Investigation sought in Border Security Force (BSF) personnel death in Tripura
Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008
திரிபுராவில் இறந்த பி.எஸ்.எப். வீரர் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு
மதுரை, மார்ச் 19: திரிபுராவில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரி அந்த வீரரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ஷா. இவரது மகன் ஷேக் அப்துல்லா (24). இவர், 4 ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.
அண்மையில் திரிபுராவில் பி.எஸ்.எப். 34-வது பட்டாலியனில் வீரராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஷேக் அப்துல்லாவின் பெற்றோரை, திரிபுரா பிஎஸ்எப் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து “உங்களது மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை அனுப்பி வைக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.
தங்களது மகன் சாவில் மர்மம் உள்ளதாக சையது முகமது ஷா புகார் தெரிவித்தார்.
சடலத்தை வாங்க மறுப்பு: இந்நிலையில், திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட்ட ஷேக் அப்துல்லாவின் சடலம், கர்நாடக பிஎஸ்எப் வீரர்கள் சார்பில் விமானம் மூலம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சடலத்தைக் கொண்டு வந்தபோது, ஷேக் அப்துல்லா சாவில் மர்மம் உள்ளதால் தீவிர விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில் சடலத்தை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.
இதனால், பிற்பகல் 3 மணியளவில் கொண்டுவரப்பட்ட சடலத்தை இரவு 8 மணிவரை அவர்களது பெற்றோர் பெறவில்லை.
பெற்றோர் பேட்டி 2 மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வந்திருந்த எனது மகன், “உயர் அதிகாரிகள் தொந்தரவு (டார்ச்சர்) அதிகம் உள்ளது’ என தெரிவித்ததாக அவரது தந்தை சையது முகமது ஷா கூறினார். வேலை பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிடு என அவனிடம் தெரிவித்தேன்.
ஆனால், விடுமுறை முடிந்து பணிக்குச் சென்றிருந்த நிலையில் எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.
எனவே சாவில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட்டால்தான் சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்தார்.
மறு பிரேத பரிசோதனை?
பிஎஸ்எப் வீரர் ஷேக் அப்துல்லா இறந்தது குறித்து இரவு 10.45 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இரவு 9.45 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இறப்புச் சம்பவத்தை வேண்டும் என்றே மிகவும் தாமதமாகத் தெரிவித்துள்ளனர் என ஷேக் அப்துல்லா குடும்ப வழக்கறிஞர் ராஜாமுகமது தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில், கழுத்துக்குக் கீழ் 3 துப்பாக்கி குணடுகள் பாய்ந்து தலை (நெற்றிப் பகுதியில்) வழியாக வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுகுறித்து ஆர்டிஓ அளவிலான விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அதுகுறித்த எந்த ஆவணமும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்படவில்லை. எனவே, வீரரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்