Margazhi Carnatic Music Concert Season special updates – Dinamani: Charukesi
Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
“சீசன்’ சிந்தனைகள்
சாருகேசி
தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.
சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.
கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.
நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.
தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.
ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.
கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.
ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.
சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!
இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.
பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.
சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.
இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!
S. Krishnamoorthy said
சாருகேசி மிகச் சரளமான நடையில், டிசம்பர் சீசனுக்குப் பின்னர் என்ற தலைப்பில் எழுதியுள்ள இப் பதிவு மிகவும் சுவையுடனும் ஹாஸ்ய உணர்ச்சியுடனும் ததும்பி நிற்கிறது. மிருதங்க ஒலி பற்றி அவர் சொல்லுவது உண்மை. சுநாதமாக ஒலிக்கவேண்டிய மிருதங்கம் தவில் போல ஒலிக்கிறது. தேன்வந்து பாய்வதற்குப் பதில் செவிப்பறையைச் செவிடாக்கும் முயற்சியிலாவது ஈடுபடாது இருந்தால் தனி க்கு ரசிகர்கள் கூடுவார்கள். சாருகேசி ஒன்றை விட்டுவிட்டார. மேனாள் அமைச்சர் ராஜாராம் அவர்கள் நாரதகான சபாவின் எல்லாக் கச்சேரிகளுக்கும் வந்து முன்வரிசையில் அமர்ந்து மெய்மமறந்து ரசிப்பதையும் சாருகேசி சொல்லி இருக்கலாம். சாருகேசி இன்னொன்றையும் மறந்துவிட்டார். 7.30 மணிக் கச்சேரி முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக அரங்கைவிட்டு வெளியேறி அசோக் ரமணியின் விமர்சனத்தாளையும் கச்சேரி பஸ்ஸையும் லாகவமாக எடுக்க ஓடும் ரசிகர்களைப் பற்றியும் ஒரு வார்த்தை எழுதி இருக்கலாம்.