Tamil Actor Pandiyan passes away: Anjali, Memoirs from Kollywood peers
Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
பாண்டியன் ஓர் அப்பாவி!
பாரதிராஜா:
நான் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞன் இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததில் எனக்கு மிகவும் அதிர்ச்சி. பாண்டியன், சினிமா பற்றி ஒன்றுமே அறியாத ஓர் அப்பாவி. ஒரு கலைஞன் என்பதை விட பணிவான ஒரு நல்ல மனிதன்.
பாண்டியராஜன்:
“ஆண் பாவம்’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்தேன். நிழலில் ஏற்பட்ட அந்த உறவு நிஜத்திலும் எங்களுக்குள் தொடர்ந்தது. “ஆண் பாவம்’ படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாண்டியன் முன்னணி நடிகராக இருந்தார். நான் நடிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் அன்றைய சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டதோடு இன்னும் அதிக சீன்களில் நடிக்கலாமே என்றும் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கிய “கை வந்த கலை’ படத்தில் கூட மீண்டும் பாண்டியன்-சீதா கூட்டணியை “ஆண் பாவம்’ தொடர்ச்சியாக நடிக்க வைத்தேன். அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் சினிமாத்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு வெகுளி. அவருடைய குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்வேன்.
ரேவதி:
“மண் வாசனை’ படம் மூலம்தான் நாங்கள் இருவரும் தமிழில் அறிமுகமானோம். அப்போது எனக்குத் தமிழ் தெரியாது; அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் பாரதிராஜா சொன்னதை வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் படத்தில் நடித்தோம்.
அதன்பிறகு “பொண்ணு பிடிச்சிருக்கு’, “புதுமைப் பெண்’ படங்களில் இணைந்து நடித்தோம். அந்தப் படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட் 20 வருடங்கள் ஆனாலும், அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.
எந்தச் சூழ்நிலையிலும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
எஸ்.வி.சேகர்:
“திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிக்கும்போதுதான் எனக்குப் பாண்டியனுடன் நல்ல அறிமுகம். இவர் எப்படி சினிமாவில் நீடிக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவி. அவருடைய பேச்சில் மதுரை மண்வாசனை மணக்கும். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தார்.
ரேகா:
“ஆண்களை நம்பாதே’ படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அதன்பிறகு பல ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொள்வோம்.
மிகவும் பாசமாகப் பழகக்கூடியவர். சின்ன வயதிலேயே இறந்தது மிகவும் சங்கடமாக இருக்கிறது.
அதனால் நாம் வாழும்வரை நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதைத்தான் பாண்டியனின் மரணம் குறித்து என்னால் சொல்லமுடியும்.
10 Pandiyans from Tamil Nadu: Names & Famous Folks « 10 Hot said
[…] பாண்டியன் 6. சவுந்திர பாண்டியன் 7. ’மண்வாசனை’ பாண்டியன் 8. இந்தியக் கம்யூனிஸ்ட் […]