Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 31st, 2008

Japanese envoy warns Sri Lanka of aid cut if war escalates

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்தால் நிதியுதவி நிறுத்தப்படலாம் என ஜப்பான் அறிவிப்பு

இலங்கையில் இந்த மாதத்தின் முற்பகுதியில் அரசு போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு அங்கு இடம் பெற்றுகின்ற வன்முறைகள் மேலும் அதிகரிக்குமாயின் அந்நாட்டுக்கு அளிக்கப்படும் நிதி உதவிகளை நிறுத்த நேரிடலாம் என ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதர் யஷூஷி அகாஷி எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினை ஜப்பான் தான் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடருமாயின், ஜப்பான் தான் அளித்துவரும் நிதியுதவி குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அகாஷி தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், இலங்கையில் இன்னும் பல தசாப்பதங்களுக்கு இலங்கையுடன் உறவுகளை பேணவே தமது அரசு விரும்புகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


இலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது.

இலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே போல பிரிட்டன் 3 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் கடன் நிவாரணத்தை இடை நிறுத்தி வைத்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் – 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையேயான கால கட்டத்தில் 110 பேர் காணமல் போயுள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்றும் கூறியுள்ளது.

இந்த கடத்தல்களுக்கு அரச படைகளும், அரச படைகளுடன் இணைந்து செயல்படும் ஆயுதக் குழுக்களும் காரணமாக இருக்கிறது என்று அது கூறியுள்ளது.

ஹ்யூமன் ரைட் வாட்ச் அமைப்பின் அறிக்கை குறித்த மேலதிகத் தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


கொழும்பிலுள்ள தமிழர்களிடம் போலீசார் தகவலைத் திரட்டுவதால் அவர்களிடம் அச்சம் நிலவுகிறது எனத் தகவல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் யோகராஜன்
யோகராஜன் (இடது புறத்தில்)

கொழும்பின் வடக்குப் பகுதியிலிருக்கும் மோதரைப் பகுதியிலிருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு, மோதரைப் போலீஸ் நிலையத்தின் மூலமாக அரசாங்க முத்திரைகள் ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டிருக்கும் ஒரு படிவத்தின் காரணமாக அங்குள்ள தமிழ் குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த துணைத் தலைவரான யோகராஜன், இந்த படிவத்தில் பெயர், விலாசம், வங்கிக் கணக்குத் தகவல்கள், சாதி உட்பட பல விடயங்கள் கோரப்பட்டுள்ளன எனக் கூறுகிறார். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் விபரங்களும் அதில் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வாறு பெறப்படும் தகவல்கள் சமூக விரோதிகளின் கைகளில் கிடைக்குமாயின் அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் யோகராஜன் மேலும் தெரிவிக்கிறார். ஒவ்வோரு தனி நபரும் இவ்வாறாக கேட்கப்படும் விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்கிற நியதி எந்த சட்டத்திலும் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

தாம் போலீஸ் உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து யோகராஜன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

 


இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தல்

கொழும்பில் இடதுசாரிகள் போராட்டம்
கொழும்பில் இடதுசாரிகள் போராட்டம்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று அங்கு நடக்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இடதுசாரி முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சிகளின் பரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இடது சாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்ணவில்ன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் போரினை நிறுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாட்டில் நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா கூறினார்.

இதே கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றொருஉறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு யுத்தத்துக்காக இந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கிறது என்றும் அதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுமே பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.

 


Posted in Aid, Ceasefire, Colombo, Donor, Economy, Eelam, Eezham, Finance, HR, Japan, Left, LTTE, Peace, Sri lanka, Srilanka, US, USA, Violence, War | Leave a Comment »

Viduthalai Editorials: BSE brokers blame bull vaastu for bear maul – Bull on Dalal Street

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

பங்குச் சந்தையும் – மூடத்தனமும்!

பங்குச் சந்தையில் பணம் புரளும் விசயத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது உலகம் முழுக்க ஏற்படும் வழமையான நிலைதான். கடந்த வாரத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது என்பது செய்தித் தாள்களில் வந்த செய்தி. லட்சணக்கணக்கான கோடிகளில் சொத்து வைத்திருப்பவர்களின் பங்கு மதிப்பு பேப்பரில் குறைந்துவிட்டது. அன்றாடக் கூலிக்காரரின் வாழ்வை இது பாதித்துவிடப் போவதில்லை எந்த வகையிலும்! பேரம் நடத்துபவர்கள், தரகர்கள், வர்த்தகச் சூதாடிகள் வேண்டுமானால் இழப்பைச் சந்திக்கலாம்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு படிப்படியாக பங்குச் சந்தைப் புள்ளி உயர்ந்து கொண்டே போனபோது மகிழ்ச்சிக் கடலில் மிதந்தவர்கள் இப்போது மட்டும் துக்க சாகரத்தில் மிதப்பதுபற்றிக் கவலைப்படலாமா? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சில மாதங்களுக்கு முன்பு, ஒருவர் கேள்வி கேட்டபோது தமிழர் தலைவர் கூறினார்: இது கோடீசுவரர்களின் பிரச்சினையே தவிர, நமக்குச் சம்பந்தம் இல்லாதது எனக் கூறிப் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார்.

இப்போது மட்டும் சம்பந்தம் வந்துவிட்டதா? பொருள் அடிப்படையில் இல்லை என்றாலும், அறிவு அடிப்படையில் சம்பந்தம் வந்துவிட்டது!

பங்குச் சந்தை ஏறுமுகமாக இருந்தால் காளை (bull) என்பார்கள். இறங்குமுகமாக இருந்தால் கரடி (bear) என்பார்கள். எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கவேண்டும் என்பதற்காக, ஒரு காளை பொம்மையைப் பங்குச் சந்தை அலுவலகத்தில் வைத்திருக்கிறார்கள். அதுவும் கடந்த 12 ஆம் தேதிதான் வைத்தார்கள். மூன்று அடி உயரச் சிலை.

பங்குச் சந்தைக் கட்டடத்தின் வாயில் பக்கம் தன் பின்பக்கத்தைக் காட்டிய நிலையில், கட்டடத்தை விட்டு வெளியேறுவதுபோல இருக்கிறது எனக் கூறி அதை மாற்றி வைக்கவேண்டும் என்றார்களாம். இம்மாதிரி சிலை இருக்கும் திசை சரியாக இல்லாததால்தான், பங்குச் சந்தையில் பங்குகள் அடி வாங்குவதாகத் தரகர்கள் கூறுகிறார்கள். ஏற்ற இறக்கத்தால் நேரடியாகப் பலனோ, நஷ்டமோ அடையும் இவர்களுக்குத்தானே இதைப்பற்றிக் கவலை!

மூட நம்பிக்கை அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இரண்டாவது பொருளாக உள்ளது. முதல் பொருள் கரப்பான்பூச்சி. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இது இருக்கிறது. வாஸ்துப்படி காளைச் சிலையைக் கட்டடத்தின் தென்மேற்குப் பகுதிக்கு மாற்றவேண்டும் என்று ஒரு சிலர். இதே இடத்திலேயே வடக்குப் பக்கத்தை நோக்கியவாறு திருப்பி வைத்தால்போதும் என்று சில பேர். இந்த மூடர்களுக்குள் நம்பிக்கை ஒரே மாதிரியாக இருந்தாலும், பரிகாரம் மாறுபடுகிறது!

திறக்காத கதவுக்கு எதிரில் சிலை வைத்ததற்கே இந்தப் பாடு என்றால், வாசலில் வைத்திருந்தால் என்ன சொல்வார்கள்?
– அரசு

காளைச் சிலையால் பங்குச் சந்தை வீழ்ச்சியா?

மூட நம்பிக்கை – படிக்காத பாமர மக்கள் மத்தியில் மட்டுமா? – பட்டம் பெற்ற மனிதர்கள் மத்தியிலும்கூட ஆழ மாகப் பதிந்து இருக்கிறது என்பதற்கு ஆதாரத்தைத் தேடிக்கொண்டு ஓடவேண்டியதில்லை. இரு நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு செய்தியே போதுமானது.

கடந்த வாரம் – பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது. அதனால் ஒரு கலவரமான மனப்பான்மை கூட பொதுவாக பொருளாதார வட்டாரத்தில் நிலவியது உண்மையாகும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு என்பது பொருளா தாரம் அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இத்தகைய சரிவுகள் அவ்வப்போது ஏற்படக்கூடியவைதான்; இந்தியாவில் மட்டுமல்ல – உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெறக் கூடியவைதான்.

ஆனால், இந்தியாவில் இருக்கக் கூடிய படித்தவர்கள் – தங்களிடம் பதிந்துள்ள மூட நம்பிக்கையின் காரணமாக, திடீர் என்று ஒன்றைக் கண்டுபிடித்தார்களே பார்க்கலாம்!

மும்பையில் உள்ள பங்குச் சந்தை அலுவலகத்தின் இரண்டாவது கதவை நோக்கி வெண்கலத்தால் ஆன காளைச் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலை சரியான வாஸ்து சாஸ்திரப்படி நிறுவப்படாததால்தான் பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று மனப் பிராந்தியில் உளறிக் கொட்டியிருக்கின்றனர்.
காளையின் பின்புறம் – பங்குச் சந்தையை நோக்கியி ருக்கிற
தாம். பங்குச் சந்தையிலிருந்து காளை மாடு வெளி யேறுவதுபோல் உள்ளதால், அதற்கு மாறாக பங்குச் சந்தை அலுவலகத்தை நோக்கி காளையின் முகம் இருக்க வேண்டுமாம் – இப்படிக் கதைத்தவர்கள் பலர்.

இந்தக் காளையை நிறுவிய சிற்பி – இந்தப் படித்த பாமரர்களின் முகத்தை வீங்க வைக்கும் அளவுக்குச் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார். கோலாப்பூரைச் சேர்ந்த பகவான் ராம்பூர் என்ற சிற்பி சொன்னார்: அமெ ரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது; இதற்கும் காளை மாட்டுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை; சம்பந்தம் இருப்பதாகக் கூறுவது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்று பளார் என்று பதில் சொன்னார்.

காளைச் சிலை, வாஸ்து சாஸ்திரப்படி வைக்கப்பட வில்லை என்பது உண்மையானால், சில நாள்களிலேயே பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டு விட்டதே – அது எப்படி சாத்தியமானது? காளைச் சிலை அப்படியேதானே – இருந்த இடத்தில்தானே இருக்கிறது.

பிரச்சினைக்கான காரணத்தை, அறிவு கொண்டு நுட்பமாக ஆய்வதுதான், மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமாகும்.

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்றால், எந்த வீட்டிலும் கழிவறை கட்ட முடியாதே – காரணம் வாஸ்துவில் கழிவறைக்கோ, நூலக அறைக்கோ இடமில்லையே!
இதிலிருந்து ஓர் உண்மை தெரியவில்லையா? காட்டு விலங்காண்டிக் காலத்தில் யாரோ ஓர் ஆரியன் கட்டிவிட்ட கரடி என்பது விளங்கவில்லையா?

அண்டகாசுரனுக்கும், சிவபெருமானுக்கும் சண்டையாம்; சிவன் உடலிலிருந்து சிந்திய வியர்வை பூமி மீது விழுந் ததாம். உடனே பார்ப்பனப் புராணங்களில் நெளியும் ஆபா சப்படி, சிவபெருமானின் வியர்வைக்கும் – பூமாதேவிக்கும் ஒரு பிள்ளை பிறந்ததாம் – அவன்தான் வாஸ்து புருஷனாம்.

இந்தக் கதையின் யோக்கியதை எப்படி அறிவுக்கும் ஆய் வுக்கும் பொருந்தாதோ, அதேதான் இவனால் உருவாக் கப்பட்டதாகக் கூறும் வாஸ்து சாஸ்திரத்தால் அறிவின்முன் ஒரு நொடிகூட நிற்க முடியாது.

அளவுகோல்கள், மட்டக் கோல்களுக்குக்கூட வருண தர்மப்படி வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன.

பார்ப்பானுக்கு வெள்ளை நிறம், சத்திரியர்களுக்கு சிவப்பு நிறம், வைசியர்களுக்கு கறுப்பு நிறம், சூத்திரர்களுக்குக் கறுப்பு அல்லது பாசி படர்ந்த காட்டு மண்ணில்தான் வீடு கட்டவேண்டுமாம்.

இதற்குமேல், இந்த வாஸ்து சாஸ்திரத்தின் யோக்கிய தைக்கு விளக்கமும் தேவையோ!
பார்ப்பானின் கைச்சரக்கு அனைத்திலும் உண்டு; அதனைத் தூக்கி எறிவதற்குத்தான் மான உணர்ச்சியும், அறிவு உணர்ச்சியும் தேவை.

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்று தந்தை பெரியார் கூறுவதன் பொருள் இப்பொழுது புரிகிறதா?

Posted in bear, Belief, Brokers, Bull, Culture, Economy, Exchanges, Finance, Heritage, Hindu, Hinduism, Hindutva, markets, Religion, Returns, Risk, Shares, Speculation, Stocks, Traders, Vaasthu, Vaastu, Viduthalai | Leave a Comment »

Ravikumar MLA: Sri Lanka Navy’s underwater defence system in the North

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

கடலுக்குள் கண்ணி வெடி! – ரவிக்குமார் எம்.எல்.ஏ.

‘வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு’ என்று வாழும் மீனவ மக்களின் பிழைப்பில் இப்போது நெருப்பை அள்ளிப்போட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் கச்சத் தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே கடலில் கண்ணி வெடிகளை இலங்கைக் கடற்படை இப்போது மிதக்கவிட்டிருக்கிறது. பாதுகாப்பு நோக்கத்தில் செய்யப்பட்டதாக அதை இலங்கை அரசு வர்ணித்தாலும், உண்மையில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யவும் பயமுறுத்தவும்தான் இந்தக் காரியத்தை இலங்கைக் கடற்படை மேற்கொண் டிருக்கிறது என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்புதான் இலங்கை அரசு தமிழர் பிரச்னைக்கு சமாதானத் திட்டம் ஒன்றைத் தயாரித்திருப்பதாக அறிவித்தது. அனைத்துக் கட்சிப் பிரதிதிகள் குழுவால் (APRC) முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை ராஜபக்ஷே அரசு ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வந்தன. கடந்த பதினெட்டு மாதங்களாக அறுபத்து மூன்று முறை கூடிப்பேசி, வெறும் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அந்த அனைத்துக் கட்சிக்குழு சமர்ப்பித்திருந்தது! அதிலும்கூடப் புதிதாக எதுவும் இல்லை. 1987–ம் ஆண்டு போடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வழிகாட்டு தலின்படி இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிக் குழுவின் ‘அரிய’ ஆலோசனையாகும்.

மாகாணக் கவுன்சில்களை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற பேச்சுக்கள் பலமாக அடிபட்டன. இந்தப் பிரதிநிதிகள் குழுவில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் (யு.என்.பி.), ஜனதா விமுக்தி பெரமுனாவும் (ஜே.வி.பி.) கலந்து கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சியினரும் அதில் பங்கேற்கவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளால் புறக்கணிக்கப்பட்ட அந்தக் குழுவின் பரிந்துரைகளை இலங்கையில் எவரும் மதிக்கவில்லையென்பதே உண்மை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராஜபக்ஷேவின் கொடுநெறிப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வந்த வேளையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ராஜபக்ஷே ஆடும் நாடகம்தான் இது என்று எல்லோருக்குமே தெரிந்துவிட்டது. அதனால்தான், சிங்கள அரசின் சமாதானத் திட்டத்தை எவரும் ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் கண்ணிவெடி சமாசாரம் இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

