Feb 28: Eezham, Sri Lanka, LTTE – Updates & News
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 29, 2008
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீட்டு முயற்சிகளுக்கு இந்தியா தலைமை: ஜே.வி.பி
இலங்கையில் தமிழ் பிரிவினைவாதத்தினை வளர்த்து, 1980 களில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் இந்தியா வழங்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி, இந்தியா தற்போது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் இடம்பெறுவதற்கு முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.
புதன்கிழமையன்று இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்துவெளியிட்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, புதுடெல்லியுடன் சேர்த்து இந்தக் கொடிய சர்வதேச தலையீடு எனும் கூட்டுமுயற்சியில், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரிவித்தார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுமுயற்சிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் எதனையும் தமது அமைப்பு ஏற்றுக்கொள்ளமாட்டாது என்று தெரிவித்த சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் 13வது திருத்தச் சட்டமூலத்தினை அடிப்படையாகக் கொண்ட எந்த யோசனைகளையும் தாம் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் ஆட்சியிலுள்ள தற்போதைய அரசின் நன்மதிப்பு என்பது மக்கள் மத்தியில் நலிவடைந்து செல்வதாகத் தெரிவித்த அவர், ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கெதிராக அரசாங்கத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவு உண்டென்றும் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கிளெமோர் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் பலி
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்களில், 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தக் குண்டுத் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரே நடத்தியிருப்பதாகவும், இரண்டு சம்பவங்களிலும் உழவு இயந்திரங்களில் சென்றவர்களே கொல்லப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றின் மூலம் கூறியிருக்கின்றார்கள்.
எனினும் இந்தத் தாக்குதல்களைத் தாங்கள் செய்யவில்லை என இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் பனங்காமம் பிரதேசத்தில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்த 4 பேரும், சில மணித்தியாலங்களின் பின்னர் நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள மருதமடு என்னுமிடத்தில் இருந்து ஒலுமடு என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 4 சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தச்சம்பவங்கள் குறித்து இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது படையணியினர் எவரும் நேற்று வன்னிப்பிரதேசத்தினுள் செல்லவில்லை எனக் கூறிய அவர் இந்தத் தாக்குதல்களுக்கும் இராணுவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்