முன்பற்கள் வாயை மூட முடியாத அளவுக்கு துருத்திக் கொண்டிருக்கும் இளைஞனாக நடித்தார். கமல் முதன் முதலாக பல்லுக்கு `கிளிப்’ மாட்டி தன் முக அழகைக் குறைத்துக்கொண்டு இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்தார்.

“கல்யாணராமன்” படம் தொடங்கி “மீண்டும் கோகிலா”, “கடல் மீன்கள்”, “எல்லாம் இன்பமயம்”, “ராணித்தேனீ”, “மகராசன்” என்று கமல் நடித்த 6 படங் களை இயக்கியவர் டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன். டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் இணை இயக்குனராக இருந்த இவர், இயக்கிய முதல் படமே கல்யாணராமன்.

கல்யாணராமன் படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது பற்றி அவர் கூறியதாவது:-

புத்தர்

“கமலின் சிறு வயது முதலே அவரை நான் அறிவேன். ஏவி.எம். தயாரிப்பில் பீம்சிங் இயக்கிய “களத்தூர் கண்ணம்மா” படத்தில் கமல் சிறுவனாக நடிக்க வந்தபோதே அவரது சுறுசுறுப்பும், குழந்தைத் தனமும் என்னைக் கவர்ந்துவிட்டது.

கமலுடன் அவரது அண்ணன் சந்திரஹாசனும் வருவார். நான் எடிட்டிங் ரூமில் இருந்தால் பெரும்பாலும் என்னைப் பார்க்க கமல் அங்கேயே வந்துவிடுவார்.

கமல் இளைஞனான பீரியடில் எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் உருவான “அன்புத்தங்கை” படத்தில் ஒரு பாடல் காட்சியில் புத்தராக நடித்தார். இதற்கான பின்னணி சுவாரசியமானது. இந்த பாடல் காட்சியில் புத்தராக நடிக்க முதலில் ஒரு நடிகையைத்தான் ஏற்பாடு செய்திருந்தோம். பாடல் காட்சிக்கு நடிக்க வந்த ஜெயலலிதா என்ன நினைத்தாரோ, பாடல் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். காரணத்தை அவரே சொன்னார். “புத்தர் வேடத்தில் இருக்கும் நடிகை அந்த வேடத்துக்கு பொருத்தமானவராகத் தெரியவில்லை. உங்கள் படத்தில் நடனக் காட்சி அமைக்கும் கமலஹாசனை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தால்கூட பொருத்தமாக இருக்கும்” என்றார்.

இது நல்ல யோசனையாகப் பட்டது. கமலிடம் புத்தராக நடிக்க கேட்டோம். அவரோ, அந்த வேடத்தில் மொட்டையடித்து நடிக்க வேண்டிவரும் என்பதால், “ஆளை விடுங்க” என்று ஓடிப்போய்விட்டார். ஆனால் நாங்கள் விடவில்லை. கமலிடம் “பயப்படவே அவசியமில்லை. மொட்டையடிக்க அவசியமில்லை. முடியை மட்டும் கொஞ்சம் கத்தரித்தால் போதும். மற்றதை மேக்கப்பில் சரிக்கட்டிக் கொள்ளலாம்” என்று அவர் மனதைக் கரைத்தோம். அப்போது டான்ஸ் மாஸ்டரின் உதவியாளருக்கு தினமும் 75 ரூபாய் சம்பளம். தங்கப்பன் மாஸ்டரின் உதவியாளர் என்ற முறையில் கமலும் இந்த சம்பளத்தைத்தான் வாங்கிக் கொண்டிருந்தார்.

புத்தர் வேடத்தில் நடித்தால் சம்பளம் 250 ரூபாய் வாங்கித் தருகிறேன் என்று கூறினேன். அப்போதும் தயங்கியவரிடம், “இரண்டே நாளில் இந்தக் காட்சியை படமாக்கி விடலாம்” என்று நம்பிக்கை கொடுத்தேன். நாங்கள் எதிர்பார்த்தபடியே சிறப்பாக அந்தக் காட்சியில் நடித்தார் கமல்.

டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடம் நான் அசோசியேட்டாக இருந்த அந்த காலகட்டத்தில் கமல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். கமல் என்னை எப்போதுமே “அண்ணா” என்றுதான் அழைப்பார். நான் சிறுவயது முதலே அவரை பார்த்து வருவதால் அன்புடன் `வாடா போடா’ என்கிற ரீதியில் பேசுவேன். வளர்ந்துவிட்ட கமலை ஒருமுறை “வாங்க சார்” என்று சொல்லிவிட்டேன். உடனே கமல், “என்ன கிண்டலா?” என்று கேட்டார். வேண்டியவர்களிடம் மட்டும் அவர் இந்த உரிமையை எடுத்துக் கொள்வார்.

அப்போதெல்லாம் என்னை எப்போது பார்த்தாலும், “அண்ணா! எப்ப படம் டைரக்ட் பண்ணப்போறீங்க?” என்று கேட்பார். அவருக்காகவே சீக்கிரம் டைரக்டராக முடிவு செய்தேன்.

இது நிஜமா?

எஸ்.பாலசந்தர், முழு நேர வீணை வித்வானாக தன்னை மாற்றிக்கொள்ளுமுன், நடிகராகவும், டைரக்டராகவும் விளங்கியவர். அவர் இரட்டை வேடத்தில் நடித்த “இது நிஜமா” என்ற படத்தைப் பார்த்தேன். இறந்து போனவர் ஆவியாக வந்து தனது சகோதரன் உடலில் புகுந்து, வில்லன்களை பழிவாங்கும் கதை. பாலசந்தர் அற்புதமாக பண்ணியிருந்தார். இந்தக் கரு எனக்குள் தங்கி இதே பின்னணியில் ஒரு கதையை உருவாக்க வைத்தது. அந்தக் கதைதான் “கல்யாணராமன்.”

இந்தக் கதையை என் நட்பு வட்டாரத்தில் சொன்னபோது, “ஆவியாவது, கீவியாவது!” என்று கிண்டல் செய்தார்கள். எதற்கும் கமலிடம் சொல்லிப் பார்ப்போம் என்று ஒருநாள் மதுரைக்கு விமானத்தில் போகும்போது, இந்தக் கதையை சொன்னேன். கதையைக் கேட்டவர், “பிரமாதமா இருக்குண்ணா! இதையே பண்ணுவோம். அப்பாவி கேரக்டரில் வந்து செத்துப்போகும் இளைஞன் கேரக்டரையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவோம்” என்றார்.

அப்படி அவர் சிந்தித்து முடிவு செய்ததுதான் “முன் பல் தூக்கலான” கல்யாணராமன். ஒருநாள் செட்டில் `முன் பல் தூக்கலான’ பல்செட் கிளிப்பை போட்டுக் காண்பித்தவர், அந்த கேரக்டருக்கான சில மேனரிசங்களையும் செய்து காட்டினார்.

அந்த கேரக்டருக்கான உடைகளையும் அவரே தேர்வு செய்தார். `ஆகா காதல் வந்துருச்சு’ பாட்டில் நடனமாடும்போது இடுப்பில் பேப்பர் வைத்து ரசிக்கும்படியான காமெடி செய்தார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் கமலின் ஒரு காலில் முறிவு ஏற்பட்டது. கால் முறிவுக்கு சிகிச்சையை தொடர்ந்த நிலையிலேயே ஊட்டிக்கு வந்து சில காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.

“ஆவி கல்யாணராமனும், அவன் அண்ணனும் சந்திக்கும் இரட்டை வேட காட்சிகளில் நடிக்கும்போது கமலின் ஈடுபாடு மறக்க முடியாதது. குறிப்பாக `மாஸ்க் ஷாட்’களில், காட்சி சிறப்பாக அமைய சிரமப்பட்டு உழைத்தார்.

கமலிடம் நான் வியந்த ஒரு சிறப்பு, கதையை கேட்கும்போது அந்த கேரக்டருக்குள் தன்னை நிரப்பிக் கொள்வார். கேரக்டரில் ஏதாவது முரண்பாடு தெரிந்தால் அது தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் செய்வார். அது கதையை இன்னும் தெளிவாக்கவே செய்யும்.

கல்யாணராமன் படத்தில் மட்டுமின்றி அவரை நான் இயக்கிய மற்ற படங்களிலும் இந்த ஆரோக்கியமான விவாதம்தான் படங்களை வெற்றிப்பட்டியலில் சேர்க்க உதவியது என்றே சொல்வேன்.

“கல்யாணராமன்” படம் ரசிகர்களுக்கு கமலின் நடிப்பில் வித்தியாசமான படமாக அமைந்தது. வெள்ளி விழா படமாக்கினார்கள் ரசிகர்கள்.”

இவ்வாறு ஜி.என்.ரங்கராஜன் கூறினார்.

அடுத்தடுத்து வந்த படங்கள்

“சிகப்பு ரோஜாக்கள்” வெளியான மறுநாளே கமல் நடித்த இன்னொரு படமான “மனிதரில் இத்தனை நிறங்களா” படம் ரிலீசானது. இதில் ஸ்ரீதேவி நடித்திருந்தாலும் அவர் கமலுக்கு ஜோடியில்லை. கமலுக்கு ஜோடியாக சத்யபிரியா நடித்திருந்தார். படத்தை கமலின் நண்பர் ஆர்.சி.சக்தி இயக்கி இருந்தார்.

இதற்கும் மறுநாள் கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த “அவள் அப்படித்தான்” படம் ரிலீசானது. ருத்ரையா இயக்கிய படம் இது.

ஒரு ஹீரோ நடித்த 3 படங்கள் இப்படி வரிசையாக வெளியான மாதிரி, வேறு எந்த ஹீரோவுக்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி 72 மணி நேரத்துக்குள் 3 படங்கள் வந்ததால், சிகப்பு ரோஜாக்கள் பெற்ற வெற்றியை மற்ற 2 படங்களும் பெறத் தவறிவிட்டன.

நாகின்

இந்தியில் பாம்புப் பின்னணியில் வெளியான `நாகின்’ படம் அங்கே பெரிய அளவில் வெற்றி பெற்றது. `பாம்புகளுக்கும் ஆசாபாசம் உண்டு. பந்த பாசம் உண்டு. காதல் உண்டு. வாழ்க்கை உண்டு’ என்பதை கதைப் பின்னணியாக்கிய விதம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இந்தப்படம் “நாகமோகினி” என்ற பெயரில் தெலுங்கில் `டப்’ செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

நடிகை ஸ்ரீபிரியா “நாகின்” படத்தை பார்த்தார். இதை தமிழுக்கு தகுந்த மாதிரி மாற்றி எடுக்கலாமே என்று தோன்றியது. இதுபற்றி அப்போது `பிசி’ டைரக்டராக இருந்த `பசி’ துரையிடம் பேசினார். முன்னணி ஹீரோக்கள் 5 பேர் சேர்ந்து நடிக்க வேண்டிய கதையம்சம் கொண்ட படம் என்பதால் ஒவ்வொரு ஹீரோவிடமும் பேசினார், துரை. கமல், ரவிச்சந்திரன், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் என 5 ஹீரோக்கள் நடிக்க ஒப்புக்கொண்டார்கள். படத்தில் கமல் ஜோடியாக லதா நடிக்க, “பாம்பு” கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார். படத்தை ஸ்ரீபிரியாவின் அம்மா கிரிஜா பக்கிரிசாமி தயாரித்தார். அதுவரை பார்த்திராத திரைக்கதை. பாம்புகளின் போராட்டம், `ஈகோ’ பார்க்காமல் முன்னணி நடிகர்கள் நடித்தது இதெல்லாம் படத்தை வெற்றிப்பட வரிசையில் சேர்த்தது. “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா”, “நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா” போன்ற இளையராஜாவின் இசைப்பாடல்கள் ரசிகர்களை கட்டிப்போட்டன.

சின்னப்ப தேவர்

கமலின் வளர்ச்சியில் எப்போதுமே தனி அக்கறை கொண்டவர் சின்னப்ப தேவர். கமல் சிறுவனாகவும் இல்லாமல் இளைஞனாகவும் இல்லாமல் அல்லாடிய இரண்டும் கெட்டான் பருவத்தில் பட வாய்ப்பு சுத்தமாக நின்று போயிருந்தது. அந்த நேரத்தில் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராக சேர்ந்து, நடிகர் – நடிகைகளுக்கு நடனப்பயிற்சி கொடுத்து வந்தார். அதோடு நடிப்பு வாய்ப்புக்கும் முயன்று வந்தார்.

19 வயதில் இந்த முயற்சியை கமல் தொடர்ந்த நேரத்தில் தேவரின் “மாணவன்” படத்துக்கான தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. படத்தின் கதாநாயகனாக ஜெய்சங்கர் நடித்தார். மற்ற நட்சத்திரங்களும் முடிவான நேரத்தில் ஒரு நடனப் பாடலுக்கு மட்டும் நடிகர் அமையவில்லை. நடனப் பாடலுக்கு நடனமாட ஏற்கனவே குட்டி பத்மினியை தேர்வு செய்து வைத்திருந்தார்கள்.

நடனமாட நடிகர் தேவை என்பது இளைஞன் கமலின் காதுக்கும் எட்ட, நேராக தேவர் பிலிம்ஸ் அலுவலகம் சென்றார். தேவர் முன்னிலையில் சில வகை நடனங்கள் ஆடிக்காட்டினார். திருப்தியடைந்த தேவர், “குட்டி பத்மினியுடன் இந்த பையனே ஆடட்டும்” என்று சொல்லிவிட, கமலும், குட்டி பத்மினியும், ”விசிலடிச்சான் குஞ்சுகளா” பாடலுக்கு நடனமாடி நடித்தார்கள்.

படத்தில் இந்தப் பாடலும் ஹிட்டானது. அதோடு நடன ஜோடிகளாக வந்த கமல் – குட்டி பத்மினி ஜோடியையும் ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள்.

தேவர் கொடுத்த “செக்”

இந்தப்படம் வெளிவந்த பிறகு அடிக்கடி வாய்ப்பு தேடி தேவர் பிலிம்ஸ் அலுவலகம் போவார் கமல். அப்போதெல்லாம் அவரை தேவர் அன்புடன் வரவேற்று விசாரிப்பதுண்டு. அப்போது கமல் ரொம்பவே ஒல்லி உடல்வாகுடன் காட்சியளிப்பார். ஒருமுறை உடல் நலக் குறைவில் இன்னும் மெலிந்து போயிருந்த கமலை தேவர் பார்த்தபோது, “என்னடா இப்படி இளைச்சுப் போயிட்டே? கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த மாதிரி வராதுல்ல” என்றார், வாஞ்சையோடு.

பதிலுக்கு கமல் அவரிடம், “படம் கிடைக்காமல் கல்யாணம் பண்ணிக்கிற தைரியம் வரலை” என்று சொன்னார்.

உடனே ஒரு வெற்றுச் செக்கை எடுத்து கமல் கையில் கொடுத்த தேவர், “இதை வெச்சிக்கடா! உனக்கு எவ்வளவு தேவையோ அந்தப் பணத்தை இந்த `செக்’கில் எழுதிக்கோ. நீ கல்யாணம் பண்ணினதும், எங்க கம்பெனிக்கு பண்ணப்போற படத்துக்கு இது சம்பளமா இருக்கட்டும்” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும், கமல் நெகிழ்ந்து போய்விட்டார். தனக்கே நம்பிக்கை இல்லாத தன் எதிர்காலம் மீது, தேவருக்கு இருந்த நம்பிக்கை அவருக்கு ஆச்சரியம் தந்தது. அதோடு தன் மீதான தன்னம்பிக்கையையும் அது வளர்த்தது.

கமலின் கடின முயற்சி அவருக்கு படங்களை தேடித்தர, அவரை நடிப்பின் பல பரிமாணங்களுக்கு கொண்டு செல்ல ஒரு பாலசந்தர் அமைய, கமலின் நடிப்பு வட்டம் விசாலமானது. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று கமல் வளர்ந்த நேரத்தில் தேவர் பிலிம்சின் “தாயில்லாமல் நானில்லை” படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

ஆனால் இந்த கால கட்டத்துக்குள் தேவர் காலமாகிவிட்டார். தன் மீது நம்பிக்கை வைத்து `பிளாங்க் செக்’ தந்த தேவரின் நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்க அழைப்பு வந்தபோது, இதைப் பார்த்து மகிழ தேவர் இல்லையே என்ற வருத்தம் கமலுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது.

தேவர் பிலிம்சின் இந்தப் படத்தில் கமல் – ஸ்ரீதேவி இணைந்து நடித்தார்கள். படம் வெற்றி. நூறு நாட்களை கடந்து ஓடியது.

திரைப்பட வரலாறு :(945)
கமலஹாசனின் 100-வது படம் – “ராஜபார்வை
அரசாங்கம் வரி விலக்கு அளித்தது

கமலஹாசனின் 100-வது படமான “ராஜபார்வை”யை, அவரே சொந்தமாகத் தயாரித்தார்.

சிறப்பாக அமைந்த இந்தப் படத்துக்கு அரசாங்கம் வரி விலக்கு அளித்தது.

தமிழ்ப்பட உலகில், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய ஹீரோக்கள்தான் அவ்வப்போது சொந்தப்படம் எடுத்தார்கள். பெரும்பாலும் அவை வெற்றிப்படங்களாக அமைந்தன. மற்ற நடிகர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் படத் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. காரணம், அது ரொம்ப “ரிஸ்க்.”

தயாரிப்பு அனுபவம் என்பது சாதாரணமில்லை என்பதை அனுபவித்தவர்களே உணர்ந்து கொள்ள முடியும். படிப்படியாக சினிமாவில் போராடி முன்னணி நாயகர் என்ற நிலைக்கு வந்துவிட்ட கமலஹாசன், நினைத்திருந்தால் மற்ற மொழிகளிலும் நடித்து பிஸியாக இருந்திருக்க முடியும். பணம் குவித்திருக்க முடியும்.

ஆனால் கமல் அதைச் செய்யவில்லை. தனது நூறாவது படத்தை சொந்தமாக தயாரிக்கும் முடிவுக்கு அவர் வந்ததே, அந்த 1980-ம் ஆண்டில் பட உலக அதிசயமாக பேசப்பட்டது.

27 வயது

கமலுக்கு அப்போது 27 வயதுதான். சினிமாவில் நடிப்பு, தொழில் நுட்பம் என்று வளரத் தொடங்கிய நேரத்தில் `தயாரிப்பு என்பது எத்தனை சுமை! வலி நிறைந்தது’ என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார்! ஆனாலும், சுமையாக இருந்தாலும் சுகமான சுமையாக இருந்துவிட்டால் போகட்டும் என்று கமல் நினைத்தார்.

கமலுக்கு அப்போதே, `சினிமாவில் வித்தியாசமான கதைகள் தரவேண்டும்’ என்ற தாகம் இருந்தது. நூறாவது படமாக அவர் உருவாக்கி வைத்திருந்தது பார்வையற்ற ஒருவனின் கதை. அந்த இளைஞனின் வாழ்க்கைச் சுழற்சி, அவனை நேசிக்கும் பெண், சமூகம் என்று புதுக்களம் அமைத்திருந்தார். கதையும் அவரே. திரைக்கதையும் அவர்தான். இந்த வகையில் சினிமாவில் கமலின் முதல் திரைக்கதையும் இதுதான்.

இயக்குனர்

படத்துக்கு யாரை இயக்குனராகப் போடுவது என்ற எண்ணம் கமலின் மனதில் தோன்றியபோது சட்டென அவரது நினைவுக்கு வந்தவர் சிங்கிதம் சீனிவாசராவ். இந்தப் படத்தில் தொடங்கிய கமல் – சிங்கிதம் நட்பில் தான் பின்னாளில் கமல் தயாரித்த சில படங்களுக்கு அவரே இயக்குனர் ஆனார்.

படத்தில் இளையராஜாவின் இசையில் “அந்தி மழை பொழிகிறது” பாடல் வைரமுத்துவின் வைர வரிகளில் ரசிகர்களை பரவசப்படுத்தியது.

