Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: