Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 14th, 2008

The management of MRF Limited: lockout & strikes – Viduthalai Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.

இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.

உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.

ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.

அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.

நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.

வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.

தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.

மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!

Posted in Ads, Advt, Editorial, employees, Employers, Employment, Expenses, Jobs, lockout, Loss, Management, MRF, Poor, Productivity, Profit, Revenues, Rich, Strikes, Tyres, Union, Viduthalai, Work | Leave a Comment »

‘Viduthalai’ & ‘Unmai’ Editor Ki Veeramani – Sivakasi Maniyam

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

உலகில் சிந்தனையாளர்கள், பெரிதும் பேசப்பட்ட வர்கள் பலரும் பத்திரிகைகள் தொடங்கி தங்கள் கொள்கைகளை, எண்ணங்களை அவற்றில் எழுதியதுண்டு. ஆனால், அவர்களால் தொடங்கப்பட்ட இதழ்கள் அவர்களின் மறைவுக்குப் பின் நிலைத்து நிற்காமல் காணாமற்போன கதையைத் தான் வரலாறுகள் உணர்த்துகின்றன.
யார் யார் என்னென்ன இதழ்களைத் தொடங்கி அவர்களுக்குப் பின் அவ்விதழ்கள் தொடராமல் போனது என்ற விவரம் சிலவற்றைப் பார்ப்போம்:

  • கார்ல் மார்க்ஸ் – ரைன்லேண்ட் கெஜட்
  • லெனின் – பிரோலி டேரியட் (பாட்டாளி)
  • மாஜினி – யங் இத்தாலி
  • இட்லர் – வால்கிஷர்
  • முசோலினி – இல்-பாப்லோ- டீ- இடாவியா
  • காந்தி – யங் இந்தியா, அரிஜன்
  • நேதாஜி – பங்களா கதாகோட்சே இந்துராஷ்டிரா
  • பாரதி – இந்தியா
  • பண்டித மணி – அயோத்திதாசர் – (ஒரு பைசா) தமிழன்
  • திரு.வி.க., – நவசக்தி
  • ம.பொ.சி. – செங்கோல்
  • ராஜாஜி – சுய ராஜ்யா
  • வடுவூர் – துரைச்சாமி (அய்யங்கார்) – மனோரஞ்சனி
  • வை.மு. கோதை நாயகி – ஜகன்மோகனி
  • அறிஞர் அண்ணா – திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி
  • எம்.ஜி.ஆர். – அண்ணா

சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் இன்னும் நீளும். தந்தை பெரியார் குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் காலத்திலேயே அவை நின்று போயின. அடுத்து அவர் தொடங்கிய விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய மூன்றும் இன்றுவரை, இடைவிடாது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த வெற்றிக்கு ஆசிரியர் அவர்களின் உழைப்பும், விடா முயற்சியும் அல்லாமல் வேறென்ன? பெரியாருக்குப்பின் ஆசிரியர் அவர்களாலேயே தொடங்கப்பட்ட பெரியார் பிஞ்சு இதழும், இளைய தலைமுறையைத் தயாரிக்கும் இனிய இதழாக திங்கள்தோறும் மலர்ந்து வருகிறது.
விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு இவை அத்தனைக்கும் ஆசிரியர் நம் ஆசிரியரே என்பது சிறப்பினும் சிறப்பு. ஆசிரியர் பெருமைக்குக் கட்டியம் கூற இப்பணி ஒன்று போதாதா?

-சிவகாசி மணியம்

Posted in Editor, Editors, Unmai, Veeramani, Vidudhalai, Viduthalai, Viramani, Vituthalai | Leave a Comment »

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »