Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

There Cannot be Talks with LTTE Alone – Anandasangaree

Posted by Snapjudge மேல் மே 8, 2008

விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இனப்பிரச்சனை தீருமா?

பல் நாட்டுத் தூதுவர்களுக்கு த.வி.கூ தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களால் அனுப்பப்பட்ட மகஜர்

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி தமிழ் நாடு சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருசாராரையும் பேச வைக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை கோர வேண்டும் என கேட்டுக்கொண்டது. பல்வேறு நாடுகளும் உலகளாவிய பொது ஸ்தாபனங்களும் இலங்கையின் கள நிலைமையை சரியாக புரிந்து கொள்ளாது யுத்தத்தை நிறுத்த வெண்டுமெனவும் விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டுமெனவும் வற்புறுத்தி வருகின்றன. யுத்தம் நிறுத்தப்படத்தான் வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை விடுதலைப் புலிகளுடன் மட்டுமானதாக இருக்கக்கூடாது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின் நாட்டு நிலைமை முற்றாக மாறிவிட்டது. அந்தநேரம் வடகிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் கூட பெருமளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. விடுதலைப் புலிகள் மிகக் கூடுதலாகவும், அரச படைகள் சிறிதளவும் மொத்தமாக பல்லாயிரக்கணக்கான யுத்த நிறுத்த மீறல்கள் நடந்தமையினால் ஒப்பந்தம் ரத்தாக்கப்பட்டு யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு ஏனைய பகுதிகளிலும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் அவ்வாறு கூறிவந்தாலும் அவர்களை தமிழ் மக்கள் ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்ள வில்லை. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற 22 பாராளுமன்ற தொகுதிகளை விடுதலைப் புலிகள் மோசடி மூலம் தமிழரசுக்கட்சியினூடாக (இலங்கை தமிழரசுக்கட்சி) பெற்றுக்கொண்டு வடகிழக்கு வாழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது விடுதலைப் புலிகளையே பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர். சமஷ்டி கட்சிகூட இயங்காமல் இருந்தவேளையிலேயே இவர்கள் அதன் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு நீண்ட நாட்களின் பின்னே அக் கட்சியை இயங்க வைத்தனர். தேர்தல் காலத்தில் நான்கு தேர்தல் கண்காணிப்புக்குழு தமது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இவர்களின் தெரிவை பற்றி அனைத்துக் குழுக்களும் பாதகமான அறிக்கையை முன்வைத்ததோடு இரு குழுக்கள் வடகிழக்கு தேர்தலை ரத்துசெய்து புதிய தேர்தலை நடத்துமாறு சிபாரிசு செய்தனர். ஆகவே எத்தகைய பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகின்ற தார்மீக உரிமை அவர்களுக்கு இல்லை. தங்கள் நிலைமையை அவர்கள் உணர்ந்து ஏப்ரல் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் எதுவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக இழந்த நிலையில் விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பற்றி பேசுகின்ற உரிiமையை இழந்து விட்டனர். வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இன்றும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஏனைய மூன்று மாவட்டங்களாகிய யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகியவற்றின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதிலும் அப்பகுதிகளையும் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் சனத்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் மிக அமைதியாக வாழ்கின்றனர். இன்னுமொரு பகுதியினர் ஐரோப்பா, ஸ்கண்டிநேவியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மிகப் பொருளாதார ரீதியாக வசதியாக வாழ்ந்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை ஊட்;டிக்கொண்டு நலமாக வாழ்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும், புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்கின்ற ஏழை மக்களின் பிள்ளைகளை தமது போர் வீரர்களாக சேர்த்து பயிற்சி கொடுக்கவும் பெருந்தொகையாக பண உதவி செய்கின்றனர். இப் பிள்ளைகள் பெருமளவில் யுத்த முனையில் தினமும் மடிந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தை குறி;ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படாது நட்புடன் செயல்பட்டு விடுவிக்கக்கூடிய இராணுவத்தை அனுப்பும்படி கோரிக்கை விடுத்திருந்தேன்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்;டில் அடிமைகள்போல் இன்றும் வாழ்கின்ற மக்களே தமிழ் மக்களில் மிகவும் துர்ப்பாக்கியவான்களாவர். அவர்கள் எந்தவித உரிமைகளையும் அனுபவிப்பதில்லை. தாமாக சிந்தித்து செயலாற்ற முடியாது. தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களிக்க முடியாது. விடுதலைப் புலிகள் கடத்தி செல்வதை தடுப்பதற்காக மேல் வகுப்புக்களில் படிக்கும் தமது பிள்ளைகளை மறைத்து வைத்து வாழ்கின்றனர். குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். கடுமையான வரிகளை செலுத்துகின்றனர். ஆட்கடத்தல், சித்திரவதை முகாம்கள், இருட்டறை போன்ற தண்டனைகளையும் அனுபவிக்கின்றனர். குறைந்தபட்சம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் சட்டசபை உறுப்பினர்களையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்று அங்கு மக்கள் படுகின்ற கஷ்டங்கள், அனுபவக்கின்ற கொடுமைகளையும் நேரடியாக பார்க்கும்படி கோரியிருந்தேன்.

இப்பொழுதுள்ள பிரச்சனை அரசாங்கம் யாருடன் பேச வேண்டும் என்பதே. அரசு விடுதலைப் புலிகளுடன்தான் பேச வேண்டும் என்று கூறுவது நியாயமானதா? இன்றைய சூழ்நிலையை தமக்கு சாதகமாக பாவித்து இடையிலுள்ள சிலர் பல்வேறு மாற்றுத் திட்டங்களை முன்வைக்க முயல்கின்றனர். பிரச்சினை தீர்வுக்கு அவை உதவமாட்டாது. ஓற்றையாட்சியின் கீழ் காணப்படும் தீர்வு சிறுபான்மை தமிழினத்தின் அபிலாசைகளுக்கு ஏற்புடையதல்ல. எத்தகைய தீர்வும் நியாயமானதாகவும், சமத்துவமானதாகவும் அமைய வேண்டும். கடந்த சில வருடங்களாக இந்திய முறையிலானவொரு தீர்வை முன்வைத்து ஆதரவு தேடி வந்துள்ளேன். எல்லாவற்றுக்கு மேலாக இந்திய முறையிலான தீர்விலுள்ள நன்மை யாதெனில் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழ் நாட்டில் முட்டுக்கட்டை கொடுக்கின்ற புலி சார்பான சில சக்திகளை மௌனிக்க வைக்க முடியும்.

யுத்தமுனையில் ஆயிரக்கணக்கானவர்கள் மரணிக்கின்றார்கள். அவ்வாறு மரணிப்பவர்களின் உறவினர்கள், அன்புக்குரியவர்கள் தான் வேதனையை அனுபவிக்கின்றார்களேயொழிய யுத்தத்தை முன்னெடுப்பவர்கள் அல்ல. மனித உரிமை மீறல்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் ஒருவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றன. அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பதை பலரும் அறிவர். புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடப்பவைகள் முழுதும் மறைக்கப்படுகின்றன. பொது மக்கள் உறுதியாக நின்று ஒத்துழைப்பு கொடுப்பார்களேயானால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலே மனித உரிமை மீறல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் புலிகள் பகுதியில் அதற்கு சாத்தியமில்லை.

சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா அக்கறையின்றி இருக்க முடியாது. அரசுக்கு எல்லா வழியாலும் சர்வதேச சமூகத்துக்கு ஏற்புடையதாகிய ஓர் நியாயமான தீர்வை முன் வைக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் திருப்தியடையும் பட்சத்தில் அதை ஏற்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் வற்புறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சர்வதேச சமூகத்தின் சிபாரிசை ஏற்க வேண்டும்.

சர்ச்சைக்குரிய 13வது திருத்தம் அரை நூற்றாண்டு காலமாக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்த நிலையில், நிரந்தர தீர்வாக அமையாது. இருப்பினும் இறுதித் தீர்வை காணும் வரைக்கும் 13வது திருத்தத்தை ஒரு தற்காலிக தீர்வாக ஏற்றுக்கொள்ளலாம்.

மாட்சிமை தங்கிய தூதுவர் அவர்களே! இலங்கையில் தற்போது நிலவும் நிலமையை தங்கள் அரசுக்கு விளக்கிக்கூறி சம்பந்தப்பட்ட அனைவரையும் ஓர் நியாயமான தீர்வுக்கு உடன்பட வைக்க போதிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் தாங்க முடியாத எல்லை மீறி மக்கள் துன்பப்படுகின்றார்கள். இது சம்பந்தமாக தங்களுடன் நேரில் பேசுவதற்கு உரிய நாள், நேரம் குறித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: