போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது
![]() |
![]() |
முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரிடையே போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது |
இலங்கை அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
இருதரப்பாலும் பல தடவைகள் மீறப்பட்ட இந்த 2002ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே முறையாக அறிவித்துவிட்டது.
விடுதலைப்புலிகளின் இந்த கோரிக்கை ஒன்றுமே இல்லாதது என்றும் மிகவும் காலம் தாழ்த்தியது என்றும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இலங்கையின் தலைநகர் கொழும்பின் முக்கிய ரயில் நிலையம் அருகே ஒரு சிறிய குண்டு ஒன்று வெடித்ததில், குறைந்தது ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஜப்பான் விசேட சமாதானத் தூதுவர் கொழும்பு விரைகிறார்
![]() |
![]() |
ஜப்பான் விசேட தூதர் அகாஷி |
நோர்வே அனுசரணையுடன் இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆண்டில் செய்து கொண்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசு கடந்த வாரம் வெளியேறியுள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த முயற்சிகளை வலுவாக ஆதரித்து வந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யாசூஷி அகாஷி அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு செல்லவிருக்கிறார்.
இது குறித்து இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இரண்டு நாட்கள் பயணமாக இலங்கை வரவிருக்கும் அகாஷி அவர்கள், சமாதான முயற்சிகள் குறித்த இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும், அதனது எதிர்காலம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
இவரது பயணம் குறித்து டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மசஹிகோ கொமுரோ அவர்கள், போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியிருக்கும் முடிவு, அங்குள்ள மோதலை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்று ஜப்பான் கவலைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
அகாஷி அவர்கள் தமது இலங்கை பயணத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், மற்ற மூத்த அமைச்சர்களையும் சந்திக்க இருப்பதாகவும், ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளம் மீது விமானப்படை குண்டுவிச்சு
![]() |
![]() |
வவுனியாவிலிருந்து புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்லத் தயாராகும் படையினர் |
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கடற்புலிகளின் தளமொன்றினைத் தாம் குண்டுவீசித் தாக்கி அழித்திருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், விமானப்படையின் தரைக்குண்டுவீச்சு விமானங்கள் அலம்பில் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளமொன்றினைக் குண்டுவீசித் தாக்கியதாகவும், விமானிகளின் தகவல்களின்படி இந்தக் கடற்புலிகளின் முகாம் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இது குறித்து விடுதலைப்புலிகள் எவ்வித கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.
இதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும் முன்னேற முயற்சித்துவரும் அரச படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இந்த மோதலின் போது அரச படைத்தரப்பினருக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினூடாக புலிகளிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை இந்த மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ள புலிகள் ஆதரவு இணைய தளங்கள், மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மற்றும் பாலமோட்டை போன்ற பகுதிகளினூடாக செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சித்த படையினரை புலிகளின் தாக்குதல் படையணிகள் வழிமறித்துக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இதனால் படையினர் தமது முயற்சிகளைக் கைவிட்டு பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளிற்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.
அத்துடன் பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதல்களின்போது ஒரு படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலின் போது புலிகள் தரப்பில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் இந்த இணையதளங்கள் தெரிவித்திருக்கின்றன.