Jan 15 – LTTE, Eezham, Sri Lanka – News & Updates: BBC Tamil
Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2008
இந்திய இலங்கை கடல் எல்லையில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவிப்பு.
இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடல் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளரான கமோடர் தசநாயக்க தமிழோசையிடம் தெரிவ்த்தார். தமது கடற்படை தளங்களின் பாதுகாப்புக்காவே இந்த ஏற்பாடு எனவும் அவர் கூறுகிறார்.
அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலையமானதாலும், அங்கு பொதுமக்களின் போக்குவரத்து கிடையாது என்பதாலும் இதன் காரணமாக பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் வராது எனவும் அவர் கூறுகிறார்.
ஏற்கெனெவே இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்கரையருகேயும், அதன் அண்மித்த பிற தீவுகள் அருகேயும் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கமோடர் தசநாயக்க கூறினார்.
இது தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளர் தசநாயக்க, இந்தியக் கடற்படையின் தமிழகப் பொறுப்பு அதிகாரி கமோடர் பிலிப் வான் ஹால்ட்ரன் நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ஆகியோர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
வன்னித் தாக்குதல்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள்
![]() |
![]() |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் |
இலங்கையின் வடக்கே வன்னிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவிடம் ஒன்றை இன்று காலை 11.15 மணியளவில் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
வான்வழி கண்காணிப்பு மற்றும் தரையிலிருந்து கிடைத்த இரகசிய தகவல்களையடுத்து, இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஆண்ரு விஜேசூரிய தெரிவித்திருக்கின்றார்.
தாக்குதல் இடம்பெற்ற வேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அந்த மறைவிடத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என விமானப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகளின் விமான ஓடுபாதை அமைந்துள்ள இரணைமடுக் குளத்திற்கு கிழக்கே கல்மடுக்குளம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் இந்த மறைவிடம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது, விடுதலைப் புலிகளின் தலைவர் அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான ஒரு மறைவிடம் எனவும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் இங்கு அடிக்கடி சந்தித்து திட்டங்கள் தீட்டுவது வழக்கம் என்றும் கடற்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் மீது இன்று வான்படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் ஒரு மலிவுப் பரப்புரை என்றும் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருக்கின்றார்.
மக்களைக் குழப்புவதற்காகவே இந்தப் பரப்புரையை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.
அனைத்துக் கட்சி மாநாட்டின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது
![]() |
![]() |
இலங்கை ஜனாதிபதியுடன் அமைச்சர் திஸ்ஸ விதாரண |
இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக்காணும்நோக்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று தனது தீர்வுத்திட்ட நகல் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கிறது.
புதன்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்தத்தீர்வுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதியிடம் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் கையளித்தார்.
இந்தத் தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் அரச தரப்பு தகவல்களின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக்காணும்பொருட்டு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் சரத்துக்களில் தேவையானவற்றை முழுமையாக அமுல்படுத்தும்படி இதில் பிரதானமாக விதந்துரைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இவை குறித்த மேலதிக செய்திகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து அமெரிக்கா கவலை
![]() |
![]() |
மட்டக்களப்பில் உரையாற்றும் அமெரிக்கத் தூதர் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி சபை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாமாகவும் நடைபெறுமா என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புதன்கிழமை மட்டக்களப்புக்கு சென்றிருந்த அவர் அமெரிக்க அரசின் உதவியுடனான அபிவிருத்தி திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அங்கு ஒரு சாரார் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மற்ற அமைப்புகளை அச்சுறுத்தும்போது சுதந்திரமான நியாமான தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் ராபர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்படுவது அந்தப் பகுதி முன்னேறுவதற்கு எப்போதுமே தடையாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உட்பட சகல ஆயுதக் குழுக்களும் ஆயுதங்களை கைவிட்டு, மக்கள் ஆதரவின் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய கருத்து எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராப்ர்ட் ஓ பிளேக் கூறியுள்ளார்.
இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை; இலங்கை ஜனாதிபதி
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ வழியில் தீர்வினைக் காணமுடியும் என்று தான் நம்பவில்லை என இலங்கை ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாகிய மஹிந்த ராஜபக்க்ஷ இன்று தெரிவித்திருக்கிறார்.
செவ்வாய்க் கிழமையன்று அலரி மாளிகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றின்போது கருத்துவெளியிட்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றே காணப்படவேண்டுமென்று கூறியுள்ள அதேவேளை நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்க தனது அரசு தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்குமென்றும் தெரிவித்தார்.
அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிடம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான ஒரு தீர்க்கமான அரசியல் நகல்திட்டமொன்றினைத் தருமாறு தான் கோரிவருவதாகவும், மிகவிரைவில் அவர்கள் அதனைத் தருவார்களெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்குப் புலிகள் அமைப்பினரே காரணம் எனக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, ஆனாலும் புலிகளிற்கு இவ்வாறான தாக்குதல்களை நடாத்துவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில தீயசக்திகள் உதவிபுரிந்துவருவதாக தாம் சந்தேகப்படுவதாகவும், இதுகுறித்துத்தீவிர விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்சினை தீர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரை வரும் 23ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை பரிந்துரைக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வரும் 23ஆம் தேதி, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும், அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, இந்தக் குழு அளிக்கவிருக்கும் அறிக்கை, ஒரு உடனடி இடைக்கால ஆலோசனையாகவே இருக்கும் என்று கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு இடைஞ்சலாக இருக்குமா என்று கேட்டதற்கு, நீதிமன்றத்தீர்ப்பு மட்டுமல்லாமல், தற்போது நிலவுகின்ற யதார்த்தத்தையும் பார்க்கவேண்டும், இதற்கு மக்கள்தான் பதிலளிக்கவேண்டும் என்று கூறினார் டக்ளஸ்.
நிரந்தரத் தீர்வு வரும் வரை, இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியாக மாகாண சபைகள் அமைக்கப்படலாம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
இரண்டு தனித்தனி மாகாணங்கள் என்பது , 13ஆவது சட்டத்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டதல்லவே, அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டதற்கும், அவர் இது ஒரு நிரந்தரத் தீர்வு வரும்வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் என்று பதிலளித்தார்.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு சுயமாக ஒரு தீர்வை முன்மொழியாமல், ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க , 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்துவதை முன்மொழிவது என்பது சரியாக இருக்குமா என்று கேட்டதற்கு, ஜனாதிபதியால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்று கூறுவது சரியல்ல என்றும், பெரும்பான்மையான கட்சிகள் கேட்டுகொண்டதற்கு இணங்கத்தான் அது முன்மொழியப்படுகிறது என்று கூறினார் அவர்.
சுயமான பரிந்துரைகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு பரிந்துரைக்காமல் இந்த மாதிரி இடைக்காலத் தீர்வாக ஒரு ஏற்பாட்டை முன்வைப்பது என்பது திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படக்கூடுமா என்று கேட்டதற்கு பதிலளித்த டக்ளஸ், அது சரியல்ல, இது ஒரு நிரந்தரத்தீர்வை நோக்கிய ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றார்.
![]() |
![]() |
டாக்டர் விக்னேஸ்வரன் |
இதே விடயத்தில், அனைத்துக்கட்சி வல்லுநர் குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான, டாக்டர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கேட்டுக்கொண்டது போல, இந்தக் குழு, 13வது சட்டத்திருத்தத்தை எவ்வாறு முழுமையாக நல்லமுறையில் அமல்படுத்துவது என்பது குறித்த அதன் பரிந்துரைகளை எதிர்வரும் 23ம்தேதி சமர்ப்பிக்கும் என்றார்.
இந்தக்குழு தனது இறுதி அறிக்கைக்கு, இறுதி வடிவம் கொடுக்க , மீண்டும் ஓரிரு முறை கூடி, பிப்ரவரி மாத இறுதிவாக்கில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.
மொனராகலை மாவட்டதில் புலிகளின் தாக்குதலில் 10 சிவிலியன்கள் பலி: இலங்கை இராணுவம்
இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில எனும் பிரதேசத்திலுள்ள கலவல்கல எனும் விவசாயக் கிராமத்தினுள் நுழைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்குழுவொன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் பத்துக் கிராமத்தவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்பவத்துடன் சேர்த்து இந்தப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்டிருக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, “நேற்றிரவு சுமார் பத்துமணியளவில் கலவல்கல எனும் இந்த விவசாயக் கிராமத்துக்குச் சென்ற விடுதலைப் புலிகளின் ஆயுதக் குழுவொன்றே இந்தக் கொலைகளைப் புரிந்துள்ளதாக” தெரிவித்திருக்கிறது.
முதலில் கிடைத்த செய்திகளின்படி, மூன்று சிவிலியன்கள் மாத்திரமே இவ்வாறு கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ஆனால் பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினால் உஷார் அடைந்து சிவில் பாதுகாப்பு படையினருக்கு உதவி வழங்கிய மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருக்கிறது.
மொனாராகலை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமைகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 28 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்குவைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருந்தார்கள்.
அதேதினத்தன்று இப்பகுதியிலுள்ள விவசாயக் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேலும் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிலைமை குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம்
![]() |
![]() |
சைமன் ஹியுஸ் |
இலங்கையின் தற்போதைய நிலமைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைப்புத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சைமன் ஹியுஸ் அவர்கள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருந்தார்.
இப்படி ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன என்று சைமன் ஹியுஸ் பிபிசி சந்தேஷ்யாவிடம் விளக்கினார்.
“இலங்கையில் நடக்கும் விடயங்கள் பிரிட்டனுக்கும், பொதுநலவாய நாடுகளுக்கும் பொதுவாகவே முக்கியத்தும் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக பிரிட்டனில் வாழும் சுமார் இரண்டரை லட்சம் இலங்கையர்களுக்கு இது முக்கியமான விடயம். இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் மற்றும் அதன் வன்முறைகளை கண்டு உலக நாடுகள் கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இந்த வாரம் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பதை பார்த்து மீண்டும் ஒருமுறை அழவேண்டியிருக்கிறது. இன்னும் அதிகமான வன்முறைகளும், கொலைகளும் எதிர்வரும் மாதங்களில் நடக்கக்கூடும் என்று கவலையாக இருக்கிறது. அதனால் இந்த வாரம் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மூன்று பிரதான கட்சிகளைச்சேர்ந்தவர்களும் முக்கியமாக பங்கேற்றிருந்தார்கள்.” என்றார் சைமன் ஹியுஸ் அவர்கள்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவலை
இலங்கையில் அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து கவலை தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு சென்னையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானம் குறித்து அந்த கட்சியின் தேசிய செயலாளர் ராஜா அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில், இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவரீதியிலான தீர்வு சாத்தியமல்ல என்றும் அரசியல்ரீதியிலான தீர்வு காண அனைத்து தரப்பின ரும் முயலவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு பற்றிய இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்தும், ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ராஜா தமது செவ்வியில் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
போர் நிறுத்த உடன்பாடு ரத்தும் பொருளாதார பாதிப்பும்
![]() |
![]() |
யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கி-ஆவனப் படம் |
இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு மற்றும் அதை அண்டிய வடமத்தியப் பகுதிகள் உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் குறிப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்று கருத்து வெளியிடுகிறார் இலங்கை பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துகிருஷ்ண சார்வானந்தா.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே தேசியப் பொருளாதாரமும் பிராந்திய பொருளாதாரமும் தொடர்ந்து இறங்குமுமகாவே இருந்து வந்ததாகவும் அவர் கூறினார். இந்த பின்னணியில்,
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக விலகியிருப்பது பொருளாதார வீழ்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கை சுதந்திரமடைந்த பிறகு, அதன் பொருளாதார சரித்திரத்தில் முதல் முறையாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால்.
![]() |
![]() |
மட்டக்களப்பில் ஹர்த்தால் |
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று-புதன்கிழமை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்தப் பிரதேசங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த திங்கட்கிழமை அம்மாவட்டதிலுள்ள ஆரையம்பதி-காத்தான்குடி பிரதேச எல்லையிலுள்ள ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் சில சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டதை கண்டித்தும், அந்தப் பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறையை கண்டித்தும் இன்று ஹர்த்தாலை அனுசரிக்கும்படி தமிழ் மக்கள் ஒன்றியம் எனற ஒரு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் வழமைக்கு அதிகமான போலீசார் பாதுக்காப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், சந்தேக நபர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடிப் பகுதியிலுள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பிறகு முஸ்லிம் பிரதேசங்களில் திங்கட்கிழமையன்று ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தென்கிழக்கில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 26 பேர் பலியாகி 60 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மொனாராகலை மாவட்டத்தில் இன்றுகாலை இடம்பெற்ற பயங்கர பஸ்குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம்செய்துகொண்டிருந்த சுமார் 26 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் 67 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இன்று காலை சுமார் 7.45 மணியளவில் மொனாராகலை மாவட்டத்திலுள்ள புத்தலவிற்கும் நியாண்டகல பகுதிகளுக்குமிடையே பயணம்செய்துகொண்டிருந்த பஸ்வண்டியொன்று ஹெலகம ஒக்கம்பிட்டிய மூன்றாவது மைல்கல் பகுதியில் புலிகளின் கிளேமோர் குண்டுத்தாக்குதலிற்கு இலக்காகியிருக்கிறது என்றும் இந்தக் குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து எஞ்சித்தப்பிய சிவில் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.
பிந்திக்கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை சுமார் 26 சிவிலியன்கள் இதில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, காயமடைந்தவர்களின் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள புத்தல மற்றும் மொனராகல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் இடமெற்றும் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் மொனராகலை மாவட்டத்தில் புத்தல-கதிர்காமம் வீதியில் அமைந்திருக்கும் கல்கே, தம்பாகோட்டே பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வாகனமொன்றினை இலக்கு வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கிளேமோர் குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இராணுவ வீரர்கள் காயமைடைந்திருக்கிறார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, மொனராகலை, புத்தல பகுதியில் அமைந்திருக்கும் ஒக்கம்பிட்டிய தம்பேயாய கிராமப்பகுதியில் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் ஐவர் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து செய்திவெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, இந்தச் சம்பவத்தினை புலிகளின் அணியொன்றே மேற்கொண்டதாக சம்பவத்தில் காயங்களுடன் உயிர்தப்பிய சிவிலினை மேற்கோள்காட்டி தெரிவித்திருக்கிறது.
ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களையடுத்து ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மூன்று தினங்களிற்குத் தற்காலிகமாக மூட உள்ளூர் அதிகாரிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.
புத்தல மக்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என்கிறார் அமைச்சர்
![]() |
![]() |
புத்தலப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு |
இலங்கையின் தென்கிழக்கில் இன்று இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியிலுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 500 பேருக்கு துப்பாக்கிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் தேச நிர்மாண அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அகைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்தப் பகுதியில் பணியாற்றும் ஊர்காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியை அரசு முழுமையாக கைப்பற்றிய பிறகு அந்தப் பகுதியிலிருந்த சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு நடமாடும் காவலர்களே பணியாற்றுவதாகவும், இதன் காரணமாகவே அந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் யாலவனப்பகுதியில் மறைந்திருக்கும் சில விடுதலைப் புலிகளுக்கு உணவும் ஆயுதங்களும் கிடைக்க வழிசெய்தது எனவும் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
harisankar said
i love tamil eelam
harisankar said
i love tamil eelam all tamil people whant tamil eelam