Balu Mahendira’s Vanna Vanna Pookkal – Interview with Producer Thaanu
Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008
திரைப்பட வரலாறு :(881)
“வண்ண வண்ண பூக்கள்”
பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்
பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
திராவின் இயக்கத்தில், “வண்ண வண்ணப்பூக்கள்” என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.
இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-
பாலு மகேந்திரா சந்திப்பு
“எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.
நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.
பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், “தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி” என்று கூறினார்.
ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், “சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்” என்றேன்.
“ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்” என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.
பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை’ திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து “கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்” என்றேன்.
இளையராஜா
அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.
என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான “நல்லவன்” படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், “பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?” என்றார்.
அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.
அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் “எங்கேயோ கேட்ட குரல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.
இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் “உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி “ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்” என்றார்.
இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று” என்று அடம் பிடித்தார். “இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது” என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.
இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.
அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், “உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?” என்று கேட்டார்.
நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.
இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.
“தாணு! `ரத்த சம்பந்தலு’ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் – அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.”
பதிலுக்கு நான், “சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்” என்றேன்.
அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.
நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.
இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.
மெட்டுகள்
மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்’ போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா’ பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே’, `ஜின்ஜினாக்கடி’ என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.
அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.
தேசிய விருது கிடைத்தது!
பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த “வண்ண வண்ணப்பூக்கள்” படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
அர்ச்சனா கோபம்
“வண்ண வண்ணப்பூக்கள்” பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். “நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?” என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.
இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.
மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். “சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்” என்றார்.
முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, “நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?” என்று கேட்டேன்.
எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், “அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது” என்றார்.
புது ஹீரோ
இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, “இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?” என்றேன். “அதேதான் சார்” என்றார், அவரும்.
அப்போது “வைகாசி பொறந்தாச்சு” என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.
விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். “உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். “வண்ண வண்ணப் பூக்கள்” படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது “இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி’ கிடைத்திருக்கும்” என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை” என்று அப்போதே சம்மதம் தந்தார்.
பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.
10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.
பாடல் காட்சி
படத்தில் வரும் “இளம் நெஞ்சே வா” பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், “சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது” என்று கேட்டேன்.
நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை’ மாற்றிக்கொடுத்து விட்டேன்” என்றார்.
என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்’ கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.
ரூ.60 லட்சம்
ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.
படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, “என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?” என்று கேட்டார்.
இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, “இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.
நான் அவரிடம், “நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றேன்.
படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் “இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்” என்று பாராட்டி, எழுதித் தந்தார்.
தேசிய விருது
படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் “தேசிய விருது” கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.
விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். “வருக, வருக! வாழ்த்துக்கள்” என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த “தமிழன்” நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.
படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்” என்று சொன்னேன்.
நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், “இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?” என்று வருத்தப்பட்டார். நான், “உண்மையைத்தானே சொன்னேன்” என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.
காயத்துக்கு மருந்து
என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.”
இவ்வாறு தாணு கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்