இலங்கையின் யாழ்குடாநாட்டில் உள்ள பலாலி இராணுவ படைத்தளத்தின் மீது புலிகள் எறிகணை தாக்குதல்
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத்தின் பலாலி படைத்தளத்தின் மீது இன்று காலை 9.15 மணியளவில் எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற வேளை, கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் பலாலிக்குச் சென்றதாகவும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக அவர்கள் பிரயாணம் செய்த விமானம் பலாலியில் தரையிறங்காமல், அவர்கள் நூலிழையில் உயிர்தப்பி கொழும்புக்குத் திரும்பிச் சென்றதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணத்திற்கான விமானப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் பலாலி தளத்தை நோக்கி எறிகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார். எனினும் இராணுவத்தினருக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் பலாலிக்கான விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இன்றுகாலை ஒரு தொகுதி இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தை பலாலியில் நடத்தியதாகவும், இதனை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இந்த எறிகணை தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் புலிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதை போல, முக்கிய ராணுவ உயரதிகாரிகள் யாரும் இன்று பலாலிக்குச் சென்றதாக அங்கிருந்து அறிக்கைள் எதுவும் தமக்கு வரவில்லை என்றும், பலாலிக்கும் கொழும்பிற்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
தமிழக மீனவர்கள் கைது குறித்து சட்டமன்றத்தில் விவாதம்
![]() |
![]() |
தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம் |
தங்கள் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் புதைத்திருப்பதாக இலங்கை அதிகாரப் பூர்வமாக இந்தியாவிற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஜனவரி 21ம் தேதி மூன்று விசைப்படகுககளில் சென்ற 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இப்பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆளும் திமுகவைத் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.
கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை மீட்டுத்தர வேண்டும், அப்போது தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
விவாதத்திற்கு பதிலளித்துப்பேசிய மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய வெளிவிவகாரத்துறைக்கான மத்திய இணைஅமைச்சர் அகமதுவுடன் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட மீனவர்கள் தொடர்பாக பேசியிருப்பதாகக்கூறினார். அவர்களெல்லாம் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தனது நம்பிக்கையினையும் வீராசாமி தெரிவித்தார்.
சர்வதேசஎல்லையை மீறக்கூடாது என தமிழகமீனவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், கச்சததீவு ஒப்பந்தப்படி அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர், அந்த உரிமைகளை மீட்டுத்தரும்படி மத்தியஅரசிடம் வற்புறுத்தப்படும் என்றும் வீராசாமி கூறினார்.