Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

DK vs PMK – DMK, Kalainjar Karunanidhi x Pattali Makkal Katchi Ramadoss

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு!

கலி. பூங்குன்றன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

வீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).

இதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா? இவருக்குத் தகுதி உண்டா? என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.

என்னைக் கேட்பதற்கு நீங்கள் யார்? நாங்கள் யார் தெரியுமா? என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.

தோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்!

தனிப்பட்ட பிரச்சினையா?
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும்? காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே!

பிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு? அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா? விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா?

ஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே! திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன்? திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார்? அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா? தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.

உண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா? உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.

அதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு? இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.

எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா? என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.
நாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.

பெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே!

எந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.

யாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம்?. ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

திராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா?
திராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.

திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என்ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.

தந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.
நீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா? வெகுதூரம் போவானேன்? பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா? அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ!

பல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.

சமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா? அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா? திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா?

தந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம்! ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.

பார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்?
பெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே? பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா?

கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது? மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா?

எல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.
(துக்ளக், 15.4.1988)

இப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கைக்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்!
பார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம்! பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது!

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)

பேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா? பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா?

வி.பி. சிங் அழுகிய பழமாம்!
மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.

ஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா?

இதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.

அதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே! அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே!

மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.

ஆள்காட்டி வேலை
ஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க!).

பிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி! (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா? புலிகளின் சரணாகதி என்பதுதான்.

அதைவிட ஒரு துரோகம்! (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா!) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்!

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).

இது துரோகமா? அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா?

10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா?
இத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே! ஆனால், இவருடைய நிலை என்ன? இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது!

இதோ ஒரு எம்டன் குண்டு!
1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா? சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.

போயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா? என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.

சரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா? அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்…! என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா? நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.

இதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.

1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.

அண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆசிரியர் வீரமணிபற்றி எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.

வருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே! திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா?

31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா? நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ! அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா? (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).

பா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்!).
69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.

விடுதலை ஆக தூதுவிட்டது யார்?
எப்படியிருக்கிறது கதை? எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்!

யார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.

கலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாட்டையடி – நினைவிருக்கிறதா?
அரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு! என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.

அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே! அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே!

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்!

நானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்! என்று பறைசாற்றியவரும் இவரே!

அடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ!

எவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.

விபூதி வீரமுத்துசாமி பாணியா?
கருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம்! அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்!

2 பதில்கள் -க்கு “DK vs PMK – DMK, Kalainjar Karunanidhi x Pattali Makkal Katchi Ramadoss”

  1. […] விடுதலை: எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு! – கலி. … […]

  2. RAJAMANI L said

    fitted reply

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: