Feb 29: Eezham, Sri Lanka, LTTE – Updates & News
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுவெடிப்பில் ஏழு பேர் காயம்
![]() |
![]() |
சம்பவ இடம் |
கொழும்பு வடக்கு முகத்துவாரம் அலுத்மாவத்தை இக்பாவத்தை சந்திப்பகுதியில் அமைந்துள்ள மாடிவீடு ஒன்றில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்ட சமயம் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார்.
இந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மூன்று பொலிசார் உட்பட ஏழு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, பொலிசாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே இப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்றும், ஒரு வீட்டினைச் சோதனை செய்வதற்காக பொலிசார் அங்கு நுழைய முயன்ற சமயம், திடீரென அந்த வீட்டிலிருந்து வெளியேவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆண் தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன்னைத்தானே வெடிக்கவைத்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிசாரும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சிவிலியன்களும் அடங்குவதாகவும் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, குண்டுவெடிப்பின்னர் அந்த வீட்டிலிருந்து 9 மில்லி மீட்டர் பிஸ்டல் கைத்துப்பாக்கி ஒன்றினையும் அதற்குரிய தோட்டாப் பெட்டி ஒன்றையும், ஐந்து தோட்டாக்களையும் பொலிசார் கண்டெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் உள்நாட்டு அகதிகளுக்காக 186 லட்சம் டாலர்கள் கோருகிறது யூ.என்.ஹெச்.சி.ஆர்.
![]() |
![]() |
வாகரையில் அகதிகள் |
இலங்கையில் பல்லாண்டுகளாக நடந்துவரும் ஆயுத மோதல்கள் காரணமாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழுந்துவரும் அகதிகளுக்கு உதவுவதற்காக ஒரு கோடியே 86 லட்சம் டாலர்கள் உதவித் தொகை கோருவதாக அகதிகள் நலனுக்கான ஐ.நா.மன்ற உயர் ஆணையர் கூறியுள்ளார்.
இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் இவ்வாறு உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதாக மதிப்பிடப்பபடுகிறது.
இலங்கையின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கான பொது செயல் திட்டத்தின் அங்கமாக கோரப்படும் இந்த நிதி, இடம்பெயர்ந்தவர்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியமர திரும்பிவருபவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிற மக்களின் பாதுகாப்புக்காகவும், தங்குமிட வசதிக்காகவும், உணவு அல்லாத பிற பொருட்கள் வாங்குவதற்கும், அகதி முகாம்களின் நிர்வாகத்திற்காகவும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மார்ச், 2008
மூதூர் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் இடங்களை பார்க்க கோரிக்கை
![]() |
![]() |
இடம்பெயர்ந்த மக்கள் |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 வருடங்களாக அகதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களின் மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சொந்த கிராமங்களைச் சென்று பார்வையிட ஒழுங்குகளைச் செய்து தருமாறு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.
மூதூர் கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகள் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் மீள் குடியேற்றங்களில் தாமதங்கள் ஏற்பட்டன.
இருப்பினும் அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் படி பாடட்டாளிபுரம், நல்லூர், பள்ளிக்குடியிருப்பு ஆகிய பிரிவுகளில் முழுமையாகவும், நவரத்னபுரம், சேனையூர், கட்டைப்பறிச்சான் தெற்கு ஆகிய பிரிவுகளில் ஒரு பகுதியிலும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக சிவில் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே தமது கிராம பிரமுகர்களை உள்ளடக்கிய குழுவொன்றை மீள் குடியேற்றத்திற்கு முன்னதாக சென்று பார்வையிட அழைத்துச் செல்லுமாறு இவர்கள் கோரிக்கையொன்றை முன் வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கூறுகின்றார்.
விடுதலைப்புலிகளின் உடல்கள் கையளிப்பு
![]() |
![]() |
விடுதலைப் புலிகள் |
இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளித்திருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்லவரான பிரிகேடியர் உதயநாணயக்கார கூறும்போது, வவுனியாவில் கடந்த வாரம் கொல்லப்பட்ட 7 விடுதலைப்புலிகளின் உடல்கள் மற்றும் மன்னாரில் இருந்து எடுக்கப்பட்ட பெண் விடுதலைப்புலி உடல் ஒன்றையும் ஒப்படைத்திருப்பதாக கூறினார்.
இதற்கிடையே, இலங்கை இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகோ இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கின்றார். ஆனால் இது தொடர்பான விபரங்களை எதுவும் தெரிவிக்க பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துவிட்டார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மார்ச், 2008
இலங்கையின் வவுனியாவில் வன்முறை
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகர்ப்புறத்திலும், வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் பகுதியிலும் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற இருவேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 4 படையினரும், 6 பொதுமக்களும் காயமடைந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
வவுனியா புகை வண்டி நிலைய வீதியில் கதிரேசு வீதிச் சந்தியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 2 பொலிசாரும் 2 ஊர்காவல் படையினரும் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் 6 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். படையினரை இலக்கு வைத்து சைக்கிள் ஒன்றில் இந்தக் கண்ணிவெடி பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
வவுனியா மன்னார் வீதியில் பம்பைமடுவில் அமைந்துள்ள முக்கிய இராணுவ முகாம் பகுதியில் இராணுத்தினரை இலக்கு வைத்து இன்று ஞாயிற்றுகிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதனையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
மட்டகக்களப்பு உள்ளூராட்சி தேர்தல்கள் கிழக்கு மக்களுக்கு மிக முக்கியமானது – புளொட் தலைவர்
![]() |
![]() |
புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் |
இலங்கையின் கிழக்கே, எதிர் வரும் 10 ம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடை பெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலானது, வடக்கு கிழக்கு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய தேர்தலாக அமையப் போவதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகின்றார்.
தமது கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள அவர், இன்று ஞாயிற்றுகிழமை மாலை அங்கு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பாரியளவு தேர்தல் வன்முறைகள் இது வரை இடம் பெறாது விட்டாலும், தேர்தல் தினமன்று என்ன நடக்கும் என்பதை தற்போதைக்கு ஊகிக்க முடியாதிருப்பதாகவும், ஆயுத நடமாட்டங்கள் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என்ற உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் பிக்கு உண்ணாவிரதம்
![]() |
![]() |
உண்ணாவிரதமிருக்கும் பிக்கு |
விடுதலைப் புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்கு ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குருவான அம்பிட்டியே சுமனரத்ன தேரோவே இந்த போராட்டத்தை இன்று ஆரம்பித்துளார்.
ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரோவினால் தனக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் செய்யப்பட்டுள்ள புகாரொன்றில் விடுதலைப் புலிகளுடன் தன்னை தொடர்புபடுத்தியிருப்பதாக கூறும் அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை வாபஸ் பெற வேண்டும், அது மட்டுமன்றி இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி தொலைபேசி ஊடாக எல்லாவெல மேத்தானதந்த தேரோவிற்கு தன்னால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் முற்றாக நிராகரித்தார்.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மார்ச், 2008
விடுதலைப்புலிகளின் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் பாலைக்குழி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர சண்டையில், ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும், உயிலங்குளம் சோதனைச்சாவடி தொகுதியில் விடுதலைப் புலிகளின் பொருட்களை மாற்றி ஏற்றும் நிலையம் அமைந்திருந்த இடம் உட்பட ஒன்றரை கிலோ மீற்றர் நீளமான வீதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
எனினும் பாலைக்குழி பகுதியில் இன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 10.30 மணிவரையில் இரு தரப்பினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றதாகவும், எம்.ஐ 24 ரக உலங்கு வானூர்திகளும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அப்பகுதியில் இராணுவம் முன்னேறியிருக்கின்றதா என்பது குறித்த தகவல்களை வெளியிடவில்லை.
![]() |
![]() |
விடுதலைப்புலிகள் |
ஆனால், இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனிடையில் மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் அமைந்துள்ள தட்சணாமருதமடு பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்ப்பதற்காக, உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 4 சிவிலியன்கள் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச்சம்பவம் குறித்து மீண்டும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் இல்லை, அங்கு படையினர் நடவடிக்கையில் ஈடுபடுவதும் இல்லை எனப் பதிலளித்தார்.
இலங்கையில் காணாமல் போனவர்களில் பலர் திரும்பிவிட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகிறது
![]() |
![]() |
காணாமல்போன தனது உறவினரின் படத்தை ஏந்தியவாறு ஒரு பெண் |
இலங்கையில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் திரும்பி வந்து விட்டதாக காணாமல் போதல் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தனி நபர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இதுவரை ஏழாயிரத்து நூற்று முப்பது பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அறிவித்த இந்த ஆணைக்குழுவின் ஆணையரான, மஹாநாம திலகரட்ண அவர்கள், இவற்றில் 6543 பேரது விடயங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6633 பேர் ஏற்கனவே வீடு திரும்பி விட்டதாக தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.
அதேவேளை 525 பேர் கடத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 295 பேரது விடயங்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதில், 250 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முடிவடைந்த புலன்விசாரணைகளைக் கொண்டு பார்க்கும் போது, இந்த காணாமல் போனவர்கள் குறித்த விவகாரத்தில் பாதுகாப்புப்படையினருக்கோ அல்லது பொலிஸாருக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று தெரியவந்திருப்பதாகவும் திலகரட்ண குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரங்கள் பொலிஸ் சம்பந்தப்பட்டவை என்பதால் இவை குறித்து ஆணைக்குழு விசாரிப்பதற்கான தேவை எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் கருத்துக்களை மறுக்கிறார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
மட்டக்களப்பு தேர்தல் மனு குறித்த தீர்ப்பு
![]() |
![]() |
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில், இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, அங்கு செயற்படும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், வாக்களிப்பு முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட வேண்டும், அரச சொத்துக்களின் துஸ்பிரயோகம் நிறுத்தப்பட வேண்டும் போன்றவற்றை முன்வைத்தே பவ்ரல் அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவில் எதிர்த்தரப்பினராக, தேர்தல் ஆணையர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைப்பு, பொலிஸ் மா அதிபர் உட்பட 35 பேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விடயங்கள் குறித்து ஏதேனும் தேவைகள் இருப்பின் தேர்தல் ஆணையருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அவற்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அத்துடன் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிடும் அதிகாரம் தேர்தல் ஆணையருக்கே இருக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மட்டக்களப்பு நகரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, இன்று தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே இந்தப் போராட்டத்தை கைவிட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புபடுத்தி பொலிஸில் செய்யப்பட்ட புகார் ஒன்றை அடுத்தே இவர் இந்த உண்ணாவிரதத்தை நேற்று ஆரம்பித்திருந்தார்.
—————————————————————————————————
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 மார்ச், 2008
கடந்த பிப்ரவரி மாதத்தில் மாத்திரம் 104 இலங்கைப் படையினர் பலி என இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான மோதல்களில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைப் படையினரும் மற்றும் பொலிஸாருமாக 104 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
தவிர 822 பாதுகாப்புப் படையினர் இந்த மோதல்களில் காயங்களுக்கு உள்ளானதாக, புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில், அவசரகால நிலையை நீடிப்பதற்கான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய இலங்கை அமைச்சரும், அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
படையினரின் இழப்புக்கு அப்பால், இந்த ஒரு மாத கால மோதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை, அவசரகாலச் சட்டம் 88 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
![]() |
![]() |
பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர் |
இதற்கிடையே இலங்கையின் வடக்கே வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் நான்காம் கட்டை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது புதன்கிழமை காலை நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு பொலிசார் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுப் போக்குவரத்தின்றி மூடப்பட்டுள்ள இந்த வீதியில் இடம்பெற்றுள்ள இந்த கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் காரணமாக இப்பிரதேசத்தில் காலையில் பெரும் பதற்றம் நிலவியது.
இளைஞர்கள் கொலை தொடர்பில் நீதிமன்றில் இராணுவத்தினர்
![]() |
![]() |
வவுனியா நீதிபதி இளஞ்செழியன் |
அதேவேளை, வவுனியா தவசிகுளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 5 இளைஞர்களின் கொலைகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இவர்களை இராணுவ சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கிணங்க, வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரையில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பில் தடுத்துவைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட 5 இளைஞர்களில் ஒருவர் வழங்கிய மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய, இந்த 6 இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதனால், இவர்களை இராணுவ பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்க உத்தரவிடுமாறு இராணுவத்தின் சார்பில் ஆஜராகிய இராணுவ சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்தக் கொலைகள் தொடர்பான புலன் விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
——————————————————————————————
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மார்ச், 2008
இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகள் தொடர்பான சர்வதேச கண்காணிப்புக் குழு பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது
இலங்கையில் நடந்த படுகொலைகள் உள்ளிட்ட பாரிய அளவிலான 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட தேசிய விசாரணைக் குழுவின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக, சர்வதேச முக்கியஸ்தர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழு, தனது பணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்திருக்கிறது.
Action contre la faim என்ற பிரஞ்சு தொண்டு நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டது, பள்ளிப் படிப்பு நிறைவடைந்ததை கொண்டாடிக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் திருகோணமலையில் கொல்லப்பட்டது போன்ற பெரிய அளவிலான கொலைச் சம்பவங்களை, இலங்கை ஜனாதிபதி நியமித்த தேசிய விசாரணைக் ஆணையம் எவ்வாறு விசாரிக்கிறது என்று மேற்பார்வையிட வேண்டியது இந்த சர்வதேச மேற்பார்வைக் குழுவினரின் பணியாகும்.
தமது கண்காணிப்புப் பணிகளுக்கு இலங்கை அரச அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் என்றும், அரசின் விசாரணை முறைகளில் குறைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் இக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதி சர் நைஜல் ரோட்லி குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்த மேலதிக விபரங்களையும், சர் நைஜல் ரோட்லி பிபிசிக்கு வழங்கிய பேட்டியையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி
![]() |
![]() |
கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் |
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.சிவநேசனும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு கொழும்பில் இருந்து வன்னிப் பிரதேசத்தில் மல்லாவி பகுதியில் உள்ள தமது வீட்டுக்கு அவர் திரும்பிச் சென்ற வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வவுனியா ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற இவரது வாகனம் ஓமந்தையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் மல்லாவி வீதியில் உள்ள ஓரிடத்தில் கிளேமோர் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கியுள்ளது.
இந்த குண்டுத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுறுவும் அணியைச் சேர்ந்த படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதனால் அதற்கான பொறுப்பை விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டும் என இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.
இன்றைய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசனுக்கு வயது 51. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் தீவிரமடைந்த கடந்த சுமார் 2 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் வாகனத்தைச் செலுத்திச் சென்று உயிரிழந்த வாகன சாரதியாகிய 27 வயதுடைய பெரியண்ணன் மகேஸ்வரராஜா வவுனியா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவராவார்.
ஆட்கடத்தல்கள் மோசமாக அரங்கேறும் இடம் இலங்கை: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்
![]() |
![]() |
உலகில் மிக மோசமான அளவில் ஆட்கடத்தல்களைச் செய்யும் அமைப்பாகியுள்ளது இலங்கை அரசு என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
2006ல் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களுமாக நூற்றுக்கணக்கானோரைக் கடத்தியுள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையை ஒரு தேசிய நெருக்கடி என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வருணித்துள்ளது.
முக்கியமாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடிக்கடி கடத்தப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இவர்களின் கடத்தலுக்கு பெரும்பான்மைக் காரணமாக அமைந்துள்ளது.
கடத்தப்பட்டவர்களில் பலர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது. ஆட்கடத்தலுக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அரசு கிஞ்சித்தும் உறுதியாக இல்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் குற்றச்சாட்டு மற்றும் அது குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் ஆகியவை தொடர்பாக எமது கொழும்பு செய்தியாளர் தரும் செய்திக் குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தல்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்குடா நாமகள் விதிதியாலயத்தில் ஜி.சி.ஈ. கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
வாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்னியோ தங்களுக்கு தெரியாது என்று கூறும் உறவினரக்ள், மனிதாபிமான ரீதியில் இவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகின்றனர்.
கடத்தப்பட்ட மாணவிகளின் உறவுகள் வெளியிடும் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்