கிரிக்கெட்- எதிர்காலத்தின் பயங்கரம்!
வி. துரைப்பாண்டி
ஷாஜகான் தனது காதலிக்காக தாஜ் மகாலை கட்டினார். அது தனிப்பட்ட ஒருவரின் வரலாறு. அதேபோன்று தனி மனித வாழ்க்கையிலும் எண்ணற்ற செயல்கள் உண்டு. விளையாட்டுப் போட்டிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அது தனிநபர் போட்டியாகவும் இருக்கலாம், பல்வேறு வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து விளையாடும் குழுப் போட்டியாகவும் இருக்கலாம்.
வெற்றிக்காக ஒரு காலத்தில் வீரர்களைத் திறம்பட உருவாக்கினார்கள். இன்று, அதே வெற்றிக்காக மாற்றுவழியை யோசிக்கிறார்கள். மேட்ச் பிக்ஸிங், நடுவர்களை விலைக்கு வாங்குதல், ஆடுகளத்தைச் சேதப்படுத்துதல் போன்ற கிரிக்கெட்டை கேவலப்படுத்தும் அசிங்கங்களை தொழில்நுட்ப வளர்ச்சி என்று எடுத்துக் கொள்ளமுடியாது.
இரண்டு நடுவர்களுடன் 13 வீரர்கள் களத்தினுள் விளையாடுவது, வெளியிலிருந்து பார்க்கத்தான் கிரிக்கெட்டாகத் தெரியும். ஆனால், அதன் பின்னணியில் பல பயங்கரங்கள் விளையாடுவது, அதில் சம்பந்தப்படாதவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒருவர் ஆட்டமிழந்தாரா, இல்லையா என்ற சந்தேகம் எழுந்தால் அது பேட்ஸ்மேனுக்கே சாதகமாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நடுவர்கள் சுயலாபத்துக்காக அதை எப்போதோ விருப்பத்துகேற்ப மாற்றிவிட்டார்கள்.
பீமனாக இருந்தாலும் வீழ்த்தியாக வேண்டும் என ஓமகுச்சிகள் நினைப்பது போன்று, பள்ளிகளிடையிலான போட்டியில்கூட வெற்றிக்காக “எதையும்’ இழக்கத் தயாராகி வருவது, பெருநகரங்களில் சர்வசாதாரணமாகிவருகிறது. பணம் இருந்தால் தனது பிள்ளையை சச்சின் ஆக்கிவிடலாம் என நினைப்பவர்கள் அம் மாதிரியான நகரங்களில் ஏராளம்.
ஒருவரைத் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவதற்குக்கூட கைமாறாக லகரங்கள் பேசப்படுவது, வருந்தத்தக்க அம்சங்களில் ஒன்று.
கோல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆள் மாறாட்டம் செய்து ஒருவர் சாதனை (3 சதம்) படைத்துள்ளது, கிரிக்கெட் அவலங்களின் லேட்டஸ்ட் உதாரணம். அதுபோன்று எத்தனையோ இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளன.
சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னர், இந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்ததால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என்பது விமர்சகர்களின் கருத்து. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக குற்றச்சாட்டிலிருந்து பக்னர் தப்பிக்க முடியாமல் போயிருக்கலாம்.
ஆனால் அதே வளர்ச்சியால் எதைக் கொடுத்தாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் அரங்கேறுவது, கிரிக்கெட்டை எதிர்காலத்தில் அதலபாதாளத்துக்குத் தள்ளிவிடும்.
பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்தியா. அது சாதாரணமான விஷயம். ஆஸ்திரேலியா என்ன தோல்வியே காணாத அணியா, இல்லை இந்திய அணி தவழும் குழந்தையா? 1932-ம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகிறது. போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தோற்றது கிடையாது. தவிர, தொடர்ச்சியாக அதிகமான வெற்றிகளைப் பெற்ற நாடு என்ற உலக சாதனையை, அப் போட்டியில் வெல்வதன்மூலம் பதிவு செய்யக் காத்திருந்தது. ஆனால் முடிவு மாறியதால் அந்த சிறப்புகள் நிறைவேறாமல் போயின. அதற்காக ரசிகர்களுடன் ஊடகங்களும் அதைத் தலையில் தூக்கிக் கொண்டாடுவது, இந்திய அணி அதற்குத் தகுதியில்லை என்பது போலாகிறது.
இந்தியாவில் ஒரு தேசியப் போட்டியை நடத்த சில ஆயிரங்கள்கூட இல்லாமல் திணறும் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஏராளம். ஆனால் கிரிக்கெட்டில் தேசிய சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் ரஞ்சி கோப்பை போட்டிக்கு மட்டும் எத்தனை பணம்? முதலிடத்தைப் பெறும் அணிக்கு பரிசு மட்டும் ரூ. 50 லட்சம். படிகள் தனி. போட்டியில் பங்கேற்க வீரர்கள் விமானத்தில் பயணிக்கிறார்கள். அதை ஆரோக்கியமாக எடுத்துக்கொள்பவர்கள், மற்ற விளையாட்டுப் பிரிவில் உள்ளவர்கள் ரயிலில்கூட முன்பதிவு செய்யமுடியாமல் செல்வதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு விலைபோயுள்ளன. தொழிலதிபர்களும், சினிமா நட்சத்திரங்கும் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்டி மேலும் விளம்பரம் தேட முயன்றுள்ளனர். பொதுவாக, எந்தத் தொழில் நிறுவனமும் போட்ட பணத்தைக்காட்டிலும் அதிகமாக ஈட்டத்தான் விரும்பும். கடனை உடனை வாங்கி விளையாட்டில் கொட்ட யாரும் தானப்பிரபுக்கள் அல்ல. போட்டியில் குதித்துள்ளது தொழில் முதலைகள். ஈகோவும் அவர்களிடயே முக்கியப் பங்காற்றும்.
ஆதலால் வெற்றிக்காக எதையும் செய்யும் பயங்கரவாதிகளைத் தோற்றுவிக்கவும் கிரிக்கெட் வழிகாலாக இருக்கப்போவது எச்சரிக்கையான அம்சம்.
கிரிக்கெட்- வெற்றி பெற்றால் மட்டுமல்ல, விளையாடினாலே செல்வம் என்பது எதிர்காலத்தின் பயங்கரமாகத்தான் இருக்கும்!