Sripathi Sooriyaarachchi killed in accident – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 11, 2008
இலங்கையின் வடக்கில் கடும் மோதல்
![]() |
![]() |
மடு தேவாலயம் |
இலங்கையின் வடக்கில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்ற சண்டைகளில் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாக படைவட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
எனினும் மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமது எதிர் தாக்குதல்களின் மூலம் முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள்
தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் இந்த மோதல்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பக்கசார்பற்ற தரப்புக்களில் இருந்து தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.
மன்னார் மடுக்கோவிலைச் சூழ்ந்த பிரதேசங்களில் இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் கடும் மோதல்களில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலைமை குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த மடுக்கோவில் பரிபாலகர் அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்கள், கடந்த இரண்டு தினங்களாக பண்டிவிரிச்சான் பகுதியில் கடுமையான மோதல்கள்
இடம்பெற்று வருவதை தங்களால் உணர முடிந்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்களோடு நேரடி மோதல்களில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருப்பதற்கு அடையாளமாக துப்பாக்கிச் சூட்டுப் பரிமாற்றச் சத்தங்களையும் தங்களால் கேட்கக் கூடியதாக இருப்பதாகவும் அருட்தந்தை எமிலியாஸ் பிள்ளை கூறுகின்றார்.
மடுக்கோவிலின் அருட்தந்தையர் மற்றும் அருட்பணியாளர்களுடன் மடுக்கோவில் பகுதியில் 50 குடும்பங்கள் இருப்பதாகவும், இவர்கள் பெரும் பதட்டத்துடன் அச்சத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகவும், எனினும் மடுக்கோவிலை விட்டு தாங்கள் வேறு எங்கும் செல்வதாக இல்லை என்றும் அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை கூறுகின்றார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையில் அதிகரித்துள்ள தாக்குதலால் பொதுமக்களுக்கு பாதிப்பு – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
இலங்கையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் இடம்பெற்று வரும் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவங்களானது பொது மக்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் சர்வதேச செஞ்சிவைச் சங்கம் கூறுகின்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அதிகரித்த மோதல்களினால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகரித்துச் செல்லும் வன்முறைகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தாம் அதிக கரிசனை கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டூன் வன்டன்ஹோவ் கூறியிருக்கின்றார்.
வடக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் மனித நேய பணியாளர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவித்திருப்பதுடன் நிவாரண உதவி விநியோகத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் சிறிபதி சூரியாராச்சி பலி
![]() |
![]() |
விபத்தில் சிக்கிய வாகனம் |
இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் அமைப்பாளருமான சிறிபதி சூரியாராச்சி சனிக்கிழமையன்று அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.
வேகமாகச் சென்றுகொண்டிருந்த இவரது சொகுசு ஜீப் வாகனம் வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இவருடன் சென்று கொண்டிருந்த மேலும் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் இவரது மெய்ப்பாதுகாப்பாளர்கள் இருவர் படுகாயமடைந்து தம்புத்தேகம மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 2007 ம் ஆண்டு பிப்ரவரி 9ம் திகதி அன்று அமைச்சர்கள் சிறிபதி சூரியாராச்சி, மங்கள சமரவீர, மற்றும் அனுர பண்டாரநாயக்க ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்கள்.
ஆளும் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அதிலிருந்து முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவுடன் வெளியேறிய இவர், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவினை அமைத்து ,பிரதான எதிர்க்கட்சியுடன் இணைந்து போட்டி அரசியலில் ஈடுபட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மதவாச்சி வீதிச்சோதனையில் புதிய நடைமுறைகள் காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக புகார்
![]() |
![]() |
வவுனியா இரயில் நிலையம் |
இலங்கையின் வடக்கே அனுராதபுரத்திற்கும் வவுனியாவுக்கும் இடையில் அமைந்துள்ள மதவாச்சி நகரில் உள்ள முக்கிய வீதிச்சோதனையில் கடந்த ஒரு வாரகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தீவிரமான பாதுகாப்புச் செயற்பாடுகள் காரணமாக கெப்பிட்டிகொல்லாவ, பதவியா மற்றும் வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சோதனைச்சாவடி ஊடாக பாதுகாப்பு பிரிவினரின் வாகனங்கள் தவிர்ந்த வேறு எந்த வாகனங்களும் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
கொழும்பிற்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த வடபகுதிக்கான ரயில் சேவையும் மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
மதவாச்சி வீதிச்சோதனைச்சாவடி ஊடாக சைக்கிள், மோட்டார் சைக்கிள் உட்பட தனியார் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் நடந்து செல்வதற்கு மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சோதனைச்சாவடியின் இரு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டு, பிரயாணிகள் சோதனையிடப்பட்டதன் பின்னர் மறுபக்கத்தில் உள்ள வாகனங்களில் ஏறி பிரயாணம் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் எடுத்துச் செல்லப்படுகின்ற உற்பத்திப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் என்பனவும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு சோதனையிடப்பட்டதன் பின்னர் மறுபக்கத்தில் உள்ள வாகனங்களில் மாற்றி ஏற்றி கொண்டு செல்லப்படும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வாகனங்களில் வெடிப்பொருட்கள் மற்றும் கிளேமோர் கண்ணி வெடி குண்டுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தும், தம்புள்ளை, கொழும்பு மற்றும் தென்பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்தும், இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
வர்த்த முதலீடு குறித்து ஆராய இந்திய உயர்தூதுக்குழு இலங்கை வருகை
![]() |
![]() |
இந்திய வர்த்தக இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் |
இலங்கையில் இந்திய வர்த்தக முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக இந்திய இணைவர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான உயர் வர்த்தக தூதுக்குழுவொன்று ஞாயிற்றுகிழமை கொழும்பு வந்தடைந்திருக்கிறது.
சுமார் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இங்கு வந்துள்ள இந்தத் தூதுக்குழு, திங்கட்கிழமை இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் சரத் அமுனுகம, பிரதி அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் முதலீட்டுச் சபையின் உயர்பிரதிநிதிகளுடன் இலங்கையில் இந்திய முதலீட்டிற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயவிருக்கின்றது.
இந்த விஜயம் குறித்து பி.பி.சி தமிழோசைக்கு அளித்த விசேட பேட்டியின்போது கருத்து வெளியிட்ட இந்திய வர்த்தக இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவின் முக்கிய பல தனியார் அமைப்புக்கள் இலங்கையில் வர்த்தக முதலீடு செய்வதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மூதூரில் இருந்து வெளியேறிய மக்களிடம் விரும்பிய இடத்தை தேர்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது
![]() |
![]() |
இடம்பெயர்ந்த மக்கள் |
கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் ஏற்கனவே வசித்து வந்த குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்துவது என்று அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின் பேரில் விரும்பிய இடத்தை தெரிவு செய்யுமாறு அக்குடும்பங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
சம்பூர் கிழக்கு-மேற்கு, கூனித்தீவு, நவரத்தினபுரம், கடற்கரைச்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் வடக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களிடம் இதற்கான எழுத்து மூல சம்மதம் பிரதேச செயலாளர்களினால் கேட்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கிழக்கு புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் எம்.சி.எம்.ஷரீப், ஏற்கனவே அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கு பள்ளிக்குடியிருப்பிலும், இறால்குளியிலும் காணி அடையாளம் காணப்பட்டு, அடிப்படை வசதிகளுடன் புதிய குடியிருப்பு வசதிகள் அவர்களின் சம்மதத்துடன் ஏற்படுத்தப்பட்டவிருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.
இக்கிராமங்களைச் சேர்ந்த 2500 குடும்பங்கள் 2006 ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்து கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் தங்கியிருக்கின்றனர்.
மருத்துவ வாகனங்களின் போக்குவரத்து அனுமதி கோரி வவுனியா மருத்துவ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே வவுனியாவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் ஏ9 வீதியில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த வாகனங்கள், டாக்டர்களின் அலுவலக மற்றும் தனியார் வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவத்றகான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கோரி வவுனியா, மன்னார் அரச வைத்தியசாலைகளைச் சேர்ந்த டாக்டர்கள். தாதியர் மற்றும் ஊழியர்கள் இன்று காலை இரண்டு மணித்தியால அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
மதவாச்சி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்து தமக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என தெரிவிக்கும் அரச வைத்தியர்கள், அத்தியாவசிய சேவையாகிய உயிர் காக்கும் வைத்திய சேவையை சீரான முறையில் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோருகின்றனர்.
இது குறித்து இலங்கை அரச வைத்தியர் சங்கத்தின் மன்னார் பிராந்திய தலைவர் டாக்டர் அரவிந்தன் அவர்கள் தமிழோசைக்குத் தெரிவித்துள்ள கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இதனிடையே, இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று இடம்பெற்ற இரு வேறு கிளெமோர் தாக்குதல்களில் இரு பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு பொலிஸ்காரர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 பிப்ரவரி, 2008
வவுனியாவில் கடையடைப்பு
வடக்கில் நடைபெற்ற சில தாக்குதல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கு முகமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு ஒரு அநாமதேய கடிதத்தில் கேட்கப்பட்டதை அடுத்து வவுனியா நகரில் பல கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், எனினும் புளொட் அமைப்பினரின் முயற்சியை அடுத்து கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மறுமொழியொன்றை இடுங்கள்