Panel for maximum devolution of powers to Tamils: All Party Representative Committee (APRC) proposals
Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008
அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளின் குழுவின் தீர்வுயோசனைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசு விளக்கம்
![]() |
![]() |
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம |
இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக் காணும் நோக்கில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினால் நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கையளிக்கப்பட்ட தீர்வு யோசனைகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்கிக்கூறும் நோக்கில் வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பொன்றினை
நடத்தினார்.
அதன்பின்னர் பத்திரிகையாளர்கள் மாநாடொன்றினை நடாத்திய அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இனப்பிரச்சனைத் தீர்விற்கான முக்கிய யோசனைகளில் முக்கிய அங்கமாக இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படி ஜனாதிபதிக்கு இந்த அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு விதந்துரை செய்திருப்பதாகத் தெரித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் என்பது 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்மூலம் உருப்பெற்ற மாகாணசபைகளை சட்டரீதியாக உருவாக்க ஏதுவாக அமைக்கப்பட்ட சட்டமாகும்.
![]() |
![]() |
இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா |
இது குறித்து பி.பி.சி தமிழோசைக்குத் தகவல் தெரிவித்த பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா இந்த தீர்வு யோசனகளில் கிழக்குமாகாண சபைக்கு உடனடியாகத் மாகாண சபைத்தேர்தல் ஒன்றினை நடாத்தும்படியும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடாத்தமுடியாத சூழ்நிலை காணப்படுவதால் அங்கு ஆளுனரிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் தற்காலிக அலோசனைக் கவுன்சிலொன்றும் உருவாக்கப்பட விதந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா வழங்கிய விசேடபேட்டியை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அனைத்துக் கட்சிக் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்தியா ஆதரவு
![]() |
![]() |
இந்திய அரசின் பேச்சாளர் சர்னா |
அதிகாரப்பரவல் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக, அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இடைக்காலப் பரிந்துரைகளை அளித்திருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா
‘இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு வழிமுறைகள் மற்றும் ஆட்சிமொழி வழிமுறைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள்தான் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அந்தத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்’ என்றார்.
‘’இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடனும், அந்நாட்டு மக்களுடனும் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் அப்படிப்பட்ட தீர்வுக்கு பங்காற்றுவதாக இருக்கும் நிலையில், அது வரவேற்கத்தகுந்த முதல் நடவடிக்கை” என்றும் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான நவ்தேஜ் சர்னா.
கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் 16 உடல்கள் கண்டுபிடிப்பு
![]() |
![]() |
இலங்கை போலீசார்- ஆவனப் படம் |
இலங்கையின் வடமத்திய பகுதியில் கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் உள்ள கிரிகெட்டுவௌ என்ற இடத்தில் 16 மனித சடலங்கள் இன்று பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
மண்குவியல் ஒன்றில் மனித கையொன்று தெரிந்ததைக் கண்ட சிவிலியன் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பொலிசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அனுராதபுரம் மாவட்ட நீதவான் சிவந்த மஞ்சநாயக்க அவர்களின் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டியபோது 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனருகில் காணப்பட்ட இன்னுமொரு மண்குவியலை சந்தேகத்தின் பேரில் தோண்டியபோது மேலும் 6 மனித சடலங்கள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த 16 சடலங்களும் ஆண்களின் சடலங்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முதல் 10 சடலங்களும் கடந்த இரண்டு தினங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஏனைய 6 சடலங்களும் புதைக்கப்பட்டு சுமார் ஒரு வாரகாலம் இருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்திருக்கும் பொலிசார் இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
நீதவானின் உத்தரவுக்கமைய இந்தச் சடலங்களை கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்