கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் – இலங்கை பாதுகாப்பு அமைச்சு – விடுதலைப் புலிகள் மறுப்பு
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.
இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றதை உறுதிப்படுத்தியிருக்கும் விடுதலைப் புலிகள் கைவேலி பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும், புதுக்குடியிருப்பில் உள்ள வெண்புறா நிறுவனத்தின் மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் உள்ள கிரிகெட்டுவௌ கிராமத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட 16 சடலங்களும் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூபவாஹினி ஊடகவியலாளருக்கு கத்திக் குத்து
![]() |
![]() |
குத்தப்பட்ட ஊடகவியலாளர் |
இலங்கை ரூபவாஹினி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு அடையாளந்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
லால் ஹேமந்த மாவலகே என்ற அப்பத்திரிகையாளர் தான் காரில் சென்று கொண்டிருக்கையில் காரை நிறுத்தி இரண்டு பேர் கத்தியால் குத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி ரூபவாஹினி ஊழியர்கள் அமைச்சர் மர்வின் சில்வாவுக்கு எதிராக நடத்தியப் போராட்டத்தில் மாவலகே முக்கியப் பங்காற்றியிருந்தார் என்று கூறப்படுகிறது .
கத்திக் குத்துக் காயங்களுக்காக இன்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பிபிசி செய்தியாளரிடம் பேசிய மாவலகே, தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறினார்.
இந்தக் காயங்கள் காரணமாக மாவலகேவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.