Heavy fighting in Mannaar, Sri Lanka: The war dividend; SLA cordon, search in Vadamaraadchi, Thenmaraadchi
Posted by Snapjudge மேல் மே 19, 2008
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே மோதல் வலுக்கிறது.
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு தேர்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு அது கிடைக்காமல் போன ஹிஸ்புல்லா அவர்களும் மேலும் இரு உறுப்பினர்களும் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பிள்ளையான் அவர்களுக்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறி தனியாகச் செயல்படப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு உறுப்பினர்கள் தமது தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஹிஸ்புல்லா அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். அமைச்சர் அதாவுல்லா அவர்களின் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர் எனவும், சில காரணங்களுக்காக அவர்களின் பெயரை தற்போது வெளியிட இயலாது எனவும் ஹிஸ்புல்லா கூறினார்.
எனினும் இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களுக்கோ அல்லது தற்போதைய முதல்வருக்கோ எதிரான ஒரு நடவடிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் திட்டமிட்டபடி இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் மன்னார் பாலம்பிட்டி பகுதியை அரச படைகள் கைப்பற்றி அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
இது குறித்து இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும்போது, இராணுவத்தினர் தற்போது மன்னார் பிரதேசத்தில் அடம்பன் பகுதிக்குள் முன்னேறியிருக்கின்றார்கள் என்றும், இப்போது இராணுவம் அடம்பனுக்கு வடக்கே செயற்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
இதனிடையில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்திர விழாவையொட்டி, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி இன்றும் ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் திறந்திருந்தது என்றும் நாளையும் திங்கட்கிழமை ஓமந்தை சோதனைச்சாவடி காலை முதல் திறந்திருக்கும் என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.
வட இலங்கையில் உக்கிர மோதல்கள் நீடிக்கின்றன
இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை ஆகிய முன்னரங்குகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் பரவலாக மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது, இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பிலும் சேர்த்து குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
ஞாயிறன்றைய சண்டைகளில் 58 விடுதலைப் புலிகளும் 21 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3 இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் அந்த ஊடகத் தகவல் மையம் விபரம் வெளியிட்டிருக்கின்றது.
ஆனால் விடுதலைப் புலிகளோ, மன்னார் கருங்கண்டல்குளம் பகுதியில் தமது பிரதேசத்தை நோக்கி முன்னேறிய இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைகளில் 25க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும். 50க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்களில் 6 இராணுவத்தின் சடலங்கள் மற்றும் ஆயுதத் தளபாடங்கள் என்பவற்றையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்