வரி விலக்கு

படம் வெளியான முதல் வாரத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. ஆனால் பார்வையற்ற இளைஞனின் உணர்வுகளை கவுரவிக்கும் விதத்தில் தமிழக அரசு படத்துக்கு வரி விலக்கு அளித்தது. இதன் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளை நிறைக்கத் தொடங்கினார்கள். படம் நூறு நாள் ஓடி வெற்றி பெற்றது.

இந்தப்படம் `நேன்சி’ என்ற பெயரில் மலையாளத்தில் `டப்’ செய்யப்பட்டது.

கடல் மீன்கள்

“கல்யாணராமன்”, “மீண்டும் கோகிலா” படங்கள் மூலம் ரசிகர்களுக்கு புதுவித கமலை தந்த டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன், கடல் பின்னணியில் “அப்பா-மகன்” கதையை உருவாக்கி வைத்திருந்தார். இளைஞனாகவே பார்த்த கமலை வயதான அப்பா கேரக்டரிலும் நடிக்க வைத்தார், ரங்கராஜன். அந்தப்படமே “கடல் மீன்கள்.”

படத்தில் கமலுக்கு ஜோடி சுஜாதா.

டைரக்டர் ஷங்கர் பின்னாளில் இயக்கி வெற்றி கண்ட “இந்தியன்” படத்திலும் கமல் அப்பா – மகன் வேடங்களில் நடித்தார். அப்படியொரு அப்பா கேரக்டரை ஷங்கர் உருவாக்க, அதற்கு முன்னோடியாக இருந்தது கடல் மீன்களில் வந்த `அப்பா கமல்’ கேரக்டர்தான்.

“கடல் மீன்கள்” அப்பா கேரக்டரில் நடிக்க கமல் ரொம்பவே சிரத்தை எடுத்துக்கொண்டார். `அப்பா’ மேக்கப் போட 2 மணி நேரம் ஆனது. அந்த மேக்கப்
3 மணி நேரம்தான் தாங்கும். அதுவும் படப்பிடிப்பு முழுவதும் கடல் பின்னணியில், கடலுக்குள் நடந்ததால் உப்புத்தண்ணீர் பட்டு சீக்கிரமாய் மேக்கப் கலைந்து விடும் அபாயமும் இருந்தது.

இந்த அப்பா மேக்கப் போட்டு முடித்து அதை கலைக்கும் வரை கமலால் எதுவும் சாப்பிட முடியாது.

அதிகபட்சமாக தாகத்துக்கு ஜுஸ் ஏதாவது பருகிக் கொள்ளலாம். அவ்வளவுதான். என்றாலும் கேரக்டர் மீதான ஈர்ப்பில் சிரமங்களை கருதாமல் இந்த கேரக்டரில் நடித்தார், கமல்.

வயிற்று வலி

இதோடு இன்னொரு கஷ்டத்தையும் இந்த பட சமயத்தில் கமல் அனுபவித்தார். கடலுக்குள் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கமலுக்கு `அல்சர்’ பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் வயிற்று வலியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நேரம் வயிற்று வலி அதிகமாகி துடித்துப்போகும் கமல், தன் வலி பற்றி மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடுவதில்லை.

நடுக்கடலில்

“பொதுவாக அல்சர் நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு `சட் சட்’டென கோபம் வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நடிப்பைத் தொடர்ந்தார். `அல்சர்’ வேதனையை முகத்தில் அவர் பிரதிபலித்து ஒருபோதும் நான் பார்த்ததில்லை” என்கிறார், படத்தின் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன்.

இந்தப்படத்தில் கடலுக்குள் எடுத்த ஒரு காட்சியின்போது நடந்த சம்பவம் பற்றி இவர் சொன்ன தகவல் இன்னும் ஆச்சரியமானது. ஒரு முறை படகு நடுக்கடல் வரை போய்விட்டது. எப்படி கரைக்கு வருவது என்று தெரியாமல் படகில் இருந்தவர்கள் தவித்துக் கொண்டிருக்க, கமலோ நடுக்கடலில் படகை ஆட்டி, குலுக்கி சுஜாதாவை பயமுறுத்திக் கொண்டிருந்தார். சுஜாதாதான் ரொம்பவே பயந்து நடுங்கினார்.

கரை சேருவோமா என்று மற்றவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில், எப்படி இப்படி எந்தவித பயமுமின்றி உங்களால் இருக்க முடிகிறது?” என்று கமலைக் கேட்டால், “கரைக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு ஏன் தேவையில்லாத பயம்?” என்றிருக்கிறார், கமல். இந்த வகையில் “உலக நாயகன்” அப்போதே தைரிய நாயகனாகவும் இருந்தார்.

படத்தில் இளையராஜா இசையில் “தாலாட்டுதே வானம்” என்ற பாடல் காட்சி சுகராகம். இந்த பாடல் காட்சி மட்டும் கடலுக்குள் 7 நாட்கள் படமாக்கப்பட்டது.
திரைப்பட வரலாறு 947
பாலுமகேந்திராவின் “மூன்றாம் பிறை”
கமல் தேசிய விருது பெற்றார்

பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் உருவான “மூன்றாம் பிறை”யில் பிரமாதமாக நடித்து தேசிய விருது பெற்றார், கமலஹாசன்.

ஒளிப்பதிவாளராக தன் கலை வாழ்க்கையைத் தொடங்கிய பாலுமகேந்திரா, 1977-ம் ஆண்டில் “கோகிலா” என்ற கன்னடப்படத்தை இயக்கி டைரக்ஷன் துறையிலும் முத்திரை பதித்தார்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கமலஹாசன். நாயகி ஷோபா. மற்றும் ரோஜா ரமணி, மோகன் ஆகியோரும் நடித்தனர்.

1969-ம் ஆண்டு புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்கு பயின்று வந்தபோதே, பாலுமகேந்திராவின் மனதில் “கோகிலா” கதை உருவாகி விட்டது.

ஒரு விமானப் பயணத்தின்போது, “கோகிலா” கதையை கமலிடம் பாலுமகேந்திரா கூறினார். அப்போதே கமலுக்கு கதையின் மீது ஈர்ப்பு ஏற்பட, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ரோஜா ரமணி நடித்த கேரக்டரில் முதலில் நடிகை சில்க் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் ரோஜாமணியே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24 நாட்களில் உருவான படம்

24 நாட்களில் 26 பிலிம் ரோல்களில் படத்தை குறித்த நேரத்திலும் சிக்கனமாகவும் எடுத்து முடித்திருந்தார், பாலுமகேந்திரா.

“கலர்ப்படங்கள்” அவ்வளவாக வராத காலம் என்பதால் இந்தப் படத்தையும் கறுப்பு – வெள்ளையில்தான் ஒளிப்பதிவு செய்தார், பாலுமகேந்திரா.

அந்த ஆண்டில் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது. அதோடு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பாலு மகேந்திரா பெற்றார்.

இந்தப்படம் கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் கன்னட மொழியிலேயே வெளியிடப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் திரையிடப்பட்ட எமரால்டு தியேட்டரில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியது.

இந்த சமயத்தில்தான் கே.பாலசந்தர் டைரக்ஷனில் கமல் நடித்த “மரோசரித்ரா” தெலுங்குப்படம் சென்னை சபையர் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரே வளாகத்தில் இருந்த 2 தியேட்டர்களில் கமல் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பேசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

“கோகிலா”வுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கடந்த 28 வருடங்களாக எந்த கன்னடப்படமும் இதுபோன்ற வெற்றியைக் கண்டதில்லை என்கிறார், இந்தப்படத்தின் உரிமையை வாங்கிய ஆர்.ஜி.வெங்கடேஷ்.

“கோகிலா”வுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து பாலுமகேந்திரா தமிழில் “அழியாத கோலங்கள்” படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியபோது கமல் அவரை சந்தித்தார். “உங்கள் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப்படத்தில் நான் இல்லாமலா? நானும் இருக்கிறேன்” என்று உரிமை எடுத்துக்கொண்ட கமல், படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். “நண்பர்களுக்கு கமல் சார் கொடுக்கும் முக்கியத்துவம் இது” என்கிறார், டைரக்டர் பாலுமகேந்திரா. இந்தப்படம் வெற்றி விழாவையும் கடந்து 26 வாரங்கள் ஓடியது.

மூன்றாம் பிறை
இப்படி தனது படத்துக்கு ஒரு “கெஸ்ட்ரோல்” மூலம் மரியாதை கொடுத்த கமலுக்காக பாலு மகேந்திரா உருவாக்கிய கதைதான் “மூன்றாம் பிறை.” கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். படம் 329 நாள் ஓடி வெற்றி பெற்றது.

அதோடு இந்தப்படத்தை “சத்மா” என்ற பெயரில் கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் உருவாக்கினார். இதுவும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.

இந்தப்படம் மூலம் கமலுக்கு இந்தியிலும் “பிரமிக்க வைக்கும் நடிகர்” என்ற பெயர் கிடைத்தது.

தேசிய விருது

“மூன்றாம் பிறை” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, 1982-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். அகில இந்திய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பாலு மகேந்திராவுக்கு கிடைத்தது.

படம் முழுக்க நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீதேவிக்குத்தான் இருந்தது. விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட 18 வயதுப்பெண், 10 வயது சிறுமியின் குணநலன் கொண்ட பெண்ணாக மாற, அவரை `குழந்தை’ போல் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கமலுக்கு வந்து சேர்கிறது. `குழந்தைக்குணம்’ கொண்ட ஸ்ரீதேவிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத கேரக்டரில் கமலும் ஜொலித்தார்.

முடிவில் ஸ்ரீதேவிக்கு மன நிலை சரியாகிவிட, இடைப்பட்ட நாட்களில் தன்னை பாதுகாத்த, போஷித்த, உயிரையே வைத்திருந்த கமலை முழுவதுமாக மறந்து விடுகிறார். கமல் பலவிதங்களில் நினைவூட்டிப் பார்த்தும் அவர் நினைவு வளையத்துக்குள் கமல் வரவே இல்லை. கடைசியாய் ஸ்ரீதேவிக்கு பிடித்த `குட்டிகரணம்’ கூட அடித்து நினைவூட்ட முயலும் கமலை “யாரோ பிச்சைக்காரன் பாவம்” என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் ஸ்ரீதேவி, அவருக்கு கொஞ்சம் சில்லரைக் காசை போட்டு விட்டு ரெயிலில் தன் சொந்த ஊருக்குப் பயணிக்கிறார்.

கிளைமாக்சில் தன்னை யார் என்று நிரூபிக்க, கமல் படும் அந்த 5 நிமிட வேதனைகள்தான் நடிப்பில் அவருக்கு தேசிய விருதை தேடித்தந்தது.

இந்தப்படத்தில் நடிகை சில்க் சுமிதாவும் இருந்தார். தனது அதிகபட்ச கவர்ச்சியால் தமிழ்த் திரையுலகை ஆட்டி வைத்திருந்த சில்க், இந்தப் படத்திலும் தனக்கான காட்சிகளில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை. கமலுடன் சேர்ந்து “பொன்மேனி உருகுதே” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் காட்சியும் ஒரு காரணமாக அமைந்தது.

மிகுந்த திறமையுடன் பாலு மகேந்திரா உருவாக்கிய “மூன்றாம் பிறை”, ரசிகர்கள் கண்களில் பூரண நிலவாய் இன்றும் ஒளிவிடுகிறது.

சவால்

நடிகர் பாலாஜி அப்போது தயாரிப்பாளராகவும் மாறி படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜியின் “தங்கை” படத்தில் தொடங்கிய அவரது தயாரிப்பு, தொடர்ந்து சிவாஜி படங்களாக உருவானது. அதைத் தொடர்ந்து ரஜினி, கமல் படங்களைத் தயாரித்தார். கமலை வைத்து அவர் தயாரித்த முதல் படம் “சவால்.”

பாலாஜி அப்போது இந்தியில் வெற்றி பெறும் படங்களை தமிழில் “ரீமேக்” செய்து வந்தார். இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற “ஹாத்தி கீ சபாய்” என்ற படத்தின் உரிமையை விலைக்கு வாங்கி தமிழில் அதை “சவால்” என்ற பெயரில் தயாரித்தார்.

சிறுவயதில் பிரிந்து விடும் அண்ணன் – தம்பி இருவரும் 20 வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேரும் கதை. இந்தக் கதையில் அண்ணன் பெரிய திருடன். தம்பி லோக்கல் திருடன் என்ற கருவை ஜாலியாக கையாண்டிருந்தார்கள். அண்ணனாக ஜெய்சங்கரும், தம்பியாக கமலும் நடித்தார்கள். கமல் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். படத்தில் மனோரமாவுடன் சேர்ந்து கொண்டு கமல் செய்யும் காமெடிக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. படமும் நூறு நாள் ஓடி வெற்றிப்படமானது.

டிக்… டிக்… டிக்

கமலை வைத்து நகரப் பின்னணியில் ஒரு திகில் கதையாக “சிகப்பு ரோஜாக்கள்” படத்தை தந்த டைரக்டர் பாரதிராஜா, மீண்டும் அவரை வைத்து இயக்கிய படம் “டிக் டிக் டிக்.” கமலுக்கு புகைப்படக் கலைஞராக வித்தியாசமான வேடம். அவரது வாழ்வில் சந்திக்கும்

3 இளம் பெண்கள் பின்னணியில் படத்தை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருந்தார், பாரதிராஜா.

இந்தப்படத்தில் பாடல் காட்சிகளை புதுமையாக உருவாக்கி இருந்தார். கமலின் 100 நாள் வெற்றிப் பட்டியலில் இந்தப்படமும் இணைந்து கொண்டது.

எல்லாம் இன்ப மயம்

கமலை வைத்து முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு சிரிப்பு காட்ட வேண்டும் என்பதற்காகவே உருவான படம் “எல்லாம் இன்ப மயம்.” டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய இந்தப்படத்தில் காமெடிக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டிருந்தன. கமல் தும்மினால் பக்கத்தில் உள்ள எல்லாமே பறக்கும் என்கிற கற்பனை, ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.

இந்தப் படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு, கமலின் 11 வகை கெட்அப். கமல் தனது படங்களில் பலவித கெட்அப்களை போட்டு நடிக்க முன்மாதிரியாக அமைந்தது இந்தப் படம்தான்.

இந்தப்படம் “சிலிப்பி சின்னோடு” என்ற பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்யப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் கமலின் கவனம் மற்ற மொழி படங்களில் அதிகம் லயித்திருந்தது. “அரங்கேற்றம்” தமிழ்ப்படத்தை இயக்கிய டைரக்டர் கே.பாலசந்தர் அந்தப்படத்தை `ஆய்னா’ என்ற பெயரில் இந்தியில் இயக்கினார்கள். இதில் கமலுக்கு முக்கிய வேடம். என்றாலும், தமிழில் பெற்ற வெற்றியை இந்திப்படம் அடையவில்லை.

இதைத்தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்ற புதுமைக்கதையான “அவள் ஒரு தொடர்கதை” படத்தை பாலசந்தர் இந்தியில் இயக்கினார். இந்தியில் படத்துக்குப் பெயர் “அந்து லேனி கதா.” தமிழில் ஏற்ற வேடத்தையே இந்தியிலும் கமல் செய்தார். புதுமையான கதையம்சம் கொண்ட இந்தப் படத்துக்கு இந்தி ரசிகர்களும் வரவேற்பு கொடுத்ததில் படம் வெள்ளி விழா கொண்டாடியது.

தப்புத்தாளங்கள்

“அரங்கேற்றம்” படத்தில் ஒரு குடும்பப் பெண் குடும்பத்தை காப்பாற்ற விபசாரியாக மாறுவதை சித்தரித்திருந்தார் பாலசந்தர். இந்தப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை மனதில் வைத்து, முழுக்க விபசார சூழலில் வாழும் ஒரு பெண்ணை மையமாக்கி பாலசந்தர் எடுத்த படம்தான் “தப்புத்தாளங்கள்.” இந்தப்படத்தில் விபசாரப் பெண்ணாக நடிகை சரிதா நடித்தார். படத்தில் ரஜினி ஹீரோ என்றாலும், பாலசந்தருக்காக கவுரவ வேடத்தில் கமல் நடித்தார். சரிகாவைத் தேடி வரும் கஸ்டமராக அவர் நடித்த காட்சி, படத்தில் 5 நிமிடம் மட்டுமே வரும்.

டைரக்டர் துரைக்கு “அடையாளம்” சொல்லும் அளவுக்கு அமைந்த படம் “பசி.” இந்தப்படத்தில் நடித்ததற்காக ஷோபாவுக்கு “ஊர்வசி” விருது கிடைத்தது. டைரக்டர் துரையிடம் இருந்த நல்ல நட்பு காரணமாக படத்தில் ஒரு நடிகராக தோன்றினார் கமல். ஏறக்குறைய இதே கால கட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா தயாரித்த “நட்சத்திரம்” படத்திலும் நடிகராக வந்து போனார். டைரக்டர் தசரதன் இயக்கிய “சரணம் ஐயப்பா”, பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” படங்களிலும் `கெஸ்ட் ரோலில்’ வந்து போனார்.

வாழ்வே மாயம்

தமிழில் மட்டும் இப்படி அடுக்கடுக்காக நாலைந்து படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே கமலை பார்க்க முடிந்ததில் ரசிகர்களுக்கு வருத்தம். “வாழ்வே மாயம்” படம் மூலம் ரசிகர்களின் இந்த வருத்தத்தை வட்டியும் முதலுமாக தீர்த்து வைத்தார், கமல்.

தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டிய “பிரேமாபிஷேகம்” படத்தை தமிழில் பாலாஜி “வாழ்வே மாயம்” என்ற பெயரில் தயாரித்தார். படத்தை இயக்கியவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பின்னாளில் ரஜினி நடித்த “பில்லா” படத்தை இயக்கி, “பில்லா” கிருஷ்ணமூர்த்தியாகவே

ஆகிப்போனார்.படத்தில் கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடி. ஸ்ரீபிரியாவும் இன்னொரு ஜோடியாக நடித்தார். நடிகை அம்பிகா முக்கிய கேரக்டரில் வந்து போனார்.

காதலிக்கு ஒரு வாழ்வு அமையவேண்டும் என்பதற்காக, காதலன் தனக்குள் `காதலை’ புதைத்துக் கொண்ட சோக காவியமாக இப்படம் அமைந்தது. தியாகக் காதலனாக கமலும், காதலியாக ஸ்ரீதேவியும் நடிப்பில் உச்சத்தை தொட்டிருந்தார்கள். புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி உயிர் விடும் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை தனது நடிப்பால் அழவைத்தார் கமல்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் இதே மாதிரியான தியாகக்காதல் பின்னணியில் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய “பயணங்கள் முடிவதில்லை” படம் வெளியானது. அதுவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் காதல் ஜோடிகளாக மோகன்- பூர்ணிமா ஜெயராம் நடித்தார்கள்.

திரைப்பட வரலாறு 949
ஏவி.எம். தயாரிப்பில் கமல் நடித்த பிரமாண்டமான படம் “சகலகலா வல்லவன்”
வெள்ளி விழா கொண்டாடியது

கமலஹாசனை “ஆக்ஷன் ஹீரோ” ஆக்கிய படம் “சகலகலா வல்லவன்.” ஏவி.எம். தயாரித்த பிரமாண்டமான படம்.

முதல் பாதியில் அடிதடிக்கு அஞ்சாத கிராமத்து இளைஞனாகவும், பிற்பகுதியில் நகரத்து இளைஞனாகவும் இரண்டிலுமே நடிப்பில் வித்தியாசப்பட்ட கமல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கதைக்கேற்ப ஏவி.எம்.மின் பிரமாண்டம், படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்து படத்தை `வெள்ளி விழா’ வரை கொண்டு சென்றது.

எஸ்.பி.முத்துராமன்

கமலை 4 வயது சிறுவனாக இருந்தபோதே அறிந்தவர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், அந்த வயதில்தான் களத்தூர் கண்ணம்மா படத்தில் “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாட்டுக்கு நடித்தார் கமல்.

