Dyslexia & Taare Zameen Par – Raman Raja
Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!
எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.
டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.
பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)
டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!
சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.
சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.
சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. ( reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.
டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:
விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?
பிரதமர் சர்ச்சில்?
எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?
ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?
போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”
vetry said
ராமன் ராஜா என்ற பெயரில் தினமணிக் கதிரில் வந்த கட்டரை பத்தேன். மிக அருமையான நடை.
ரசிக்கும்படி இருந்தது. அதனால் இந்தப் பெயரை நெட்டில்ஃநெற்றில் தேடி வாழத்துச் சொல் விரும்பினே;.
சொல்லிவிட்டேன்.
brindha said
idhu pondra kuzhandhaigalai kaialugiren.neengal solvadhu pole avargalin mudha thevai anbum aadharavum .adhai aasiriyargal dhaan mudhalil thara mudigiradhu.petrorgal idhai purindhukalla neramaagirapadiyaal ,aasiriyargalin pangae ingu mudhanmai idathai pidikkiradhu enbadhu en karuththu.en aangila thamizhai poruththukkollavum.miga sirappana katturaikku vaazhthukkalum nandrigalum