Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008
முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!
அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.
அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.
பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.
ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.
மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.
உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.
நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.
இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?
சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.
நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?
உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?
தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.
மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.
கவிதையில் நாட்டம் ஏன்?
ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.
எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.
கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.
மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.
சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?
டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?
பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.
என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.
இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.
படங்கள் : ஏ.எஸ். கணேஷ்
This entry was posted on பிப்ரவரி 4, 2008 இல் 6:00 பிப and is filed under Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்