எஸ்.பி.முத்துராமன் அந்தப் படத்தின் இணை இயக்குனராக இருந்தார். படப்பிடிப்பு இல்லாத பெரும்பாலான நேரங்களில் கமலை தன் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு செட்டுக்குள் வலம் வருவார்.

கமல் வளர்ந்து இளைஞனான போதும் இந்த நட்பும், பாசமும் நீடித்தன. இதற்குள் எஸ்.பி.முத்துராமனும் இயக்குனராக பிரபலமானார்.

நடிகர் கமலஹாசனை 11 படங்களில் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

1976-ல் “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது” படம் தொடங்கி “மோகம் முப்பது வருஷம்”, “ஆடுபுலி ஆட்டம்”, “சக்கை போடு போடு ராஜா”, “சகலகலா வல்லவன்”, “தூங்காதே தம்பி தூங்காதே”, “எனக்குள் ஒருவன்”, “உயர்ந்த உள்ளம்”, “ஜப்பானில் கல்யாணராமன்”, “பேர் சொல்லும் பிள்ளை” என 10 படங்களிலும், முத்துராமன் – ஜெயலலிதா நடித்த “அன்புத்தங்கை” படத்தில் கவுரவ வேடத்திலும் கமலை இயக்கியவர்.

கமல் பற்றி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

“களத்தூர் கண்ணம்மா” படத்தில் நடிக்க வந்தபோது அவரது துறுதுறுப்பு என்னைக் கவர்ந்தது. `ஷாட்’ இல்லாத நேரத்தில் மற்றக் குழந்தைகள் மாதிரி ஒரு இடத்தில் சும்மா இருந்து கொண்டிருக்க மாட்டார். எங்காவது ஓடிக்கொண்டிருப்பார்.

ஒருமுறை `ஷாட்’ ரெடியான நேரத்தில் கமலை மட்டும் காணோம். எங்கே போயிருப்பார் என்று தேடினோம். கடைசியில் ஏவி.எம்.மில் உள்ள ஏ.சி. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்து அழைத்து வந்தோம். அதுவும் அவர் தியேட்டருக்குள் உட்கார்ந்து படம் பார்க்கவில்லை. ஆபரேட்டர் அறைக்குப்போய் அங்குள்ள துவாரம் வழியாக திரையில் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்!

அப்போதே சினிமா என்பது அவரை எந்த அளவுக்கு கவர்ந்த விஷயமாகி இருக்கிறது என்பதற்கான முன்னோட்டம்தான் இது.

இதன் பிறகு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படி படங்கள் பார்ப்பது கமலுக்கு வழக்கமாகி விட்டது. சில நேரம் பாடல் காட்சியை பார்த்து விட்டு வருபவர், செட்டில் அந்த பாடல் காட்சியில் வரும் நடனத்தை தனக்குத் தெரிந்த மாதிரி ஆடுவார். படத்துக்காக பயிற்சி எடுத்தவர்கள் ஆடுவது போல் ஆட்டம் அத்தனை அம்சமாய் இருக்கும். `விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று சொல்வது சினிமா விஷயத்தில் கமலுக்கு அப்படியே பொருந்தும்.

பிற்காலத்தில் இவர் சினிமாவில் ஒரு நிலையான இடம் பிடிப்பார் என்பதற்கான அடித்தளமாகத்தான் இதை உணர்ந்தேன். “உலக நாயகன்” என்ற இடம் வரை வந்திருப்பதற்கு சினிமாவை இப்படி தனது சுவாசமாக அவர் மாற்றிக் கொண்டதுதான் காரணம் என்பேன்.

வித்தியாசமான வேடம்

கமலுக்கு அப்போதே வித்தியாசமான முயற்சிகள் பிடிக்கும். புஷ்பா தங்கதுரை எழுதிய வித்தியாசமான முரண்பட்ட கேரக்டர்கள் பின்னணியில் அமைந்த கதையே “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.”

உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரு காதல் ஜோடி. காதலனின் சில மாத தலைமறைவில், காதலி இன்னொருவருக்கு கட்டாய மனைவி ஆகிறாள். காதலியை இன்னொருவனின் மனைவியாக சந்திக்கும் காதலன், “என்னுடன் ஒரே ஒருநாள் `மனைவி’யாக `நடிப்பு வாழ்க்கை’ வாழ்ந்தால் போதும். அந்த ஒருநாளை மனதில் பதித்து மீதி காலத்தை நிம்மதியாக கழித்து விடுவேன்” என்கிறான்.

முன்னாள் காதலி இதற்கு சம்மதிக்கிறாள். அந்த ஒருநாள் காதலனுடன் தங்கி கண்ணியம் கலந்த பாசத்தை கொட்டுகிறாள். அவனை பிரிந்து கணவன் வீட்டுக்கு புறப்பட தயங்குகிறாள். “தனது காதலி இப்போது இன்னொருவனின் மனைவி” என்ற கண்ணோட்டத்தில் அவளை கவுரவம் குலையாமல் திருப்பி அனுப்புகிறான் காதலன்.

தடுமாறும் காதல் உள்ளங்கள் பின்னணியில் `தாலி’யின் புனிதம் சொன்ன இந்த கதையில் கமல் விரும்பியே நடித்தார். கமலின் காதலியாகவும் பின்னர் விஜயகுமாரின் மனைவியாகவும் சுஜாதா நடித்தார்.

என் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்தமுதல் படம் இது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காதலி இடம் மாறியபின் காதலனுக்கு ஏற்படும் தடுமாற்றங்களை நடிப்பில் மிக அற்புதமாக பிரதிபலித்திருந்தார் கமல்.

படத்துக்கு தட்சிணாமூர்த்தி இசை அமைத்திருந்தார். “நல்ல மனம் வாழ்க”, “ஆண்டவன் இல்லா உலகம் எது” போன்ற பாடல்கள் அப்போது ரசிகர்களிடையே பிரபலமாகி இருந்தது.

மோகம் முப்பது வருஷம்

பிரபல எழுத்தாளர் மணியன் “மோகம் முப்பது வருஷம்” என்று ஒரு நாவல் எழுதியிருந்தார். இடம் மாற எண்ணி தடுமாறும் ஒரு காதல் ஜோடிதான் கதையின் முடிச்சு. செக்ஸ் அடிப்படைதான் கதைக்களம்.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு பழகிப்போன நவநாகரீக இளைஞனுக்கு, நாகரீக வாடையே இல்லாத பட்டிக்காட்டுப் பெண் மனைவியாக அமைகிறாள். ஆடம்பரம், பகட்டு என்று உல்லாசம் காணத்துடிக்கும் நாகரீகப் பெண்ணுக்கோ, ஓவியத்தை மட்டுமே நேசிக்கும் கணவன் அமைகிறான்.

வெளிநாட்டு மோக இளைஞனும், நாகரீக யுவதியும் இன்னொருவர் ஜோடி என்றாலும், சந்தர்ப்பம் அவர்களை இணைக்கப் பார்க்கிறது. அவர்கள் `தப்பு’ செய்துவிடுவார்கள் என்கிறவரை சூழ்நிலை கொண்டு நிறுத்தும்போது திடீர் திருப்பத்தில் தங்கள் தவறை உணர்கிறார்கள்.

இந்தக் கதைக்குள் இன்னொரு திருப்பமாய் நாகரீக இளைஞனை ஒருதலையாய் காதலிக்கும் பெண். `நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உன் மூலமாக எனக்கு ஒரு குழந்தை கிடைத்தால் போதும்’ என்கிற அளவுக்கு அவளது காதல் வெறித்தனமாகிறது. இதற்கு மேலும் பொறுக்க முடியாத நிலையில் நாகரீக இளைஞன், “குழந்தைதானே வேணும். தரேன்” என்று சொல்லி ஒரு பொம்மையை கையில் கொடுத்து அவளை அப்புறப்படுத்தி விடுகிறான்.

இதில் நாகரீக இளைஞனாக நடிப்பில் கமல் முற்றிலுமாய் நடிப்பில் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார். கமலை விரும்பும் ஓவியரின் மனைவியாக `படாபட்’ ஜெயலட்சுமியும், ஒருதலைக் காதலியாக ஸ்ரீபிரியாவும் நடித்திருந்தார்கள். கதைக்குள் இத்தனை காதல் களேபரம் இருந்தாலும், கதை `ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தமிழ்ப்பண்பாட்டை விளக்குவதுடன் முடியும்.

கமலின் பட்டிக்காட்டு மனைவியாக சுமித்ராவும், ஓவியராக விஜயகுமாரும் நடித்தார்கள்.

ஆடுபுலி ஆட்டம்

அடுத்து நான் இயக்கிய “ஆடுபுலி ஆட்டம்” படத்தில் கமலுடன் ரஜினியும் நடித்தார். ரஜினி இதில் வில்லன்.

ரஜினி எனது டைரக்ஷனில் “புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படம் வெளிவந்த நேரத்தில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட `ஆடுபுலி ஆட்டம்’ படத்தில் வில்லன் கேரக்டரில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்தார்.

ஹீரோ அந்தஸ்தை அடைந்தவர்கள் அடுத்து `வில்லன்’ கேரக்டர்களை ஒப்புக்கொள்வதில்லை. எங்கள் ïனிட் மீதான அன்பிலும், நண்பர் கமல் படம் என்ற உரிமையிலும் ரஜினி `வில்லன்’ வேடம் பண்ண ஒப்புக்கொண்டார்.

சகலகலா வல்லவன்

சினிமாத்துறையின் சகல விஷயங்களிலும் கமல் சகலகலா வல்லவன் என்பது தெரியும். இதை சினிமா உலகமும் தெரிந்து கொண்ட நேரத்தில், ஏவி.எம். அவரை வைத்து எடுத்த படமே “சகலகலா வல்லவன்.” இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நடிப்பு, நடனம், சண்டை, தொழில் நுட்பம் என சகல துறைகள் பற்றிய அறிவிலும் சகலகலா வல்லவரான கமலுடன் பணியாற்றுவதே பரம சுகம். அதோடு கமலை சகலகலைகளிலும் வல்லவனாகவே வெளிப்படுத்தும் கதையும் அமைந்தது. கதாசிரியர் பஞ்சு அருணாசலம், கமலுக்காகவே இந்தக் கதையை உருவாக்கினார்.

இந்தப் படத்தின் “ஹேப்பி நிï இயர்” பாட்டு, அதற்கான செட் பிரமாண்டம், கமலின் அற்புத நடனம் எல்லாமே ரசிகர்களை பிரமிப்பாக உணர வைத்தது. இந்தப்படம் வெளிவந்த பிறகு வந்த ஒவ்வொரு புத்தாண்டின் முதல் நாளிலும் சின்னத்திரைகளில் இந்தப்பாடலை ஒளிபரப்புவார்கள். கடந்த 26 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

மோட்டார் சைக்கிளில் பெண்

இந்த பாடல் காட்சி, கமல் ஒரு மோட்டார் சைக்கிளில் அரங்கில் இருந்து புறப்படுவது போல் தொடங்கும். மோட்டார் சைக்கிளுடன் கமல் தயாராக இருந்தார். பாடலுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜா கமலிடம், “மோட்டார் சைக்கிள் ஹாண்ட் பாரில் ஒரு பெண்ணை தூக்கி வைத்து போவது போல் செய்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

கமல் எப்போதுமே புலிïர் சரோஜாவை `மாமியாரே’ என்றுதான் அழைப்பார். அவரும் `மருமகனே’ என்பார். புலிïர் சரோஜா இப்படி சொன்னதும், “சரி மாமியாரே” என்றவர், ஷோபனா என்ற நடனப் பெண்ணை மோட்டார் சைக்கிளின் ஹாண்ட்பாரில் உட்கார வைத்து மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து செட் பூராவும் ஒரு ரவுண்டு அடித்தார்.

எதிலும் “முடியுமா, முடியாதா?” என்ற பார்வை அவருக்கில்லை. “முடியாததையும் முயன்றால் முடிக்கலாம்” என்பதே அவரது பாலிசியாக இருந்தது. ஹாண்ட்பாரில் முகத்துக்கு முகம் பார்க்கிற மாதிரி ஒரு பெண்ணை உட்கார வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டுவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கானது. என்றாலும் அதை கொஞ்சமும் தயங்காமல் செய்ய முன்வரும் குணம் கமலிடம் இருந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தீப்பற்றி எரிகிற வீட்டுக்குள் புகுந்து ரிஸ்க் எடுத்து நடித்த கமல் கொஞ்ச நேரம் எங்களை பதைபதைக்க வைத்த சம்பவமும் நடந்தது.”

திரைப்பட வரலாறு :(951)
நஷ்டம் அடைந்த பட அதிபருக்கு உதவி
சம்பளம் வாங்காமல் நடித்தார், கமல்
அடமானம் வைத்த வீட்டையும் மீட்டுக் கொடுத்தார்

பட அதிபரும், டைரக்டருமான ஜி.என்.ரங்கராஜன் நஷ்டப்பட்டபோது, சம்பளம் வாங்காமல் ஒரு படத்தை நடித்துக் கொடுத்தார், கமலஹாசன். அடமானம் வைக்கப்பட்ட வீட்டையும் மீட்டுக் கொடுத்தார்.

இந்தியில் வெள்ளி விழா

1982-ல் கமல் நடித்த “சகலகலா வல்லவன்” படம் வெள்ளி விழா கொண்டாடியபோது, அவர் இந்தியில் நடித்த `யேதோ சுமால் ஹோகயா’ என்ற படமும் வெள்ளி விழா படமானது. இது, தமிழில் டி.என்.பாலு இயக்கிய “சட்டம் என் கையில்” படத்தின் ரீமேக் ஆகும். இதே படம் இதே ஆண்டின் முற்பகுதியில் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் மலையாளத்தில் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை.

ஒரு கதை தமிழில் பெற்ற வெற்றியையும் தாண்டி இந்தியில் ஓடுகிறது. அதே கதை, மலையாளத்தில் `சுமார்’ பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொழிக்கு மொழி சினிமா ரசிகர்களின் ரசனை மாறுபடுவதே இதற்குக் காரணம்.

இதே 1982-ல் கமல் இந்தியில் நடித்த “சனம் தேரி கசம்” படமும் வெள்ளி விழா காண்கிறது.

இப்படி ஒரே ஆண்டில் இந்தியில் 2 வெள்ளி விழா படங்கள் கொடுத்து இந்திப்பட முன்னணி நாயகர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த சாதனையையும் செய்தார், கமல்.

ராணித்தேனீ

சகலகலாவல்லவனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, கமலின் அன்புக்குரிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் “ராணித்தேனீ” என்ற படத்தை தயாரித்து இயக்கினார். புதுமுகங்கள் நடித்த இந்தப் படத்தில், கமல் நட்புக்காக கவுரவ வேடம் ஏற்றிருந்தார்.

இந்தப் படத்தில் முதலில் கமல் நடிப்பதாக இல்லை. அவர் நடிக்க நேர்ந்தது எப்படி என்பது குறித்து டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் கூறியதாவது:-

“தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கியதால், சொந்தப்படம் எடுக்கலாம் என்று எண்ணினேன். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க “ராணித்தேனீ” என்றொரு படத்தை இயக்கி தயாரித்தேன்.

சிக்கல்

படம் முடிந்த பிறகுதான் எத்தனை பெரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறேன் என்பது புரிந்தது. படத்தை வினியோகஸ்தர்களுக்கு போட்டுக்காட்டினேன். அவர்கள், படத்தை வாங்கத் தயங்கினார்கள். “கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் “ஸ்டார் வேல்ï” இல்லை என்பதால் வாங்க யோசனையாக இருக்கு” என்று சொல்லி நழுவிவிட்டார்கள்.

இதனால், என் மொத்தப்பணமும் முடங்கி விட்டது. செய்வதறியாமல் திகைத்தேன்.

இந்த விஷயம் எப்படியோ கமலுக்குத் தெரிந்திருக்கிறது. என்னைத் தொடர்பு கொண்டவர், “அண்ணா! நீங்கள் உங்கள் மனசில் என்னதான் நினைச்சிட்டிருக்கீங்க? படம் வியாபாரம் ஆகலைன்னா அதுபற்றி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார்.

அன்றைக்கு அவரை சந்தித்தேன். முழு கதையையும் கேட்டுத் தெரிந்து கொண்டவர், “படத்தின் நான் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித்தரேன். படம் முழுக்க அந்த கேரக்டர் வருகிற மாதிரி செய்துவிடலாம்” என்றார்.

அப்படி அவர் உருவாக்கியதுதான் படத்தில் இடம் பெற்ற குடிகார `டோபி’ வேடம். படத்துக்கு 3 நாள் கால்ஷீட் கொடுத்தார். இந்த 3 நாட்களில் 3 ஆயிரம் அடி படம் எடுக்க கடும் ஒத்துழைப்பு கொடுத்தார். அதில் ஒரு பாடல் காட்சியும் உண்டு.

அவரது போர்ஷனை படத்தில் எந்தெந்த இடங்களில் சேர்க்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். அப்படி சேர்த்து படத்தை பார்த்தபோது, கமலுக்கு `கெஸ்ட் ரோல்’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள், அந்த அளவுக்கு படம் முழுக்க வந்தார்.

படம் வாங்க போட்டி

இதற்குப்பிறகு படத்தை வியாபாரம் செய்ய எந்த சிரமமும் இல்லை. முதலில் வாங்கத் தயங்கியவர்களே “படத்தை எனக்குத்தான் தரவேண்டும்” என்று ஏரியா வாரியாக கேட்டு வாங்கிக்கொண்டு போனார்கள்.

படம் ரிலீசாகி எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், நான் போட்ட முதல் திரும்பக் கிடைத்துவிட்டது.

மூன்று நாள் நடிப்புக்கு கமலுக்கு சம்பளம் தரவில்லை. நானும் அவரிடம் அப்போது கேட்கவில்லை. கமலும் அதுபற்றிப் பேசவில்லை. ஆனாலும், படம் வியாபாரம் ஆன பிறகு அதுபற்றி பேசாமல் இருக்க முடியுமா? கமலை சந்தித்து, “உங்க ஒத்துழைப்பால் பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன். உங்கள் நடிப்புக்கு சம்பளம்?” என்று ஆரம்பித்தேன்.

இப்போது கமல் என்னை கோபமாக ஒரு பார்வை பார்த்தார். “நான் உங்களைக் கேட்டேனா? பேசாமல் வேறு வேலையைப் பாருங்கள்” என்றார். தனக்கு வேண்டியவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற கமலின் கொள்கையால் “ராணித்தேனீ” என்னை கொட்டிவிடாமல் தப்பித்தேன்.

மகராசன்

என்றாலும் “ராணித்தேனீ” சரியாகப் போகவில்லை என்பதையும், அதில் எனக்கு எவ்வளவு நஷ்டம் என்பதையும் நான் சொல்லாமலே தெரிந்து கொண்ட கமல், என்னை அழைத்து “நான் முழுசாக உங்களுக்கு ஒரு படத்தில் நடித்து தருகிறேன். அதற்கான கதை தயார் செய்யுங்கள்” என்றார்.

உடனே அவருக்காக நான் உருவாக்கிய கதைதான் “மகராசன்.” கமல் இதில் கறிக்கடை வைத்திருப்பவராக நடித்தார். கதையை தெரிந்து கொண்டவர் அன்றைக்கிருந்த `பிஸி’யிலும் எனக்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தார்.

கதைக்குள் ஈடுபாடு வந்துவிட்டால் கமல், நடிக்கும் நாட்கள் பற்றி கவலைப்பட மாட்டார். இந்த வகையில் அந்த `கறிக்கடை’ கேரக்டருடன் ஒன்றியவர் மறுபடியும் 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். அந்த 5 நாட்கள் தாண்டியும் அவரது கேரக்டர் ஈர்ப்பில் மேலும் 10 நாள் கொடுத்தார். 20 நாட்களில் படம் முடிந்தது. அவருக்கும் திருப்தி. இந்தப் படத்திற்கும் அவர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார்.

படம் நல்ல விலைக்குப் போனது. இது தெரிந்ததும் என்னை அழைத்த கமல், “எவ்வளவு லாபம் வந்திருக்கிறது அண்ணா?” என்று கேட்டார். சொன்னேன். “பழைய கடன்களை இந்த லாபத்தில் அடைத்து விடலாம் இல்லையா?” என்று கேட்டார். “அடைத்து விடலாம்” என்றேன்.

“அப்படியானால், முந்தின படத்துக்கு உங்கள் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்கியிருக்கிறீர்களே, அதையும் அடைத்து விடமுடியுமில்லையா?” என்று கேட்டார்.

எனக்கு `திக்’ என்றது. `வீட்டை அடமானம் வைத்து சொந்தப்படம் எடுத்ததை நான் அவரிடம் சொல்லவே இலை. அவராக யார் மூலமோ எப்படியோ தெரிந்து கொண்டு, என் வீட்டை மீட்பதற்காகவே எனக்கு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பது புரிந்ததும்

திரைப்பட வரலாறு 953
கமல் – ரேவதி இணைந்து நடித்த
பாரதிராஜாவின் “ஒரு கைதியின் டைரி”

பாரதிராஜா இயக்கிய “ஒரு கைதியின் டைரி” படத்தில் கமலஹாசனும் ரேவதியும் இணைந்து நடித்தனர்.

இந்தப்படம், பிறகு இந்தியிலும் எடுக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் 5 இந்திப்படங்கள்

இந்திப் படங்களிலும் நடித்து வந்த கமலுக்கு, 1984-ம் ஆண்டு முக்கியமானது.

அந்த ஆண்டில் கமல் நடிப்பில் “ஏ தேஷ்”, “ஏக் நை பஹெலி”, “யாத்கார்”, “ராஜ்திலக்”, “கரீஷ்மா” என்று 5 இந்திப்படங்கள் வெளியாயின!

தமிழில் வெற்றி பெற்ற “அபூர்வ ராகங்கள்” படத்தை இந்தியில் “ஏக் நை பஹெலி” என்ற பெயரில் இயக்கினார், பாலசந்தர்.

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “டிக் டிக் டிக்” படத்தை இந்தியில் “கரீஷ்மா” என்ற பெயரில் ஐ.வி.சசி இயக்கினார். 5 இந்திப் படங்களிலும் “யாத்கார்” படம் மட்டுமே 100 நாட்களை தாண்டியது.

எனக்குள் ஒருவன்

இந்த ஆண்டில், அவர் தமிழில் நடித்தது ஒரே ஒரு படம்தான்! அதுதான் கவிதாலயா தயாரிப்பான “எனக்குள் ஒருவன்.” இது, மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட கதை. தமிழில் மறுபிறவி பின்னணியில் வந்த கதைகள் அவ்வளவாக மக்களிடம் எடுபடவில்லை. அந்த வகையில் இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

நேபாளி இளைஞன் ஒருவனுக்கு திடுமென ஏற்படும் முற்பிறவி ஞாபக பின்னணியில் கதை சொல்லியிருந்தார், எஸ்.பி.முத்துராமன்.

நடிகை ஷோபனா இந்தப்படம் மூலம்தான் சினிமாவுக்கு அறிமுகமானார். சத்யராஜ் வில்லனாக நடித்தார்.

இந்த படத்தில் `நேபாளி’யாக மாற கமல் எடுத்துக்கொண்ட சிரத்தை பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

“நேபாளிகளின் முகத்தோற்றம் நம்மில் இருந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கும். நேபாளியாகவே மாற விரும்பிய கமல், கண் இமைகளை இழுத்து வைத்து ஒட்டி இருந்தார். இப்படி `மேக்கப்’ போட்டிருக்கும் நேரங்களில் முகத்தில் `வலி’ இருந்து கொண்டிருக்கும்.

நாங்கள் அவரிடம் “கமல் வலிக்குமே” என்றால், “வலிக்கலை சார்” என்று தெரிந்தே பொய் சொல்வார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில், நேபாளி மேக்கப்பில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம். கேரக்டர் வித்தியாசப்படுவதற்காக தானும் வித்தியாச தோற்றத்துக்கு மாறவேண்டும் என்றால் எந்த மாதிரியான வலியையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இருந்தது. இந்த மாதிரி வலியுடன் கூடிய மேக்கப்புகள் சினிமாவுக்காக அவர் செய்கிற யாகம் என்பேன். சினிமாவைப் பொறுத்தமட்டில் அவருக்கு ஒவ்வொரு வேஷமும் ஒரு பிறப்பு மாதிரி. படத்தில் `நேபாளி’ கமல் ஜோடியாக ஸ்ரீபிரியாவும், இன்னொரு கமல் ஜோடியாக ஷோபனாவும் நடித்தார்கள். முழுப்படத்தையும் டார்ஜிலிங்கில் எடுத்தோம்.

சண்டைக்காட்சி

கிளைமாக்ஸ் சண்டையை இரண்டு மலைகளுக்கு மத்தியில் `விஞ்ச்’சை போக வைத்து அதில் எடுத்தோம். விஞ்ச்சில் இருந்து ஹீரோவை வில்லன் கீழே தள்ளி கொல்லப்பார்க்கிற மாதிரியான காட்சி. 250 அடி உயர மலையின் உச்சியில் `விஞ்ச்’ போக, அதில் தொங்கிக் கொண்டு சண்டைக்காட்சி என்பது எத்தனை ரிஸ்க் என்பது தெரியும். கொஞ்சம் தவறினாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை.

அதனால் ஆரம்பத்திலேயே கமலிடம், “கமல்! குளோசப் காட்சியில் உங்களை படம் பிடித்துக் கொள்கிறேன். 250 அடி உயர ரிஸ்க் ஷாட் என்பதால் `டூப்’ போட்டு எடுத்துக் கொள்கிறேன்” என்றேன்.

கமலும் “சரி சார்” என்று கேட்டுக்கொண்டார்.

படத்துக்கு சூப்பர் சுப்பராயன்தான் ஸ்டண்ட் மாஸ்டர். ஒரு கேமரா குளோசப் ஷாட் எடுக்கவும், இன்னொரு கேமரா லாங் ஷாட் காட்சிகளை படம் பிடிக்கவும் வைக்கப்பட்டன. இரண்டு மலைகளுக்கும் இடையே 250 அடி உயர கம்பியில் `விஞ்ச்’சில் தொங்கியபடி `டூப்’ நடிகர் வருகிறார். கேமரா வழியாக பார்க்கிறேன். அதிர்ச்சி அடைகிறேன். விஞ்ச்சில் தொங்கியபடி வந்தது டூப் நடிகர் அல்ல; கமலேதான்!

எனக்கு உயிரே போய்விட்டது. நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஸ்டண்ட் மாஸ்டரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்து இப்படி `ரிஸ்க்’ காட்சிக்கு தயாராகி விட்டதை பின்னர் தெரிந்து கொண்டேன். காட்சி முடிந்து கீழே பத்திரமாக வந்து சேர்ந்த பிறகு கமல் எனக்கு தைரியம் சொன்னது தனிக்கதை.

ஆயிரம் குடைகள்

டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்துக்கு நான் இந்தப்படத்தை இயக்கினேன். படத்தில் “கொட்டட்டும் வானம்” என்ற மழைப் பாடலை ஆயிரம் குடைகளுக்கு மத்தியில் படமாக்கினேன். கிளைமாக்சில் நேபாளி கமலுக்கு பழைய நினைவுகள் வரும் காட்சிகளில் ஏற்படும் பரபரப்பு சம்பவங்களை எடிட்டர் விட்டல் சார் அவருக்கே உரிய பாணியில் `எடிட்’ செய்திருந்தார். கதை புதுமை. சண்டைக்காட்சி புதுமை. பாடல்களில் புதுமை என இருந்தும் “மறுபிறவி” கதை என்ற காரணம் படத்தின் ஓட்டத்துக்கு `பிரேக்’ ஆக அமைந்து விட்டது.”

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

ஒரு கைதியின் டைரி

கமலை வைத்து வித்தியாசமான நகரப் பின்னணியில் “சிகப்பு ரோஜாக்கள்”, “டிக் டிக் டிக்” படங்களைத் தந்த பாரதிராஜா, சிலகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கமலுடன் இணைந்து தந்த படம், “ஒரு கைதியின் டைரி.”

டைரக்டர் பாக்யராஜின் திரைக்கதையை தனக்கே உரிய ஸ்டைலில் காட்சியாக்கினார் பாரதிராஜா. படத்தை தயாரித்தவரும் அவரே.

படத்தில் கமல் இளைஞன், வயதானவர் என இரு வேடங்களில் தன்னை வித்தியாசப்படுத்தினார். படம் வெற்றி. இந்தப்படம் இந்தியில் அமிதாப் நடிக்க “ஆக்ரி ரஸ்தா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூலை வாரியது.

இந்தியில் அமிதாப்பச்சன் மார்க்கெட்டை ஒரேயடியாக உச்சத்துக்கு கொண்டுபோன படம் என்ற பெருமையும் `ஆக்ரி ரஸ்தா’வுக்கு உண்டு.

தமிழில் இந்தப்படத்துக்கு கிளைமாக்ஸ் வேறு. இந்திக்கு வேறு. அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டதற்காக இந்தியில் வேறு கிளைமாக்ஸ் காட்சியை வைத்தார், டைரக்டர் பாக்யராஜ்.

காக்கி சட்டை

சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான “காக்கி சட்டை”யில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்தார். கமல் அதுவரை போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்ததில்லை. இதுதான் முதல் படம்.

போலீஸ் வேலைக்காக உடற்பயிற்சி மூலம் உடம்பை ஏற்றி வைத்திருக்கும் கமலுக்கு போலீஸ் வேலை கிடைக்காமல் போகிறது. அதனால் போலீஸ் மீதே வெறுப்பாகும் கமலை முறைகேடான தொழில் செய்யும் கும்பல் ஒன்று தங்கள் வலைக்குள் இழுத்துப் போடுகிறது.

அந்தக் கும்பலின் முகமூடியை கமல் கிழித்தெறியும்போது தான் அவர் “ரகசிய போலீஸ் அதிகாரி” என்ற உண்மை தெரியவருகிறது. ராஜசேகர் இயக்கிய இந்தப்படம், மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ் “தகடு தகடு” வசனம் பேசி, புகழின் உச்சிக்குப் போனார்.

புன்னகை மன்னன்

டைரக்டர் கே.பாலசந்தர் அவ்வப்போது வேறு நடிகர்களின் படங்களை இயக்கி வந்தாலும் கமல் மீதும் ஒரு பார்வை வைத்திருந்தார். கமலுக்காக அவர் உருவாக்கி, தயாரித்து இயக்கிய படம் “புன்னகை மன்னன்.”

“ஒருமுறை காதலில் தோற்றவன், அவனிடம் பழக நேரும் இன்னொரு பெண்ணால் ஈர்க்கப்படுவானா?” என்ற கேள்வியை திரைக்கதையாக்கி அதற்கு விடையும் தந்திருந்தார் கே.பாலசந்தர்.

இந்தப்படத்தில் “சாப்ளின்” என்ற கேரக்டரையும் உருவாக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

படம் வெள்ளி விழா கொண்டாடியது. தெலுங்கில் “டான்ஸ் மாஸ்டர்” என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டு அங்கும் நன்றாக ஓடியது.

பேர் சொல்லும் பிள்ளை

சிறுவயதில் ஏவி.எம். மூலம் வெளிப்பட்ட கமல், நடிப்பில் `பேர் சொல்லும் பிள்ளை’யானார். கமல் நாயகனாக வளர்ந்த நிலையில் தங்கள் நிறுவனத்தின் “பேர் சொல்லும் பிள்ளை”யாக கமலை உணர்ந்த ஏவி.எம். நிறுவனம், அந்தப் பெயரிலேயே கமலை வைத்து ஒரு படம் தயாரித்தது. இந்தப்படத்தை ஏவி.எம்.மின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

“படிக்காத மேதை” படம் இன்றைக்கும் சிவாஜியின் நடிப்புச் சரித்திரம். இந்தப் படத்துக்கு கதை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னாளில் இயக்குனராக உயர்ந்து “இயக்குனர் திலகம்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ஏவி.எம்.முக்காக அவர் இந்தப்படத்தின் கதை வசனத்தை எழுதினார்.

இந்தப்பட அனுபவம் பற்றி எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

“படத்தில் 4 பிள்ளைகளின் அம்மாவாக கே.ஆர்.விஜயா நடித்தார். அவர் பெறாமல் பெற்ற பிள்ளை கமல். அந்த வீட்டின் விசுவாசமிக்க வேலைக்காரனாக இருந்து கொண்டு, குழம்பிக் கிடக்கும் அந்த வீட்டின் நிர்வாகத்தை சீர்படுத்துவார். அப்படியே கே.ஆர்.விஜயாவின் உருப்படாத பிள்ளைகளையும் திருத்துவார். படத்தில் கமலுக்கு ராதிகா ஜோடி. செட்டி நாட்டு பாஷை பேசி ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

படத்தில் கமல் சாப்பாடு பரிமாறிக் கொண்டே நடனமாடுகிற மாதிரி ஒரு புதுமையான நடன பாடல் காட்சி எடுத்தோம். கமல் இந்தக் காட்சியில் தனது நடனத்திறமையோடு நடிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தினார். கமலுடன் ஒரு பாட்டுக்கு ரம்யாகிருஷ்ணன் ஆடினார்.

படத்தில் “அம்மம்மம்மா வந்ததிங்கே சிங்கக்குட்டி” என்ற பாடலை கமலே பாடியிருக்கிறார். மற்றும் “மாடியேறி வாம்மா டிவி பார்க்கலாம்”, “தப்புத்தண்டா பண்ணிடுவோம்”, “விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை” போன்ற பாடல்களும் இளையராஜா இசையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

லாபத்தில் பங்கு

இந்தப்படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை ஏவி.எம்.மும் கமலும் சேர்த்து எங்கள் ïனிட்டுக்கு கொடுத்தார்கள். எங்களின் உண்மைக்கும், கடின உழைப்புக்கும் அவர்கள் அளித்த அங்கீகாரமாக இதை எடுத்துக்கொண்டோம்.

நடிகர் ரஜினி எங்கள் ïனிட்டுக்காகவே “பாண்டியன்” என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார். ஏவி.எம்., கமல் வழங்கிய பணம், ரஜினி கொடுத்த பணம் ஆகியவற்றின் மூலம்தான் இன்றும் எங்கள் ïனிட் நிம்மதியாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.”

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

பேசாத “பேசும் படம்!”

சினிமா உலகில் வித்தியாசமான எந்த முயற்சிக்கும் முன் நிற்பார் கமல். படம் முழுக்க யாரும் பேசாமலே வருகிற ஒரு படம், “பேசும் படம்” என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது, அதில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். கமலுக்கு ஜோடியாக அமலா நடித்தார். கமலின் ஆஸ்தான இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கினார். இதுவும் கமலுக்கு வெள்ளி விழாப் படமானது.

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியில் “புஷ்பக்” என்றும், தெலுங்கு, கன்னட மொழிகளில் “புஷ்பக விமானம்” என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“ராஜபார்வை”, “விக்ரம்” படங்களைத் தொடர்ந்து கமல் மீண்டும் தயாரிப்புக்குள் வந்த படம் “சத்யா.”

இந்தப் படத்தில் சுரேஷ்கிருஷ்ணாவை டைரக்டராக கமல் அறிமுகப்படுத்தினார். வேலையில்லாத ஒரு இளைஞனின் பிரச்சினையை, புதிய கோணத்தில் சொன்ன இந்தப்படம் வெற்றி பெற்றது. படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்து இருந்தார்.

சித்ரா லட்சுமணனின் “சூரசம்ஹாரம்” படத்தில் கமல் நடித்தார்.

பழி வாங்கல் கதையான இதில், கமல் ஜோடியாக ராதிகாவின் தங்கை நிரோஷா நடித்தார். 100 நாட்கள் ஓடிய இந்தப்படம் தெலுங்கில் “போலீஸ் டைரி” என்ற பெயரில் “டப்” செய்யப்பட்டு வெளியானது.

திரைப்பட வரலாறு 955
கமல் நடித்த இந்திப்படங்கள்
50 வாரங்கள் ஓடின

தமிழில் படங்களை தொடர்ந்த நிலையில் இந்தி வாய்ப்புகளையும் ஏற்று நடித்தார், கமல். இப்படி அவர் நடிப்பில் அடுத்தடுத்து வந்த “சாகர்”, “கிராப்தார்” படங்கள் 50 வாரங்கள் ஓடி பரபரப்பு ஏற்படுத்தின.

ரிஷிகபூர், டிம்பிள்

தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது கமலுக்கு தொடர்ந்து இந்திப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தன. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் இந்தியில் கமல் ஒப்புக்கொண்ட படம் “சாகர்.”

கமலுடன் ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள். முக்கோண காதல் கதைதான். டிம்பிளை கமலும், ரிஷிகபூரும் விரும்ப, டிம்பிள் யாரை விரும்புகிறார் என்பதை கடல் பின்னணிக் காட்சிகளில் உருவாக்கியிருந்தார்கள். 50 வாரம் ஓடி, வசூலில் கலக்கிய படம்.

கமல், ரஜினி

இந்த காலகட்டத்தில் ரஜினியும் ஒரு சில இந்திப்படங்களில் நடித்தார். “கிராப்தார்” என்ற இந்திப்படத்தில் கமல் – ரஜினி இருவருமே இணைந்து நடித்தார்கள். படத்தில் அமிதாப்பச்சனும் இருந்தார்.

இந்தியில் 3 ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதென்பது சர்வசாதாரண விஷயம். இந்த 3 ஹீரோக்கள் படமும் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாகி படத்தை 50 வாரம் ஓட வைத்தது.

மனக்கணக்கு

கமலின் நெருங்கிய நண்பர் டைரக்டர் ஆர்.சி.சக்தி. டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் கமல் உதவியாளராக இருக்கும்போதே இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. கமலின் முதல் படத்தை இயக்க முன்வந்தவர் என்ற முறையிலும் டைரக்டர் மீது கமலுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. இப்படி அன்புக்குரிய டைரக்டர் ஆர்.சி.சக்தி “மனக்கணக்கு” என்ற படத்தை விஜயகாந்தை கதாநாயகனாக்கி இயக்கியபோது கமலை கவுரவ வேடத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார். நண்பருக்காக கமலும் அந்த கெஸ்ட் கேரக்டரில் நடித்தார்.

இந்த வகையில் கமல் – விஜயகாந்த் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு.

சிப்பிக்குள் முத்து

கமலை “சாகர சங்கமம்” என்ற தெலுங்குப்படம் மூலம் நடிப்பில் சிகரம் ஏற்றிய டைரக்டர் கே.விஸ்வநாத், மீண்டும் கமலை வைத்து இயக்கிய படமே “சுவாதி முத்யம்.” தமிழில் இது “சிப்பிக்குள் முத்து” என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டது.

படத்தில் கமலுக்கு ஜோடியாக ராதிகா நடித்தார். தெலுங்கில் 200 நாட்கள் ஓடிய இந்தப்படம் தமிழிலும் நூறு நாட்களைத் தொட்டது.

நானும் ஒரு தொழிலாளி

“இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டைரக்டர் ஸ்ரீதரே தயாரிப்பாளராகவும் மாறி கமலை இயக்கிய படம் “நானும் ஒரு தொழிலாளி.” நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் ஸ்ரீதரையும் வெளிப்படுத்தவில்லை; கமலுக்கும் பெயர் கொடுக்கவில்லை.

விக்ரம்

டைரக்டர் ராஜசேகர் அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். அவர் மேல் கமல் பார்வை பட்டபோது, தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க கமல் கேட்டுக்கொண்டார். அந்தப்படமே “விக்ரம்.” எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானக் கதைக்கு ராஜசேகர் “கமர்ஷியல் மசாலா” தடவியும் “விக்ரம்” சொல்லிக் கொள்கிற மாதிரி போகவில்லை. படத்தில் கமலை விரும்பும் பட்டத்து ராணியாக பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்தார்.

காதல் பரிசு

சத்யா மூவிசின் “காக்கி சட்டை” கமலுக்கு அப்படியே பொருந்திப்போய் கிடைத்த வெற்றியில் அடுத்து “காதல் பரிசு” என்ற படத்தை தயாரித்தார்கள். இந்தப்படத்தில் அம்பிகாவும், ராதாவும் ஜோடியாக நடித்தார்கள். டைரக்டர் ஏ.ஜகந்நாதன் படத்தை இயக்கினார். 90 நாட்கள் ஓடி தயாரிப்பு தரப்பை வசூலில் திருப்தி செய்தது இந்தப்படம். தெலுங்கிலும் இந்தப்படம் `டப்’ செய்யப்பட்டது. அங்கே நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலையும் குவித்தது.

டைரக்டர் ஏ.ஜகந்நாதனின் முதல் குரு டைரக்டர் டி.பிரகாஷ்ராவ். இவர் சிவாஜி நடித்த “உத்தமபுத்திரன்”, எம்.ஜி.ஆர். நடித்த “படகோட்டி” போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். தெலுங்கில் `டப்’ செய்யப்பட்ட “காதல் பரிசு” படத்தை பார்த்த டி.பிரகாஷ்ராவ் டைரக்டர் ஜகந்நாதனை போனில் தொடர்பு கொண்டு “படம் நன்றாக இருக்கிறது. நன்றாகவும் போகிறது. என் சிஷ்யன் இயக்கிய படம் என்று என் நண்பர் வட்டாரத்தில் பெருமையாக சொல்லிக்கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதை நினைவு கூர்ந்த டைரக்டர் ஏ.ஜகந்நாதன், “என் குருவுக்கு என்னை வெளிப்படுத்திய படம் என்ற முறையில் இப்போதும் இந்தப்படம் மீது எனக்கு காதல் உண்டு” என்கிறார்.

இந்தப் படத்தை இயக்குவதற்கு முன் ஏற்கனவே 1977-ல் கமலை “குமார விஜயம்” என்ற படத்தில் இயக்கினார் இவர். படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை ஜெயசித்ரா நடித்தார். முழு நீள காமெடி படமாக அமைந்த இந்தப்படம் சென்னை வெலிங்டன் தியேட்டரில் 12 வாரங்களுக்கு மேல் ஓடியது.

இந்தப் படத்தில் கமலை இயக்கிய அனுபவம் குறித்து டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறியதாவது:-

“மலையாளத்தில் வந்த “பாலாயி மதனம்” என்ற படமே தமிழில் “குமார விஜயம்” ஆனது. கமல் அந்த காலகட்டத்தில்தான் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியிருந்தார். “அந்தரங்கம்” போன்ற படங்கள் வரத் தொடங்கியிருந்தன. காட்சிகளை புரிந்து கொண்டு கேரக்டராக மாறிவிடும் வித்தையை அப்போதே கைவரப் பெற்றிருந்தார், கமல். மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளராக இருந்த ஈ.கே.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்தார்.

இவர் அப்போது முருகாலயா ஸ்டூடியோவை “லீசுக்கு” எடுத்து நடத்தி வந்தார். அவர் லீசுக்கு எடுத்த பிறகு அந்த ஸ்டூடியோவில் தயாரான முதல் படம் இதுதான்.

பெண் ரசிகைகள்

முதன் முதலாக இந்தப் படத்துக்கு பெண் ரசிகைகள் அதிக அளவில் வந்தனர். சினிமாவைப் பொறுத்த மட்டில் எந்த ஒரு ஹீரோவுக்கு அதிக பெண் ரசிகைகள் கிடைக்கிறார்களோ, அந்த ஹீரோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடிப்பார். “குமாரவிஜயம்” படத்துக்கு பெண்களிடம் கிடைத்த ஆதரவை வைத்தே, பிற்காலத்தில் கமல் உயர்ந்த நிலையை எட்டுவார் என்று கணித்தேன். என் கணிப்பு இன்று அவரை “தசாவதாரம்” வரை கொண்டு நிறுத்தியிருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான “கண்ணன் என் காதலன்”, “சங்கே முழங்கு” ஆகிய படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றிய நேரத்திலேயே கமலை சந்தித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களுக்கும் நடன அமைப்பு டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன்தான். கமல் அவரிடம் உதவியாளராக இருந்தார்.

பாடல் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக கமல் ஆடிக்காட்டுவார். “சங்கே முழங்கு” படத்தின் ஒரு பாடலுக்கு இப்படி கமல் ஆடிக்காட்டிய நேரத்தில் எம்.ஜி.ஆர். கமலிடம் அக்கறையாக பேசினார். “உன்னை `களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடிகனாக பார்த்தேன். என் “ஆனந்தஜோதி” படத்தில் நீ நடித்தபோது பின்னாளில் பிரபல நடிகனாக வருவாய் என்று கணித்தேன். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக நீ இப்போது நடனமாடிக் கொண்டிருக்கிறாய். நீ நடிப்பில் உருவாக வேண்டியவன். அதற்கான முயற்சிகளைச் செய்யத் தொடங்கிவிடு. உனக்கு எந்த மாதிரியான உதவி தேவைப்பட்டாலும் என்னை வந்து பார்” என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த அக்கறையுடன் கூடிய அறிவுரையே, கமலை மாற்றியது. அதன்பிறகே அவர் டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து நடிப்பிலும் மெருகேறினார். “உலக நாயகன்” என்ற நிலையில் இன்று கமல் வளர்ந்திருக்கிறார். கமலின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை பார்க்கும் அதே நேரத்தில், அன்று அவரை நடிப்பு பக்கமாய் திருப்பிய அண்ணன் எம்.ஜி.ஆர். என் கண்ணில் நிற்கிறார்.”

இவ்வாறு டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறினார்.

திரைப்பட வரலாறு 958
இரட்டை வேடத்தில் புதுமை
“குள்ள அப்பு” வேடத்தில் அசத்தினார், கமல்!

இரட்டை வேடத்தில், புதுமையைப் புகுத்தினார், கமல். ஒரு வேடத்தில் `குள்ள அப்பு’வாக நடித்து, அனைவரையும் பிரமிக்க

வைத்தார்.வித்தியாசமான கேரக்டர்கள் என்றால் கமலுக்கு அப்படியொரு ஈடுபாடு. அதுவரை திரைக்குள் வந்திராத கேரக்டர் ஏதாவது கமலுக்கு தோன்றினாலோ, அல்லது மற்றவர்கள் சொன்னாலோ, அப்போது முதலே அந்த கேரக்டருக்குள் வாழத்தொடங்கி விடுவார். அப்படியொரு கதைதான் கமல் இரட்டை வேடத்தில் நடித்த “அபூர்வ சகோதரர்கள்.”

போலீஸ் அதிகாரி குடும்பம்

கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஒருவர், சமுதாயத்தில் செல்வாக்கு பெற்ற மூன்று சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்துகிறார். அவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது. செல்வாக்கை பயன்படுத்தி ஜெயிலில் இருந்து வெளியே வரும் அவர்கள், போலீஸ் அதிகாரியின் குடும்பத்தை அழித்து பழி தீர்த்துக் கொள்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியைக் கொன்றதோடு அவரது கர்ப்பிணி மனைவியின் வாயிலும் விஷத்தை ஊற்றி கொல்ல முயல்கிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரியின் மனைவி தப்பி விடுகிறாள். அவளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள். ஒருவன் பழுதில்லாமல் வளர, மற்றவனோ `விஷ’ பாதிப்பினால் மூன்றடி உயரத்தோடு நின்று போகிறான்!

வளர்ந்தவன் மெக்கானிக் ராஜாவாக `ஜாலி’யாகத் திரிய, `குள்ள’ அப்புவோ சர்க்கசில் சேர்ந்து கொள்கிறான்.

சர்க்கஸ் கம்பெனியில் `குள்ளனாக’ வாழ்க்கையைத் தொடங்கும் `அப்பு’வுக்கு, ஒரு கட்டத்தில் தனது உயரம் குறைந்த பின்னணி தெரிய வருகிறது. செல்வாக்கு பெற்ற 3 சமூக விரோதிகளால், தங்கள் அழகான குடும்பம் சிதறடிக்கப்பட்ட விவரத்தை அறிகிறான்.

தனது சின்ன உருவத்தால் அவர்களை எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்த அப்பு, தனது மதிïகத்தால் அந்த மூவரையும் எப்படி எமலோகம் அனுப்புகிறான் என்பதுதான் கதை.

சிதம்பர ரகசியம்

இரட்டை வேடங்களில் கமல் அசத்தினார்.

குறிப்பாக, குள்ள அப்புவாக அவர் எப்படி நடித்தார் என்பது கடைசிவரை “சிதம்பர ரகசிய”மாகவே இருந்தது!

சில இடங்களில் முழங்காலை மடித்துக் கட்டியும், சில இடங்களில் பள்ளத்துக்குள் நின்றபடியும் நடித்தார் என்பது திரை வட்டாரத் தகவல். ஆனால் படத்தில் `அப்பு’ கேரக்டரில் அவர் நடித்தபோது அவருடன் பங்கேற்றவர்கள் அந்த ரகசியம் பற்றி வாய் திறக்கவே இல்லை.

வில்லன்கள் மூவரையும், குள்ள கமல் கொல்வதற்காக கையாண்ட வித்தியாசமான டெக்னிக்குகள் ரசிகர்களை பெரிதும் கவர, படம் 200 நாட்கள் ஓடியது.

படத்தின் கதையும், தயாரிப்பும் கமல்தான். டைரக்ட் செய்தவர் கமலின் ஆஸ்தான டைரக்டர் சிங்கிதம் சீனிவாசராவ்.

இந்தப்படம் ஆரம்ப கட்ட தயாரிப்பில் இருந்தபோது, எடுத்தவரையில் போட்டுப் பார்த்தார் கமல். அவருக்குத் திருப்தியில்லை. அதனால் அந்தக் காட்சிகளை அப்படியே தூக்கிக் கடாசிவிட்டு மறுபடியும் திரைக்கதையில் சில மாற்றம் செய்து படத்தை உருவாக்கினார்.

படத்தில் இளையராஜாவின் இசை இன்னொரு சிறப்பு அம்சம். “அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ”, “புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா”, “உன்னை நினைச்சு பாட்டு படிச்சேன்”, “வாழவைக்கும் காதலுக்கு ஜே” போன்ற பாடல்கள் ரசிகர்களைபரவசப்படுத்தின.

கவுதமி

படத்தில் வழக்கமான கமலுக்கு கவுதமி ஜோடியாக நடித்தார். குள்ள கமல் ஒருதலையாக விரும்பும் பெண்ணாக ரூபினி நடித்தார்.

வில்லன்களாக ஜெய்சங்கர், நாகேஷ், டெல்லி கணேஷ் நடித்தார்கள்.

தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் “விசித்ர சோதரலு” என்ற பெயரிலும், இந்தியில் “அப்புராஜா” என்ற பெயரிலும் படம் `டப்’ செய்யப்பட்டு ஓடியது.

சாணக்யன்

மலையாளத்தில் கமல் பல படங்களில் நடித்திருந்தாலும் “சாணக்யன்” அவருக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படம். ராஜீவ்குமார் இயக்கிய இந்தப்படத்தில் கமல் சாணக்யத்தனத்தால் எதிரிகளை வெற்றி கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஹீரோவின் புத்திசாலித்தனத்தை ரசிகர்களும் வரவேற்க, படம் வெள்ளி விழா கொண்டாடியது. படம் இதே பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்யப்பட்டது.

இந்திரன் சந்திரன்

இதே காலகட்டத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த “இந்துருடு சந்துருடு” படமும் வெளியானது. இந்த இரட்டை வேடங்களில் “மேயர்” கேரக்டரில் ரொம்பவே வித்தியாசம் காட்டியிருந்தார் கமல். அதுவும் வில்லத்தனத்தை மிக இயல்பாக செய்து ரசிக்க வைத்தார்.

தெலுங்கில் வெள்ளி விழா கொண்டாடிய இந்தப்படம் தமிழில் “இந்திரன் சந்திரன்” என்ற பெயரிலும், இந்தியில் “மேயர் சாஹேப்” என்ற பெயரிலும் வெளியானது.

படத்தில் கமலுக்கு ஜோடியாக விஜயசாந்தி நடித்திருந்தார்.

மைக்கேல் மதன காமராஜன்

பட அதிபர் பஞ்சு அருணாசலம், கமல் 4 வேடங்களில் நடிக்க வைக்க விரும்பி அவருக்காக “மைக்கேல் மதன காமராஜன்” என்ற படத்தை தயாரித்தார்.

4 கமல்களுமே காமெடியில் ரசிகர்கள் வயிற்றை புண்ணாக்கினார்கள். ஒரு கமலுக்கு குஷ்புவும், இன்னொரு கமலுக்கு ஊர்வசியும் ஜோடியாக நடித்து, கமலுடன் காமெடிக் கூட்டணி போட்டுக் கொண்டார்கள்.

கமல் – ஊர்வசி பாடுவதாக வரும் “சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” பாடல் பிரபலமானதோடு, அந்நாளைய மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இடம் பெற்றது.

“வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்” பாடல் ஜனரஞ்சக ரசனைப் பட்டியலில் சேர்ந்தது.

சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப்படம், 200 நாட்கள் ஓடியது. இதே பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்யப்பட்டது.

திரைப்பட வரலாறு 959
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில்
கமல்-குஷ்பு நடித்த “சிங்காரவேலன்”

வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வந்த கமல் ஒரு மாறுதலுக்காக முழு நீள காமெடி படமான “சிங்காரவேலன்” படத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். இதில் கமலுக்கு ஜோடி குஷ்பு.

ஆர்.வி.உதயகுமார் இயக்கிய இந்தப் படமும் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தது.

கமலுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருந்த நேரம் அது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தியவர், தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் தான் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த நேரத்தில் முழுக்க முழுக்க காமெடி கேரக்டரில் சிங்காரவேலனாக வந்தார், கமல்.

உதயகுமார்

சிங்காரவேலன் படத்தில் கமலை இயக்கிய ஆர்.வி.உதயகுமார், அதற்கு முன் காமெடிப் படங்களை இயக்கியவரல்ல. “உரிமை கீதம்”, “புதிய வானம்”, “உறுதிமொழி”, “கிழக்கு வாசல்”, “சின்னக்கவுண் டர்” என அதிரடி ஆக்ஷன் கதைகள் மூலமும், உணர்வு பூர்வமான குடும்பக் கதைகள் மூலமும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

சிங்காரவேலனை இயக்கிய அனுபவம் பற்றி ஆர்.வி.உதயகுமார் கூறுகிறார்:

“இசையமைப்பாளர் இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக நான் இயக்கிய படமே “சிங்காரவேலன்.”

கமல் சார் அப்போது வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருந்தார். அதனால், அதுமாதிரி கதையாக தயார் செய்யலாமா என்று கூட டிஸ்கஸ் செய்தோம்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான இளையராஜாவின் விருப்பமோ, `படத்தை காமெடியாக எடுக்கலாமே’ என்பதாக இருந்தது. இதுபற்றி கமல் சாரிடம் பேசியபோது, “சமீபத்தில் செய்த படங்களுக்கு மாற்றாக காமெடியிலும் செய்வோமே” என்று சம்மதம் கொடுத்தார். அதற்குப்பிறகு உருவான கதையே “சிங்காரவேலன்.”

பஞ்சு அருணாசலம்

கதை காமெடிக்களம் என்றதுமே, பஞ்சு அருணாசலம் சார் ஒரு வரியில் ஒரு கதை சொன்னார். அந்த `லைன்’ மொத்த திரைக்கதையையும் தாங்குவதாக தெரிந்தது. கதை பற்றி கமல் சாரிடம் சொன்னபோது, “டைரக்டரா உங்களுக்கு ஓ.கே.ன்னா எனக்கும் ஓ.கே.தான்” என்று உடனே பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

காமெடிக்கதை என்று முடிவான பிறகும், எனக்குள் உள்ளூர வருத்தம்தான். `ஒரு மகா கலைஞனை இயக்குகிறோம். அவருக்கான தேடல்களில் கொஞ்சம் நாளெடுத்து உணர்வுபூர்வ பின்னணியில் கதை தந்திருக்கலாமே’ என்று எனக்குள் உறுத்தல் இருந்தது. ஆனால், எப்போது காமெடிக்கதை என்று முடிவானதோ, அப்போதே, “காமெடிக்கு நான் இப்போதே ரெடி. காட்சிக்கு காட்சி ரசிகர்கள் சிரிக்கிற மாதிரியாக கதை பண்ணுவோம்” என்று கமல் களமிறங்கி விட்டார்.

ஆனாலும் ஒருநாள் கதை தொடர்பாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில், “உதய்! “சின்னக்கவுண்டர்” மாதிரி உணர்வுபூர்வமான கதை பண்ணினவர் நீங்கள். எனக்காக காமெடிக் கதை பண்ணினால் உங்க இமேஜ் பாதிக்காதா?” என்று கேட்டார். இது ஒரு டைரக்டர் மீதான அவரது அக்கறைப் பார்வை. ஒரு டைரக்டர் தனக்கே உரிய சிறப்பு அம்சங்களுடன் படத்துக்கு படம் நிலைத்து நிற்க வேண்டும் என்கிற அவரது எல்லை கடந்த பார்வையைத்தான் இது எனக்கு வெளிப்படுத்திற்று.

நான் அவரிடம், “கமல் சார்! காமெடிக் கதை என்பதும் அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதும் சாதாரண விஷயமல்ல. அதையும் முழு மூச்சுடன் முயன்று பார்ப்போமே” என்று பதில் சொன்னேன்.

கமல் சாரைப் பொறுத்தமட்டில் எந்த விஷயமானாலும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசி விடுவார். இதுவிஷயத்தில் எனக்கே ஒரு அனுபவம் நேர்ந்திருக்கிறது.

நான் இயக்கிய “சின்னக்கவுண்டர்” படத்தை பார்த்தவர் படத்தை பாராட்டுவார் என்று எதிர்பார்த்தால், அவரோ அதுபற்றி எதுவும் சொல்லாமல் “என்ன உதய்! நீங்களுமா சாதி ரீதியாக தலைப்பு வைப்பது? உங்ககூட நான் பேசமாட்டேன்” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார். நான் அவரிடம், “சார்! பொள்ளாச்சி, கோயமுத்தூர் ஏரியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களை `கவுண்டர்’ என்றும் சொல்வதுண்டு” என்று விளக்கினேன். புரிந்து கொண்டார்.

60 நாட்களில் எடுத்த படம்

சிங்காரவேலன் முழுப்படத்தையும் 60 நாட்களில் எடுத்து முடித்தேன். சென்னையிலும், பொள்ளாச்சியிலுமாக மாறி மாறி படப்பிடிப்பு நடத்தினோம். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த `எம்.ஆர்.சி. பார்ம் ஹவுஸ்’ எனது நண்பர் சம்பத்துக்கு சொந்தமானது. படத்தில் ஆடு, மாடு, கோழிகள் வரும் காட்சியையும், பாடலையும் இங்குதான் படமாக்கினோம்.

முதலில் இங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பு கமல் சாருக்காக பொள்ளாச்சி மகேஷ் லாட்ஜில் ரூம் ஏற்பாடு செய்தோம். இரண்டு ரூம்களை ஒன்றாக்கி தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் படப்பிடிப்புக்கு வந்த கமல், பண்ணை வீட்டின் இயற்கை அழகில் பிரமித்து, “இங்கேயே தங்கிக் கொள்கிறேனே” என்று சொல்லிவிட்டார்.

அதிகாலையில் பசுமாட்டில் இருந்து கறந்த பாலை அப்படியே குடித்துவிட்டு உடற்பயிற்சியை தொடங்கி விடுவார். அந்த பண்ணை இல்லம் 60 ஏக்கர் சுற்றளவைக் கொண்டது என்பதால் கமல் சார் படப்பிடிப்பு நாட்களில் அதை விட்டு வெளியே வரவில்லை. காலையில் படப்பிடிப்பு ரெடி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும்; அடுத்த வினாடி கேமரா முன் வந்து நிற்பார்.

சிறு வயதிலேயே எனக்கு நகைச்சுவை உணர்வு இருந்தது. படிக்கிற நாட்களில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இயல்பான காமெடி மூலம் அவர்களை சிரிக்க வைப்பேன். அந்த நகைச்சுவை உணர்வு இந்தப் படத்துக்கு எனக்கு கைகொடுத்தது.

குஷ்பு

படத்தின் கதாநாயகி குஷ்பு என்று முடிவானதும், அவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் எப்படி வந்தால் சரியாக இருக்கும் என்பதை விவரித்தேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, குஷ்புவும் அப்படியே காமெடிக் காட்சிகளில் இரண்டறக் கலந்து விட்டார்.

படத்தில் கமல், ஆச்சி மனோரமா, கவுண்டமணி ஆகியோர் சேர்ந்து நடித்த காமெடிக் காட்சிகளில், ரசிகர்கள் விலா நோகச் சிரித்தார்கள். படம் உருவான அந்த நேரத்தில் நாங்களும் அடக்க முடியாமல் சிரித்தோம்.

கமல் கணிப்பு

படத்தில் சார்லி, வடிவேலு ஆகியோரும் காமெடிக்கு இருந்தார்கள். என் டைரக்ஷனில் சின்னக்கவுண்டரை அடுத்து வடிவேலுவுக்கு இது இரண்டாவது படம். வடிவேலுவின் நடிப்பை பார்த்த கமல் சார், “இவர் வித்தியாசமாக இருக்கிறார். நல்ல கேரக்டர் அமைஞ்சா பெரிசா வெளிப்படுவார்” என்று கணித்தார். இந்த எண்ணம் அவருக்குள் தொடர்ந்து நீடித்ததால் அடுத்து தான் தயாரித்த “தேவர் மகன்” படத்தில் வடிவேலுவுக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்து அவரை `நட்சத்திர’ நடிகராக்கினார்.

பாடகர் மனோவை நான் நடிக்க அழைத்தபோது, ரொம்பவும் தயங்கினார். வலுக்கட்டாயமாக அவரையும் காமெடி பண்ண வைத்தேன்.

குஷ்புவை ஆண்களுடன் பழகவிடாமல் ஆச்சி மனோரமா தடுக்கிற காட்சிகளில் எல்லாம் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களும் சிரித்தார்கள்.

அனுபவம் புதுமை

கமல் சாரை நான் இயக்கிய அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது. காட்சியை படமாக்குவதற்கு முன், காட்சிக்கு எந்த மாதிரியாக நடிக்கலாம் என்று அவரே பத்து விதமாகவாவது செய்து காட்டுவார். அதில் ஒன்றை நாம் தேர்வு செய்தாலே போதும். இந்த வகையில் டைரக்டரின் பளுவில் பாதியைக் குறைத்து விடுவார்.

காட்சிகள் தொடர்பாக அவர் ஏதாவது விவாதம் செய்தார் என்றால், அதற்கான காரணத்தையும் விளக்குவார். அவரது கருத்து பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிற மாதிரியே இருக்கும்.

சில இடங்களில் நாம் சொல்லும் கருத்தில் உடன்பாடு இருந்தால், உடனே ஏற்றுக்கொள்வார். அவருக்கு ஒரு படம் இயக்கினாலே, ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்ட அளவுக்கு அனுபவம் வந்துவிடும். இன்றைக்கு 10 வேடங்களில் “தசாவதாரம்” வரை அவரை வியந்து பார்த்து பிரமிக்க காரணமே, கேரக்டர்கள் மீதான அவரது தனிப்பட்ட ஈடுபாடுதான்.

படத்தில் இளையராஜாவின் பாடல்களும் சிறப்பு அம்சமாக அமைந்தன. “புதுச்சேரி கச்சேரி”, “இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்”, “ஓ ரங்கா ஸ்ரீரங்கா”, “போட்டு வைத்த காதல் திட்டம் ஓ.கே. கண்மணி”, “சொன்னபடி கேளு” போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் தாளம் போட்டார்கள். படம் வெளிவந்தபோது கமல் சாரின் இயல்பான காமெடிக் காட்சிகளுக்கு ரசிகர்கள் திரையரங்கை அதிர வைத்தார்கள். படம் நூறு நாள் ஓடி வெற்றிப்பட்டியலில் சேர்ந்தது.

“தசாவதாரம்” படம் ரிலீசுக்கு முன்னதாக கமல் சார் பேசும்போது, “இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்த வெற்றி படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரையே சேரும். எதிர்பார்த்த மாதிரி படம் இல்லாது போனால் அதற்கு நானே பொறுப்பு” என்றார். தனது சுய முயற்சிகள், கதை ஈடுபாடு போன்றவை ரசிகர்களிடம் சரிவர சென்று சேராமல் போயிருந்தால் அதற்கு தானே பொறுப்பாளி என்று சொல்ல பெரிய மனது வேண்டும். இந்த வெளிப்படையான குணம்தான் அவரது பலமும் கூட.

உழைப்பாளிகளுக்கு ஆதரவு

ஒருமுறை டைரக்டர் சங்கத்துக்கும், பெப்சிக்கும் சிறு பிரச்சினை. இதில் கமல் சார் பெப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை சொன்னபோது டைரக்டர்கள் சங்கம் அவர் மீது அதிருப்தியில் இருந்தது. இதனால் “வஞ்சப்புகழ்ச்சி” பாணியில் ஒரு வாசகத்தை எழுதி அந்த `பொக்கே’வுடன் இணைத்து கமல் சாருக்கு கொடுத்தனுப்ப ஏற்பாடு நடந்தது. “இது சரியல்ல. கமல் சார் ஒரு நல்ல கலைஞர். எதையும் மனதில் வைக்காமல் ஆத்மார்த்தமாக பேசிவிடக்கூடியவர். எனவே கிண்டல் தொனியிலான வார்த்தைகளுடன் கூடிய பொக்கேயை அனுப்ப வேண்டாம்” என்று தடுத்துப் பார்த்தேன். தனியொருவனாக என் குரல் அங்கே அப்போது எடுபடவில்லை.

கொஞ்ச நாட்களில் அப்படி செய்தது தவறு என்பதை டைரக்டர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கமல் சாருடன் நேசக்கரம் நீட்ட, டைரக்டர் விசுவுடன் என்னை கமல் சாரைப் பார்த்து வரச் சொன்னார்கள். நாங்கள் போய் கமல் சாரை பார்த்து வருத்தம் தெரிவித்த நேரத்தில், “இந்த விஷயத்தில் முதலில் இருந்தே எனக்காக `பைட்’ பண்ணினது நீங்கள் ஒருத்தர் மட்டும்தான்னு எனக்குத் தெரியும் உதய்”

என்றார்.”சிங்காரவேலன்” படத்தயாரிப்பு சமயத்தில்தான் இந்த சம்பவமும் நடந்தது. சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் கலைஞனாக இருப்பதால்தான், ரசிகர்கள் அவரை தங்கள் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.”

இவ்வாறு டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

திரைப்பட வரலாறு :(960)
வித்தியாசமான படம் “குணா”
மாறுபட்ட வேடத்தில் கமல் சிறந்த நடிப்பு

கமல் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட படமாக வந்தது, “குணா”. சந்தானபாரதி இயக்கிய வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட இந்தப்படம், நூறு நாட்கள் ஓடி, கமலின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தது.

வெறித்தனமான காதல் கொண்ட இளைஞனாக இப்படத்தில் கமல் நடித்தார்.

படத்தை, டைரக்டர் சந்தானபாரதி இயக்கினார். கமலிடம் மானேஜராக இருந்த டி.என்.சுப்பிரமணியம் தனது மனைவி அலமேலு பெயரில் இந்தப்படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தனது மானேஜரையும் தயாரிப்பாளராக்கி விட்டார், கமல்.

புதுமை

படத்தின் கதை, இப்போதும்கூட புதுமையானதுதான்.

வளர்ந்த சூழல் சரியில்லாத ஒருவன் தனது கோணத்தில் எடுக்கும் தீவிர முடிவுகள் அவனது எதிர்காலத்தை எப்படி விபரீதத்தில் முடித்து வைக்கிறது என்பதை நேர்த்தியாய் காட்சிப்படுத்தியிருந்தார், சந்தானபாரதி.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் கண்ணில் படுகிறாள், தெய்வாம்சம் கொண்ட ஒரு இளம் பெண். அவள் மந்திரி ஒருவரின் மகள். அவளை, தான் வழிபடும் `அபிராமி’யாகவே எண்ணும் இளைஞன், அந்த அபிராமி தன் பராமரிப்புக்குள் எப்போதும் இருக்க வேண்டும் என்று விபரீத முடிவெடுக்கிறான். அப்படியொரு வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அந்தப் பெண்ணை கடத்திக்கொண்டு போய், ஒரு மலைக்குகையில் சிறை வைக்கிறான்.

தன்னை யாரோ ஒரு ரவுடி கடத்திக்கொண்டு வந்ததாக பயந்து நடுங்கும் அந்தப்பெண், கடத்தியவன் மனதளவில் ஒரு “குழந்தை” என்பதை புரிந்து கொள்கிறாள். அதன் பிறகு பயம் விலகி, அவனிடம் நட்பு பாராட்டுகிறாள். அவனும் தான் வணங்கும் `அபிராமி’யாகவே கருதி, அவளை கொண்டாடுகிறான்.

இந்த பக்திப்பார்வை நட்பின் பின்னணியில் வலுவடைகிறது. `அபிராமி’ தன்னைவிட்டு எந்தக் காலத்திலும் போய்விடக்கூடாது என்று எல்லையற்ற அன்பு செலுத்துகிறான். மந்திரி மகளை தீவிரமாகத் தேடும் போலீஸ், மோப்பம் பிடித்து அவள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குகைப் பாறைக்கும் வந்துவிடுகிறது. `அபிராமி’யை கடத்தி வந்ததாக கருதிய போலீஸ் இளைஞனை சுட்டுத் தள்ளுகிறது. அந்தப்பெண் மீட்கப்பட்டாலும், இளைஞனின் `பாசமுகம்’ அவளுக்குள் நிரந்தரமாகிப்போய், இளைஞனின் இழப்பை தன்னையே இழந்ததுபோல் உணர்கிறாள்.

கண்மணி… நான் எழுதும் கடிதமே

படத்தில் இளையராஜா இசையில் உருவான “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. அந்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த மூன்றாது படமாக `குணா’வை தமிழக அரசு தேர்ந்தெடுத்து விருது வழங்கியது.

இந்திப் பட உலகில் பிரபல வில்லனாக இருந்த சரத் சக்சேனா இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். படத்தில் துடிப்பான போலீஸ் அதிகாரியாக வந்தார்.

பழைய நடிகை எஸ்.வரலட்சுமி நீண்ட கால இடைவெளிக்குப்பிறகு இந்தப்படத்தில் நடித்தார். கமலின் வளர்ப்புத் தாயாக வந்த அவர், கமலின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சொன்னார்.

ரோஷிணி

படத்தின் நாயகிக்கான தேடுதல் வேட்டை அதிக நாட்கள் நடந்தது. கமலின் மனம் கவர்ந்த அபிராமி கேரக்டர் என்பதால், “பார்க்கிற வினாடியில் ஈர்க்கிற” பெண்ணாக தேடிப்பார்த்தார்கள்.

கடைசியில் மும்பையில் இருந்து ரோஷிணி என்ற பெண்ணை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார்கள். இந்த ரோஷிணி அதற்குப்பிறகு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காமல் மும்பைக்கே சென்றுவிட்டார்.

“குணா” படத்தை தயாரித்த அனுபவம் குறித்து டி.என்.சுப்பிரமணியம் கூறியதாவது:-

அரை நூற்றாண்டு அனுபவம்

“சினிமா உலகுடன் எனக்கு 50 ஆண்டுகள் பரிச்சயம். சினிமாதான், கமல் சாருடன் என்னை நெருங்க வைத்தது. அவரிடம் பணியாற்றும் வாய்ப்பையும் தந்தது.

கமல் சார் மலையாளத்தில் “ஆசீர்வாதம்” என்ற படத்தில் நடித்தபோது, அந்த கம்பெனியில் நான் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தேன். அந்தப் படத்தில் கமல் – ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தார்கள். படத்தின் கதை எனக்குப் பிடித்துப்போய் அதை டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் “அடுக்குமல்லி” என்ற பெயரில் தயாரித்தேன். 1979-ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த 9 படங்களில் இது மட்டுமே கறுப்பு வெள்ளைப்படம். இருந்தும் `கலர்’ வித்தியாசமின்றி படம் நன்றாக ஓடியது. இதன் பிறகு நடிகர் பிரபு நடிக்க “சின்ன வாத்தியார்” என்ற படத்தை தயாரித்தேன். சுமாராக ஓடியது.

கமல் சார் அலுவலகத்தில் மேலாளர் பணியில் என்னை இணைத்துக் கொண்டதால், தயாரிப்பு பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தேன்.

கமலுக்கு பிடித்த படம்

இந்நிலையில் “குணா” படத்தை உருவாக்க கமல் சார் முடிவு செய்தபோது, நான் கொஞ்சமும் எதிர்பாராமல் என்னையே தயாரிப்பாளராக்கினார்.

இந்தப்படம் வந்த பிறகு, கமல் சார் எந்தப் பேட்டி என்றாலும், தனக்கு பிடித்த படங்களைக் குறிப்பிடும்போது மறக்காமல் “குணா”வையும் குறிப்பிடுவார். ரசிகர்கள் என்னை சந்திக்கும்போது நான்தான் “குணா” படத்தை தயாரித்தவன் என்று தெரிந்து கொண்டால், உடனே என் கைகளை பற்றிக்குலுக்கி பாராட்டுவார்கள். இப்போதும் இந்த பாராட்டு தொடர்கிறது.

குணா குகை

கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாறையிடுக்கில் உள்ள குகையை அதுவரை எந்த சினிமாவிலும் பயன்படுத்தியதில்லை. அந்தப் பாறைக்குகையை கதையின் முக்கியத்துவம் கருதி தேடியலைந்து கண்டுபிடித்தவரே கமல் சார்தான்.

கொடைக்கானல் ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, ஓட்டலில் வேலை பார்த்த டிரைவர் ஒருவர் மூலம், இப்படியொரு குகை இருப்பதை தெரிந்து கொண்டவர், அப்போதே அந்த இடத்தை தேடிப்போய் கண்டுபிடித்து விட்டார்.

இந்தப்படம் வெளிவந்த பிறகு, அந்த பாறைக்கே “குணா குகை” என்று பெயர் வழங்குகிறது. சுற்றுலாத்துறையில் இருந்து சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவோரும் “குணா குகை” என்றே அதை குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு எங்கள் படத்தின் மூலம் குகை புகழ் பெற்றுவிட்டது.

இந்த குகை பக்கத்தில் ஒரு `சர்ச்’ செட் போட ஏற்பாடு செய்தார், கமல். `செட்’ பணி முடிந்த பிறகு பார்த்தால், குகை அருகே உள்ள இயல்பான சர்ச் மாதிரி அந்த சூழலுக்குள் சர்ச் அப்படி பொருந்திக் கொண்டது.

குகைக்குள் படப்பிடிப்பு நடந்த நாட்களில் பாறைக்குள் படப்பிடிப்பு குழுவினரும் போய் வரும் வகையில் `சைடு’ பகுதியில் கம்பு நட்டு அதன் மூலம் பாறைக்குள் கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறி, இறங்க வசதி செய்து கொடுத்தார். 6 மணிக்குள் அந்த பகுதி இருட்டி விடும் என்பதால், அதற்குள் படப்பிடிப்பை முடித்துக் கொள்வார்.

கமல் சாருக்கு இதிலும் வித்தியாசமான மேக்கப் என்பதால், விடியகாலை 3 மணிக்கே எழுந்து மேக்கப் போட்டு காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவார்.

படத்தில் கமல் தனக்குத்தானே புலம்பலாய் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியை ராஜ்கமல் ஆபீசில் எடுத்தார்கள்.
200 அடி பிலிமில் வருகிற அந்த காட்சி, ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தபோது, டிவி சேனல்களில் இந்தக் காட்சியையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கமல் சாரின் நடிப்புக்கு பெருமை சேர்த்தார்கள்.

படத்தின் பாதி காட்சிகள் கொடைக்கானலிலும், மீதி காட்சிகள் ஐதராபாத்தில் வீடுகள் செட் போட்டும் எடுக்கப்பட்டது. மொத்தப் படப்பிடிப்பும் 65 நாட்களில் நடந்து முடிந்தது.

ராஜீவ் கொலை

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் குகையில் நடந்தபோதுதான், ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியானார். அதற்கு முந்தின தினம்தான் சென்னையில் இருந்து படப்பிடிப்பை பார்க்க பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மறுநாள் யாரும் வெளியே வரமுடியாத சூழலில், அன்று அவர்களை தங்க வைத்து, அதற்கும் அடுத்த நாள் கறுப்புக்கொடி கட்டிய கார், ஜீப், வேன் என்று கிடைத்த வாகனத்தில் பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.

ஒரு தயாரிப்பாளராக “குணா” எனக்கு லாபம் தந்த படம். நூறு நாள் ஓடி வெற்றி பெற்று, கமல் சாரின் படத்தை தயாரித்தவன் என்ற பெருமையையும் எனக்கு தந்தது.”

இவ்வாறு டி.என்.சுப்பிரமணியம் கூறினார்.

திரைப்பட வரலாறு 961
சிவாஜி- கமல் இணைந்து நடித்த “தேவர் மகன்”
வெள்ளி விழா கொண்டாடியது

கமல் நடிப்பில் உருவான “தேவர் மகன்” படம் வன்முறைப் பாதையில் இருந்து சமுதாயம் விடுபட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. படத்தில் நடித்ததோடு, தயாரிப்பையும் கமலே ஏற்றிருந்த இந்தபடம் வெள்ளி விழா கொண்டாடியது.

நடிகர் சிவாஜிகணேசன் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.

அதிரடி கதைகளில் கூட ஒரு நல்ல மெசேஜ் சொல்வது கமல் பாணி. அவர் நடித்த “தேவர்மகன்” படத்திலும் “வன்முறை கூடாது” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

படத்தில் வன்முறைக்கு எதிராகக் கிளம்பும் பட்டதாரி இளைஞன் சக்திவேல் கேரக்டரில் கமலும், கமலின் முன்னேற்ற முயற்சிகளுக்கு சாதிய வர்ணம் பூசி முட்டுக்கட்டை போடும் மாயன் கேரக்டரில் நாசரும் நடித்தார்கள்.

அரிவாள் கலாசாரம்

சக்திவேலின் அப்பா சிவாஜி சமாதானத்தை விரும்புபவர். அவரது தம்பி மகன் மாயன் பெரியப்பாவின் கொள்கை களை முரட்டுத்தனமாக எதிர்ப்பவன். பெரியப்பாவின் மறைவுக்கு பிறகு பெரியப்பா மகன் சக்தி வேலை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்குகிறான். மோதலை தவிர்க்கும் விதமாக சமரசம் பேச விரும்பும் சக்திவேலின் முயற்சிகள் பலனற்று போகின்றன.

கடைசியில் வன் முறையே கூடாது என்ற கருத்தை உடைய சக்திவேலின் வீச்சரிவாளுக்கு மாயன் பலியாகிப் போக, இளைய சமுதாயத்திடம் “இந்த வன்முறை என்னோடு முடியட்டும், நீங்களாவது அரிவாளை தூக்கி எறியுங்கள்” என்று புத்திமதி கூறிவிட்டு ஜெயிலுக்கு போகிறார் சக்திவேல்.

படத்தில் கமலின் கல்லூரிக் காதலியாக கவுதமியும், மனைவியாக ரேவதியும் நடித்தார்கள்.

மனோகரா பட காலத்தில் அண்ணன், தம்பியாக நடித்த சிவாஜியும் `காகா’ ராதாகிருஷ்ணனும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அண்ணன்- தம்பியாக நடித்தார்கள்.

பழைய படங்களில் அற்புதமான நடன நடிகர் என்று பெயரெடுத்த `கள்ளபார்ட்’ நடராஜன் இதில் ரேவதியின் அப்பாவாக குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

பரதன்

படத்தை பிரபல கேரள இயக்குனர் பரதன் டைரக்டு செய்திருந்தார்.

இளையராஜா இசையில், “போற்றிப் பாடடி பெண்ணே”, “இஞ்சி இடுப்பழகி”, “சாந்து பொட்டு ஒரு சந்தனப் பொட்டு” போன்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன.

இந்தப் படம் தெலுங்கில் `சத்ரிய புத்ருடு” என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டது.

வெற்றி விழா

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த `வெற்றி விழா’ படத்தில் கமல் நடித்து, அந்தப் படத்தை வெற்றிப் படமாக்கினார்.

பிரதாப் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக பிரபுவும் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிவாஜி பட நிறுவனம் கமலை வைத்து “கலைஞன்” படத்தை தயாரித்தது. ஜி.பி.விஜய் என்ற டைரக்டர் படத்தை இயக்கினார்.

விபத்து

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை சங்கம் தியேட்டர் அருகில் சாலை ஓரத்தில் நடந்த போது படப்பிடிப்பு வாகனம் கமலின் கால் பகுதியில் ஏறி விபத்து ஏற்பட்டது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய கமல், அந்த சமயத்தில் நடந்த பட விழாக்களில் ஊன்று கோல் உதவியுடன் நடந்து வந்து கலந்து கொண்டார். கால் சரியானதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை முழு வீச்சில் முடித்துக் கொடுத்தார். ஆனாலும், இந்த நடிப்புக் கலைஞனுக்கு “கலைஞன்” படம் வசூலிலும் விபத்தையே தந்தது.

இந்தப் படம் தெலுங்கில் `போலீஸ் பேடா’ என்ற பெயரில் `டப்’ செய்யப்பட்டது.

மகாநதி

குணா படத்தின் மூலம் கமலுடன் வித்தியாசங்களுக்கு பழகிப் போன டைரக்டர் சந்தானபாரதி, மீண்டும் கமலுடன் இணைந்த படம் `மகாநதி’. உணர்ச்சி பூர்வமான கதையமைப்பும் உள்ளத்தை உலுக்கும் காட்சிகளும் கொண்ட இந்தப் படம் கமலின் நடிப்புப் பட்டியலிலும் மறக்க முடியாத படமாக இடம் பிடித்தது. 200 நாட்கள் ஓடி கமலின் வெற்றி வரிசையிலும் இடம் பிடித்துக் கொண்டது.

கமலின் ஜோடியாக சுகன்யா நடித்தார். கமலின் 10 வயது மகளாக இந்தப் படத்தில் நடித்த சோபனா, இந்தப் படத்துக்குப் பிறகு `மகாநதி’ சோபனா என்றே அழைக்கப்பட்டார். இப்போது பாடகியாகப் புகழ் பெற்று விளங்குகிறார். சங்கர் என்ற பெயரில் வில்லனாக அறிமுகமான நடிகர், இந்தப் படத்துக்குப்பிறகு “மகாநதி” சங்கர் ஆனார்.

கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதியில் தன் மகளை கமல் மீட்கப் போய், மகளை பார்த்ததும் கட்டியணைத்து கதறி கண்ணீர் விடும் காட்சியில், பார்த்த அத்தனை ரசிகர்களும் கண்ணீர் விட்டார்கள்.

பாரதிராஜாவை “16 வயதினிலே” படம் மூலம் டைரக்டராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இந்தப் படத்தை தயாரித்தார்.

16 வயதினிலே படத்தைத் தொடர்ந்து “கிழக்கே போகும் ரெயில்,” “சின்னச் சின்ன வீடு கட்டி” போன்ற படங்களை தயாரித்திருந்தாலும் “மகாநதி படத்தைத் தயாரித்ததில் தனிப் பெருமை அடைகிறேன்” என்று அவர் கூறினார்.

திரைப்பட வரலாறு 962
“குணா”, “மகாநதி”
கமல் படங்களை இயக்கிய சந்தானபாரதியின் அனுபவங்கள்

கமலஹாசனின் வெற்றிப்படங்களான “குணா”, “மகாநதி” ஆகிய படங்களை இயக்கியவர், சந்தான பாரதி. இந்தப் படங்களை இயக்கியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் வெளியிட்டார்.

கமலின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் சந்தான பாரதி.

கமல் நடிப்பில் வித்தியாசமான கேரக்டர்களைக் கொண்ட “குணா”, “மகாநதி” இரண்டு படங்களையும் இயக்கியவர் டைரக்டர் சந்தானபாரதி. நடிகர் சத்யராஜை கதாநாயகனாக்கி கமல் தயாரித்த “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற படத்தையும் இயக்கினார். பாடல்களே இல்லாத அந்தப்படமும் வெற்றி பெற்றது.

கமலுக்கும் தனக்குமான நட்பு, திரைத் தொடர்பு பற்றி சந்தான பாரதி கூறியதாவது:-

ராஜபார்வை

“நான் உதவி இயக்குனராக இருந்தபோதே கமல் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் சந்திக்கிற நேரங்களில் எல்லாமே எங்கள் பேச்சு சினிமா பற்றியதாகவே இருக்கும்.

ஒருநாள் கமலின் அண்ணன் சாருஹாசன் என்னைப் பார்க்க வந்தார். “ராஜ்கமல் ஆபீசுக்கு கமல் வரச் சொன்னார்” என்று சொல்லி விட்டுப் போனார். நான் கமலை சந்தித்தேன்.

“சொந்தப்படம் தயாரிப்பதால் கதை திருப்தியாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால ஒரு `அவுட்லைன்’ கொடுங்கள்” என்றார் (`அவுட்லைன்’ என்பது கதை பற்றிய சிறுகுறிப்பு)

“2 நாள் டைம் கொடுங்கள். தயார் செய்து கொண்டு வருகிறேன்” என்று சொல்லி விடைபெற்றேன். அன்றே என் நண்பர் ரமணனுடன் சேர்ந்து ஒரு அவுட்லைன் தயார் செய்தேன்.

இரண்டு நாளில் ராஜ்கமல் ஆபீஸ் போய் கமலை சந்தித்து கதையின் அவுட் லைன் கொடுத்தேன். அப்போதுதான் கமலும், டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவும் ஏற்கனவே என் மாதிரி இரண்டு பேரிடம் இப்படி அவுட்லைன் கேட்டு வாங்கிய விஷயம் தெரிந்தது.

ஆனாலும் எனது அவுட்லைன் டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவுக்கு பிடித்து விட்டது. கமலுடன் இது விஷயமாக பேசிய அவர், “திரைக்கதையை தயார் செய்யுங்கள்” என்றார். `நாம் கொடுத்த கதையின் மையக்கரு பிடித்ததோடு நம்மையே திரைக்கதை தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்” என்பதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

திரைக்கதை

இதன்பிறகு திரைக்கதை உருவாக்குவதில் தீவிரமானேன். என் நண்பர் ரமணனும் இது விஷயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என்னால் மறக்க முடியாத நண்பர் அவர்.

திரைக்கதை உருவாக்கத்தின் போது கமலும் வந்து விடுவார். அப்போது அதுவரை யாரும் செய்திராத புதுமையாக கதையை காட்சிப்படுத்தும்போதே ஸ்கிரிப்டிலேயே `சவுண்ட் கட்டிங், ஓவர்லாக் கட்டிங்’ போன்ற விஷயங்களையும் எழுதினோம். அதுதான் “ராஜபார்வை.”

இந்தப்படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த படங்களிலும் என் பங்களிப்பு தொடர்ந்தது. அவர்கள் தயாரிக்கும் படங்களில் எந்த டிபார்ட்மெண்ட் என்றாலும் அதில் என் ஈடுபாடு இருக்கும். கமல் நடிக்க ராஜசேகர் இயக்கிய ராஜ்கமலின் “விக்ரம்” படத்தில் கூட இப்படி என் பங்களிப்பு தொடர்ந்திருக்கிறது.

இயக்குனர் பொறுப்பு

கதை, வசனம், தொழில்நுட்பம் என்று ஒவ்வொன்றிலும் என் ஈடுபாட்டைப் பார்த்த கமல் எனக்குத் தந்த பரிசுதான், அடுத்து அவர் தயாரித்த “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” படத்துக்கு இயக்குனர் பொறுப்பு. நடிகர் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பாடல்கள் வேண்டாம் என்று முதலிலேயே முடிவு செய்து விட்டோம்.

இந்தப் படம் வெற்றி பெற்று, தயாரிப்பாளர் கமலுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. எனக்கும் வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயர் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கமலின் மேனேஜர் டி.என். சுப்ரமணியன் தயாரித்த “குணா” படத்தை இயக்கும் வாய்ப்பையும் கமலே எனக்கு கொடுத்தார்.

இந்தப்படம் நூறு நாட்கள் ஓடியபோது கமலின் அடுத்த படமான `மகாநதி’ பட வாய்ப்பையும் எனக்கு கமலே ஏற்படுத்தி தந்தார்.”

இவ்வாறு டைரக்டர் சந்தான பாரதி கூறினார்.

“குணா”, “மகாநதி” பட அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:-

“கமலை வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் நடிப்பின் இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற படம் “குணா”. இந்தப் படத்தின் கதையை கமலும் நானும் எழுத்தாளர் பாலகுமாரனுமாக சேர்ந்து உருவாக்கினோம்.

கதாநாயகி மீதான அபரிமிதமான அன்பின் காரணமாக அவளை கதாநாயகன் கண்காணாத ஒரு குகைக்குள் கொண்டு போய் மறைத்து வைக்கிறான் என்ற கதைப் பின்னணிக்கு அப்படியொரு குகை எங்கே கிடைக்கும் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. ஆனால் அதையும் கமல் சார் விடாப்பிடியாக கண்டுபிடித்து விட்டார். முதலில் அந்தக் குகையை கமலுடன் சேர்ந்து நான் பார்த்த போது குகை அருகே இருந்த ஒரு சமாதி தான் சட்டென பயமுறுத்தியது. குகைக்குள் ஒரு வழியாக இறங்கிப் பார்த்த போது, “நாம் ஒரு வேகத்தில் வந்து விட்டோம். நாளைக்கே இதற்குள் படப்பிடிப்பு என்று ஆரம்பித்தால் நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள் குகைக்குள் இறங்கி ஏற வேண்டியிருக்கும். அப்படி வருகிறவர்கள் சுலபமாக இறங்கி ஏறும் வகையில் குகை இல்லையே என்று கமலிடம் கூறினேன். உடனே அவர் குகையின் பக்கவாட்டில் சவுக்குக் கம்பு நட்டு, அதில் கயிறு கட்டி, அதன் மூலம் குகைக்குள் இறங்க ஏற்பாடு செய்தார். அதோடு 30-க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்களையும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.

குகைக்குள் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தி முடித்த பிறகு ஐதராபாத்தில் ஒரு பங்களாவில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பங்களாவில் மகாத்மா காந்தி, பெர்னாட்ஷா போன்ற முக்கிய பிரமுகர்கள் தங்கிப் போயிருக்கிறார்கள். அதனால் அது சரித்திரப் பிரசித்தி பெற்ற இடமாகி விட்டது.

நாங்கள் படப்பிடிப்புக்கு அந்த பங்களாவைக் கேட்ட போது, அதையே காரணம் காட்டி மறுத்தார்கள். பெரிய தலைவர்கள் தங்கிய மாளிகையில் படம் எடுப்பதில் எங்களுக்கும்தானே பெருமை என்று அவர்களிடம் பலவாறாக எடுத்துக்கூறி, படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றோம்.

60 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து படம் வெளியான போது, நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து வெளிப்பட்டது. படத்தை ரசித்ததோடு வெற்றி பெறவும் செய்தார்கள். “குணா” வும் நூறுநாள் படப்பட்டியலில் சேர்ந்தது.

ராஜ்கண்ணு

இதன்பிறகு படங்கள் இயக்கம், நடிப்பு என்று தொடர்ந்து கொண்டிருந்தேன். திடீரென கமலிடம் இருந்து அழைப்பு. போனேன். “பட அதிபர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு சாருக்கு ஒரு படம் பண்ணுகிறேன். எனது 16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் அவர்தான். இப்போது நாங்கள் மீண்டும் இணைவதால் படம் பெரிய அளவில் வரவேண்டும். நான் ராஜ்கண்ணு சாரிடம் “பாரதியை (சந்தானபாரதி) வைத்து படம் பண்ணுங்கள்” என்று சொல்லி விட்டேன்” என்றார்.

எனக்கு மெய் சிலிர்த்து விட்டது. என்னைக் கேட்காமலே, நான் டைரக்டு செய்ய வேண்டும் என்று ஒரு பிரபல பட அதிபரிடம் சொல்லியிருக்கிறார் என்றால், என் மீது அவருக்கு எவ்வளவு நம்பிக்கை!

கதை பற்றி கமல், நான், எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் மூவரும் விவாதித்தோம். முதலில் நாங்கள் ஆரம்பித்தது வேறு கதை. திடீரென தான் “மகாநதி” கதைப் பின்னணி அமைந்தது.

படத்தில் கொல்கத்தா விபசார விடுதி தொடர்பான காட்சிகளும், கமல் அங்கே போய் தனது மகளை மீட்டு வரும் காட்சிகளும் ரசிகர்களை உலுக்கி விட்டன. மீட்டு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மகள் திடீரென தூக்கத்தில் அலறியபடி, “விடுங்கடா… விடுங்கடா…’ என்று கத்திக் கதறும் காட்சியில் கமல் சாரின் நடிப்பை படமாக்கும்போது நாங்களும் கண்ணீர் விட்டோம். `அப்பா’ ஸ்தானத்தில் இருக்கும் எவரும் கலங்காமல் இருக்க முடியாத காட்சி அது.

இந்தப் படத்தில் வரும் ஜெயில் காட்சியை எடுப்பதற்காக அப்போது சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் இருந்த மத்திய சிறைக்கு சென்றோம்.

ஜெயிலில் கைதிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள், குடிக்க உபயோகிக்கும் டம்ளர்களைக்கூட, அதே மாதிரி வாங்கிப் பயன் படுத்தினோம்.

படத்தில் சென்னை பாஷை பேசத் தெரிந்த ஒரு புது வில்லன் நடிகர் வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாவிடம் சொல்லியிருந்தேன். அவர் சங்கர் என்ற ஸ்டண்ட் கலைஞரை என்னிடம் அழைத்து வந்தார். அவர் வில்லனாக சிறப்பாக நடித்து, இன்றைக்கும் `மகாநதி’ சங்கர் என்ற பெயரில் சினிமாவில் வில்லனாக நீடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்பட வரலாறு 963
கவுரவ வேடத்தில் கமல்
நகைச்சுவை படம் “மகளிர் மட்டும்”
வெள்ளி விழா கொண்டாடியது

கமல் சொந்தமாகத் தயாரித்த “மகளிர் மட்டும்” காமெடி படத்தில் நாசர் கதாநாயகனாக நடித்தார். மற்றும் ரேவதி, ஊர்வசி ஆகியோரும் நடித்தனர்.

கமல் கவுரவ வேடத்தில் நடித்த இந்தப்படம்
25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

நடிகர் கமல் அவ்வப்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து வந்தார். அதிலும் வெற்றி பெற்றார். அவர் தனது நிறுவனம் சார்பில் தயாரித்த “மகளிர் மட்டும்” படமும் இந்த வெற்றிப் பட்டியலில் சேர்ந்தது.

நாசர்

இந்தப் படத்தில் கமல் கவுரவ வேடம் மட்டுமே ஏற்றிருந்தார். கதைப்படி நாயகன் நாசர்தான். கமலின் சொந்த நிறுவனத்தில் மானேஜராக இருக்கும் நாசர் சரியான பெண் சபலிஸ்ட். எந்தப் பெண்ணையும் பார்வையிலே கவிழ்க்கப் பார்க்கும் கேரக்டர்.

அப்படிப்பட்ட குணநலம் கொண்ட நாசர், அவரது அலுவலகத்திலேயே வேலையில் இருக்கும் ரேவதி, ஊர்வசி, ரோகிணியை பார்த்தால் சும்மா இருப்பாரா? அவர்களுக்கும் அவ்வப்போது வலைவீசிப் பார்க்கிறார். அவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களை வசியப்படுத்தும் முயற்சியையும் தொடர்கிறார்.

இந்த குசும்பு எல்லை மீறும்போது, மூன்று பெண்களும் ஒரு அறைக்குள் அவரை கொண்டு சென்று தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு விடுகிறார்கள். தகவல் அறிந்து, கம்பெனி அதிபர் கமல் அலுவலகம் வருகிறார். தவறு புரிந்த மானேஜரை வேலையில் இருந்து தூக்கி விட்டு, ரேவதியை அந்தப் பொறுப்பில் வைக்கிறார்.

வேலைக்குப் போகும் பெண்கள் அனுபவிக்க நேரும் பாலியல் சித்ரவதைகளை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருந்தது, படத்துக்கு கனம் சேர்த்து விட்டது. அதுமாதிரி பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள், ஒன்று வேலையை விட்டு ஓடிப்போய்விடுவார்கள்; அல்லது மானேஜரை அனுசரித்து நடந்து, தங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால், பிரச்சினையை தைரியத்துடன் சமாளிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறியது இப்படம்.

கமலின் `ஆஸ்தான இயக்குனர்’ சிங்கிதம் சீனிவாசராவ்தான் இந்தப் படத்தையும் இயக்கி இருந்தார்.

ரேவதி எதிர்ப்பு

படத்தில் “காளை மாடு ஒண்ணு கறவை மாடு மூணு” என்ற பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடலில் ஆட்சேபகரமாக ஒரு வார்த்தை இருப்பதாக கூறிய நடிகை ரேவதி, அந்த வார்த்தைகள் இடம் பெறும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். பெண்மையை கொச்சைப்படுத்துவதாக அவர் சொன்ன அந்த வரி மாற்றப்பட்ட பிறகே அந்த பாடல் காட்சியில் நடித்தார், ரேவதி.

வேலைக்குப் போகிற பெண்கள் எதிர் கொள்கிற அவஸ்தைதான் கதை என்பதால் கமலுக்கு மகளிர் அமைப்புகளின் பாராட்டு தேடி வந்தது.

படத்தில் பிரபல பட அதிபர் `கலைப்புலி’ தாணு கவுரவ வேடத்தில் தோன்றினார்.

மலையாளப் பதிப்பு

இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மலையாளத்தில் `லேடீஸ் ஒன்லி’ என்ற பெயரில் `டப்’ செய்தார் கமல். அங்கும் வெற்றி கிடைத்த உற்சாகத்தில் “ஆடவாளுக்கு மாத்ரம்” என்ற பெயரில் தெலுங்கிலும் `டப்’ செய்தார். பெண்களின் பிரச்சினையை காமெடிக் கலவையில் சொன்ன படம் என்ற முறையில் தெலுங்கிலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

நம்மவர்

விஜயா-வாகினி பட நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியை வைத்து “உழைப்பாளி” என்ற படத்தை தயாரித்தது. அதைத்தொடர்ந்து, கமல் நடிப்பில் அந்த நிறுவனம் உருவாக்கிய படம் “நம்மவர்.”

கல்லூரியில் படிக்க வரும் சில மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், உல்லாசம், உற்சாகம், தற்காலிக சந்தோஷம் என்று புறப்பட்டு தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துக் கொள்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமே கல்லூரி. அங்கே கவனச் சிதறல் இல்லாத கல்விக்குத்தான் முக்கியம் என்று வலியுறுத்திய படம் இது.