1974–ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் இலங்கை பிரதமராக இருந்த சிறீமாவோ பண்டார நாயகாவும் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் முதன்முதலாக வங்கக்கடலில் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை வரையறுத்த நடவடிக்கையாகும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவும் இலங்கையும் தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் மீது முழுமையான உரிமையைப் பெற்றன. அந்த நாடுகளின் கப்பல்கள் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் சென்று வரும் உரிமை தொடர்ந்து காக்கப்படும் எனக்கூறிய அந்த ஒப்பந்தத்தின் பிரிவு ஐந்தில், ‘இந்திய மீனவர்களும், யாத்ரீகர்களும் கச்சத்தீவுக்கு வழக்கம்போல சென்று வரலாம். அதற்கு இலங்கையிடம் அனுமதி பெறத்தேவையில்லை’ எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

1974-க்குப் பிறகு 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இலங்கையும் இந்தியாவும் அடுத்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்தான் அது. இந்தியா சார்பில் கேவல்சிங்கும், இலங்கைக்காக டபிள்யூ.டி. ஜெயசிங்கேவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களிலோ… இவற்றுக்குப் பிறகு அதே ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கையெழுத்தான இலங்கை, இந்தியா, மாலத்தீவு ஆகியவற்றுக்கிடையேயான முச்சந்தியை வரையறுக்கும் ஒப்பந்தத்திலோ… கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை. இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளப்பட்ட கடிதங்களில்தான் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துத் தந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அங்கே தமது வலைகளை உலர்த்த வும், அங்கே இருக்கும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்குச் செல்லவும் தொடர்ந்து உரிமை பெற்றிருந்தார்கள்.

1983-ம் ஆண்டுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். 83-ல் ஏற்பட்ட இனக் கலவரத்தைத் தொடர்ந்து கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அந்தத் தடை 2003 வரைதொடர்ந்தது.

தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படுவதும், அவர்களது மீன்களும், வலை களும், படகுகளும் இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாயின. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படித் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் இந்திய அரசு இலங்கையைக் கண்டிக்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதுவரை துப்பாக்கியால் சுட்டவர்கள் இப்போதோ கண்ணிவெடிகளை மிதக்க விட்டுவிட்டார்கள்.

கடல் கண்ணிவெடி என்பதுநிலத்தில் பயன்படுத்துவதைவிடவும் சக்தி வாய்ந்ததாகும். ‘டார்பிடோக்கள்’என அழைக்கப்பட்ட பழைய காலத்து கடல் கண்ணிவெடிகள் பதினாறாம் நூற்றாண்டி லேயே புழக்கத்துக்கு வந்துவிட்டன. கடல் கண்ணி வெடிகள் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக் கூடியவை என்கிறார்கள். முதலாம் உலகப் போரின் போது பாரசீக வளைகுடாவில் ஈரானால் மிதக்க விடப்பட்ட கடல் கண்ணிவெடி, 1988-ம் ஆண்டில் அமெரிக்கக் கப்பல் ஒன்றைத் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதே ‘நீண்ட ஆயுளுக்கான’ உதாரணம் ஆகும்.

கடல் கண்ணிவெடிகளில் இப்போது பலரகங்கள் வந்து விட்டன. இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும்படி அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில் வெவ்வேறு ஆழங்களில் அவற்றை மிதக்கவிட முடியும். கடல் கண்ணிவெடி போடப்பட்டிருப்பதை எளிதாகக் கண்டறிய முடியாது. எனவே, அப்பாவி மீனவர்கள் அதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். அதனால்தான் இலங்கைக் கடற்படை கண்ணிவெடி போட்ட செய்தி தெரிந்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் தொழிலுக்கே போகவில்லை.

யுத்தகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஆனால், கடல் கண்ணிவெடிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை 1907-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘ஹாக் கன்வென்ஷன்’ மட்டும்தான் வரையறுத்துள்ளது. அது இப்போது அவ்வளவாகப் பயன்படுவதில்லை. எனவே, 1994-ம் ஆண்டு ‘சான் ரெமோ கையேடு’ என ஒன்றை நிபுணர்கள் தயாரித்தார்கள். அதில் கடல் கண்ணிவெடிகளைக் கையாளுவது பற்றிய வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

‘பொதுவான கடல் பகுதிகளில் கண்ணிவெடிகளை போடக் கூடாது. சர்வதேச கடல் பகுதியிலோ, பொதுவான கடல் பகுதியிலோ கப்பல்கள் செல்வதை தடுக்கக்கூடாது, அதோடு கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும். அப்படி, வழி ஏற்படுத்தித் தராதுபோனால் கடல் கண்ணிவெடிகளை எவரும் மிதக்கவிட அனுமதி கிடையாது’ என ‘சான் ரெமோ கையேடு’ குறிப்பிட்டுள்ளது. இப்போது இலங்கை அரசு செய்திருக்கும் காரியம், மேலே சொல்லப்பட்ட சர்வதேச விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே, இலங்கை அரசு உடனடியாகக் கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

கடல் கண்ணி வெடிகளைக் கண்டறிவதற்கு இப்போது நவீன கருவிகள் வந்து விட்டன. ஆனால், அவை மிகவும் செலவு பிடிக்கக் கூடியவையாகும். சோனார்(Sonar) கருவி பொருத்தப்பட்ட கப்பலை கண்ணிவெடி போடப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செலுத்தி அந்த வெடிகள் எங்கு உள்ளன என்பதை ஆராய லாம். மற்றொரு நடைமுறை – ஹெலிகாப்டரில் அந்தக் கருவியைப் பொருத்தி, அதைக் கண்ணிவெடி போடப் பட்டிருக்கும் கடற்பரப்பில் இழுத்துச் செல்வதாகும். இப்போது ரோபோக்களை இப்படியான வேலையில் பயன்படுத்துகிறார்கள். எப்படியானாலும் அதற்கு ஆகும் செலவு மிகமிக அதிகம்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்திய-இலங்கை அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தன. ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ என ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளும் நடந்தன. 2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்புவில் நடந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ கூட்டத்தில் சில முடிவுகளும் எடுக்கப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான தூரத்துக்குள் சென்று மீன் பிடித்த மீனவர்களைக் கைது செய்வதில்லை எனவும், இரு நாடுகளின் சிறைகளிலும் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களை விடுவிப்பது எனவும் அந்த ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ முடிவெடுத்தது. அதற்கு மாறாக இப்போது கண்ணிவெடிகளைப் போட்டிருப்பது மேலே கண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவின் முடிவுகளை இலங்கை அரசு மதிக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

சேது கால்வாய் திட்டம் சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பதையும், இப்போது கண்ணிவெடி போடப்பட்டுள்ள நடவடிக்கையையும் இணைத்துப் பார்த்தால், சேதுக்கால்வாய் திட்டத்தை ஒரேயடியாக ஒழிப்பதற்காகத்தான் இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி சர்வதேச நெறிமுறைகளுக்கும், தானே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவரும் ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகளை ‘போர்க்காலக் குற்றச் செயல்களாகக்’ (War Cerimes) கருதுவதில் தவறில்லை.

இந்தக் காரணங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். தனது குடிமக்களின் மீது அக்கறையிருந்தால், தமது இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணினால் இதைச் செய்வதற்கு இந்தியா தயங்கக்கூடாது.

இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் போட்டுவிட்டு செய்தி அனுப்பியதும், இந்திய கடற்படை அதிகாரிகளோ நமது மீனவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள்! இலங்கைக் கடற்படை போட்டிருப்பது என்ன வகையான கண்ணிவெடி? அது நீரின் ஓட்டத்தில் இந்தியப் பகுதிக்குள் வரக்கூடிய ஆபத்து இருப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மையா? அந்தக் கண்ணிவெடிகளை மனித நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் போட்டிருக்கிறோம் எனச் சொல்கிறது இலங்கைக் கடற்படை. அப்படி இருக்கும்போது ஏன் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்ய வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு நமது அதிகாரிகள் பதிலெதையும் இதுவரையில் கூறவில்லை.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியபோது வெகுண்டெழுந்த முதல்வர் கலைஞர், ”மீனவர்களின் கைகள் இனி மீன்களை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்காது” என எச்சரித்தார். இலங்கை அரசு மட்டுமல்ல… இந்திய அரசும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வேண்டும்.

– ஜூனியர் விகடன்

—————————————————————————————————

கச்சத்தீவு காட்சிகள்

செ. மாதவன், முன்னாள் அமைச்சர்

தமிழகத்தின் தென்பகுதியில் ராமேசுவரம், நாகப்பட்டினம் பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள், அன்றாட வாழ்விற்காக மீன்பிடிக்கும் தொழிலில் சந்திக்கும் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. பல நூற்றாண்டுகளாக, ஆங்கிலேயர் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும் அனுபவித்த உரிமைகள் காங்கிரஸ் ஆட்சியில் 1976ஆம் ஆண்டு முதல் பறிக்கப்பட்டு விட்டன. இலங்கைப் படையினரால் சிறை பிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டன. 1974ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி எடுத்துவைத்த ஆதாரங்கள், மாற்று யோசனைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

நானும் முதல்வருடன் தில்லி சென்று ராமநாதபுரம் அரசர் சேதுபதி, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையைக் குத்தகைக்கு விட்டிருப்பது பற்றி ஜமீன் நிர்வாகப் பதிவேடுகளையும், பிற ஆதாரங்களையும் காட்டி வாதாடிய காட்சிகள் நினைவில் நிற்கின்றன. அதைத் தொடர்ந்து ஆதாரங்களைக் காட்டி இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. அதற்குப் பிறகு 1976 ஜனவரி 31ஆம் நாள் தி.மு.க. அரசைக் கலைத்து விட்டு 50 நாள்களுக்குள், 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இலங்கை அரசுடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. 1974இல் தமிழ்நாட்டுக்குப் பூர்வீகப் பாத்தியமான கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. 1976இல் தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையும், இருநாட்டுக் கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் இந்திய – இலங்கை புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. இதற்காக தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், 23-7-1974ஆம் நாள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். ஓர் உறுப்பினர் ஒப்பந்த அறிக்கை நகலைச் சபையில் கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார். வாஜ்பாய் ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளார்.

1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட மீன் பிடிக்கும் உரிமையும், இரு கடல் பகுதிகளில் படகுகள் செலுத்தும் உரிமையும் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி புதிய ஒப்பந்தம் மூலம் பறிக்கப்பட்டன. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 26-6-1974ஆம் தேதி தில்லியில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டுள்ளார். இலங்கைப் பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயகா 28-6-1974ஆம் நாள் கொழும்பில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 23-3-1976ஆம் நாள் இரு நாட்டு அரசு வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் மட்டும்தான் கையெழுத்துப் போட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தைப் புதிய வெளியுறவு அமைச்சர் ஒய்.பி. சவான் 24-3-1976ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கையாக வைத்துள்ளார்.

இந்தப் புதிய 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தச் சரத்துகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழக அரசு, ஆளுநரின் பொறுப்பில் இருந்த நேரம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவில்லை. சுருக்கமாக ரகசியமாகப் போடப்பட்ட ஒப்பந்தம். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட மீனவர்கள் உரிமையும், படகுகள் இருநாட்டுக் கடல் பகுதிகளில் செலுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது பற்றி 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் எந்தச் செய்தியும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங், 23-3-1976ஆம் தேதி இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்தான் மீன் பிடிக்கும் உரிமையும், படகுகள் செலுத்தும் உரிமையும் பறிகொடுத்த செய்தி காணப்படுகின்றது. இதே கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர், “”இந்தியக் கடல் பகுதி ரஹக்ஞ்ங் ஆஹய்ந் என்ற இடத்தில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை தரப்பட்டுள்ளது” என்று எழுதியுள்ளார்.

இலங்கை நாட்டுடன் உறவு வைத்திட வேண்டும்; பண்டார நாயகாவின் நட்பு வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த நாட்டு மீனவர்களின் வயிற்றுப் பிழைப்புக்குத் தேவையான மீன் பிடிக்கும் உரிமைகள், இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகு செலுத்தும் உரிமைகள் பறி கொடுக்கப்பட்டன.

மாநிலங்கள் அவையில் 1991ஆம் ஆண்டிலிருந்து இந்த இரு ஒப்பந்தங்களில் உள்ள முரண்பாடுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட மத்திய அரசின் செயல்பாடுகளையும் தொடர்ந்து எழுப்பி வந்தேன். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் “”இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்து வரும் மீன் பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சத் தீவுக்குச் சென்று வரும் உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது” என்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்து உறுதி செய்துள்ளார்.

இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்திலும் எதுவும் கூறாமல், அரசுச் செயலாளர் எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் ஸ்வரண் சிங்கால் நாடாளுமன்றத்திலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகள், மத்திய அரசின் மெத்தனத்தால் பறிபோயுள்ளன.

10-3-1992ஆம் நாள் மாநிலங்கள் அவையில் இந்த விவரங்களை, மத்திய அரசின் முரண்பட்ட ஒப்பந்தங்களை, இந்தச் சபையிலேயே உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் ஒரு கடிதத்தின் மூலம் பறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை எடுத்து உரைத்தேன். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக் கட்சி உறுப்பினர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அன்று சபையில் இருந்த அன்றைய வர்த்தகத் துறை அமைச்சர் இன்றைய நிதி அமைச்சர் சிதம்பரம் எழுந்து பதில் அளித்தார்.

‘‘I had brought the 1974 agreement and the 1976 agreement to the notice of the House. The government responded by giving its interpretation of the two agreements. If there is any other document or letter which appears to contradicts with the tenor of the two agreements or the interpretation we placed on the two agreements, we will certainly look into it’’ என்று உறுதி அளித்தார்.

அதற்குப் பிறகு அன்றைய பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சர்களுக்கும் இந்தப் பிரச்னைகளைக் கடிதங்கள் மூலம் 1996ஆம் ஆண்டு வரை எழுதி வந்தேன். பிரதமரும், அமைச்சர்களும், பதில் கடிதங்கள் எழுதினார்கள். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தகுந்த பரிகாரம் காணப்படவில்லை. 5-1-1996ஆம் தேதி அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எனக்கு எழுதிய கடிதத்தில், “”கச்சத் தீவுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடவும், புனித அந்தோணி திருவிழாவுக்கும் செல்லலாம்” என்று புதிய விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை அரசியல் ரீதியாக கட்சிக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங்கால் அளிக்கப்பட்ட விளக்கங்களின்படி, தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டுத்தர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து முயற்சிப்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் வழியாகத் தோன்றுகிறது.

இந்திய மீனவர்கள் அனுமதி பெற்று, விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, இருநாட்டுக் கடற்படைகளின் பாதுகாப்புடன் அனைத்துக் கடல் பகுதிகளிலும் சென்று மீன் பிடித்திட உரிமை தர இலங்கை அரசு நிச்சயம் ஒப்புக்கொள்ளும். ஆயுதக் கடத்தலைத்தான் இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிகின்றது. 1976ஆம் ஆண்டு வரை மீன் பிடிக்கும் உரிமையை எதிர்த்து இலங்கை அரசு எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. விடுதலைப் புலிகளின் நடமாட்டம்தான் இலங்கையை அச்சுறுத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டம் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வெற்றி பெற்ற மத்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் பரம்பரை உரிமைகளை உறுதி செய்திடவும் முயற்சி எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கச்சத்தீவு இந்திய எல்லையிலிருந்து சுமார் 12 கடல் மைல்கள் தூரத்திலும் இலங்கை எல்லையிலிருந்து சுமார் 10 கடல் மைல்கள் தூரத்திலும் அமைந்துள்ளது. 2 மைல்கள் வித்தியாசத்தைக் காரணமாக வைத்து கச்சத்தீவை இலங்கை அரசு பறித்துக் கொண்டது.

1976ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு மீனவர்கள் பரம்பரையாக அனுபவித்து வந்த உரிமைகளை இலங்கை அரசு மறுக்க முடியாது. இருநாட்டுக் கடல் பகுதிகள் 1976ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பிறகும், இந்திய எல்லைக்குள் ஒரு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையைக் கேட்டுப் பெற்ற இலங்கை அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை மறுக்க முடியாது. அன்றைய முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், ஸ்வரண் சிங் மூலம், இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும்.

Posted in defence, Defense, DPI, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, Fishery, KACCHA THEEVU, Kachatheevu, Kachathivu, Kachativu, Kachchatheevu, Katcha Theevu, Katchatheevu, Landmines, LTTE, mines, Ravikkumar, Ravikumar, Sea, Sri lanka, Srilanka, Thiruma, underwater | Leave a Comment »

LTTE Political Head writes to UN Secretary General; asks UN to recognise Tamil sovereignty

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

வடக்கில் பெருமளவில் ஷெல் வீச்சு
வடக்கில் பெருமளவு ஷெல் வீச்சு

இன்று அதிகாலை இலங்கையில் வடக்கே யாழ் குடாநாட்டில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை நோக்கி முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட அரச துருப்பினருக்கும், புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

யாழ்குடாநாட்டில் முகமாலை, கிளாலி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான படையினர் இன்று அதிகாலை சுமார் 12.45 மணியளவில் மூன்று முனைகளில் யுத்த தாங்கிகள் மற்றும் ஆட்டிலறி எறிகணைவீச்சு சகிதம் நகர்ந்தபோதே இப்பகுதிகளில் மோதல்கள் வெடித்ததாகத் தெரிவித்த இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இதன்போதும் புலிகளின் முப்பதுக்கும் அதிகமான பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களின்போது சுமார் 10 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 30 புலி உறுப்பினர்கள் காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தார். அதேவேளை, இராணுவத்தின் தரப்பில் ஏழு படையினர் மாத்திரமே காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

z_p11-no-escape1.jpg z_p11-no-escape3.jpg

புலிகள் மறுப்பு

ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சேதங்களை மறுத்துள்ள விடுதலைப் புலிகள், அரச படைகளின் முன்நகர்வு நடவடிக்கைகளை தமது போராளிகள் தடுத்து நிறுத்தி, அவர்களை மீண்டும் தமது பழைய நிலைகளுக்கே திரும்பச் செய்தனர் எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்த தகவலை வெளியிட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், இலங்கை அரசப்படையினர் பின்வாங்கிய பிறகு சில இராணுவத் தளவாடங்களை தாங்கள் கைப்ப்ற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

 


ஐ நா வின் தலைமைச் செயலருக்கு விடுதலைப் புலிகள் கடிதம்

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன்

இலங்கையின் வடமேற்கே மடுக்கோவிலுக்கு அருகில் பேருந்து வண்டியொன்றின் மீது செவ்வாய்கிழமையன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 12 சிறுவர்கள உட்பட 18 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ. நா மன்றத்தின் தலைமைச் செயலர் பான் கி மூன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பா.நடேசன் கூறியுள்ளார்.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகத் தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் ஐ நா வின் தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை இடைநிறுத்தி போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினரை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ள அரசு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.

 


மடுமாதா ஆலயப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதாக தகவல்

மடு ஆலையம்
மடுமாதா ஆலையம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் மடுக்கோவிலருகில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேருந்து வண்டியொன்றின் மீது நேற்று இடம்பெற்ற வீதியோரக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 18 பேரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை மடுக்கோவிலில் நடைபெற்றிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 18 பேரில் 10 பேர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டதாகவும், இவர்களில் ஒரு தாயும் 9 வயது மகளுமாகிய இரண்டு பேர் இன்று மாலை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய 8 பேரும் முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 18 பேரினதும் உடல்கள் இன்று காலை பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து மடுக்கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது வீடுகளில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்ததாக மடுவிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமையன்றும் பகல் பொழுதில் மடு ஆலயத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் ஷெல் வீச்சுகள் இடம் பெற்றதாகவும், இராணுவத்தினரிடம் முறையிட்ட பிறகு அவை நின்றன எனவும் மடுக்கோவில் பரிபாலகர் அருட்தந்தை எமிலியஸ் பிள்ளை தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக வத்திக்கானின் பிரதிநிதி மற்றும் இலங்கை ஆயர் சங்கம் ஆகியவற்றின் கவனத்திற்கு மன்னார் ஆயர் கொண்டு வந்துள்ளதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in bunkers, Claymore, Eelam, Eezham, LTTE, Muhamalai, Nagarkovil, Sri lanka, Srilanka, Tamil, UN | Leave a Comment »

Orissa tribals up in arms against government: What is behind Hindu-Christian violence?

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2008

ஒரிசாவில் பரிதவிக்கும் ஆதிவாசிகள்

டி.புருஷோத்தமன்

நமது நாடு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது; அன்னியச் செலாவணி இருப்பு திருப்திகரமாக இருந்து வருகிறது.

ஆனால் அடிப்படை வசதியோ, அடுத்தவேளைக்கு உணவோ இன்றி அவதிப்படும் கோடிக்கணக்கான ஆதிவாசி மக்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தோமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.

நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி முன்னேற்றத்திலும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒரிசாவும் ஒன்று. தலைநகர் புவனேசுவரத்தில் அரசு போக்குவரத்து அறவே இல்லாத அவலம். சாலைகள்தோறும் ஆட்டோக்கள்தான். அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிட்டதாக கொசுறு செய்தி.

இப்படிப்பட்ட ஒரிசா மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் கண்ணீரும் கவலையும்தான் மிஞ்சும்.

ஒரிசாவில் வனப்பகுதிகளும் மலைகளும் அதிகம். இதனால் மாநிலத்தின் மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் மலைவாழ் மக்கள். ஆண்டாண்டுக் காலமாக எவ்வித முன்னேற்றமும் இன்றி அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். கனிம வளங்கள் ஏராளமாக இருந்தும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பயன்கள் அவர்களைச் சென்றடைவதில்லை. போதாக்குறைக்கு மலைவாழ் மக்களிடையே பிளவு வேறு.

ஒரிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியில் கந்தமால் பகுதி அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 6 லட்சம். இதில் சுமார் 75 சதவீதம் பேர் “குயி’ மொழி பேசுகின்ற “கோந்த்’ என்ற பழங்குடி (எஸ்.டி.) இனத்தவர்களாவர். அடுத்து “பானா’ என்கின்ற தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மக்கள். “குயி’ மொழி பேசும் இவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர்.

கோந்த் சமூகத்தினர் மிகவும் வறிய நிலையில் இருந்து வருகின்றனர். எந்த அரசு பதவிக்கு வந்தாலும் இவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. கல்வியறிவும் இல்லாத காரணத்தால் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

கோந்த் சமூகத்தினரின் அறியாமை, ஏழ்மை, படிப்பறிவின்மை போன்ற பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மீது பானா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதுதான் வேதனை அளிக்கும் விஷயமாகும்.

பானா சமூகத்தினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டுவிட்டனர். மிஷினரிகளின் உதவியால் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று பொருளாதார ரீதியில் வலுவாகிவிட்டனர். மதம் மாறிய பிறகும் எஸ்.சி.க்கான சலுகைகளைப் பெறுவதற்காக போலி சாதிச் சான்றுகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் சலுகைகளையும் அரசு வேலைகளையும் பெற்றுவிடுகின்றனர்.

கோந்த் பழங்குடியினர் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தும் கூட பொருளாதார ரீதியில் வலுவாக இல்லாத காரணத்தால் பானா சமூகத்தினரை விட பன்மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பானா சமூகத்தினரின் சுரண்டலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கோந்த் சமூகத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மாவட்ட மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்தும்கூட கோந்த் சமூகத்தினர் எவரும் இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் அரசியல் செல்வாக்கு அறவே இல்லாதவர்களாகிவிட்டனர்.

அதேசமயம் பானா சமூகத்தினர் அரசியல் செல்வாக்குடன் திகழ்கின்றனர். தங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுவருகின்றனர்.

கோந்த் சமூகத்தினரை அடக்கி ஆள்வதே குறிக்கோள் என்ற ரீதியில் புல்பானி சட்டமன்ற உறுப்பினரும் ஒரிசா அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவருமான பத்மனாப பேஹ்ரா செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி கோந்த் பழங்குடி இனத்தவர்கள் மீது பானா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நக்சலைட்டுகளும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் கோந்த் இனத்தைச் சேர்ந்த காகேஸ்வர் மாலிக் என்பவர் கொலை செய்யப்பட்டார். பிரம்மணிகால் என்ற கிராமத்தையே வன்முறைக் கும்பல் தீக்கிரையாக்கியது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிரடி நடவடிக்கையாக அமைச்சர் பதவியிலிருந்து பத்மனாப பேஹ்ராவை நீக்கினார்.

எனினும் கோந்த் இனத்தவருக்கும் பானா இனத்தவருக்கும் இடையிலான மோதல் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அது எப்போது மீண்டும் வெடிக்கும் எனத் தெரியவில்லை.

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மானும் சிங்கமும் சேர்ந்து ஒரு துறையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பரவாயில்லை என கூறிவிடலாம். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த மானும் மானுமே சேர்ந்திருக்கவில்லை என்பதைக் கேட்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது ஆதிவாசிகளின் முன்னேற்றத்திலும் அரசியல் தலைவர்கள் காட்ட வேண்டும். அரசு அதிகாரிகளும் ஆதிவாசிகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை சரிவர நிறைவேற்ற உதவ வேண்டும். அப்போதுதான் நமது நாட்டின் பூர்வகுடிகளான ஆதிவாசிகளின் வாழ்வில் ஒளிபிறக்கும்.

Posted in Aadhivaasi, Aadhivasi, Aathivaasi, Aathivasi, Adhivasi, Adivasi, Agriculture, Assets, Athivasi, Balangir, Bamunigan, Biju, BJP, Business, Caste, Census, Christian, Christianity, Church, Community, Culture, Dalit Christians, Dalits, Economy, Education, Elections, Fake, Farmers, Farming, Farms, Gadapur, Gods, Government, Govt, Help, Heritage, Hills, Hindu, Hinduism, Hindutva, Judges, Justice, Kandhamal, Land, Law, Minerals, Missionary, Native, Naveen, Navin, Naxalites, Naxals, Needy, NGO, non-tribals, Order, Orissa, Police, Polls, Poor, Population, Poverty, Property, Religion, Reservations, Rich, RSS, SC, scheduled tribes, Schools, ST, Students, Teachers, Temples, Tradition, Tribals, Tribe, Violence, voters, Wealthy | Leave a Comment »