Herbs & Naturotherapy: Mooligai Corner – Thaanrikkai
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 3, 2008
மூலிகை மூலை: அம்மை நோய் தீர்க்கும் தான்றிக்காய்!
தான்றிக்காய் மர இன வகுப்பாகும். இதன் காய், இலை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. துவர்ப்புச் சுவை உடையது. வெப்பத்தை அதிகரிக்கும்.
வேறு பெயர்கள்:
அகசம், அக்கம், அக்கந்தம், அக்கத்தான், அம்பலத்தி, ஆராமம், அக்காத்தான் அமுதம், எரிகட்பலம், கந்தகிட்பலம், கந்துகன், கலித்துருமம், களத்தூன்றி, சதகம், தாபமாரி, தான்றிக்காய், வாத்தியம், வித்தியம், விபீதகம், திறிலிங்கம், பூதவாசகம்.
ஆங்கிலத்தில் :
Terminalia bellirica (Gaertner), Roxb; Combreteceae
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
தான்றிக் காயை கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து சிறிது சர்க்கரை கலந்து 2 வேளை சாப்பிட்டு வர, மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்த மூலம், சீதபேதி குணமாகும்.
தான்றிக் காய்ப் பொடி 3 கிராமுடன் அதே அளவு சர்க்கரை கலந்து வெந்நீரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர பித்த நோய்கள், வாய் நீர் ஒழுகல், கண் பார்வை குணமாகும். தான்றிக்காயை நீர் விட்டு அரைத்துப் புண், அக்கியின் மேல் பூச்சாகப் பூசி வர எரிச்சல் தணிந்து குணமாகும். தான்றிக் காயைச் சுட்டுப் பொடியாக்கி சமஅளவு சர்க்கரை சேர்த்து 1 தேக்கரண்டி வெந்நீரில் 2 வேளை சாப்பிட்டு வர நீர் ஒழுகுவது, பல் வலி குணமாகும்.
தான்றிக் காயைப் பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடி 10 கிராம் எடுத்து 300 மில்லி நீரில் போட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தேன் 10 கிராம் கலந்து சாப்பிட இரைப்பு தணியும்.
தான்றிக்காய்த் தளிரை இடித்துச் சாறு பிழிந்து 20 மில்லியளவு 3 வேளை குடித்து வர தொண்டைக் கட்டு, கோழை கட்டல், மேல் மூச்சு வாங்கல் குணமாகும்.
தான்றிப் பருப்பை அரைத்து புண்பட்ட இடங்களில் பூசக் குணமாகும். தான்றிப் பொடி, பாறையுப்பு, திப்பிலிப் பொடி சம அளவாக 30 கிராம் எடுத்துப் பொடியாக்கிச் சாப்பிட தொண்டைக் கமறல் நீங்கும்.
தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக்காய் சம அளவாகக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 300 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி ஆறிய பிறகு புண்களைக் கழுவி வர புண்கள் விரைவில் ஆறும்.
மறுமொழியொன்றை இடுங்கள்