பேராசிரியர்

படத்தில் கல்லூரிப் பேராசிரியராக கமல் நடித்தார். அடாவடியையே அனுதினப் பணியாக தொடர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்ட அந்தக் கல்லூரியின் அவலம் அவர் நெஞ்சில் முள்ளாகக் குத்துகிறது. மாணவர்களை தனது அன்பால் திருத்த முயல்கிறார்.

முதலில் மாணவர்களால் கேலியாக பார்க்கப்பட்ட அந்த பேராசிரியர், நாளடைவில் அவர்களாலேயே நேசிக்கப்படுகிறார், ஒரேயொரு மாணவனைத் தவிர.

அந்த மாணவன் மட்டும் கடைசிவரை அடங்குவதாக இல்லை. அவன் மூலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் ஒரு மாணவனுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேராசிரியர் கமலுக்கு அதே குரூப் ரத்தம் என்றாலும், அவர் ரத்தம் கொடுக்க மறுத்துவிடுகிறார்.

இதனால் அவரை நேசித்த பெண் பேராசிரியை அவர் மீது தனது கோபத்தைக் கொட்டுகிறார். அப்போதுதான் ரத்ததானம் கொடுக்க முடியாத அளவுக்கு பேராசிரியர் “புற்று நோயாளி” என்பது தெரியவருகிறது. பேராசிரியை மட்டுமின்றி கல்லூரியும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது.

வன்முறையை அன்பால் திருத்த முடியும் என்பதை கவிதையாகச் சொல்லியிருந்தார்கள்.

கவுதமி

படத்தில் கமலை விரும்பும் பேராசிரியையாக கவுதமி நடித்திருந்தார்.

அடாவடி மாணவனாக கரண் நடித்தார். அவர் அறிமுகமான படம் இதுதான். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பால் கமலிடம் பாராட்டு பெற்றார், கரண்.

படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் இசை. மகேஷ் என்ற இசை அமைப்பாளர் இசை அமைத்திருந்தார். இவரும் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்து போனார் என்பது சோகம்.

இவர் இசையில் “சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான்”, “பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்” போன்ற பாடல்கள் இனிமையானவை.

படத்தில் கடைசியாக இடம் பெற்ற “புதுமெட்டை போட்டுக்கடா இளமொட்டை பார்த்துக்கடா” என்ற பாடலை இசைக் கருவிகள் எதுவும் கலக்காமல் கொடுத்திருந்தார் மகேஷ். இது இசை ரசிகர்கள் மத்தியில் அவருக்கு புகழ் சேர்த்தது.

அதோடு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது மகேஷுக்கு கிடைத்தது. சிறந்த மாநில மொழிப்படமாக “நம்மவர்” விருது பெற்றது. மாநில அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது நாகேஷுக்கு கிடைத்தது.

மலையாள பட உலகின் பிரபல இயக்குனரான கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியிருந்தார். படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூல் ரீதியில் `சுமார்’ இடத்தையே பிடித்தது.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Canada adds World Tamil Movement to terror list; Action Contre la Faim (ACF); Sri Lankan Appeal Court decides to inquire Batticaloa election petition

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது

உலகத் தமிழர் இயக்க அலுவலகம்
உலகத் தமிழர் இயக்க அலுவலகம்

கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கனடிய அமைச்சரவை நேற்று இந்த முடிவை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையானது கனடாவில் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடக்கும் அந்த நாட்டு அரசாங்கத்தின் மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, உலகத் தமிழர் இயக்கத்தின் கணக்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நிதி நிறுவனமும் அது குறித்து கனடிய அரசாங்கத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமது அமைப்பைத் தடை செய்வதற்கான கனடிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்றும் அதனை கனடிய சட்டங்களின் அடிப்படையில் எதிர்க்கப் போவதாகவும் கூறும் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவரான சின்னத்தம்பி சிற்றம்பலம், தமது அமைப்பு கனடாவிலும், இலங்கையிலும் அகதிகளுக்கு உதவும் பணிகளில் மாத்திரமே ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்றும் அவர் கூறினார்.


கிழக்கு மாகாண தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கென நடத்தப்பட்ட தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான முறையில் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவினை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்
கொண்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்கப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் இருவர் சார்பில் இந்த தேர்தல் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருள்பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் புகுந்து வாக்களிப்பு மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பினை செல்லபடியற்ற தாக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


மூதூர் கொலைகள் குறித்து ஏசிஃப் சர்வதேச விசாரணை கோருகிறது

மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்
மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்

இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள் மூதூரிலுள்ள தமது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தக் கொலைகள் இடம்பெற்றன.

இந்தக் கொலைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுவதை இலங்கை அரசு மறுக்கிறது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Who is supporting Kanimoli? Mu Karunanithi, Mu Ka Azhagiri, Kayalvizhy Alagiri vs MK Stalin

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

அழகிரியை முன்னிலைப்படுத்தவா கடலூர் மாநாடு?

த.தேவராஜ்

கடலூர், ஜூன் 16: கடலூரில் திமுகவினர் நடத்திய மகளிரணி மாநாடு, கட்சிக்குள் அழகிரியின் செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்காகவோ என்ற சந்தேகம் தொண்டர்களில் ஒரு பிரிவினரிடையே ஏற்பட்டிருக்கிறது.

திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு தலைமையேற்பதற்காகவே மு.க. ஸ்டாலின் தயார்படுத்தப்பட்டு வருகிறார். ஆனால் முதல்வரின் மற்றொரு மகனான மு.க. அழகிரி கட்சிக்குள் இன்னொரு அதிகார மையமாக உருவெடுத்து வருகிறார். தென் மாவட்ட திமுகவைத் தனது அதிகாரத்துக்குள் அவர் கொண்டுவந்துவிட்டார். அதே சமயம் வட மாவட்டங்களில் அவரைவிட ஸ்டாலினுக்கே செல்வாக்கு அதிகம் இருக்கிறது.

எனவே அழகிரியை வட மாவட்ட திமுக தொண்டர்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லவே இந்த மாநாடோ என்று நினைக்கும் அளவுக்கு சுவரொட்டிகளிலும் பிற விளம்பரங்களிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். அழகிரியைப் போலவே அவருடைய மகள் கயல்விழிக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. அழகிரியின் மகள் கயல்விழி இந்த மாநாட்டில்தான் முதல்முறையாக கட்சி மேடை ஏறியிருக்கிறார்.

முதல்வரின் மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக்கியபோதே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ மத்திய அரசில் நிகழ்ந்த சிறு மாற்றத்தின்போது கனிமொழிக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இந் நிலையில் கட்சிக்குள் அவருக்கு முக்கிய பொறுப்பை அளிப்பதற்கு முன்னோட்டமாகவே இந்த மாநாடு நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அவரும் மாநாட்டில் முழு ஈடுபாட்டுடன் பங்கு கொண்டார். ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோருக்குப் பதில் அளிக்கும் வகையில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

மு.க. ஸ்டாலினைப் பொருத்தவரை கட்சியின் துணைப் பொதுச் செயலர், மாநில அமைச்சர் ஆகிய பதவிகளை நன்கு நிர்வகித்து வருகிறார். மாற்றுக் கட்சிக்காரர்கள்கூட விரும்பும் அளவுக்கு அவருடைய செயல்கள் அமைந்துள்ளன. நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் சிறை வாசம், போலீஸôரின் அடக்குமுறை ஆகியவற்றுக்கு உள்ளானவர் ஸ்டாலின். அதனால் தொண்டர்களிடம் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது.

இந் நிலையில், கனிமொழி, கயல்விழி, அழகிரி என்று கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அடுத்தடுத்து மேடைகளில் முக்கியத்துவம் பெறுவது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கு வியப்பாக இருக்கிறது. இது அவர்களில் சிலரை லேசான அதிருப்தியிலும் ஆழ்த்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.

Posted in DMK, Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Mu Ka Azhagiri’s Daughter & M Karunanidhi’s Daughter: DMK Legacy – Thrones, Queens, Monarchy, Dynasty

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி, கயல்விழி -கழகம் செல்லும் புது வழி!

ஆ. ரகுராமன்

சென்னை, ஜூன் 16: தி.மு.க.வில் ஆரம்பம் முதலே சத்தியவாணி முத்து உள்ளிட்ட ஒரு சில பெண்கள் மட்டுமே அமைச்சர் பதவியிலும் கட்சியின் உயர்நிலை அமைப்புகளிலும் இருந்துள்ளனர்.

நெடுநாள்களாக, சக்திவாய்ந்த பெண் தலைவர் எவரும் தி.மு.க.வில் இல்லை. அந்த இடத்தை கனிமொழி, கயல்விழி ஆகியோர் நிரப்புவார்களா என்ற கேள்வியை திமுகவின் கடலூர் மாநாட்டு நிகழ்வுகள் எழுப்புகின்றன.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மு.க. அழகிரி மகள் கயல்விழி ஆகியோரை கட்சி ரீதியாக முன்னிறுத்தவே கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாடு நடத்தப்படுகிறது என்று பரவலான பேச்சு இருந்தது.

தொடக்கம் முதலே மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இதை மறுத்து வந்தார்.

ஆனால் மாநாட்டின் முதல் நாள் திமுக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கனிமொழி முன்னிலைப்படுத்தப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

மாநாட்டுப் பந்தலில் அமைச்சர்கள், திமுக தலைவர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதிக்கு அடுத்து கனிமொழிக்கே அதிக மரியாதை அளித்தனர்.

முதல்வரின் மேடைக்கு அருகிலிருந்த மேடையில் அமைச்சர்களுக்கு நடுவில் கனிமொழி அமர்ந்திருந்தார். கனிமொழியும் கருணாநிதியும் மட்டுமே ஊர்வலமாக வந்த பெண்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தனர்.

மாநாட்டுக்கு முத்தாய்ப்பாக, பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய கனிமொழி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் விஜயகாந்த் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.

கட்சியில் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அவரது பேச்சு உணர்த்துவதாக இருந்தது. மாநாட்டில் எத்தனையோ பேர் பேசினாலும் கனிமொழியின் பேச்சு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

மாநாட்டிற்கு வைக்கப்பட்ட பேனர்கள், வரவேற்பு வளைவுகளில் கருணாநிதி, அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த முக்கியத்துவம் கனிமொழிக்கு வழங்கப்பட்டது.

வரவிருக்கும் திமுக உள்கட்சித் தேர்தலில் கனிமொழிக்கு மகளிரணியில் முக்கிய பொறுப்பு தரும் எண்ணத்தில் முதல்வர் கருணாநிதி இருப்பதாகத் தெரிகிறது. அதற்காகக் கட்சியினரின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்திலேயே இந்த மாநாடு நடத்தப்பட்டது என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கயல்விழி…. “வள்ளுவமும் வாய்மையும்’ என்ற தலைப்பில் அழகிரியின் மகள் கயல்விழி பேசுவதைக் கேட்கவும் கூட்டத்தினரிடையே ஆவல் இருந்தது.

கட்சியில் மு.க. அழகிரி துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்பதாகவும், அவரை சமாதானப்படுத்த அவரது மகள் கயல்விழிக்கு கட்சிப் பதவி வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.

இதற்கு முன்னோட்டமாகத்தான், மாநாட்டில் அவர் பேசவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

கயல்விழி பேசுவதற்கு முன் பல பேச்சாளர்களுக்கு மகளிரணித் தலைவர் நூர்ஜஹான் பேகம் ஏழு நிமிடங்கள் கூட பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியும் இதில் அடக்கம். ஐந்து நிமிடங்களிலேயே பேச்சை முடிக்கச் சொன்னதால் தமிழரசி சற்று வேகமாக “நன்றி, வணக்கம்!’ என்று கூறி விடைபெற்றார்.

கயல்விழி 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். அவர் தீவிர அரசியலில் இயங்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. அவர் பேசும்போது, எந்தவிதக் குறுக்கீடும் இல்லை.

பெண்கள் எழுச்சிக்காகவும், நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், கடலூரில் திமுக மகளிரணி மாநாடு நடத்தப்படுவதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியிருந்தார்.

மாநாட்டில் பேசிய சிலர், வரும் தி.மு.க.வில் கட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தற்போது கட்சிப் பொறுப்பில் இருக்கும் சில பெண்களும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியதுடன் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் பெண்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலான திமுக பெண் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Arputharaj: Political conferences & Public hassle – Disturbing normal life with Abundant Exuberance

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

அற்புதராஜுக்கு நன்றி!

அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

வேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு?

கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.

அது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.

பொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.

இந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு!

இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.

உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.

ஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.

கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Protests, Bandhs, Harthal: Work stoppage & public nuisance – Habit for getting Holidays

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

“பொது நலனை பாதிக்கும் போராட்டம்’

வ. ஜெயபாண்டி

நாட்டில் சமீபகாலமாக நடைபெறும் போராட்ட சம்பவங்களைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் மக்களாட்சித் தத்துவத்தில் நாம் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் எழுகிறது.

விலைவாசி உயர்வு, சிலை அவமதிப்பு, இடஒதுக்கீடு கோரிக்கை என எதுவானாலும் சம்பந்தப்பட்டவர்கள் “போராட்டம்’ என்ற பெயரில் சேதப்படுத்துவது பொதுச் சொத்துகளைத்தான்.

தமிழகத்தில் அரசியல் மோதலில் தொடங்கி அனைத்துப் பிரச்னைகளிலும் அதிகம் பாதிப்படைவது அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளே!

அதேபோல ராஜஸ்தான் மாநில “குஜ்ஜர்’ இன இடஒதுக்கீடு பிரச்னையில் அரசுப் பேருந்துகளையும், தண்டவாளங்களையும் கூச்சமின்றி பலர் சேதப்படுத்தியதை ஊடகங்கள் உலகறியச் செய்தன.

மறியல் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் அரசியல் கட்சியினர் நடத்தும் “பந்த்’துகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே!

கோரிக்கைகளை வலியுறுத்தவும், அதைப் பெறப் போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதே சமயம் பொது நலனைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்வது எந்த வகையில் நியாயம் என்பதைச் சம்பந்தப்பட்டோர் சிந்திக்க வேண்டும்.

நாடு நமது. அதிலுள்ளவை நம்முடையவை. அதைப் பாதுகாப்பதும், நமது தேவைக்கு ஏற்ப நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதுமே உண்மையான உரிமை. இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?

அரசு வாகனங்களை சேதப்படுத்துகிறோம். பின்னர், பயண நெரிசலைக் கவனத்தில் கொண்டு கூடுதல் வாகனங்களை இயக்குமாறு கோரிக்கை வைக்கிறோம். ஏன் இந்த முரண்பாடு?

தனது வீட்டில் சிறு கீறல் விழுந்தாலே பதறித் துடிக்கும் ஒருவர், கூட்டத்தோடு சேர்ந்து பொதுச் சொத்துகளை உடைத்து நொறுக்குவதற்கு எப்படி மனம் வருகிறது? கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்?

மக்களது தேவைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் மறியலில் ஈடுபடும்போது அவசரத் தேவைக்காகச் செல்லும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்களே? இதற்கு யார் பொறுப்பு?

அரசியல், சாதிய இயக்கங்கள் என்ற போர்வையில் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் நாமே நடந்து கொள்வது எந்த வகை நாகரிகம்?

இதற்காகவா நமது முன்னோர் கண்ணீரும், செந்நீரும் சிந்தி மக்களாட்சியை ஏற்படுத்தினார்கள்?

அன்னியர் ஆட்சியே மேல் என்று கருதும் நிலையை உருவாக்குவதற்காகவா, அரையாடை அணிந்து “மகாத்மா’ அகிம்சை வழியில் போராடினார்?

நாட்டில் நடைபெறும் போராட்டத்தில் பெரும்பாலானவை அரசியல் மற்றும் அவை சார்ந்த அமைப்புகள் நடத்துபவையாகவே உள்ளன.

இதனால் அவை ஒட்டுமொத்த சமூகத் தேவைக்கான போராட்டமாக அல்லாமல் குறிப்பிட்டோர் ஆதாயம் அடையத் தக்கவையாக அமைகின்றன.

சாதி, சமயம், அரசியல் என குறுகிய வட்டத்தில் குறுக்கிக்கொண்டு செயல்படுவதையே பலரும் நவீன அரசியல் யுக்தியாக கருதும் போக்கும் அதிகரித்து வருகிறது.

அப்படிப்பட்ட அமைப்புகளுக்குத் தலைவர்களாக வருவோர், தங்கள் பின்னால் அணிவகுப்போரை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிட்டு பயனடைகிறார்கள். அறிவுப்பூர்வமான வழிகாட்டல் அவர்களிடம் அரிதாகவே உள்ளது.

இதற்கு யார் காரணம்? ஆடை எடுப்பதற்குக் கூட கடைகளில் அதிக நேரம் செலவிடும் நாம், அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் சிந்திப்பதே இல்லை.

நமது ஜனநாயக உரிமையை ஐந்தாண்டுக்கு ஒருமுறை பயன்படுத்துவதில் பொறுப்புணர்வை காட்டுவதுமில்லை. “மட்டத்தில் நயம்’ என்ற நிலையிலே நமது அரசியல் தேர்வு உள்ளது.

இத்தகைய போக்கால் நாட்டு நலன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. தனிநபர் நலன் முக்கியத்துவம் பெறுகிறது. பொது நல ஆர்வம், தியாகம் என்பதெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்களது பிதற்றல் என்றாகிவிட்டது.

“நாடு கெட்டுப்போய்விட்டது’ என ஆளாளுக்கு கவலைப்படுகிறோம். ஆனால் நம்மால் சமூகத்தை மேம்படுத்த என்ன செய்யமுடியும் என சிந்திக்கத் தவறுகிறோம்.

தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பதெல்லாம் சமூக மேம்பாட்டுக்கான ஏணிப்படிகள் என்பதை நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம்.

ஆம். யாரும் எதைப் பற்றியும் கவலைப்பட நேரமில்லை. இன்றைய பொழுது தமக்கு நல்லபடியாக கழிந்ததா? மனம் விரும்பியது கிடைத்ததா? அதற்காக எத்தகைய பழி பாவத்தையும் செய்யலாம் என எண்ணுகிறோம்.

ஆனால் நமது தவறுக்கெல்லாம் “பலிகடா’வாகப் போவது நமது எதிர்காலச் சந்ததியினர் என்பதை மறந்துவிடக் கூடாது.

“”தினை விதைத்தவன் தினை அறுப்பான் : வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்று நமது முன்னோர் சொன்ன முதுமொழியை இப்போது நினைவில் கொள்வதே எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்யும் நன்மையாக அமையும்.

Posted in Economy, Govt, India, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Geetha, Ladies, Varnasramam: Kanimozhi speech in DMK Women Conference at Cuddalore

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?

– கி. வீரமணி

இதோ ஆதாரங்கள்:
ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,

“இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;
பெண்ணின் துர்புத்தியால் தான்
இங்கு வருணாசிரம தர்மம்
அழியப் போகிறது என்று!
அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான். ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார், கீதை ஒரு கொலை நூல் என்பதை யும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.
இதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.
“பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.
இது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.
அப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும். திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.
கீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
“கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.

“அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:
(அத்.1 – சுலோகம் – 41)

இந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
கீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

கீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை

– கனிமொழி எம்.பி.

சென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்: ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசி யிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர

இது கீதையின் முதல் அத் தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல் வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும் பத்தில் அறமின்மை தலை யெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின் றனர். பெண் சீரழிந்து கெட் டுப்போவதால்தான் வருணா சிரம தர்மம் அழிந்து தேவை யற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.

இந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட் டிக்காட்டிப் பேசினேன். கீதையை மேற்கோள் காட் டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக் குறளை மேற்கோள் காட்டுவ தென்பதோ தடை செய்யப் பட்ட ஒன்றல்ல. கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட் பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட் டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம்.

மதத்தின் பெயரால், பாரம் பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண் டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம். ஆனால், பகவத் கீதை யைக் காக்க கொடி தூக்குப வர்கள், அதில் என்ன இருக் கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »